திருமுறைத்தலங்கள்
சோழ நாட்டு (வடகரை) த் தலம்
கோயில்
திருக்கோலக்கா
சீர்காழிக்குப் பக்கத்தில் 1 A.e. தொலைவில் உள்ளது. பெரிய கோயில். திருத்தாளமுடையார் கோயில் என்றழைக்கப்படுகிறது. ஞானசம்பந்தரின் யாத்திரையில் இதுவே முதல்தலம். கைகொட்டிப் பாடிய ஞானசம்பந்தருக்கு இறைவன், திருவைந்தெழுத்து பொறித்த தாளத்தையருள, அதற்குத் தெய்விக ஓசையை இறைவி தந்து அருள்செய்த தலம். கோயில்வரை வண்டிகள் செல்லும். சற்றுகுறுகலான பாதை.
இறைவன் - சப்தபுரீஸ்வரர், தாளேஸ்வரர், திருத்தாளமுடையார்
இறைவி - தொனிப்ரதாம்பாள், ஓசை கொடுத்த நாயகி.
தலமரம் - கொன்றை.
தீர்த்தம் - ஆனந்ததீர்த்தம். கோயிலின் எதிரில் உள்ளது.
அகத்தியர், கண்வர் முதலியோர் வழிபட்டது. சம்பந்தர், சுந்தரர் பாடல்
பெற்றது. (திருவருளைப் பெற்ற ஞானசம்பந்தர் அன்றைய மறுநாள் சென்று தோணியப்பரைத் தொழுது அங்கிருந்தும் கோலக்கா எழுந்தருளினார். ஆரூர் வருமாறு பணித்த இறைவன் கட்டளையை மேற்கொண்ட சுந்தரர் தில்லையிலிருந்து புறப்பட்டுச் சீர்காழியை மிதிக்க அஞ்சி (சம்பந்தரின் அவதாரத் தலமாதலின்) எல்¬ லயில் வலமாகவந்து தோணியப்பரைத் தொழுது அங்கிருந்து திருக்கோலக்கா சென்று தொழுது பின்பு திருப்புன்கூர் வழியே பயணம் தொடர்ந்தார்) .
கோயில் புதுப் பொலிவுடன் திகழ்கிறது. எதிரில் திருக்குளம் - ஆனந்ததீர்த்தம், முகப்பு வாயிலின் மேற்புறத்தில் வண்ணச் சுதையில் ரிஷபாரூடர் தரிசனம் - உள்நுழைந்ததும் வலப்பால் வாகன மண்டபம். நுழையும்போது நால்வர், அதிகார நந்தி சந்நிதிகள் உள. பிராகாரத்தில் விநாயகர், சோமாஸ்கந்தர், சுப்பிரமணியர், மகாலட்சுமி, சனிபகவான், பைரவர், சூரியன் சந்நிதிகள் உள்ளன.
உள் மண்டபத்தில் வலப்பால் உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. நடராச சபை உள்ளது. நேரே மூலவர் தரிசனம். கம்பீரமான இலிங்கத் திருமேனி. அம்பாள் சந்நிதி தனிக்கோயிலாகவுள்ளது - நின்ற திருமேனி. ஞானசம்பந்தர் பொன் தாளத்தை இரு கைகளிலும் ஏந்தி நிற்கும் உற்சவத் திருமேனி தரிசிக்கத்தக்கது. கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, இலிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர்.
பிற்காலத்தில் இப்பகுதியில் தன் ஊமை மகன்பேசும் ஆற்றலைப் பெறவேண்டும் என்று, பிரார்த்தித்துக் கொண்ட தாய்ஒருத்தி, அவ்வாறே இறையருளால் தன் மகன் பேசும் வல்லமை பெற, மகிழ்ந்த, கோயிலுக்குத் தன் காணிக்கையாகச் செய்து தந்துள்ள பொற்றாளம் கோயில் உள்ளது.
தேவகோட்டை வைரவன் செட்டியார் இத் திருக்கோயிலின் பரம்பரை அறங்காவலர் ஆவார். இவர் பாடடனார்தான் இக்கோயிலைச் செம்மையாகக் கட்டியதாகச் சொல்லப்படுகிறது. நன்கு பராமரிக்கப்பட்டு வரும் இத்திருக்கோயிலில் நாடொறும் நான்கு கால வழிபாடுகள் நடைபெறுகின்றன. சீர்காழியில் திருமுலைப்பால் உற்சவம் நடைபெறும்போது இங்குத் தாளம் வழங்கும் ஐதீகவிழா நடைபெறுகிறது. கார்த்திகைச் சோமவாரங்கள், நவராத்திரி, சஷ்டி, சிவராத்திரி, பிரதோஷ காலங்கள் முதலிய சிறப்பு விழாக்கள் நடைபெறுகின்றன.
"மடையில் வாளைபாய மாதரார்
குடையும் பொய்கைக் கோலக்காவுளான்
சடையும் பிறையுஞ் சாம்பற் பூச்சுங்கீழ்
உடையும் கொண்ட உருவம் என் கொலோ." (சம்பந்தர்)
"நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பு
ஞானசம்பந்தனுக்கு உலகவர்முன்
தாளம் ஈந்தவன் பாடலுக்கு இரங்குந்
தன்மையாளனை யென் மனக்கருத்தை
ஆளும் பூதங்கள் பாட நின்றாடும்
அங்கணன்தனை எண்கணம் இறைஞ்சுங்
கோளிலிப் பெருங்கோயிலுள்ளானைக்
கோலக்காவினிற் கண்டு கொண்டேனே" (சுந்தரர்)
-"ஓர்காழிப்
பாலற்கா அன்ற பசும்பொற்றாளங் கொடுத்த
கோலக்கா மேவிய கொடையாளா. (அருட்பா)
அஞ்சல் முகவிரி -
அருள்மிகு. சப்தபுரீஸ்வரர் திருக்கோயில்
திருக்கோலக்கா - சீர்காழி அஞ்சல்
சீர்காழி வட்டம் - நாகப்பட்டினம் மாவட்டம் 609 110.