திருமுறைத்தலங்கள்
சோழநாட்டு (தென்கரை) த் தலம்.
திருவுசாத்தானம்
கோயிலூர் கோவிலூர்
மக்கள் கோயிலூர் என்றழைக்கின்றனர்.
கோயிலூர் என்ற பெயரில் பலவூர்களிருப்பதாலும், இவ்வூர் முத்துபேட்டைக்கு அருகில் இருப்பதாலும் வழக்கில் இத்தலம் 'முத்துப்பேட்டை - கோயிலூர்' என்று வழங்கப்படுகிறது.
தஞ்சை, திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், மன்னார்குடி பட்டுக்கோட்டை முதலிய பலவூர்களிலிருந்து முத்துப்பேட்டைக்குப் பேருந்துகள் உள்ளன. முத்துப்பேட்டையிலிருந்து மனனர்ர்குடிசாலையில் 2 A.e. சென்றால் சாலையிலேயே கோயிலின் வளைவு ஸ்ரீ மந்திரபுரீஸ்வரர் தேவஸ்தானம் என்று உள்ளது. அதனுள் நுழைந்து சென்றால் கோயிலை அடையலாம்.
இறைவன் - மந்திரபுரீஸ்வரர்.
இறைவி - பிருகந்நாயகி, பெரியநாயகி.
தலமரம் - மா.
தீர்த்தம் - அநுமன் தீர்த்தம், மார்க்கண்டேய தீர்த்தம், கௌதம தீர்த்தம்.
சம்பந்தர் பாடல் பெற்றது.
இந்திரன், விசுவாமித்திரர், இராமர், இலக்குவன், ஜாம்பவான், சுக்ரீவன், அநுமன் ஆகியோர் வழிபட்டது. விசுவாமித்திரருக்கு நடனக் காட்சி காட்டியருளிய
தலம். இராமர்சேது அணைகட்டுவதற்கு இத்தலத்து இறைவனிடம் மந்திர உபதேசம் பெற்றதாக வரலாறு. எனவே இறைவன் திருப்பெயர் மந்திரிபுரீஸ்வரர் என்று வழங்குகிறது. மற்றும் கடலில் அணை கட்டுவதற்குரிய வழிமறைகளை இராமபிரான் இப்பெருமானிடம் உசாவிய (கேட்டறிந்து) காரணத்தால் இத்தலம் 'உசாத்தானம்' என்று பெயர் பெற்றது. இவ்வரலாற்றுக்கு ஆதரவாக இவ்வூருக்கு அருகில் இராமன் கோயில், ஜாம்பவான் ஒடை, அநுமான் காடு, சுக்ரீவன்பேட்டை, தம்பிக்குநல்லான் பட்டினம் முதலிய ஊர்கள் உள்ளன. இறைவன் மாமரத்தினடியில் திகழ்வதால் இத்தலம் சூதவனம் என்றும் சொல்லப்படுகிறது. இதற்கேற்ப தலவிநாயகர் மாவிலையைக் கரத்தில் ஏந்தியுள்ளார்.
கோயில் மிக்க பொலிவோடு அழகுறக் காட்சியளிக்கிறது. கிழக்கு நோக்கியது. எதிரில் திருக்குளம். குளக்கரையில் விநாயகர் சந்நிதி. ராஜகோபுரம் ஐந்து நிலைகளையுடையது. உட்புறத்தில் இடப்பால் சிறிய தீர்த்தம், வலப்பாகத்தில் அம்பாள் கோயில் உள்ளது தனிக்கோயில். கவசமிட்ட கொடிமரம், பலிபீடம் நந்தி தரிசனம்.
இரண்டாங்கோபுரம் மூன்று நிலைகளையுடையது. துவார கணபதி, சுப்பிரமணியரைத் தொழுது, உள்புகும்போது வாயிலில் இடப்பால் அதிகார ந்நதி காட்சி தருகிறார்.
உள்வல்தில் சூரியன், தலப்பதிகக் கல்வெட்டுக்கள், அறுபத்துமூவர், (நேர் எதிரில் கருவறைச் சுவரில் ஜ்வரஹரேஸ்வரர் மூன்று முகங்களுடனும் மூன்று திருவடிகளுடனும் காட்சி தருகிறார் - அழகான உருவம், தரிசிக்கத்தக்கது) காட்சி கொடுத்த நாயகர் அம்பாளுடன், சப்த மாதர்கள், சப்த கன்னியர், வீரபத்திரர், காளி, காசிவிசுவநாதர், சூதவன விநாயகர், சோமாஸ்கந்தர், வருணன் அவர் வழிபட்ட லிங்கம், இராமர் அவர் வழிபட்ட லிங்கம், மார்க்கண்டேயர் அவர் வழிபட்ட லிங்கம், அன்னபூரணி, சுப்பிரமணியர், வள்ளி தெய்வயானையுடன் காட்சி தரும் சுப்பிரமணியர், கஜலட்சுமி, சரஸ்வதி நவகன்னியர், சனிபகவான், நடராஜ சபை, பைரவர், சந்திரன் முதலிய சந்நிதிகள் உள்ளன.
உள்வலமுடித்து முன்மண்டபம் அடைந்தால் அங்குத் தல வரலாறு வண்ண ஒவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளதைக் காணலாம். வாயிலின் இருபுறங்களிலும் சங்கநிதி, பதுமநிதி மூர்த்தங்கள் உள்ளன. துவாரபாலகர் தொழுது, வாயில் கடந்தால் வலப்பால் உற்சவ மூர்த்தங்களின் பாதுகாப்பிடத்தைத் தரிசிக்கலாம்.
நேரே மூலவர் தரிசனம், சதுரபீடம் - சுயம்பு மூர்த்தியாதின் சொரசொரப்பாக வெண்ணிறமாகக் காட்சி தருகின்றார். வெளிச்சுற்றில் தலமரம் - மா - உள்ளது. நாடொறும் நான்கு கால வழிபாடுகள் . வைகாசியில் பெருவிழா நடைபெறுகிறது.
விக்கிரம சோழன், மூன்றாம் குலோத்துங்கன், சுந்தரபாண்டியன், ஆகியோர் காலத்திய கல்வெட்டுக்கள் உள்ளன. இவற்றில் சுவாமியும் அம்பாளும் 'திருவுசாத்தானமுடைய நாயனார், பெரிய நாச்சயரிர்', என்னும் பெயர்களால் குறிக்கப்படுகின்றனர். இறையிலியாக நிலங்களும் தோப்புகளும் இக் கோயிலுக்கு வழங்கப்பட்ட செய்திகள் கல்வெட்டுக்களிலிருந்து தெரிய வருகின்றன. தலபுராணம் - சூதவதனப் புரணாம் உள்ளது. வாரந்தோறும் வெள்ளிக்கிழமை, மாதகார்த்தகை, பிரதோஷம், சித்திரைப் பெருவிழா, ஆடிப்பூரம், ஆவணி சூலம், விநாயகர் சதுர்த்தி, நவரத்திரி, சஷ்டி, மார்கழி திருவாதிரை, தைப்பூசம், மாசிமகம் போன்ற விழாக்களும் குறிப்பாக நடைபெறுகின்றன.
முதல் நிலைக் கோயில். அறநிலையத் துறையின் நிர்வாகத்தில் உள்ளது. 1081 ஏக்கர் நன்செய், 1018 ஏக்கர் புன்செய் நிலங்களும் - தென்னந்தோப்புகளும் - 36 கபடிடஸ்களும் - 229 மனைக்கட்டுகளும் இக்கோயிலுக்குச் சொந்தமாகவுள்ளன. பொன், வெள்ளி, நகைகள், நகரத்தார் அளித்துள்ள நன்கொடைகள், வெள்ளிக் கவசங்களும் உள்ளன. இக்கோயில் நிர்வாகத்தில் முத்துப்பேட்டையில் அருள்மிகு. பெரியநாயகி மகளிர் மேல்நிலைப்பள்ளி நடைபெற்று வருகிறது.
'நீரிடைத் துயின்றவன், தம்பி, நீள்சாம்புவான்
போருடைச் சுக்ரீவன் அநுமன் தொழக்
காருடை நஞ்சுண்டு காத்தருள் செய்தஎம்
சீருடைச் சோழர் வாழ் திருவுசாத்தானமே". (சம்பந்தர்)
-கற்றவர்கள்
எங்குமு சாத்தானம் இருங்கழக மன்றமுதல்
தங்கும் உசாத்தானத் தனிமுதலே" (அருட்பா)
அஞ்சல் முகவரி -
அருள்மிகு. மந்திரபுரீஸ்வரர் திருக்கோயில்
கோவிலூர் - முத்துப்பேட்டை அஞ்சல் - 614704
திருத்துறைப்பூண்டி வட்டம் - திருவாரூர் மாவட்டம்.