திருமுறைத்தலங்கள்
சோழ நாட்டு (வடகரை) த் தலம்
கோயில்
திருக்கழிப்பாலை
திருநெல்வாயிலுக்கு (சிவபுரிக்கு) மிகவும் அருகாமையில் 1/2 A. மீ.ல் உள்ளது. பாடல் பெற்ற காலத்திலிருந்த பழைய கோயில் தில்லைக்குத் தெற்கில் 11 A.e. தொலைவில் திருக்கழிப்பாலை என்ற இடத்தில் இருந்ததாகவும் அது கொள்ளிட நதியால் கொள்ளப்பட்டமையின், இங்கு அமைக்கப்பட்டதென்றும் சொல்லப்படுகிறது. சிறிய கோயில். கோயில் வரை வாகனத்தில் செல்லலாம். வால்மீகி முனிவர் வழிபட்ட தலம்.
இறைவன் - பால்வண்ண நாதேஸ்வரர்.
இறைவி - வேதநாயகி.
தலமரம் - வில்வம்.
தீர்த்தம் - கொள்ளிடம்.
மூவர் பாடல் பெற்ற கோயில்.
பழைய - சிறிய கோயில். சுற்று மதிற்சுவர் கிலமாகியுள்ளது. ராஜகோபுரம் மூன்று நிலைகளையுடையது. வாயிலின் இரு புறங்களிலும் அதிகார நந்தியர் துணைவியருடன் தரிசனம் தருகின்றனர். கொடிமரம் ஏதுமில்லை. பிராகாரத்தில் சூரியன், விநாயகர், கிராதமூர்த்தி, மகாவிஷ்ணு, சுப்பிரமணிர், மகாலட்சுமி, நவக்கிரகம், காலபைரவர், சந்திரன் சந்நிதிக்ள உள்ளன.
வலம் முடித்துப் படிகளேறி மண்டபத்துள் சென்றால் அழகிய முத்திரைகளோடு - ஒன்று வலக்கைச் சுட்டுவிரலைச் சுட்டிச் சாய்த்தும், மற்றது வலக்கையை மேலுயர்த்தியும் - விளங்குகின்ற துவாரபாலகர்களைத் தரிசிக்கலாம். அம்பாள் சந்நிதி வலப்பால் உள்ளது.
தெற்கு நோக்கிய தரிசனம் - நின்ற திருமேனி. நடராசசபையில் சிவகாமியின் திருமேனி. தோழியர் இருவர் சூழ ஒரே பீடத்தில் அமைந்துள்ளது.
துவார விநாயகரை, தண்டபாணியைத் தொழுது உட்சென்றால் மூலவர் தரிசனம். பெயருக்கேற்ப வெண்ணிறமாக உள்ளது. மிகச் சிறிய பாணம். மேற்புறம் சதுரமாக, வழித்தெடுத்தாற்போல் நடுவில் பள்ளத்துடன் இலிங்கத் திருமேனி காட்சி தருகின்றது. அதிசயமான அமைப்பு. அபிஷேகத்தின்போது பால்மட்டும்தான் இப்பள்ளத்தில் தேங்கும். மற்ற அபிஷேகங்கள் அனைத்தும் ஆவுடையாருக்குத்தான்.
மூலவருக்குப் பின்னால் இறைவன் இறைவி வடிவங்கள் சுவரில் நின்ற நிலையில் செதுக்கப்பட்டுள்ளன.
இத்திருக்கோயிலில் நாடொறும் ஐந்துகால வழிபாடுகள். பெருவிழா நடைபெறவில்லை. நவராத்திரி, சிவராத்திரி, விநாயக சதுர்த்தி முதலிய விசேஷ உற்சவங்கள் மட்டும் நடைபெறுகின்றன. இங்குள்ள கல்வெட்டொன்ற கோயிலுக்கு நாளன்றுக்கு ஒரு நாழி தும்பை மலர்கொண்டு வந்துதர, தொகையை நிபந்தம் ஏற்படுத்திய செய்தியைத் தெரிவிக்கிறது.
'புனலாடிய புன்சடையாய் அரணம்
அனலாக விழித்தவனே அழகார்
கனலாட லினாய்கழிப் பாலையுளாய்
உனவார்கழல் கைதொழுது உள்குதுமே' (சம்பந்தர்)
'வானுலாந் திங்கள் வளர்புன்
சடையானே என்கின்றாளால்
ஊனுலாம் வெண்டலை கொண்டூருர்
பலிதிரிவான் என்கின்றாளால்
தேனுலாம் கொன்றை திளைக்குந்
திருமார்பன் என்கின்றாளால்
கானுலாஞ் சூழ்ந்த கழிப்பாலைச்
சேர்வானைக் கண்டாள் கொல்லோ."
(அப்பர்)
'எங்கேனும் இருந்து உன்அடியேன் உனைநினைந்தால்
அங்கேவந்து என்னோடும் உடனாகி நின்றருளி
இங்கே யென்வினையை அறுத்திட்டு எனையாளுங்
கங்கா நாயகனே கழிப்பாலை மேயவனே.'
(சுந்தரர்)
-செல்வாய்த்
தெழிப்பாலை வேலைத் திரையலி போலார்க்குங்
கழிப்பாலை இன்பக் களிப்பே.
(அருட்பா)
அஞ்சல் முகவரி -
அருள்மிகு. பால்வண்ணநாத சுவாமி திருக்கோயில்
திருக்கழிப்பாலை - சிவபுரி - அஞ்சல் - 608 002.
(வழி) அண்ணாமலை நகர் - சிதம்பரம் வட்டம்
கடலூர் மாவட்டம்.