திருமுறைத்தலங்கள்
திருக்கிளியன்னவூர்
இத்தலம் 276 ஆவது திருமுறைத்தலமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியிலுள்ள இந்தாலஜி இன்ஸ்டியூட்டினர் (The Institute of Indology) 1984ல் வெளியிட்டுள்ள தேவாரம் (பண்முறை) - ஞானசம்பந்தர் தேவாரம் வால்யூம் 1ல் பக்கம் 405ல் (பதிகத்தொடர் எண். 385 உடையதாக) - 'திருவிடைவாய்' பதிகத்தை அடுத்து,
"திருக்கிளியன்னவூர்" என்னும் தலத்தின் பதிகத்தை வெளியிட்டுள்ளனர். அதில் "சித்தாந்தம்" இதழ் மலர் 5, இதழ்11. (1932) தலைப்பு ஏட்டிலிருந்து எழுதப்பட்டது என்று குறித்துள்ளனர். இப்பதிகப்பண் 'கௌசிகம்'. இந்நூலின் பதிப்பாசிரியர்கள் டி.வி. கோபாலய்யர் அவர்கள் இந்நூலில் முன்னுரையில் (பக்கம் XXXIII -XXXIX) "கிளியன்னவூர் மலர் 5 இதழ் 11 (1932) ல் வெளியிடப்பட்டுள்ளதாகக் குறித்துள்ளார்.
(மேற்படி நூலில் இத்தலம் எங்குள்ளது என்று குறிப்பிடப்படவில்லை. ஆனால் திண்டிவனத்திற்குப் பக்கத்தில் 'கிளியனூர்' என்றும் பெயரில் இன்றொரு ஊர் உள்ளது.
இப்பதிகம் வருமாறு -
திருக்கிளியன்னவூர் - கௌசிகம்
1. தார் சிறக்கும் சடைக்கு அணி வள்ளலின்
சீர் சிறக்கும் துணைப்பதம் உன்னுவொர்
பேர் சிறக்கும் பெருமொழி உய்வகை
ஏர் சிறக்கும் கிளியன்ன வூரனே.
2. வன்மை செய்யும் வறுமை வந்தாலுமே
தன்மை இல்லவர் சார்பு இருந்தாலுமே
புனமைக் கன்னியர் பூசல் உற்றாலுமே
நன்மை உற்ற கிளியன்ன வூரனே.
3. பன்னி நின்ற பனுவல் அகத்தியன்
உன்னி நின்று உறுத்தும் சுகத்தவன்
மன்னி நாகம் முகத்தவர் ஓதலும்
முன்னில் நின்ற கிளியன்ன வூரனே.
4. அன்பர் வேண்டுமவை அளி சோதியான்
வன்பர் நெஞ்சில் மருவல் இல்லாமுதல்
துன்பம் தீர்த்துச் சுகம் கொடு கண்ணுதல்
இன்பம் தேக்கும் கிளியன்ன வூரனே.
5. செய்யும் வண்ணம் சிரித்துப் புரம்மிசை
பெய்யும் வண்ணப் பெருந்தகை யானதோர்
உய்யும் வண்ணம் இங்கு உன் அருள்நோக்கிட
மெய்யும் வண்ணக் கிளியன்ன வூரனே.
6. எண்பெறா வினைக்கு ஏதுசெய் நின் அருள்
நண்பு உருப்பவம் இயற்றிடில் அந்நெறி
மண்பொரு முழுச் செல்வமும் மல்குமால்
புண் பொருத கிளியன்ன வூரனே.
7. மூவர் ஆயினும் - முக்கண்ண - நின்அருள்
மேவுறாது விலக்கிடற் பாலரோ
தாஉறாது உனது ஐந்தெழுத்து உன்னிட
தேவர் ஆக்கும் கிளியன்ன வூரனே.
8. திரம் மிகுத்த சடைமுடியான் வரை
உரம் மிகுத்த இராவணன் கீண்டலும்
நிரம் மிகுத்து நெரித்து அவன் ஓதலால்
வரம் மிகுத்த கிளியன்ன வூரனே.
9. cF உற்றிடும் நான்முகன் நாரணன்
பேதம் உற்றுப் பிரிந்து அழலாய் நிமிர்
நாதன் உற்றன நல்மலர் பாய் இருக்
கீதம் ஏற்ற கிளியன்ன வூரனே.
10. மங்கையர்க்கு அரசோடு குலச்சிறை
"பொங்கு அழல் சுரம் போக்கு"என, பூழியன்
சங்கை மாற்றி சமணரைத் தாழ்த்தவும்
இங்கு உரைத்த கிளியன்ன வூரனே.
11. நிறைய வாழ் கிளியன்னவூர் ஈசனை
உறையும் ஞானசம்பந்தன் சொல்சீரினை
அறைய நின்றன பத்தும் வல்லார்க்குமே
குறை இலாது கொடுமை தவிர்வரே.
(நூலில் இப்பாடல்கள் படிப்பதற்கு ஏற்ப இவ்வாறு பிரித்துப் போடப்பட்டுள்ளன) .