திருமுறைத்தலங்கள்
சோழநாட்டு (தென்கரை) த் தலம்.
திருவிளமர்
விளமல்
மக்கள் 'விளமல்' என்றழைக்கின்றனர். திருவாரூர் - தஞ்சாவூர் சாலையில், திருவாரூரையடுத்து அருகாமையில் உள்ள தலம். சாலையோரத்திலேயே ஊர் உள்ளது. ஓடம் போக்கியாற்றின் கரையில் உள்ளது. திருவாரூர்க் கோயிலோடு இணைந்த கோயில். பதஞ்சலி முனிவர் வழிபட்டது.
இறைவன் - பதஞ்சலி மனோகரர்.
இறைவி - மரபாஷிணி.
தீர்த்தம் - அக்கினி தீர்த்தம்.
சம்பந்தர் பாடல் பெற்றது.
சிறிய ஊர். கோயிலும் சிறியது. கிழக்கு நோக்கிய சந்நிதி. கோயில் எதிரில் தீர்த்தம் உள்ளது. கோபுரவாயிலின் இருபுறமும் விநாயகரும் முருகனம் வீற்றிருக்கின்றனர். உள்ளே நந்தி, பலிபீடம், பிராகாரம் நந்தவனமாகவுள்ளது.
பைரவர் சந்நிதி தெற்கு நோக்கித் தனிக்கோயிலாக உள்ளது. பிராகாரத்தில் சனீஸ்வரன், சந்திர சூரியர், விநாயகர், கஜலட்சுமி, உள்ளனர். முன்மண்டபத்தில் பதஞ்சலியின் உருவமும் மகாமண்டபத்தில் வியாக்ரபாதர் உருவமும் உள்ளன. மூலவர் கிழக்கு நோக்கிய தரிசனம். அம்பாள் சந்நிதி தெற்கு. கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் எழுந்தருளியுள்ளனர்.
"மத்தக மணிபெற மலர்வதொர் மதிபுரைநுதல்கரம்
ஒத்தக நகமணி மிளிர்வதொர் அரவினர் ஒளிகிளர்
அத்தகவடி தொழ அருள்பெறுகண்ணொடும் உமையவள்
வித்தகர் உறைவது விரிபொழில் வளநகர் விளமரே." (சம்பந்தர்)
"-திண்மைக்
களமர் மகிழக் கடைசியர் பாடும்
விளமர் கொளும் எம் விருப்பே." (அருட்பா)
அஞ்சல் முகவரி -
அருள்மிகு. பதஞ்சலி மனோகரர் திருக்கோயில்
விளமல் - அஞ்சல்
(வழி) திருவாரூர் (வடக்கு) S.O. 610 002
திருவாரூர் மாவட்டம்.