திருமுறைத்தலங்கள்
சோழநாட்டு (தென்கரை) த் தலம்.
சிக்கல்
திருவாரூர் - நாகப்பட்டினம் பேருந்துச்சாலையில் உள்ள தலம். சிக்கல் ஊரையடைந்து வலப்புறமாகத் திரும்பினால் கோயிலையடையலாம். கோயில் வரை வாகனங்கள் செல்லும். இத்தலத்தையடுத்து இதே சாலையில் நாகப்பட்டினம் உள்ளது.
வசிட்டர், காமதேனுவின் வெண்ணெய்யினால் சிவலிங்கம் அமைத்து வழிபட்டு, பூஜைமுடிவில் அதையெடுக்க முயன்றபோது முடியாமற் சிக்கிக் கொண்டமையின் 'சிக்கல்' என்று பெயர் பெற்றது. மல்லிகைவனம் என்பது இதன்வேறு பெயர்.
இறைவன் - நவநீதேஸ்வரர், வெண்ணெய்நாதர், வெண்ணெய்பிரான்.
இறைவி - சத்தியதாட்சி, வேல்நெடுங்கண்ணி.
தலமரம் - குடமல்லிகை.
தீர்த்தம் - க்ஷரீபுஷ்கரணி, கயாதீர்த்தம், லட்சுமி தீர்த்தம் என்பன.
சம்பந்தர் பாடல் பெற்றது.
மாடக்கோயில். சுவாமி சந்நிதி கட்டுமலைமேல் உள்ளது. மிகப்பெரியகோயில் இங்குள்ள சிங்காரவேலர் சந்நிதி மிகவும் புகழ்பெற்றது. க்ஷீரபுஷ்கரணி (பாற்குளம்) கோயிலின் மேற்கில் உள்ளது. இதற்கு அமிர்தடாகம் என்றும் பெயர். கோலவாமனப் பெருமாள் நீராடி இறைவனை வழிபட்டதீர்த்தம் கயாதீர்த்தம் - மேற்கே உள்ளது.
இப்பெருமாளுக்கு "கயாமாதவன்" என்றும் பெயர். இலக்குமி தீர்த்தம் கிழக்கில் உள்ளது.
இக்கோயிலுக்கு விருத்தகாவேரி எனப்படும் ஒடம்போக்கியாறு ஓடுகிறது. நகரத்தார் திருப்பணி பெற்ற கோயில். கோயிலின் முன்னால் பெரிய கல்யாண மண்டபம் உள்ளது. ஏழுநிலை ராஜகோபுரம் கடந்து உள்ளே சென்றால் பிராகாரம் நந்தவனப்பகுதியாக உள்ளது. பக்கத்தில் கோலவாமனப் பெருமாள் சந்நிதி தனிக்கோயிலாக உள்ளது. (தாயார் கோமளவல்லி) . உள்வாயிலைத தாண்டிச் சென்றால் பிராகாரத்தில் விநாயகர், அறுபத்துமூவர், சனீஸ்வரன், (கருவறைச்சுவரில் வசிட்டரும் அவருடைய சீடர்களும் காமதேனுவும் வழிபடுவது போன்ற சிற்பம் உள்ளது) . தலமரம் மல்லிகை, விசுவநாதர், கார்த்திகைவிநாயகர், கஜலட்சுமி, ஆறுமுகர், பைரவர், நவக்கிரகம், சூரியன் சந்திரன் முதலிய சந்நிதிகள் உள்ளன.
வலமுடித்து முன்மண்டபம் அடைந்தால் வலப்பால் அம்பாள் சந்நிதியுள்ளது - நின்ற திருக்கோலம். சுந்தரகணபதியைத் தொழுது படிகளேறிச் கட்டுமலைமீது சென்றால் நேரே தியாகராஜ சந்நிதி உள்ளது. இது சப்தவிடங்கத்தலங்களுள் அடங்காது. இங்கு மரகத லிங்கம் உள்ளது. (மரகதவிடங்கர்) வலப்பால் சிங்காரவேலர் - மிகவும் பிரசித்தி பெற்றது. இத்தலம் இப்பெருமான் பெயராலேயே (சிக்கல் சிங்காரவேலர்) புகழ்பெற்று விளங்குகிறது. இம்முருகப் பெருமானுக்கு எல்லாவிதமான ஆபரணங்களும் தங்கத்தால் செய்யப்பட்டுள்ளன. நேரே மூலவர் தரிசனம் - சிவலிங்கத்திருமேனி. சதுரபீடம் - குழைவான குட்டையான பாணம். சோமாஸ்கந்தர் சந்நதி சிறப்பானது. நடராஜசபை உள்ளது. உற்சவத்திருமேனிகள் வரிசையாக வைக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்டுள்ளன.
சித்திரையில் சுவாமிக்கு விழா நடைபெறுகிறது. ஐப்பசியில் சிங்காரவேலருக்குப் பத்துநாள்களுக்குப் பெருவிழா. இதில் ஐந்தாம் நாள் தேர்வழரி முடிந்து வேலவர் அம்மையிடம் சூரனை சம்ஹாரம் செய்ய வேல் வாங்கி மலைக்குச் சென்றபின், வேலவர் திருமேனியில் சில மணிநேரம் வியர்வைத் துளிகள் காணப்படும். இஃது ஓர் அற்புதமான காட்சி. "சிக்கலில் வேல் வாங்கிச் செந்தூரில் சம்ஹாரம்" என்பது இப்பகுதியில் வழங்கும் பழமொழி. வசதியும் நல்ல பராமரிப்பும் உடைய கோயில், ஆலயச்சார்பில் தங்கும் விடுதிகள் கட்டப்பட்டுள்ளன.
நாடொறும் ஆறுகால வழிபாடுகள். கல்வெட்டு இத்தலத்து இறைவனை "பால் வெண்ணெய் நாயனார்" என்று குறிப்பிடுகிறது. விழாக்கள் நடத்தவும் விளக்கெரிக்கவும் நிலங்களை நிவந்தமாக அளித்த செய்திகள் கல்வெட்டால் தெரியவருகின்றன. 'சிக்கல் மகாத்மியம்' - தலபுராணமுள்ளது.
"வானலாவு மதி வந்துல வும்மதின் மாளிகை
தேனலாவு மலர்ச் சோலை மல்குந்திகழ் சிக்கலுள்
வேனல்வேளை விழித்திட்ட வெண்ணெய்ப் பெருமானடி
ஞானமாக நினைவார் வினையாயின நையுமே." (சம்பந்தர்)
க்ஷேத்திரக்கோவை பிள்ளைத் தமிழ்
முக்கட்பு ராரியடு சக்கரா யுதக்கடவுள்
முண்டகத் தவிசிருந்தோன்
மூவரும் சிரகர கம்பிதஞ் செய்துநம்
முருகன்பர ராக்கிரமனெனச்
சக்ரவா ளத்துடன் மிக்கநவ கண்டமும்
தருமட்ட குலகிரிகளும்
சத்தசா கரமும் கணத்தினிற் சுற்றிவரு
தாருகன் வாயினுதிரம்
கக்கிப் பதைத்துக் கிடந்தே யிருக்கக்
கடைக்கண் சிவந்வேலன்
கற்பகா டவிதடவு மண்டபம் கோபுரம்
கனகமதில் நின்றிலங்கும்
சிக்கலம் பதிமேவு சிங்கார வேலனாம்
தேவர்நாய கன்வருகவே
திகமும்வெண் ணெய்ப்பிரா னொருபா லுறைந்தமெய்ச்
செல்விபா லகன்வருகவே.
-"ஒகையற
விக்கல் வருங்கால் விடாய் தீர்த்துல கிடைநீ
சிக்க லெனஞ்சிக் கற்றிறலோனே." (அருட்பா)
அஞ்சல் முகவரி -
அருள்மிகு. நவநீதேஸ்வரர் திருக்கோயில்
சிக்கல் - அஞ்சல்
(வழி) நாகப்பட்டிணம்
நாகப்பட்டினம் வட்டம் - மாவட்டம். 611108 .