திருமுறைத்தலங்கள்
தொண்டை நாட்டுத் தலம்
திருஅரசிலி - ஓழிந்தியாப்பட்டு
மக்கள் வழக்கில் 'ஓழிந்தியாப்பட்டு' என வழங்குகின்றது.
(1) திண்டிவனம் - பாண்டிச்சேரி (வழி) கிளியனூர். சாலையில் கிளியனூர் தைலாபுரம் தாண்டி 'கீழ்புத்துப்பட்டு' என்னும் கைகாட்டி மரமும், ஓழிந்தியாப்பட்டு என்னும் கைகாட்டி மரமும் உள்ள இடத்தில் இடப்புறமாகப் பிரியும் அக்கிளைப்பாதையில் 2 A.e. சென்று ஒழிந்தியாப்பட்டு அடையலாம். (கிளைப்பாதை பிரியுமிடத்தில் தேவஸ்தானப்பெயர்ப் பலகையுள்ளது.)
(பாண்டிச்சேரியிலிருந்து 17-ஆவது கி.மீ.-ல் இக்கிளைப்பாதை பிரிகிறது.
(2) திருவக்கரையைத் தரிசித்து விட்டு வருவோர் மெயின் ரோடுக்கு வந்து, மயிலம் - வானூர் வழிச் செல்லும் - பாண்டிச்சேரி சாலையில், திருச்சிற்றம்பலம் கூட்ரோடினை' அடைந்து, அப்பாதையில் திண்டிவனம் செல்லும் மார்க்கத்தில் சென்று, மேற்சொல்லியவாறு 'கீழ் புத்துப்பட்டு, என்னும் கைகாட்டி மரம் உள்ள இடத்தில் வலப்புறமாகப் பிரியும் கிளைப்பாதை வழியே சென்று ஒழிந்தியாப்பட்டு வாமதேவமுனிவர் வழிபட்ட தலம்.
இறைவன் - அரசிலிநாதர், அஸ்வத்தேஸ்வரர், அரசலீஸ்வரர்.
இறைவி - பெரியநாயகி, அழகியநாயகி.
தலமரம் - அரசு.
தீர்த்தம் - வாமதேவ தீர்த்தம். (அரசடித் தீர்த்தம்) .
சம்பந்தர் பாடல் பெற்றது.
சாளுவ வம்ச மன்னனால் கட்டப்பட்ட கோயில், வாமதேவ முனிவர் வழிபட்டுப் பிரதோஷ நாளில் பேறு பெற்றார். சாளுவ மன்னனும் பிரதோஷ விரதம் இருந்து பெருமானைப் போற்றிப் பேறு பெற்றான். ஆதலின் இத்தலத்தில் பிரதோஷ விரதம் இருந்து பெருமானைப் போற்றிப் பேறு பெற்றான். ஆதலின் இத்தலத்தில் பிரேதோஷ வழிபாடு மிகவும் சிறப்புடையதாகும். ராஜகோபுரத்தை அடுத்து உட்புறத்தில் மூலவரை நோக்கியவாறு பைரவர், சூரியன், உருவங்கள் உள்ளன. உள்சுற்றில் விநாயகர் சந்நிதி உள்ளது. கோஷ்டமூர்த்த தட்சிணாமூர்த்தி தனி விமானத்துடன் அழகாக உள்ளார். பிரம்மா, துர்க்கை, வைஷ்ணவி சந்நிதிகள் உள்ளன. ஆறுமுகர் அழகான சந்நிதி. கருவறை வெளிச்சுவரில், ஜயங்கொண்ட சோழ மண்டலத்து கோப்பரகேசரி வர்மன் காலத்தியதாகச் சொல்லப்படும் கல்வெட்டுக்கள் உள்ளன. நால்வரைத்தொழுது பக்க வாயில் வழியே தலப்பதிகக் கல்வெட்டைக் கண்டு ஓதியவாறே உள்சென்று பெருமானை வழிபட வேண்டும். நேரே நடராசசபை.
மூலவர் - சிவலிங்கத் திருமேனி - குட்டையானது, ஆவுடையாரும் தாழுவுள்ளது. முன் மண்டபத்தில் வலப்பால் அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியது - நின்ற திருக்கோலம். வைகாசி விசாகத்தில் பத்து நாள்களுக்குப் பெரு விழா நடைபெறும். சிரவையாதீனம் கௌமார மடாலயம் ஸ்ரீ தண்டபாணி சுவாமிகள் இத்தலத்திற்குப் பாடல்களைப் பாடியுள்ளார் எனத் தெரிகின்றது.
இவ்வூரில் வாழ்ந்த அறச்செல்வியார் திருமதி. ஜயலட்சுமி அம்மையார் அவர்கள் கட்டிய திருஞானசம்பந்தர் திருமடம் கோயிலுக்குப் பக்கத்தில் உள்ளது. இவ்வம்மையார் வைத்துள்ள அறக்கட்டளையிலிருந்து, பெருவிழாவில் ஏழாம் நாள்
உற்சவம் - தலமகிமைப்படி அரசமர வாகன உற்சவமாக விசேஷமாகக் கொண்டாடப்படுகின்றது. ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ
ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்களின் பொன்விழாத் திட்டத்தில் நிதியுதவி பெற்றும், அரசு, மற்றும் அன்பர்களின் ஆதரவிலும் திருப்பணிகள் செய்யப்பட்டு அ ட்சய ஆண்டு ஆனி 4 ஆம் நாள் (18-6-1986-ல்) கும்பாபிஷேகம் செய்யப்பட்டுள்ளது. இத்தலத்திற்கு அருகாமையில் 'இரும்பை மாகாளம்' என்னும் தலமுள்ளது.
கல்வெட்டுச் செய்திகள் - இத்திருக் கோயிலில் உள்ள ஐந்து கல்வெட்டுக்கள் அரசியலாரால் படியெடுக்கப்பட்டுள்ளன. இவற்றுள் விக்ரம சோழதேவர், குலோத்துங்க சோழ தேவர் ஆகிய இருவரும் குறிப்பிடப்பட்டுள்ளனர். விக்ரமசோழ தேவரின் ஆறாவது ஆட்சி ஆண்டுக்காலத்தில் இவவூர் ஜயங்கொண்ட சோழ மண்டலத்து ஓய்மானாடான விஜயராஜேந்திர சோழவள நாட்டுப் பெரு வேம்பூர் நாட்டுத் தேவதானம் திருவரைசிலி என்றும், பன்னரிண்டாவது ஆட்சியாண்டில் "ஓய் மானாட்டுத் திருவரசிலி" என்றும், பதினாறாவது ஆட்சியாண்டில் "ஜயங்கொண்ட சோழ மண்டலத்து ஓய்மா னாடான
விஜயராஜேந்திர சோழவள நாட்டுப் பெருவேம்பூர் நாட்டுத் திருவரசிலி" என்றும் குறிக்கப் பெற்றுள்ளது.
"மிக்க காலனைவீட்டிமெய் கெடக் காமனை விழித்துபூ
புக்க வூரிடு பிச்சையுண்பது பொன்றிகழ் கொன்றை
தக்கநூறிதழ் மார்பிற்றவள வெண்ணீ றணிந்தாமை
அக்கினாரமும் பூண்ட அடிகளுக்குஇடம் அரசிலியே"
(சம்பந்தர்) "-தேர்ந்தவர்கள்
தத்தமது மதியாற்சாரும் அரிசிலியூர்
உத்தம மெய்ஞ்ஞான ஒழுக்கமே"
(அருட்பா)
அஞ்சல் முகவரி -
அ.மி. அரசலீஸ்வரர் திருக்கோயில்
ஒழிந்தியாப் பட்டு - அஞ்சல்
வானூர் (வழி)
வானூர் வட்டம் - விழுப்புரம் மாவட்டம்.