திருமுறைத்தலங்கள்
சோழ நாட்டு (வடகரை) த் தலம்
கோயில்
தென்திருமுல்லை வாயில் ( திருமுல்லைவாசல்)
மக்கள் வழக்கில் திருமுல்லைவாசல் என்று வழங்குகிறது. (திருமுல்லை வாயில் என்னும் பெயருடைய இருதலங்களுள் ஒன்று இஃது. மற்றது வடதிருமுல்லை வாயில் - சென்னைக்குப் பக்கத்தில் உள்ளது.)
சீர்காழியிலிருந்து பேருந்துப் பாதை உள்ளது. 13 A.e தொலைவு.
சீர்காழி - அளக்குடி (வழி) திருமுல்லைவாசல் , சீர்காழி - திருமுல்லைவாசல் நகரப்பேருந்துகள் செல்கின்றன.
ஊர், கடற்கரையோரத்தில் உள்ளது. கோயிலுக்கு எதிர்க் கோடியில் கடல் உள்ளது. கோயில் வரை வாகனங்கள் செல்லும்.
சோழ மன்னனின் பிரமகத்தி தோஷம் நீங்கிய தலம். சோழ மன்னனின் குதிரையின் கால்களை முல்லைக் கொடி சற்றிக்கொள்ள, அதை மன்னன்
வெட்டியபோது ரத்தம் சிதற, தோண்டிப் பார்க்கையில் லிங்கம் வெளிப்பட்டது. மன்னன் தன் தவறுணர்ந்து தன் கழுத்தை அறுக்க முயல்கையில் இறைவன் ரிஷபாரூடராய்க் காட்சி தந்ததாகத் தல வரலாறு. இதனால் சிவலிங்கத்திருமேனியில் - பாணத்தில் இரு வெட்டுத் தழும்புகள் உள்ளன.
இறைவன் - யூதிகா பரமேஸ்வரர், முல்லைவனேஸ்வரர், முல்லை வனநாதர்.
இறைவி - சத்யானந்த சௌந்தரி, கோதையம்மை.
தலமரம் - முல்லை.
தீர்த்தம் - சக்கர தீர்த்தம், கோயிலின் பக்கத்தில் உள்ளது. இந்திரனும், கார்க்கோடனும் வழிபட்ட தலம்.
சம்பந்தர் பாடல் பெற்றது. தருமையாதீனத் திருக்கோயில். கிழக்கு நோக்கிய சந்நிதி. ராஜகோபுரமில்லை. உள்நுழைந்தால் வெளிச்சுற்றில் உள்ள கிளுவை பத்திர மரத்தில் தலமரமான முல்லைக் கொடி சுற்றியவாறு படர்ந்துள்ளது. கற்பக விநாயகர், விஷ்ணு க்ஷேத்திரலிங்கம், பாலசுப்பிரமணியர் இலக்குமி முதலிய சந்நிதிகள் உள்ளன. அம்பாள் அழகான திருமேனி. அடுத்து நவக்கிரக சந்நிதி. வலம் முடித்துப் படிகளேறினால் முல்லை வனநாதர் சந்நிதி - நேரே மூலவர் தரிசனம். மூர்த்தி சுயம்புத் திருமேனி. பாணத்தில் இருவெட்டுத் தழும்புகள் உள்ளன.
இத்தலத்திற்கு வடுகநாத தேசிகர் பாடியுள்ள தலபுராணம் உள்ளது. நாடொறும் நான்கு கால வழிபாடுகள் நடைபெறும் இக் கோயிலின் பெருவிழா மாசி மகத்தன்று ஏகதின உற்சவமாக நடைபெறுகிறது. தைப்பூச நாளில் நூற்றெட்டு காவடிகள் எடுப்பது இங்கு விசேஷமானது. பக்கத்தில் குருகாவூர் தலம் உள்ளது.
"நெஞ்சார நீடு நினைவாரை மூடு
வினைதேய நின்ற நிமலன்
அஞ்சாடு சென்னி அரவாடு கையன்
அனலாடு மேனியரனூர்
மஞ்சாரு மாட மனைதோறு மைய
முளதென்றுவைகி வரினுஞ்
செஞ்சொலி நெல்லின் வளர் சோறளிக்கொ
டிருமுல்லை வாயிலிதுவே.'
(சம்பந்தர்)
-கயேந்திரனைக்
காயலுறாதன்று வந்து காத்தோன் புகழ்முல்லை
வாயிலினோங்கு மணி விளக்கே.
(அருட்பா)
அஞ்சல் முகவரி -
அருள்மிகு. முல்லைவன நாதர் திருக்கோயில்
திருமுல்லைவாசல் - அங்சல் - சீர்காழி (வழி)
சீர்காழி வட்டம். நாகப்பட்டினம் மாவட்டம் - 609 113.