திருமுறைத்தலங்கள்
சோழ நாட்டு (வடகரை) த் தலம்
கோயில்
திருக்குருகாவூர் ( திருக்கடாவூர்)
பசியோடிருந்த சுந்தரருக்கு இறைவன் கட்டமுதும் நீரும் தந்தருள் செய்து பசிபோக்கிய தலம்.
மக்கள் வழக்கில் திருக்கடாவூர் என்று வழங்குகிறது.
சீர்காழியிலிருந்து தென் திருமுல்லைவாயில் செல்லும் சாலையில் 6-ஆவது கி.மீ.ல் வடகால் என்னும் ஊரில், சாலையில் குருகாவூருக்குச் செல்லும் பாதை பிரிகின்றது. (வழிகாட்டிப் பலகையும் உள்ளது.) அப்பாதையில் சென்றால் 1 கி.மீ.ல் குருகாவூரையடையலாம்.
ஊர் - குருகாவூர். கோயில் - வெள்ளடை.
இறைவன் - சுவேதரிஷபேஸ்வரர், வெள்ளடையீஸ்வரர், வெள்ளடைநாதர்.
இறைவி - நீலோத்பல விசாலாட்சி, காவியங்கண்ணி.
தீர்த்தம் - பால் கிணறு. கோயிலுக்கு வெளியில் தனிச்சுற்று மதிலுடன் உள்ளது. தைமாதத்தில் அமாவாசை நாளில் இறைவன் எழுந்தருளி இங்குத் தீர்த்தம் கொடுப்பது சிறப்பானது.
சம்பந்தர், சுந்தரர் பாடல் பெற்றது.
கோபுரமில்லை. முகப்பு வாயிலைக் கடந்து உட்சென்றால் வலப்பால் அம்பாள் சந்நிதி உள்ளது. வெளிச் சுற்றில், விநாயகர், முருகன், அகத்தியர், சூரியன் மாரியம்மன் சந்நிதிகள் உள்ளன. முன்மண்டபத்தில் ஆறுமுகர் சந்நிதியும், நால்வர் சந்நிதிகளும் உள. உள்மண்டபத்தில் வலப்பால் நடராச சபை. நேரே மூலவர் தரிசனம். சதுர ஆவுடையார் - சிறிய பாணம் கொண்ட சிவலிங்கத் திருமேனி.
சுந்தரருக்கு இறைவன் உணவும் நீரும் தந்து பசியைப்போக்கிய அற்புதம் நிகழ்ந்த இடம் 'வரிசைப்பற்று' என்றும், 'இடமணல்' என்றும் மக்களால் சொல்லப்படுகிறது. அவ்விடம் இங்கிருந்து தென்திருமுல்லைவாயிலுக்குப் போகும் வழியில் 1 1/2 கி.மீ.ல் உள்ளது. அவ்வடித்தில் சிவலிங்கம் ஒன்றும் உள்ளது.
கட்டமுதுதந்தவிழா சித்திரைப் பௌர்ணமியில் நடைபெறுகிறது. தைப்பூச நாளில் பஞ்சமூர்த்தி புறப்பாடு விசேஷமானது. முதலாம் குலோத்துங்கன், முதலாம் இராசேந்திரன், விக்கிரம சோழன் ஆகியோர் காலத்திய கல்வெட்டுக்களில் இத்தலத்து இறைவன் பெயர் (1) வெள்ளடை மகாதேவர் (2) குருகாவூர் வெள்ளடையப்பன் எனக் குறிக்கப்படுகிறது. இக்கல்வெட்டுக்கள் கோயிலுக்கு நிபந்தங்கள் ஏற்படுத்திய செய்திகளைத் தெரிவிக்கின்றன.
நாடொறும் நான்குகால வழிபாடுகள் நடைபெறும் இத்திருக்கோயில் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்களின் பொன்விழாத் திட்டத்தில் சேர்க்கப்பட்டு நிதியுதவி செய்யப்பட்டு, பொதுமக்களின் பேராதரவால் திருப்பணிகள் செய்யப்பட்டு, மகாகும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.
"சுண்ணவெண்ணீறணி மார்பில் தோல் புனைந்து
எண்ணரும் பல்கணம் ஏத்த நின்றாடுவர்
விண்ணமர் பைம்பொழில் வெள்ளடை மேவிய
பெண்ணமர் மேனி எம் பிஞ்ஞகனாரே."
(சம்பந்தர்)
'பண்ணிடைத் தமிழொப்பாய் பழத்தினில் சுவையப்பாய்
கண்ணிடை மணியப்பாய் கடுவிருட் சுடரொப்பாய்
மண்ணிடை அடியார்கள் மனத்திடர் வாராமே
விண்ணிடைக் குருகாவூர் வெள்ளடை நீயன்றோ'.
(சுந்தரர்)
-பார்காட்
டுருகாவூ ரெல்லாம் ஒளிநயக்க வோங்குங்
குருகாவூர் வெள்ளடை யெங்கோவே.
(அருட்பா)
அஞ்சல் முகவரி-
அருள்மிகு. வெள்ளடையீஸ்வரர் திருக்கோயில்
திருக்கடாவூர் - வடகால் அஞ்சல்
சீர்காழி வட்டம் - நாகப்பட்டினம் மாவட்டம்.
மயிலாடுதுறை - 609 115.