திருமுறைத்தலங்கள்
சோழநாட்டு (தென்கரை) த் தலம்.
தேவூர்
1) கீவளூர் - திருத்துறைப்பூண்டி சாலையில் உள்ளது. சாலையோர ஊர், கோயிலும் அருகில் உள்ளது.
2) திருவாரூர் - வலிவலம் நகரப்பேருந்து தேவூர் வழியாகச் செல்கிறது. தேவூரில் அக்ரஹார நிறுத்தம் என்று கேட்டு இறங்கினால் கோயிலுக்கு எதிரிலேயே இறங்கலாம்.
3) திருவாரூர் - நாகப்பட்டினம் சாலையில் கீவளூர் வந்து அங்கிருந்து திருத்துறைப்பூண்டி சாலையில் சென்றால் தேவூரையடையலாம்.
தேவர்கள் வழிபட்டதால் தேவூர் என்று பெயர் பெற்றது. மாடக்கோயில், கௌதமர், வியாழபகவான், இந்திரன், குபேரன், சூரியன் ஆகியோர் வழிபட்டது. கதலிவனம், விராடபுரம், அரசங்காடு, தேவனூர் என்பன தலத்தின் வேறு பெயர்கள் விருத்திரனைக் கொன்ற பழிநீங்க இந்திரன் வழிபட்ட தலம். குபேரன் வழிபட்டு சங்க, பதுமநிதிகளைப் பெற்றான். விராடன் தன் மகள் உத்தரையுடன் இங்கு வந்து இறைவனை வழிபட்டான். கோயில் ஊர் நடுவே உள்ளது.
இறைவன் - தேவபுரீஸ்வரர், கதலிவனேஸ்வரர், தேவகுருநாதர்.
இறைவி - மதுரபாஷிணி, தேன்மொழியம்மை.
தலமரம் - வெள்வாழை (வாழையில் ஒருவகை)
தீர்த்தம் - தேவதீர்த்தம்.
சம்பந்தர் பாடல் பெற்றது.
கிழக்கு நோக்கிய மூன்று நிலைகளையுடைய ராஜகோபுரம். உட்புறத்தில் இடப்பால் அதிகார நந்தி தரிசனம். கவசமிட்ட கொடமரமும் நந்தி, பலிபீடம் காட்சி. கீழே உள்சுற்றில் அறுபத்துமூவர், வலம்புரி விநாயகர், சுப்பிரமணியர். அகல்யை வழிபட்ட லிங்கம், மகாலட்சுமி, எதிரில் கட்டுமலை மேல் கௌதமர் வழிபட்டலிங்கம், நவக்கிரகம் முதலிய சந்நிதிகள் உள்ளன. நடராஜசபை தனியே அழகாக உள்ளது. கட்டுமலையின் அடிவாரத்தில் இந்திரன், முருகன் விநாயகர் சந்நிதிகள் பக்கத்துப் பக்கத்தில் உள்ளன.
வலம்முடித்துப் படிகளேறி மேலே - கட்டுமலைமீது சென்றால் நேரே சோமாஸ்கந்தர் தரிசனம். வலப்பக்கம் திரும்பி வாயிலைக் கடந்தால் மூலவர் காட்சி. சதுரபீடம் - ஆவுடையாரின் அளவை நோக்கச்சற்று சிறிய பாணம் - அருமையான தரிசனம். சுவாமி சந்நிதிக்கும் பக்கத்தில் அம்பாள் சந்நிதி - தனிக்கோயில். நின்ற திருக்கோலம். 6.9.1999ல் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. இங்குள்ள தட்சிணாமூர்த்தியின் திருவடிக்கீழ் முயலகனில்லை - புதுமையான அமைப்பு. நாடொறும் ஐந்துகால பூஜைகள். வைகாசியில் பெருவிழா. பாண்டியர் காலக் கல்வெட்டு இவ்வூரை "அருண்மொழித் தேவ வளநாட்டுத் தேவூர்" என்றும், இறைவனை "ஆதித்தேச்சுரமுடையார்" என்றும் குறிப்பிடுகின்றது.
"பண்ணிலாவிய மொழி உமைபங்கன் எம்பெருமான்
விண்ணில் வானவர்கோன் விமலன் விடையூர்தி
தெண்ணிலா மதிதவழ் மானிகைத் தேவூர்
அண்ணல் சேவடி அடைந்தனம் அல்லம் ஒன்று இலமே." (சம்பந்தர்)
"தேவூர்த் தென்பால் திகழ் தருதீவில்
கோவார் கோலம் கொண்ட கொள்கையும்" (திருவாசகம்)
அம்பாள் சந்நிதியில் காணப்படும் ஒரு பாடல்
"தீமருவு செங்கையான் திருத்தே வூர்வாழ் நாதன் தேவபுரீசுரரை வளரும்
காமருவு கதியின்பால் கருத்தர்தமைக் கௌதமரும் குபேரனோ டிந்திரன் தானும்
நாமருவு குருவுடனே சூரியனும் போற்றிசெயச் சம்பந்தர் பதிகமோத
மாமதுர பாஷணி மலர்க்கழலை மறுமையடு இம்மைக்கும் மறவேன் நானே."
(மு.ஆ.அருணாசலமுதலியார் இயற்றியது)
"-நீளுவகைப்
பாவூரிசையிற் பயன் சுவையிற் பாங்குடைய
தேவூர் வளர்தேவ தேவனே." (அருட்பா)
அஞ்சல் முகவரி -
அருள்மிகு. தேவபுரீஸ்வரர் திருக்கோயில்
தேவூர் - அஞ்சல் 611 109
(வழி) கீவளூர் - கீவளூர் வட்டம் - நாகப்பட்டினம் மாவட்டம்.