திருமுறைத்தலங்கள்
நடுநாட்டுத் தலம்
அறையணிநல்லூர் (அரகண்டநல்லூர்)
தற்போது மக்கள் வழக்கில் அரகண்டநல் §லூர் என்று வழங்குகிறது. திருக்கோவலூருக்கு எதிர்க்கரையில் பெண்ணை யாற்றின் கரையில், ஒரு சிறிய பாறைமேல் கோயில் உள்ளது. திருவண்ணாமலையிலிருந்து செல்லும்போது, பெண்ணையாற்றுப் பாலத்தின் முன்பே இடப்புறமாகப் பிரியும் விழுப்புரம் பாதையில் 1 A.e. சென்றால் ஊர் உள்ளது. ஊருள் காவல் நிலையத்தினை அடைந்து வலமாகத் திரும்பிச் சிறிது தூரம் சென்று, பேருந்தை நிறுத்திவிட்டு நடந்து செல்ல வேண்டும். திருக்கோயிலூரிலிருந்து நகரப் பேருந்து உள்ளது.
திருக்கோவலூரிலிருந்து வருபவர்கள் பாலத்தைக் கடந்து வர வேண்டும். இங்கிருந்து பார்த்தால் மறுகரையில் உள்ள திருக்கோயிலூர் வீரட்டேசுவரர் கோயிலும், ஆற்றினிடையில் உள்ள கபிலர்மேடும் நன்கு தெரியும். நீலகண்ட முனிவர், கபிலர், பாண்டவர்கள் ஆகியோர் வழிபட்ட தலம். ரமணமகரிஷியைத் திருவண்ணாமலைக்கு வருமாறு அம்பாள் அவருக்கு உத்தரவிட்ட தலம் இது என்பர். திருக்கோயிலூர் ஸ்ரீ ஞானானந்தகிரிசுவாமிகள் அவர்கள் இங்குள்ள கோபுரத்தில் அமர்ந்து தவம் செய்து அருளைப்பெற்றார் என்றும் கூறுகின்றனர்.
இறைவன் - அதுல்ய நாதேஸ்வரர், ஒப்பிலாமணீசுவரர், அறையணிநாதர்.
இறைவி - சௌந்தர்ய கனகாம்பிகை, அருள்நாயகி, அழகியபொன்னம்மை.
தீர்த்தம் - பெண்ணையாறு
சம்பந்தர் பாடல் பெற்றது.
கற்கோயில், ஒரு சிறிய பாறைமீது உள்ளது. ராஜகோபுரம் ஏழுநிலைகளுடன் கூடியது. முகப்புவாயிலின் முன் கல்தூண்கள் உள்ளன. திருப்பணி நடந்து பல்லாண்டுகள் ஆயின. பிராகாரத்தில் வலம்புரிவிநாயகர் - தலவிநாயகர் உள்ளார். இவ்வுருவம் பெரியகல் ஒன்றில் வடிக்கப்பட்டு உள்ளது. எப்படிப் பார்த்தாலும் நம்மையே பார்ப்பதுபோலத் தோன்றுகிறது. இதன் முன்பு இடப்பால் தாளமேந்திய நின்றகோலத்தில் ஞானசம்பந்தர் திருமேனி உள்ளது.
இங்குள்ள முருகன் திருமேனி மிகவும் அற்புதமான அமைப்புடன் - அதாவது ஒருமுகம் ஆறுகரங்களுடன் காட்சியளிக்கிறது. கைகளில் ஆயுதங்கள்
உள்ளன. வள்ளிதெய்வயானை சமேதராக வடக்கு நோக்கிக் காட்சி தருகிறார். இது ¨சரசம்ஹாரமூர்த்தியாகும்.
விநாயகரின் பக்கத்தில் விஸ்வநாதலிங்கம் உள்ளது. கருவைற மிகப் பழமையானது. மூலவர் - சிவலிங்கம் மிகவும் பழைமையானது. சுயம்பு என்று சொல்லப்படுகிறது. மேற்கு நோக்கிய சந்நிதி. அகழி அமைப்புடைய கருவறை, அடிப்பாகம் கல்லாலும் மேற்புறம் (கோபுரம்) சுதையாலும் ஆனது. பிராகாரத்தில் சனிபகவான், காகத்தின் மீது ஒருகாலை வைத்தூன்றிய கோலத்தில் காணப்படுகிறார். நவக்கரிக சந்நிதி, பைரவர், கல்லில் வடித்துள்ள நாராயணர், நர்த்தன கணபதி, நீளமான கல்லில் வடித்துள்ள மகாவிஷ்ணு சக்கரதாரியாக நின்றநிலை முதலிய சந்நிதிகள் உள்ளன. சப்தமாதாக்கள் வரிசையாகக் கல்லில் வடிக்கப்பட்டுள்ளனர். நடராசசபைக்கு எதிர்வாயில் உள்ளது. சம்பந்தர், வலம்புரிவிநாயகர் காட்சி தருகின்றனர்.
வெளிச்சுற்றில் அண்ணாமலையார் சந்நிதி உள்ளது. அம்பாள் சந்நிதி தனிக்கோயிலாகத் தெற்கு நோக்கியுள்ளது. நான்கு திருக்கரங்களுடன் கூடிய நின்ற திருக்கோலம்.
நீலகண்டமுனிவர் என்பவர் முதலில் இங்கு வழிபட்டுப் பூசித்த பிறகே இக்கோயில் உண்டாயிற்று என்று கூறப்படுகிறது. இக்கோயில் வெளிச்சுற்றில் தற்போது கிலமாகவுள்ள நடனமண்டபம் பற்றிய செவிவழிச்செய்தி வருமாறு - ஒரு காலத்தில் இதனை எவரேனும் கட்டி முடிக்க வேண்டும் என்னும் நல்லெண்ணத்தால் 'இளவெண்மதி சூடினான்' என்பவன், அதற்காகத் தன் உயிரைத் தியாகம் செய்வதாக அறிவிக்க, பிற்காலத்தல் இந் நடன மண்டபம் கட்டிமுடிக்கப்பட, அவனும் தன் உயிரைத் தியாகம் செய்தான் என்று சொல்லப்படுகிறது. அவ்வாறு கட்டி முடிக்கப்பட்ட இந்நடனமண்டபம் தற்போது சீர்கெட்டுப் பயன்படுத்த முடியாதபடி கிலமாகவுள்ளது.
கோயிலுக்கு வெளியில் பாறைகளுக்கு இடையில் உள்ளது 'வீமன் குளம்'. இது வீமன், கதையால் உண்டாக்கப்பட்டதாகக் கூறுவர். ராஜகோபுரத்தின் அடிவாயிலில் குடைவரைக் கோயில்களாக ஐந்து அறைகள் உள்ளன உள்ளே ஏதுமில்லை.
இவ்வூரிலிருந்து விழுப்புரம் சாலையில் 1 A.e. தொலைவில் 'கழுவன் குளம்' என்னும் ஊர் உள்ளது. (அங்கு ஊரின் புறத்தே ஒரு குளம் உள்ளது) . இதுபற் §றச் சொல்லப்படும் செவிச் செய்தி வருமாறு- ஒரு காலத்தில் இத்திருக்கோயிலின் மூலவாயிலைச் சமணர்கள் அடைத்து விட்டதாகவும், சம்பந்தர் இங்கு வந்தபோது பாடித்திறந்து வாயிலை அடைத்த சமணர்களைக் கழுவேற்றியதாகவும் அவ்விடமே தற்போது கழுவன்குளம் என்னும் பெயரால் வழங்கப்படுகிறது என்கின்றனர். கோயிலுக்குச் செல்லும் வழியில் பிடாரி அம்மன் கோயில் உள்ளது. ஊர்மக்கள் இதைச் சக்திவாய்ந்ததாகப் போற்றுகின்றனர்.
குளக்கரையில் திரௌபதியம்மன் கோயில் உள்ளது. இத்திருக்கோயிலில் உள்ள நடராச விக்ரஹம் மிகவும் அழகான அமைப்புடையது. இதுவும் ஏனைய உற்சவ மூர்த்தங்களும் கீழையூர்க் கோயிலில் (திருக்கோவலூர் வீரட்டம்) பாதுகாப்புக்காக வைக்கப்பட்டுள்ளதாம். நித்தியப்படி பூஜை இருவேளைகள் மட்டுமே நடைபெறுகிறது. பௌர்ணமிதோறும் வழிபாடு நடைபெறுகிறது.
"பீடினாற் பெரியோர்களும் பேதைமை கெடத் தீதிலா
வீடனாலுயர்ந்தார்களும் வீடிலாரின் வெண்மதி
சூடினார் மறைபாடினார் சுடலை நீறணிந்தாரழல்
ஆடினார் அறையணி நல்லூர் அங்கையால் தொழுவார்களே"
(சம்பந்தர்)
'-ஆவலர்மா
தேவா இறைவா சிவனே எனுமுழக்கம்
ஓவா அறையணிநல்லூர் உயர்வே'.
(அருட்பா)
அஞ்சல் முகவரி -
அ.மி. அதுல்ய நாதேஸ்வரர் தேவஸ்தானம்
(அறையணிநாதேஸ்வரர் தேவஸ்தானம்)
அரகண்டநல்லூர் - அஞ்சல் - 605 752.
திருக்கோயிலூர் வட்டம் - விழுப்புரம் மாவட்டம்