திருமுறைத்தலங்கள்
தொண்டை நாட்டுத் தலம்
திருக்கச்சூர் - கச்சூர்
(சென்னைக்குப் பக்கத்தில் உள்ள) சிங்கப்பெருமாள் கோயிலிலிருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் பேருந்துச் சாலையில் 1 1/2 A.e. சென்று, "தியாகராஜபுரம் - திருக்கச்சூர்" என்று பெயர்ப்பலகையுள்ள இடத்தில் வலப்புறமாகப் பிரிந்து செல்லும் சாலையில் சென்று திருக்கச்சூரை அடையலாம் ஊருள் சென்றதும் வலப்பால் திரும்பிச் சென்றால் (கச்சூர்) ஆலக்கோயிலையும் இடப்பால் சென்றால் மலையடிக் கோயிலான மருந்தீசர் கோயிலையும் அடையலாம்.
சுந்தரர் திருக்கழுக்குன்றம் வழிபட்டுத் திருக்கச்சூரை அடைந்து பெருமானை - ஆலக்கோயில அமுதனைத் தொழுது, மதிற்புறத்தே பசியுடன் அமர்ந்திருக்க, இறைவன் அந்தணர் வடிவில் வந்து, சுந்தரரை அங்கேயே இருக்கச் செய்து, இவ்வூரிலுள்ள அடியார்கள் வீடுதோறும் சென்று, உணவு பெற்று வந்து, இட்டு அவர் பசியை மாற்றிய நிகழ்ச்சி நடைபெற்ற பதி. பசி நீங்கப்பெற்ற சுந்தரர், இறையருள் கருணையை வியந்து, 'முதுவாயோரி' என்னும் பதிகம் பாடிப் போற்றினார். முதலில் ஆலக்கோயிலையும் பின்பு மருந்தீசர் கோயிலையும் தரிசிக்க வேண்டும்.
தொண்டை நாட்டிலுள்ள தியாகராஜா சந்நிதிகளுள் இத்தலமும் ஒன்று, இங்குள்ள தியாகேசர் 'அமுதத் தியாகர்' எனும் பெயருடையவர். அமுதம் திரண்டு வருவதற்காகத் திருமால் கச்சப வடிவில் (ஆமை வடிவில்) இருந்து இறைவனை இத்தலத்தில் வழிபட்டதாக வரலாறு. இக்கோயில் ஆலக்கோயிலாகும். ஆதலின் 'கச்சபவூர்' எனும் பெயர் நாளடைவில் மக்கள் வழக்கில் மாறி 'கச்சூர்' என்றாயிற்று என்பர்.
1) கச்சூர்க் கோயில் - ஆலக்கோயில்.
இறைவன் - விருந்திட்ட ஈஸ்வரர், விருந்திட்ட வரதர், கச்சபேஸ்வரர்
இறைவி - அஞ்சனாக்ஷியம்மை
தலமரம் - ஆல்
தீர்த்தம் - கூர்ம (ஆமை) தீர்த்தம்.
2) மருந்தீசர் கோயில் (மலையடிவாரக் கோயில்)
இறைவன் - மருந்தீசர்
இறைவி - அந்தகநிவாரணி அம்பாள், இருள்நீக்கித் தாயார்.
இம்மலைக்கு மருந்து நிலை - ஓளஷதகிரி என்று பெயர்.
விநாயகர் - தாலமூல விநாயகர் (அ) கருக்கடி விநாயகர்.
சுந்தரர் பாடல் பெற்றது.
கச்சூர்க் கோயில் - ஆலக்கோயில்
கிழக்கு நோக்கியுள்ளது. எதிரில் கச்சூர் ஏரி தெரிகின்றது. ராஜகோபுரமில்லை. முகப்பு வாயில் மட்டுமே. கோயிலுக்கு எதிரில் பதினாறுகால் மண்டபம் உள்ளது. இம்மண்டபத் தூண்களில் அநுமந்த சேவை, கூர்மாவதாரம், காளிங்க நர்த்தனம், கல்கி அவதாரம், துர்க்கை, ஆதிசேஷன், ஊர்த்துவ தாண்டவம், காளி முதலிய பல சிற்பங்கள் இருப்பதைக் காணலாம்.
வாயிலில் நுழைந்ததும், கொடிமரம், நந்தி, பலிபீடங்கள் உள்ளன. இவை சுவாமிக்கு சந்நிதிக்கு நேரே சாளரம் அமைந்து அதற்கு எதிரில் வெளியில் அமைந்துள்ளன. பக்க (தெற்கு) வாயில் முன்னால் மண்டபம் உள்ளது. இம் மண்டபத் தூண் ஒன்றில் திருமால் ஆமை வடிவில் வழிபடும் சிற்பம் உள்ளது. இம்மண்டபத்தில் 'அமுதத் தியாகேசர் சபை' உள்ளது. வணங்கி, வாயிலுள் சென்றால் முன்மண்டபம். நேரே அம்பாள் தரிசனம். தெற்கு நோக்கிய சந்நிதி. அம்பாள் நின்ற திருக்கோலம். அபயவரதத்துடன் கூடிய நான்கு திருக்கரங்கள். எதிரில் சிம்மம் உளது. அம்பாள் கோயில் தனிக்கோயிலாகவுள்ளது -வலம் வரும் வசதியுள்ளது.
இடப்பால் சுவாமி சந்நிதிக்குச் செல்லும் வழியுள்ளது. நுழைவு வாயிலைக் கடந்து பிராகாரத்தை வலமாக வரும்போது சூரியன், விநாயகர், பல சிவலிங்கத் திருமேனிகள், நாகலிங்கங்கள், வள்ளி தெய்வயானை, சுப்பிரமணியர், நடராசர், நால்வர் ஆகிய சந்நிதிகள் உள்ளன. வணங்கியவாறே, பக்கவாயில் வழியாக உட்சென்றால் மூலவர் காட்சியளிக்கின்றார். எதிரில் சாளரம் உள்ளது.
மூலமூர்த்தி சிவலிங்கத் திருமேனி - சுயம்பு. சிறிய பாணம். சுவாமி கருவறை அகழி அமைப்புடையது. கோஷ்டமூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகிய மூர்த்தங்கள் உள்ளன. இக்கோயிலில் சித்திரையில் நடைபெறும் பெருவிழா அனைத்தும் தியாகராஜாவுக்குத்தான். இத்திருவிழாவில் 9-ஆம் நாளன்று, இறைவன் சனகாதி முனிவர்களுக்கு அருளிய சின்முத்திரை உபதேச ஐதீகம் நடைபெறுகின்றது. 'முதுவாயோரி' தலப்பதிகம் - சுந்தரர் பாடியது கல்லிற்பொறித்துப் பதிக்கப்பட்டுள்ளது. இக்கோயிலுக்கு எதிரில் ஆறுமுகச் செட்டியார் சத்திரம் உள்ளது. ஆலயத்திற்கு வரும் யாத்திரிகர்ககள் அமர்ந்து உண்ண, இளைப்பாற இடமளித்து உதவுகின்றனர்.
மலையடிவாரத்தில் மருந்தீசர் கோயில் உள்ளது. ராஜகோபுரமில்லை. தெற்கு நோக்கிய வாயில். உட்சென்றதும் சிறிய மண்டபம் உள்ளது. இம்மண்டபத் தூண்களில் துவாரபாலகர் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இவை தவிர, இலிங்கோற்பவர், மாவடிசேவை, பட்டினத்தார், வள்ளலார், விநாயகர், தண்டபாணி, அப்பர், சம்பந்தர், சுந்தரர், முதலிய சிற்பங்கள் உள்ளன. இவற்றுள் சுந்தரரை நோக்கியவாறு, கையில் அமுதுடன் காட்சிதரும் இறைவனின் சிற்பம் உள்ளது - கண்டு மகிழத்தக்கது. சுற்றுமதில் உள்ளது. சிறிய கோயில் - சுற்றிலும் இயற்கைச் சூழல், அமைதியான இடம். உள்பிராகாரத்தில் விநாயகர் கோயில் உள்ளது. சுவாமி சந்நிதி மேற்கு நோக்கியது. எதிரில் சாளரம் உள்ளது. இதன் வெளியே கொடிமரம் நந்தி பலிபீடங்கள் உள. படிகளில் இறங்கி நீர் அருந்தும் அமைப்புடைய 'நடைபாதைக் கிணறு' உள்ளது. பக்கத்தில் நவக்கிரக சந்நிதி. அம்பாள் சந்நிதி மேற்கு நோக்கியது. நின்ற திருக்கோலம். அபய வரதத்துடன் கூடிய நான்கு திருக்கரங்கள். எதிரே நாகலிங்கமரம் உள்ளது. துவாரகணபதி, சுப்பிரமணியரை வணங்கியுட் சென்றால் மூலவர் தரிசனம், உயர்ந்த திருமேனி - கோமுகம் மாறியுள்ளது. கோஷ்ட மூர்த்தங்களாக, விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, மூர்த்தங்கள் உள்ளன. கோஷ்ட பிரம்மாவுக்கு எதிரே சண்டேசுவரர் நான்கு முகங்களுடன் (சதுர்முக சண்டேசுவரராகக் காட்சி தருகின்றார். இந்த அமைப்பு இக்கோயிலில் உள்ள ஓர் அறிய உருவ அமைப்பாகும். பைரவர் சந்நிதி உள்ளது.
மாசி மாதத்தில் இக்கோயிலில் திருவிழா நடைபெறுகின்றது. இத் திருவிழாவில் 9- ஆம் நாளில் - இறைவன் பிச்சையெடுத்துச் சுந்தரருக்கு அமுதிட்ட ஐதிகம் நடைபெறுகிறது. இரந்திட்ட ஈஸ்வரர் வீற்றிருக்கும் சிறிய கோயில் மேற்கில் உள்ளது. சித்திரையில் பெருவிழா நடைபெறுகிறது.
"மேலைவிதியே வினையின் பயனே விரவார் புரமூன்றெரிசெய்தாய்
காலையெழுந்து தொழுவார் தங்கள் கவலை களைவாய் கறைக்கண்டா
மாலைமதியே மலைமேல் மருந்தே மறவேன் அடியேன் வயல்சூழ்ந்த
ஆலைக்கழனிப் பழனக்கச்சூர் ஆலக்கோயில் அம்மானே."
(சுந்தரர்)
-"தூவிமயில்
ஆடும் பொழிற்கச்சூர் ஆலக் கோயிற்குள் அன்பர்
நீடும்கனதூய நேயமே"
(அருட்பா)
அஞ்சல் முகவரி -
அ.மி. மருந்தீஸ்வரர் திருக்கோயில்
திருக்கச்சூர் - அஞ்சல்
(வழி) சிங்கப்பெருமாள்கோயில் S.O.603 204.
செங்கற்பட்டு வட்டம் - காஞ்சிபுரம் மாவட்டம்.