திருமுறைத்தலங்கள்
பாண்டிய நாட்டுத் தலம்
திருச்சுழியல்
திருச்சுழி
மக்கள் வழக்கில் திருச்சுழி என்றும், கொச்சையாகத் திருச்சுளி என்றும் வழங்குகின்றது.
இராமநாதபுரம், பரமக்குடி - அருப்புக்கோட்டை பேருந்துச் சாலையில் உள்ள தலம். அருப்புக்கோட்டையிலிருந்து 15 A.e. தொலைவில் உள்ளது. கோயில்வரை வாகனங்களில் செல்லாம். மதுரை, மானாமதுரை, விருதுநகர் முதலிய ஊர்களிலிருந்தும் பேருந்துகளில் செல்லலாம்.
விருதுநகர் - மானாமதுரை இருப்புப் பாதையில் உள்ள ரயில் நிலையம். இத்தலத்துக்குரிய வேறு பெயர்கள் - வயலூர், முத்திபுரம், ஆவர்த்தபுரம், சூலபுரம், அரசவனம், சுழிகை, சுழிகாபுரி என்பன.
சிவபெருமான் ஒருசமயம் பிரளயத்தைச் சுழித்தப் பூமிக்குள் புகச் செய்தார் ஆதலின் (திருச்) சுழியல் என்று பெயர் பெற்றது. மிகப் பழமையான தலம்.
இறைவன் - திருமேனிநாதர், சுழிகேசர், பிரளயவிடங்கர், தனுநாதர், மணக்கோலநாதர், கல்யாணசுந்தரர், புவனேஸ்வரர், பூமீஸ்வரர், ("செற்றார் திருமேனிப் பெருமானூர்" என்பது இத்தலத்துத் தேவாரத் தொடர்) இறைவி - துணைமாலையம்மை, சகாயவல்லி, சொர்ணமாலை, முத்துமாலையுமையாள், மாணிக்கமாலை.
தலமரம் - அரசு, புன்னை.
தீர்த்தம் - 1. பாவகரி நதி (கௌடிண்ய ஆறு (அ) குண்டாறு)
2. கவ்வைக்கடல் (ஒலிப்புணரி) - சந்நிதிக்கு எதிரில் உள்ளது.
(இத்தீர்த்தம் சுந்தரர் தேவாரத்தில் சிறப்பிக்கப் பெறுகிறது. சிவபெருமான் பிரளயத்தைச் சுழித்து இத்தீர்த்தத்தில் புகச்செய்தார் என்பது தலவரலாறு.)
3. பூமி தீர்த்தம் - சந்நிதிக்கு எதிரில் ஆற்றுக்குச் செல்லும் வழியில் உள்ளது.
4. சூலதீர்த்தம் - கவ்வைக்கடல் மைய மண்டபத்தின் பின் உள்ளது. இவை தவிர, பிரமதீர்த்தம், ஞானவாளி முதலியவையும், அருச்சுனன் தீர்த்த யாத்திரையாகப் புறப்பட்டுப் பாண்டிய நாடு வந்து, சித்திராங்கதையை மணந்து அவளுடன் திருச்சுழியல் வந்து இறைவனை வணங்கித் தன்காண்டீவத்தின் முனையால் கல்லி உண்டாக்கிய 'கோடி தீர்த்தமும்' (அம்மன் சந்நிதி முன்புற்ற கிணறு) உள்ளன.
சுந்தரர் பாடல் பெற்றது.
தலவிநாயகர்கள் - தாவர விநாயகர், போதி விநாயகர், அரசு விநாயகர், வேலடி விநாயகர், தருமதாவரப் பிள்ளையார்.
தீர்த்தத்தில் (கவ்வைக்கடல்) தூய்மை செய்துகொண்டு ஆலயத்துள் நுழைந்ததும் குடவரை வாயிலில் - கம்பத்தடி மண்டபத்தைக் காண்கிறோம். இதில் பலிபீடம் கொடிமரம் உள்ளன. விநாயகர் சுப்பிரமணியர், சந்நிதிகள் உள. அடுத்துள்ளது ஏழுநிலை கோபுரம். அதிகார நந்தியை வணங்கி உட்புகுந்தால் சுந்தரர் பதிகம் சலவைக்கல்லில் பொறிக்கப்பட்டுப் பதிக்கப்பட்டுள்ளதைக் காணலாம். அடுத்துள்ளவை சபா மண்டபம், அந்தராள மண்டபம், அர்த் மண்டபம். அடுத்த மூலஸ்தானம் - திருமேனிநாதர், சுயம்புலிங்கம் மூலவர். சதுர ஆவுடையார். கருவறை அகழி அமைப்பு.
சபா மண்டபத்தில் நடராஜர் சந்நிதி. நடராஜர் மூலவராகச் சிவாகமி, பதஞ்சலி, வியாக்ரபாதருடன் சிலாரூபத்தில் பிரபையுடன் கம்பீரமாகக் காட்சி தருகிறார். உற்சவமூர்த்திகள் தரிசனம். முதற் பிராகாரத்தில் - நாயகமண்டபப் பிராகாரத்தில் உஷா, பிரத்யுஷா சந்நிதிகள் உள்ளன. நடராஜர் சந்நிதிக்கு எதிரில் கௌதமர், அகலிகை உருவங்கள் உள்ளன. காசிவிசுவநாதர், சுழிகைக் கோவிந்தர், பூமி நீளாதேவியும் காட்சி தருகின்றனர். கருவறையில் கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தியும், லிங்கோற்பவரும், துர்க்கையும் தரிசனம், சண்டேசுவரருக்கு எதிரில் மேற்புறத்திலிருந்து தண்ணீர் கீழே இறங்குவதற்குக் கருங்கல்லில் குழாய் அமைந்திருப்பது காணத்தக்கது. பிராகாரம் விலாசமானது. மேற்புறத்தில் சித்திர வேலைப்பாடுகள்.
பிரளய விடங்கருக்குத் தனிக்கோயில் - தேவகோட்டை செட்டியாரின் திருப்பணி, எதிரில் நந்தனம் - பழனியாண்டவர் சந்நிதி. வெளிப்பிராகாரத்தில் தல மரமான "புன்னை மரக்கன்று" வைத்து வளர்க்கப்படுகிறது.
அம்பாள் சந்நிதி வலப்பால் பக்கத்தில் உள்ளது. சந்நிதியின் உட்புறத்தில் அம்பாளுக்கு எதிரில் உள்ள மண்டபத்தின் மேற்புறத்தில் ஸ்ரீ சக்கரம் கல்லில் வடிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.
கருவறை அகழி அமைப்பு - மேற்புறத்தில் சுற்றிலும் சாரங்கள். அம்பாள், திரிபங்கி லட்சண அமைப்பில், இடுப்பு, கழுத்து, இடக்கால் சற்று சாய்ந்து நடன அமைப்பில் தரிசனம்.
திருமால், இந்திரன், பிரமன், சூரியன், பூமிதேவி, கௌதமர், அகலிகை, கண்வமுனிவர், அருச்சனன், சித்திராங்கதை, சேரமான் பெருமான் முதலியோர் வழிபட்ட தலம்.
திருவண்ணாமலையில் தங்கி அருள் மழை பொழிந்து அவனிக்கு ஞான தீபமாய் விளங்கிய ஸ்ரீ ரமண மகரிஷி அவதரித்த தலமும் இதுவே. இம்மகான் அவதரித்த இல்லம் கோயிலுக்குப் பக்கத்தில் நினைவாலயமகாப் போற்றப்பட்டு வருகின்றது. அங்கு அவருடைய படமும், பாதுகையும் வைத்து வழிபடப் பெறுகிறது. தலத்தை வழிபடுவோர் இங்கும் தரிசிக்க வேண்டும்.
திருச்சுழியல், மதுரை, இராமேஸ்வரம் ஆகிய மூன்று கோயில்களும் ஒரே அமைப்புடைய கட்டுமானம் என்பர்.
பராக்கிரம பாண்டியன் காலத்திய கல்வெட்டுகளிலிருந்து இக்கோயில் கருவறை அவனால் கட்டப்பட்டது என்று தெரிகிறது. பிற்காலத்தில் நகரத்தார், கருவறை நீலங்கலான பிற பகுதிகளைப் பிரித்துப் பல நிலைகளில் திருப்பணிகளைச் செய்துள்ளனர்.
நாடொறும் பூஜைகள் குறைவின்றி நடைபெறுகின்றன. நவராத்திரி, ஆவணி மூலம் சித்திரை விஷ§, கார்த்திகைச் சோமவாரங்கள், ஆடித்தவசு, தைப்பூசம் முதலிய உற்சவங்கள் நடைபெறுகின்றன.
பங்குனி மாதத்தில் கௌதமருக்குத் திருமணக்காட்சி, சித்ரா பௌர்ணமி புறப்பாடு முதலியவை விசேஷம்.
திருச்சுழியற்புராணம் - தலபுராணம் உள்ளது. தவிர திருச்சுழியல் வெண்பா, அந்தாதி, திருச்சுழியல் கொம்பிலா வெண்பா, திரிசூலபுர மகாமித்யம், துணைமாலையம்மை, பிள்ளைத்தமிழ், திருச்சுழியல் கயிற்றுப்பின்னல் முதலிய நூல்களும் உள்ளன.
"ஊனாய் உயர்புகலாய் அகலிடமாய் முகில் பொழியும்
வானாய் வருமதியாய் iF வருவானிடம் பொழிலின்
தேனா தரித்திசை வண்டின மிழற்றுந் திருச் சுழியல்
நானா விதநினைவார்தமை நலியார் நமன் தமரே".
"கவ்வைக்கடல் கதறிக் கொணர் முத்தங் கரைக் கேற்றக்
கொவ்வைத்துவர் வாயார் குடைந்தாடுந் திருச்சுழியல்
தெய்வத்தினை வழிபாடு செய்தெழுவார் அடி தொழுவார்
அவ்வைத் திசைக்கு அரசாகுவர் அலராள் பிரியாளே". (சுந்தரர்)
"அன்புடை நெஞ்சத்திவள்பேதுற அம்பலத் தடியார்
என்பிடை வந்தமிழ்தூற நின்றாடியிருஞ் சுழியல்
தன்பெடை நையத்தக வழிந்தன்னஞ் சலஞ் சலத்தின்
வன்பெடை மேல்துயிலும் வயலூரன் வரம் பிலனே".
(உழையரிற்பழித்தல் - துறை. திருக்கோவையார் 37)
திருமேனிநாதர் துதி
"வருமேனிப் பிறப்பொழித்து மருவிய சாயுச்சியமே
தருமேனிக் கவலையினித் தளர்வொழி நீமடநெஞ்சே
கருமேனிப் பரந்தாமற் கொரு பாகங்கலந்தளித்த
திருமேனிப் பெருமானைப் பணி கமலச் சேவடியே". (தலபுராணம்)
வாழ்த்து
"திங்கள் முமர்ரி பெய்க புரவலர் செங்கோல் ஓங்க
மங்கையர் கற்புநீட மாநிலஞ் செழித்து வாழ்க
புங்கவர் கருணைகூர்க பூசுரர் சுருதி பொங்க
சங்கரன் திருவெண்ணீறும் சைவமும் தழைக்கமாதோ" (தலபுராணம்)
"துணைமாலையோடும் சுழியல் நகர் மேவும்
இணையார் திருமேனி ஈசா"
- (சிவக்ஷேத்ரசிவ நாமக்கலிவெணர்ப - உமாபதிசிவம்)
-தீவணத்தில்
கண்சுழியல் என்று கருணையளித்து என்னுளஞ்சேர்
தண்சுழியல் வாழ்சீவ சாக்ஷியே" (அருட்பா)
அஞ்சல் முகவரி -
அருள்மிகு. திருமேனிநாதர் திருக்கோயில்
திருச்சுழி - அஞ்சல் - 626 129.
திருச்சுழி வட்டம் - விருதுநகர் மாவட்டம்.