திருமுதுகுன்றம் - விருத்தாசலம்

திருமுறைத்தலங்கள்
நடுநாட்டுத் தலம்

திருமுதுகுன்றம் - விருத்தாசலம்

திருமுதுகுன்றம் - தமிழ்ப்பெயர். விருத்தாசலம் என்பது சம்ஸ்கிரதப் பெயர். தற்போது வழக்கில் விருத்தாசலம் என்றே வழங்கப்படுகிறது.

சென்னை - திருச்சி ரயில்மார்க்கத்தில் விழுப்புரத்தை அடுத்துள்ள ரயில் சந்திப்பு நிலையம், திருச்சியிலிருந்தும் விழுப்புரத்திலிருந்தும் பேருந்து வசதிகள் அடிக்கடி உள்ளன.

இத்தலத்திற்கு 'விருத்த காசி' என்றும் பெயருண்டு. பண்டை நாளில் இத்தலத்துள்ளோர் காசிக்குக் செல்வதில்லை என்ற மரபு இருந்ததாகத் தெரிகின்றது. பிரமனும் அகத்தியரும் வழிபட்ட பெருமையுடைய பதி. சுந்தரர் இத்தலத்தல் பரவையருக்காகப் பெருமானை வேண்டிப் பொன்பெற்று அப்பொன்னை இங்குள்ள மணிமுத்தாற்றில் இட்டுத் திருவாரூர்க் கமலாயத்தில் எடுத்துக்கொண்டார் என்பது வரலாறு.

இத்தலத்தில் இறப்பவருக்கு, இறைவன் அவ்வுயிரைத் தன் தொடைமீது கிடத்தி மந்திர உபதேசம் செய்ய, இறைவி முன்தானையால் MCP இளைப்பாற்றுகின்றாள் என்பது கந்தபுராணம் வாயிலாக நாம் அறியும் செய்தியாகும்.

"தூசினால் அம்மைவீசத் தொடையின்மேற் கிடத்தித் துஞ்சும்

மாசிலா உயிர்கட் கெல்லாம் அஞ்செழுத்தியல்பு கூறி

ஈசனே தனது கோலம் ஈந்திடும் இயல்பால் அந்த

காசியின் விழுமிதான முதுகுன்ற வரையும் இயல்பால் அந்த

காசியின் விழுமிதான முதுகுன்ற வரையும் கண்டான்

(கந்தபுரா - வழிநடைப்படலம்)

இறைவன் - விருத்தகிரீஸ்வரர், பழமலைநாதர்.

இறைவி - விருத்தாம்பிகை, பெரிய நாயகி, பாலாம்பிகை.

தீர்த்தம் - மணிமுத்தாறு, அக்கினி, குபேர, சக்கர தீர்த்தங்கள்.

தலமரம் - வன்னி.

தல விநாயகர் - ஆழத்துப் பிள்ளையார்.

மூவர் பாடலும் பெற்ற பழம் பதி. அருணகிரிநாதர், குருநமசிவாயர், சிவப்பிரகாசர், இராமலிங்க வள்ளலார் முதலிய மகான்களும் இப்பதியைப் புகழ்ந்து பாடியுள்ளனர்.

இத்தலத்தின் பெயரில் 'குன்றம்' என்ற சொல் இருப்பினும், காண்பதற்கு மலை ஏதுமில்லை. குன்று பூமியினடியில் அழுந்தியிருப்பதாகத் தலவரலாறு கூறுகிறது. இதற்கேற்ப இப்பகுதியில் பூமிக்கடியில் பாறைகளே உள்ளன. எல்லாமலைகளும் தோன்றுவதற்கு முன்னரே இம்மலை தோன்றி மறைந்தமையால் இதற்குப் பழமலை - முதுகுன்றம் என்று பெயர் வந்தது. (விருத்தம் - பழமை, அசலம் - மலை) வடக்குக் கோபுர வாயிலுக்கு நேரே வடபால் மணிமுத்தாற்றில் நீராட வேண்டும். இவ்விடமே புண்ணிய மடு எனப்படுவதாகும்.

மிகப்பெரிய கோயில். பெரிய சுற்று மதில். நாற்புரமும் கோபுரங்கள் ஏழுநிலைகளுடன் காட்சியளிக்கின்றன. கீழைக்கோபுர வாயிலின் முன்னால் வெளியே உள்ள பதினாறுகால் மண்டபத்தில் வட, தென்பாற் சுவர்களில் 72 வகையான பரதநாட்டியப் பாவனை உருவங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன.

வாயிலின் உட்புறம் முன்னால் இருப்பது கைலாசப் பிராகாரம், அதில் முன்னால் உயர்ந்துள்ள கருங்கல் மண்டபம் தீபாராதனை மண்டபம் எனப்படும்.

அடுத்து மேற்புறமுள்ள பெரிய மண்டபம் நந்தி மண்டபம். ஆடிப்பூரத்தில் கல்யாணப் பெருவிழா இங்குதான் நடைபெறும். இதன் தென் பாலுள்ளது விபச்சித்து முனிவர் மண்டபம் ஆகும். மாசிமகத்தில் 6ஆம் நாள் விழாவில் - இவ்வொரு நாளில் மட்டுமே உலா வருகின்ற - உற்சவ மூர்த்தி பெரிய நாயகர் காட்சி தர, விபசித்து முனிவர் தரிசிக்கும் விழா இங்குத்தான் நடைபெறுகிறது. இம்மண்டபத்தின் நேர்கிழக்கில் கிணறுவடிவத்தில் அக்னி தீர்த்தமும், அதன் தெற்கில் சொற்பொழிவு மண்டபமும் உள்ளன.

தலவிநாயகர் ஆழத்துப்பிள்ளையார், பெயருக்கேற்ப சந்நிதி ஆழத்தில் உள்ளது. இறங்குவதற்குப் படிக்கட்டுகள் உள்ளன. தனிச் சுற்றுமதிலும் கோபுரமும் கொண்டு இச்சந்நிதி விளங்குகின்றது. திருமாலின் சக்கரத்தால் உண்டாக்கப்பட்ட சக்கர தீர்த்தத்தைச் சுற்றிலும் நந்தவனம் உள்ளது. இக்கைலாசப் பிராகாரத்தின் வட மேற்கு மூலையில் 28 ஆகமக் கோயில் உள்ளது. முருகக் கடவுள் 29 ஆகமங்களையும் சிவலிங்கங்களாக வைத்துப் பூசித்தார் என்பது இதன் வரலாறு. காமிகேசுவரர் முதலாக வாதுளேசர் ஈறாக ஆகமங்களின் பெயர்களை இத்திருமேனிகள் பெற்றுள்ளன.

பெரிய நாயகி கோயில் கிழக்கு நோக்கியுள்ளது. தனிக்கோபுரம் உள்ளது. அம்பிகை - விருத்தாம்பிகை சந்நிதி. பெரிய கோயிலின் முன்னால் வெளியில் உள்ள அலங்கார மண்டபத்தில் கொடி மரமும் நந்தியும் உள்ளன. அருகில் குகை முருகன் சந்நிதியும் இங்கு வாழ்ந்து சாரூப நிலையடைந்த நாதசர்மா, அநவர்த்தினி ஆகியோரின் பெயர்களில் அமைந்த கோயில்களும் உள்ளன.

பக்கத்தில் குபேர தீர்த்தம். அடுத்துள்ளது யாகசாலை மண்டபம். தென்புறமுள்ள நூற்றுக்கால் மண்டபம் மிகப் பழமையானது. சக்கரங்கள் பொருந்தி குதிரைகள் பூட்டப்பட்ட நிலையில் உள்ளது. இதுவே கைலாசப் பிராகாரத்தின் முடிவு.

அடுத்துள்ளது இரண்டாவது சுற்றுமதில். உட்பிராகாரத்திற்கு வன்னியடிப் பிராகாரம் என்று பெயர். மடைப்பள்ளிக்குப் பக்கத்தில் தலமரமான வன்னிமரம் உள்ளது. இங்குள்ள மேடையில் விநாயகர், விபச்சித்துமுனிவர், உரோமேச முனிவர், விதர்க்கண செட்டி (வழிபட்டுச் சிவகணமான ஓர் அன்பர்) குபேரன் தங்கை முதலியோரின் உருவங்களும் உள்ளன. வன்னியடிப் பிராகாரத்தில் பஞ்சலிங்கங்கள் உள. வல்லபை கணபதி, மீனாட்சி சொக்கலிங்கம், விசுவநாதலிங்கம், ஆறுமுகர், ஸஹஸ்ர லிங்கம், ஏகாம்பர லிங்கம், ஜம்புலிங்கம், அண்ணாமலையார் முதலிய சந்நிதிகள் உள்ளன. பெரிய நாயகி கோயிலுக்கு இப் பிராகாரத்திலிருந்து செல்வதற்கு அமைந்துள்ள வாயிலில் நவக்கிரகங்களும் தண்டபாணி சந்நிதியும் உள்ளன. இசை மண்டபம் (அ) அலங்கார மண்டபமே உற்சவரான பெரிய நாயகர் எழுந்தருளியுள்ள இடமாகும். எல்லாத் திருமஞ்சனச் சிறப்பும் இங்கு இவருக்குத்தான். இவர் ஆண்டில் ஒரு நாள் மட்டும் -அதாவது மாசி மகம். ஆறாம் நாள் விழாவில் - வெளியில் உலா வருவார். மற்ற விழாக் காலங்களில் சிறிய பழமலை நாயகர் வெளியில் உலா வருவது மரபு. பௌர்ணமி, பிரதோஷ காலங்களில் பெரிய நாயகரை ஏராளமான மக்கள் வந்து வழிபடுகின்றனர்.

பெரிய நாயகர் உற்சவ மூர்த்தியாதலின் நாடொறும் அலங்கார தீபாராதனைகள் அனைத்தும் 'உடையவர்' எனப்படும் ஸ்படிகலிங்கத்திற்கே செய்யப்படுகின்றன.

இசை மண்டபத்தின் வடபால் உள்ள நடராசசபையுடன் வன்னியடிப் பிராகாரம் நிறைவாகிறது.

அடுத்து மூன்றாவது (உள்) சுற்று மதிலைக் கடந்தால் அறுபத்து மூவர் பிராகாரத்தை அடையலாம். நால்வர், விநாயகர், அறுபத்துமூவர், ரிஷபாரூடர், யோக தட்சிணாமூர்த்தி, சப்த மாதர்கள், உருத்திரர், மாற்றுரைத்த விநாயகர் முதலிய திருவுருவங்கள் உள்ளன. அடுத்துள்ளவை வருணலிங்கம், முப்பிள்ளையார், தட்சிணாமூர்த்தி, ஆகியவை. சின்னப்பழமலை நாதர், (உற்சவர்) வள்ளி தெய்வயானை சமேத முருகர், வல்லபை கணபதி, பிந்து மாதவப் பெருமாள், மயூர முருகன் முதலிய சந்நிதிகளை அடுத்துத் தரிசிக்கலாம்.

இளமை நாயகி (பாலாம்பிகை) கோயில் உள்ளது. பெரிய நாயகியே குருநமசிவாயருக்கு இளமை நாயகியாக வந்து உணவளித்ததால் இளமை நாயகிக்குத் தனிக்கோயில் உள்ளது. கஜலட்சுமி, பைரவர், சூரியலிங்கம், சூரியன் சந்நிதிகள் உள்ளன.

அடுத்து மகாமண்டபத்தையடைகிறோம். உள்ளிருப்பது ஸ்தபன மண்டபம், துவார பாலகர்களைத்தொழுது சென்று கர்ப்பக்கிருகத்தில் மூலவராகிய பழமலை நாதரைத் தரிசிக்கிறோம் - மனநிறைவான தரிசனம்.

இத்தலத்தில் குருநமசிவாயர் பற்றிச்சொல்லப்படும் ஒரு வரலாறு வருமாறு -

குருநமசிவாயர் என்னும் மகான் 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். ஒருமுறை அவர் திருவண்ணாமலையிலிருந்து தில்லை சென்றார். வழியில் திருமுதுகுன்றத்தில் இரவு தங்கினார். பழமலை நாதரையும் பெரிய நாயகியையும் தரிசித்து விட்டுக் கோயிலுள் ஒருபக்கத்தில் படுத்திருந்தார். பசிமிகுந்தது. பசி உண்டான போதெல்லாம் அம்பிகையைப் பாடி உணவைப் பெற்று உண்ணும் வழக்கமுடைய இவர் பெரிய நாயகியை துதித்து

"நன்றி புனையும் பெரிய நாயகி எனுங்கிழத்தி

என்றும் சிவனாரிடக் கிழத்தி - நின்ற

நிலைக் கிழத்தி மேனி முழுநிலக் கிழத்தி

மலைக் கிழத்தி சோறு கொண்டு வா" - என்று பாடினார்.

பெரிய நாயகி, முதியவடிவில் எதிர்தோன்றி, "எனைப் பலமுறையும் கிழத்தி என்று ஏன் பாடினாய்?" கிழத்தி எவ்வாறு சோறும் நீரும் கொண்டுவர முடியும் என்று கேட்க, குருநமசிவாயர்

"முத்தி நதி சூழும் முதுகுன் றுறைவாளே

பத்தர் பணியும் பதத்தாளே -அத்தன்

இடத்தாளே முற்றா இளமுலை மேலார

வடத்தாளே சோறு கொண்டு வா" என்று பாடினார்.

அம்மையும் மகிழ்ந்து இளமை நாயகியாக வடிவு கொண்டு வந்து உணவு படைத்தாள் என்று சொல்லப்படுகிறது. இதனால் உண்டானதே பாலாம்பிகை கோயிலாகும்.

இக்கோயில் பலகாலங்களில் பலரால் திருப்பணிகள் பல செய்யப்பட்டுத் திகழ்கின்றது. ஆதியில் விபச்சித்து முனிவர் முதன் முதலில் இக்கோயில் திருப்பணியைச் செய்ததாகத் தலபுராணம் கூறுகிறது. பின்பு 10ஆம் நூற்றாண்டில் செம்பியன் மாதேவியால் மூலவர் கருவறை ஸ்தபன மண்டபம். பரிவாரக் கோயில்கள், வன்னியடிப்பிராகாரக் கோயில்கள் முதலியவை திருப்பணிகள் செய்யப்பட்டன. இசை மண்டபம் குலோத்துங்க சோழன் காலத்தில் (A.H 1193-ல்) ஏழிசைமோகனான குலோத்துங்க சோழக்காடவராதித்தன் என்பவனால் கட்டப்பட்டது. மாசிமக ஆறாம் நாள் விழா நடைபெறும் இடமாக உள்மண்டபம் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் பெரம்பலூர் கிராமத்தில் வாழ்ந்த உடையார் ஒருவரால் கட்டப்பட்டது. A.H. 1813 முதல் 1926 வரை தென்ஆற்காடு மாவட்ட ஆட்சியராக இருந்த ஹைட்துரை' என்பவர் கைலாச பிராகாரத்திற்குத் தளவரிசை போட்டுத் தந்துள்ளார். அத்துடன் தேர்இழுக்க இரும்புச் சங்கிலியும், கும்ப தீபாராதனைக்காக வெள்ளிக் குடமும் வாங்கித் தந்துள்ளார் என்னும் செய்தி இம்மாவட்ட கெஜட்டால் தெரிய வருகின்றது. இத்துறையின் பெயரால் இன்றும் இவ்வூரில் தென்கோட்டை வீதியில் ஒரு சத்திரம் உள்ளது - (ஹைட் சத்திரம்) . இக்கோயிலிலிருந்து 72 கல்வெட்டுக்கள் படியெடுத்து வெளியிடப்பட்டுள்ளன. இவை கண்டராதித்தன், முதலாம் ராஜராஜன், முதலாம் ராஜேந்திரன், ராஜாதிராஜன், விக்கிரமசோழன் இரண்டாம் ராஜராஜன், மூன்றாம் குலோத்துங்கன் மற்றும் பாண்டியர், பல்லவர் விஜயநகர மன்னர் முதலானோரின் காலத்தியவை.

இக்கல்வெட்டுக்களிலிருந்து வேதமோதவும், புராணம் படிக்கவும் திருமுறைப் பாராயணம் செய்யவும், பணியாளர்கட்குத் தரவும், நந்தவனம் வைக்கவும் நிலமும் பொன்னும் பொருளும் நெல்லும் கொடுத்த செய்திகள் அறியக்கிடக்கின்றன. வாங்கிய கடனைத் திருப்பித்தராத ஒருவனுக்குத் தண்டனையாக கோயில் விளக்கிடுமாறு பணித்த செய்தியன்றும் ஒரு கல்வெட்டால் தெரிய வருகிறது. பல்லவ மன்னனான கோப்பெருஞ்சிங்கன் என்பவன், தான் போர்க்களத்தில் பலரைக் கொன்ற பழி நீங்குவதற்காகப் பழமலைநாதருக்கு வைரமுடி ஒன்று செய்துதந்து அதற்கு அவனியாளப் பிறந்தான் என்று பெயரும் சூட்டினான் என்பதும் மற்றொரு கல்வெட்டுச் செய்தியாகும்.

கல்வெட்டில் இறைவனின் திருப்பெயர், 'திருமுதுகுன்றம் உடையார்' 'ராஜேந்திரசிம்ம வளநாட்டு இருங்கொள்ளிப்பாடி பழுவூர்க் கூற்றத்து நெற்குப்பை திருமுதுகுன்றம் உடையார்க்கு' என்று குறிக்கப்படுகிறது.

இதனால் பண்டை நாளில் இம்மூதுகுன்றத்ததிற்கு நெற்குப்பை என்ற பெயரும் வழங்கி வந்ததாகக் கருத இடமுண்டாகிறது, மாசித் திங்கிளல் பெருவிழா நடைபெறுகிறது. ஆடிப்பூர திருக்கல்யாணப் பெருவிழாவும் சிறப்பாக நடைபெறுகிறது.

மூவர் பாடலுடன் அருணகிரியாரின் திருப்புகழும், குமூரதேவர் பாடியுள்ள பெரியநாயகியம்மன் பதிகமும், குருநமசிவாயர் பாடியுள்ள க்ஷேத்திரக்கோவையும், வள்ளற்பெருமானின் குருதரிசனப் பதிகமும், சொக்கலிங்க அடிகளார் என்பவர் (19 -ஆம் நூற்றாண்டு) எழுதிய பெரியநாயகி பிள்ளைத் தமிழும் இத்தலத்திற்கு உள்ளன.

சிவப்பிரகாச சுவாமிகள் பழமலையந்தாதி, பெரியநாயகியம்மை விருத்தம், பெரியநாயகியம்மை கட்டளைக் கலித்துறை, பிக்ஷ£டன நவமணிமாலை முதலிய நூல்களைப் பாடியுள்ளார்கள்.

16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஞானக்கூத்தர் என்பவர்தாம் திருமுதுகுன்றத் தலபுராணத்தைத் தமிழில் பாடியுள்ளார். நாடொறும் நான்கு கால பூஜைகள் முறையாக நடைபெறுகின்றன.

"மத்தா வரை நிறுவிக்கடல் கடைந்தவ் விடமுண்ட

தொத்தார் தருமணி நீண்முடிச் சுடர் வண்ணன திடமாம்

கொத்தார் மலர் குளிர் சத்தகி லொளிர் குங்குமங் கொண்டு

முத்தாறு வந்தடி வீழ்தரு முதுகுன் றடைவோமே"

(சம்பந்தர்)

கருமணியைக் கனகத்தின் குன்றொப்பானைக்

கருதுவார்க் காற்றவெளி யான்றன்னைக்

குருமணியைக் கோளரவ மாட்டுவானைக்

கொல்வேங்கை யதளானைக் கோவணவன்றன்னை

அருமணியை யடைந்தவர்கட்கு அமுதொப்பானை

ஆனஞ்சும் ஆடியைநான் அபயம்புக்கத்

திருமணியைத் திருமுதுகுன்றுடை யான்றன்னைத்

தீவினையே னறியாதே திகைத்தவாறே.

(அப்பர்)

மெய்யைமுற்றப் பொடிப்பூசியர்நம்பி

வேதநான்கும்விரித் தோதியர்நம்பி

கையிலோர்வெண் மமுவேந்தியர்நம்பி

கண்ணுமூன்றுடை யாயருநம்பி

செய்யநம்பிசிறுச் செஞ்சடைநம்பி

திரிபுரந்தீயெழச் செற்றதோர்வில்லா (ல்)

எய்தநம்பி யென்னையாளுடைநம்பி

யெழுபிறப்புமெங் கணம்பிகண்டாயே

(சுந்தரர்)

-'தேவகமாம்

மன்றமமர்ந்த வளம்போற் றிகழ்ந்தமுது

குன்றம் அமர்ந்த அருட்கொள்கையே'

(அருட்பா)

அஞ்சல் முகவரி -

அ.மி.பழமலைநாதர் திருக்கோயில்

விருத்தாசலம் - அஞ்சல் - 606 001.

விழுப்புரம் மாவட்டம்



Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is திருநாவலூர்
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  திருநெல்வெண்ணெய் (நெய்வெணை)
Next