திருமுறைத்தலங்கள்
நடுநாட்டுத் தலம்
திருமாணிகுழி
1. (கடலூர்ழி.ஜி.) திருப்பாதிரிப்புலியூர் பேருந்து நிலையத்திலிருந்து, திருவகீந்திபுரம் வழியாகப் பானூர், பண்ருட்டி செல்லும் பாதையில் திருவகீந்திபுரம் சென்று, அடுத்து, சுந்தரர்பாடி என்னுமிடத்துக்கு அருகில் சாத்தாங் குப்பம் என்னும் வழிகாட்டி காட்டும் வழியில் சென்று, கெடில நதிப்பாலத்தைக் கடந்து சிறிதுதூரம் சென்றால் திருமாணிகுழியை அடையலாம். சாலையோரத்திலேயே கோயில் உள்ளது. தலமும் கோயிலும் கெடிலத்தின் தென் கரையில், கேபர் மலைத்தொடரின் அடிவாரத்தில் உள்ளன.
2. கடலூர் - குமணங்குளம் நகரப்பேருந்து திருமாணிகுழி வழியாகச் செல்கிறது. இதில் வந்தால் கோயிலின் வாயிலிலேயே இறங்கலாம்.
3. கடலூர் - பண்ருட்டி.
கடலூர் - நடு வீரப்பட்டி (வழி) திருவகீந்திபுரம் - செல்லும் பேருந்துகளில் ஏறி, திருமாணிகுழி பஸ் நிறுத்தத்தில் இறங்கி, 1.A.e. நடந்தும் ஊரையடையலாம்.
சோழர்காலக் கட்டமைப்புடைய கோயில். இத்தலம் தேவாரப் பாடல்களில் "உதவிமாணிகுழி" என்று குறிக்கப்படுகின்றது. இதனால் 'உதவி' என்பது ஊர்ப் பெயராக இருந்து, காலப்போக்கில் 'மாணிகுழி' என்னும் கோயிற் பெயரே ஊர்க்குப் பெயராகியிருக்கலாம் என்று தோன்றுகிறது. இதற்கேற்ப தலபுராணத்தில் வரும் செய்தி வருமாறு -
"வடநாட்டு வணிகன் அத்ரி என்பவன் இப்பகுதியில் வந்து கொண்டிருந்த போது திருடர்கள் கொள்ளையடிக்க முற்பட, இறைவன் அவ்வணிகளைத் திருடர்களிடமிருந்து காத்து உதவி புரிந்தார்.
இதனால் இத்தலம், 'உதவி, என்றும் இறைவன் 'உதவிநாயகர்' இறைவி உதவி நாயகி' என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
இதற்கு மேலும் சான்றாகக் கல்வெட்டிலும் இத்தலம் 'உதவி' என்றே குறிக்கப் பெறுகின்றது.
திருமால் பிரம்மசாரியாக வந்து மாவலிபால் மூன்றடிமண் கேட்டு அவனையழித்த பழிதீர இங்கு வந்து வழிபட்டாராதலின் இக்கோயில் 'மாணிகுழி' என்று பெயர் பெற்றது. (மாணி - பிரம்மசாரி) கோயிலுக்கு எதிரில் உள்ள மலை, செம்மலையாகக் காட்சி தருகிறது. இத்தலத்திற்கு வாமனபுரி, இந்திரலோகம், பீமசங்கர க்ஷேத்திரம் என்பன வேறு பெயர்கள்.
இறைவன் - வாமனபுரீஸ்வரர், உதவிநாயகர், மாணிக்கவரதர்
இறைவி - அம்புஜாட்சி, உதவிநாயகி, மாணிக்கவல்லி.
தலமரம் - கொன்றை.
தீர்த்தம் - சுவேத தீர்த்தம். கெடிலம்.
கிழக்கு நோக்கிய இத்திருக்கோயில். சம்பந்தர் பாடல் பெற்றது. (பெரிய புராணத்தில் சுந்தரர், கெடிலநதியில் நீராடித் திருமாணிகுழியைத் தரிசித்ததாகக் குறிப்பிருந்தும் அப்பெருமான் பாடிய பதிகம் கிடைத்திலது) . ராஜகோபுரம் ஐந்து நிலைகளையுடையது. சுவாமி அம்பாள் விமானங்கள் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கராசார்ய ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்களின் பொன்விழாத் திருப்பணித் திட்டத்தில் சேர்க்கப்பட்டுத் திருப்பணிகள் செய்யப்பட்டு, விபவ ஆண்டு ஆவணி, 29ஆம் நாள் (14-9-1988) அன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. 14-9-1989ல் ஸ்ரீ மடத்தின் உதவியோடு ராசகோபுரத் திருப்பணியும் தொடங்கப்பட்டுப் பூர்த்தியாகியுள்ளது.
இராசகோபுரம் கடந்து உள்சென்றதும் கவசமிட்ட கொடிமரம் - நந்தி உள்ளன. வலமாக வரும்போது விநாயகர், சுப்பிரமணியர், சந்நிதிகள் தனிக்கோயில்களாக உள்ளன. வலமாக வந்து, பக்கவாயில் வழியாக நுழைந்து, முன்மண்டபம் தாண்டி உள்ளே சென்று வலம் வரும்போது, விநாயகர், அறுபத்துமூவர் சந்நிதிகள், சப்த மாதர்கள், யுகலிங்கங்கள், கஜலட்சுமி முதலிய சந்நிதிகள் உள்ளன. நடராச சபை உள்ளது. இங்குள்ள நடராச திருமேனியில் பஞ்சாட்சரம் பொறிக்கப்பட்டுள்ளது என்கின்றனர். ஆனால் அதைப்பார்க்கும்போது அவ்வடிவமாகத் தெரியவில்லை. குறுக்கும் நெடுக்குமாகச் சிறுகோடுகளாக ஏதோ ஒருவித அமைப்புள்ளது.
மூலவர் தரிசனத்திற்குச் செல்லும் வாயிலில் வாமனாவதார வரலாறு சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. மூலவர் சந்நிதியில் எப்போதும் திரைபோடப் பட்டுள்ளது. சுவாமி, எப்போதும் இறைவியுடன் இருப்பதாக மரபாதலின் இத்திரை எப்போதும் இடப்பட்டுள்ளது. திரையில் மேற்புறத்தில் ஏகாதச ருத்திரர்களில் ஒருவராகிய பீமருத்திரர் உருவம் எழுதப்பட்டுள்ளது. மகாவிஷ்ணு மாணியாக - பிரம்மசாரியாக வழிபடுவதற்குக் காவலாக பீமருத்திரர் உள்ளார் என்றும் சொல்லப்படுகிறது. கிழக்கு நோக்கிய சந்நிதி. தீபாராதனையின்போது - திரை விலகும்போது சிவலிங்கத் திருமேனியைத் தரிசிக்கலாம். குட்டையான சிறிய இலிங்கத் திருமேனி - சிறிய ஆவுடையார். ஆலய வழிபாட்டில் அர்ச்சனை, தீபாராதனை, பூசை முதலியன முதலில் பீமருத்திரருக்கே நடைபெற்று, பின்னர் சுவாமிக்கு நடைபெறுகிறது. இறைவன் எப்போதும் இறைவியுடன் இருப்பதாகச் சொல்லப்படுவதால், இத்தலத்தில் அர்த்தசாம பள்ளியறை வழிபாடு என்பது தனியே கிடையாது.
இத்தலத்தில் கார்த்திகையில் (பரணியில் அல்லாமல்) திருவண்ணாமலையில் நடைபெறுவது போல ரோகிணியில் தீபதரிசணம் நடைபெறுகின்றது. இக்கோயிலில் உள்ள உற்சவ மூர்த்தங்களில் 'உதவி' என்னும் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.
அம்பாள் சந்நிதி வலப்பால் தனிக்கோயிலாகவுள்ளது. உயரமான திருமேனி - நின்ற திருக்கோலம். கார்த்திகையில் கோயிற் பெருவிழா நடைபெறுகிறது. அது தவிர, ஆடிப்பூரம், நவராத்திரி, சிவராத்திரி, சஷ்டி, நடராசர் அபிஷேகங்கள் முதலியவைகளும் சிறப்பாக நடைபெறுகினற்ன. நாடொறும் நான்கு கால பூசைகள்.
சோழ, பாண்டிய, விஜயநகரமன்னர்கள் காலத்திய கல்வெட்டுக்களில் இறைவன் பெயர் 'உதவிநாயகர்', 'உதவி மாணிகுழி மகாதேவர்' என்று குறிக்கப்படுகின்றது.
அருணகிரிநாதரின் திருப்புகழ் இத்தலத்திற்கு உள்ளது. இத்தலத்திற்குப் பக்கத்தில் உள்ள திருமுறைத்தலங்கள் திருவதிகை, திருப்பாதிரிப்புலியூராகும். திருவகீந்திபுரம் சிறந்த வைணவத்தலம். இங்கிருந்து 4 A.e. தொலைவிலுள்ளது.
"மந்தமலர்கொண்டு வழிபாடுசெயு மாணியுயிர் வவ்வமனமாய்
வந்த ஒருகாலனுயிர்மாள உதைசெய்த மணிகண்டன் இடமாம்
சந்தினொடு காரகில் சுமந்து தடமாமலர்கள் கொண்டு கெடிலம்
உந்து புனல்வந்து வயல்பாயு மணமாருதவி மாணிகுழியே."
(சம்பந்தர்)
தலபுராணப் பாடல்கள்
செல்வ விநாயகர் துதி
"மணிகொண்ட கிம்புரிக்கோட்டு ஐங்கரம் நால்
வாய்மும்மை மதம் வாய்ந்தோங்கும்
கணிகொண்ட கூவிளமும் நறை இதழிப்
பூந்தொடையும் கலந்து சூடிப்
பணிகொண்டவ் வுயிர்களையும் இகபரம் வீடு
இவையுதவிப் பாரின் மீதே
அணிகொண்ட வாமனவூர்ச் செல்வ விநா
யகன் திருத்தாள் அகத்துள்வைப்பாம்"
உத விநாயகர் துதி
"சீர்பூத்த நீலகிரி திருமாணிக்குழிவளரும் தெய்வக்கோயில்
வார்பூத்த களபமுலை மோகினிமா தினைத்தடந்தோள் மகிழப் புல்லும்
கார்பூத்த கந்தரமுக் கண்ணான் காந்திங்கட் கங்கைவேணி
ஏர்பூத்த வாமனே சுரனுதவி நாயகனை ஏத்தி வாழ்வாம்."
அம்புஜாட்சி (உதவி நாயகி) துதி
"தருண நறை மலர்க்கோயில் பூமகளும் நாமகளும் சார்ந்து போற்றக்
கருணைபுரி வாமனே சுரனுதவி நாயகனைக் கலந்து வாழும்
பொருள் நிறைந்து வளந்தரும் பூஞ்சோலை வாமன புரத்துப் புளகக் கங்கை
அருணமலர் வதனஉமை அம்புயாட்சியின் மலர்த்தாள் அகத்துள் வைப்பாம்."
-'ஆற்றமயல்
காணிக்குழிவீழ் கடையர்க்குக் காண்பரிய
மாணிக்குழிவாழ் மகத்துவமே.'
(அருட்பா)
அஞ்சல் முகவரி -
அ.மி. வாமனபுரீஸ்வரர் திருக்கோயில்
திருமாணிகுழி - அஞ்சல் (வழி) திருவகீந்திபுரம்
கடலூர் வட்டம் - தெ.ஆ.மா. - 607 401.
கடலூர் மாவட்டம்.