திருமுறைத்தலங்கள்
இந்திரநீல பருப்பதம்
வடநாட்டுத் தலம்.
இமயமலைச் சாரலில் உள்ளது. இந்திரனால் வழிபட்ட தலம்.
இறைவன் - நீலாசலநாதர்.
இறைவி - நீலாம்பிகை.
தீர்த்தம் - இந்திரதீர்த்தம்.
சம்பந்தர் பாடல் பெற்றது.
தென்கயிலாயமான திருக்காளத்தியைத் தொழுத பின்பு அங்கிருந்தே இத்தலத்தைத் தொழுது பாடிப் போற்றினார்.
பத்ரிநாத் கோயிலை இரவு அடைந்து, அடிவாரத்தில் இரவு தங்கி, விடியற்காலை 4 மணியளவில் எழுந்து பார்த்தால் இந்திரநீல பருப்பதத்தைத் தரிசிக்கலாம். அந்நேரத்தில் இம்மலை இந்திரநீல நிறத்தில் கண்கொள்ளாக் காட்சியாகத் தரிசனம் தருகிறது. நேரம் ஆக ஆக பின்பு நிறம் மாறிவிடுகிறது. திருவருள் உடையவர்க்கே இத்தரிசனம் கிடைக்கும். இங்குள்ளோர் இம்மலையை நீலகண்ட பர்வதம் என்று வழங்குகின்றனர்.
"பூவினானொடு மாலும் போற்றுறுந்
தேவனிந்திர நீலபர்ப்பதம்
பாவியா எழுவாரைத் தம்வினை
கோவியா வருங் கொல்லுங் கூற்றமே". (சம்பந்தர்)
-"போகிமுதல்
பாடியுற்ற நீலப் பருப்பதத்தில் நல்லோர்கள்
தேடிவைத்த தெய்வத் திலகமே". (அருட்பா)