திருமுருகன்பூண்டி

திருமுறைத்தலங்கள்

கொங்கு நாட்டுத் தலம்

திருமுருகன்பூண்டி

அவிநாசியிலிருந்து 5 A.e. தொலைவில் உள்ளது. பேருந்து வசதியுண்டு.

முருகப்பெருமான் வழிபட்ட தலம். அகத்தியர் மார்க்கண்டேயர் துர்வாசர் ஆகியோர் வழிபட்ட தலம். இதற்கு மாதவிவனம் என்றும் பெயர். துர்வாசர் கற்பகவுலகிலிருந்து மாதவிமர (குருக்கத்தியை) த்தை இங்குக் கொண்டு வந்தார் என்பர். சுந்தரர் இவ்வழியே செல்லும்போது, இறைவன் தன் பூதகணங்களை வேடர் வடிவில் ஏவிச் சுந்தரரின் செல்வங்களைப் பறித்துக் கொண்ட தலம்.


இறைவன் - முருகநாதேஸ்வரர், முருகநாதசுவாமி.


இறைவி - ஆலிங்கபூஷணஸ்தனாம்பிகை, (முயங்குபூண்முலையம்மை) ஆவுடைநாயகி, மங்களாம்பிகை.


சுந்தரர் பாடல் பெற்றது.

சுவாமியும் அம்பாளும் மேற்கு பார்த்த சந்நிதிகள். மூலவர் அம்பாள் பீடத்தின் கோமுகம் வடக்கு நோக்கியுள்ளது. வழிமறித்து நிதிபறித்த இறைவன் இருக்குமிடத்தைக் கூப்பிட்டுச் சுந்தரருக்குக் காட்டிய (வேடுபறி நடந்த இடம்) 'கூப்பிட்டுவிநாயகர்' அவிநாசிக்குப் போகும் வழியில் 1 A.e. தொலைவில் பாறைமேல் உள்ளார்.

கோயில் நுழைவு வாயிலில் பதினாறுகால் மண்டபத்தில் விநாயகர் சந்நிதி உள்ளது. இதைத் தாண்டி உள்ளே சென்றால் வலப்பால் வேடுவர் உருவமும் சுந்தரர் உருவங்கள் இரண்டு (ஒன்று பறிகொடுத்து முகம் வாடிய நிலையிலும் மற்றொன்று மீண்டும் பெற்ற மகிழ்ச்சி நிலையிலும்) உள்ளன. கோயில் பிராகாரத்தில் பைரவர் சந்நிதியும் நவக்கிரகங்களும் உள்ளன. இங்குள்ள சண்முகநாதர் சந்நிதி சிறப்பானது. பிரமதீர்த்தம், ஞானதீர்த்தம், சுப்பிரமணிய தீர்த்தம் என்ற மூன்று தீர்த்தங்கள் உள்ளன. தலமரம் = வில்வம். இத்தலம் பிரமகத்தி தோஷம் நீங்கிய தலம். சித்தப்பிரமை, பைத்தியம், பில்லி, சூன்யம் இவை நீங்க வேண்டுவோர் இங்குவந்து நீராடி வழிபடுவதையும், பல நாள்கள் இங்கேயே தங்கியிருப்பதையும் இன்றும் காணலாம். இங்குள்ள பிரமதாண்டவ நடராஜர் சந்நிதி விசேஷமானது. இக்கோயிலுக்குப் பக்கத்தில் சற்றுத் தொலைவில் மாலாதரன் எனும் வேடமன்னன் வழிபட்ட பைரவர் சந்நிதி. இது விசேஷமானது. சுவாமி கிழக்கு நோக்கியுள்ளார். (சுயம்புமூர்த்தி என்று சொல்லப்படுகிறது) கோயிலின் முன் மண்டபம் உள்ளது. எங்கும் இல்லாத புதுமையாக இங்கு, இம்மண்டபத்தின் மேலே பெரிய நந்தி, ஆலயத்தைப் பார்த்தவாறு சுதையால் அமைக்கப்பட்டு உள்ளது. ஆலயச் சுவற்றில் நிருதி விநாயகர், கேது ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. இத்தலத்திற்குத் தலபுராணம் உள்ளது. செட்டிப்பாளையம் வாசுதேவ முதலியார் பாடியது. நாடொறும் நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன. மாசி மாதத்தில் 11 நாள்களுக்குப் பெருவிழா நடைபெறுகிறது.


"கொடுகு வெஞ்சிலை வடுகவேடுவர் விரவலாமை சொல்லித்

திடுகு மொட்டெனக் குத்திக் கூறை கொண்டாறலைக்குமிடம்

முடுகுநாறிய வடுகர் வாழ்முருகன் பூண்டிமா நகர்வாய்

இடுகு நுண்ணிடை மங்கை தன்னொடும் எத்துக்கிங்கிருந்தீரெம் பிரானிரே."

(சுந்தரர்)


திருப்புகழ்

அவசியமும் வேண்டிப் பலகாலும்

அறிவினணர்ந்தாண்டுக் கொருநாளில்

தவசெபமும் தீண்டிக் கனிவாகிச்

சரணமதும்பூண்டற் கருள்வாயே

சவதமொடுந் தாண்டித் தகரூர்வாய்

சடுசமயங் காண்டற் கரியானே

சிவகுமரன்பூண்டிற் பெயரானே

திருமுருகன் பூண்டிப் பெருமாளே.


-"சான்றவர்கள்

தம்முருகன் பூணுட் டலம்போல வாழ்கின்ற

வெம்முருகன் பூண்டி இருநிதியே." (அருட்பா)


அஞ்சல் முகவரி -

அருள்மிகு. முருகநாதேஸ்வரர் தேவஸ்தானம்

திருமுருகன்பூண்டி - அஞ்சல் 641 652.

அவநாசி வட்டம் - கோவை மாவட்டம்.

 

Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is (திருப்புக்கொளியூர்) அவிநாசி
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  திருநணா
Next