திருமுறைத்தலங்கள்
சோழ நாட்டு (வடகரை) த் தலம்
கோயில்
திருக்கண்ணார்கோயில் ( குறுமாணக்குடி)
மக்கள் வழக்கில் குறுமாணக்குடி என்று வழங்குகிறது. வைத்தீஸ்வரன் கோயில் - மயிலாடுதுறை பேருந்துப் பாதையில் 'பாகசாலை' என்னும் கைகாட்டி உள்ள இடத்தில், அதுகாட்டும் வழியில் (இடப்பக்கமாக) 3 A.e. சென்றால் 'கண்ணாயிரமுடையார் கோயில்' என்னும் திருக்கண்ணார் கோயிலை அடையலாம்.
நெடுஞ்சாலையில் கைகாட்டியின்கீழ் கோயிலின் பெயர்ப் பலகையும் (சிமெண்டில்) வைக்கப்பட்டுள்ளது. கோயில்வரை கார், வேன், பேருந்து செல்லும். பெரிய கோயில். சுற்று மதில், கோயில் நன்கு உள்ளது. வருமானமின்றித் தவிக்குங் கோயில்களுள் இதுவும் ஒன்றாகிறது.
இறைவன் - கண்ணாயிரமுடையார், கண்ணாயிரநாதர், சஹஸ்ரநேத்ரேஸ்வரர்.
இறைவி - முருகுவளர்கோதை, சுகந்தகுந்தளாம்பிகை.
தலமரம் - சரக்கொன்றை.
தீர்த்தம் - இந்திர தீர்த்தம் (கோயிலுக்கு எதிரில் உள்ளது.)
சம்பந்தர் பாடல் பெற்றது.
ராஜகோபுரமில்லை. கட்டைக்கோபுர வாயிலின் முகப்பின்மேல் ரிஷபாரூடர், விநாயகர், வள்ளி தெய்வயானை உடனாகிய சுப்பிரமணியர் உருவங்கள் வண்ணத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
உள்நுழைந்ததும் நீண்ட கல் மண்டபம் அழகாகவுள்ளது. வெளிப் பிராகாரத்தி ¢ல சந்நிதிகள் எவையுமில்லை. வாயிலின் ஒரு புறம் குடவரை விநாயகரும் மறுபுறம் தண்டபாணியும் தரிசனம் தருகின்றனர்.
செப்புக் கவசமிட்ட கொடிமரம், கொடிமரத்து விநாயகர், நந்தி பலிபீடங்கள் உள்ளன. உள்மண்டபத்தில் கோஷ்ட தட்சிணாமூர்த்தியை அடுத்தாற்போல் சித்திவிநாயகர் சந்நிதி தனிக்கோயிலாகவுள்ளது. பிராகாரத்தில் நால்வரையடுத்து, கன்னி விநாயகர் உள்ளார். ஆறுமுக சுவாமி இடத்தில் கஜலட்சுமி சந்நிதி உள்ளன. கொடிமரத்தை வலம் வந்து மேலே சென்றால் மண்டபத்தின் வலப்பால் பள்ளியறையும் பக்கத்தில் அம்பாள் சந்நிதியும் உள்ளன. தெற்கு நோக்கிய சந்நிதியில் அம்பாள் நின்ற திருக்கோலம். பெயருக்கேற்ற அழகு வடிவம். அம்பாள் சந்நிதிக்கு வெளியே மண்டபத்தில் மேற்புறத்தில் பன்னிரண்டு ராசிகளின் உருவங்களும் உரிய கட்டமைப்பில் வடிக்கப்பட்டுள்ளன.
மூலவர் சந்நிதி கிழக்கு நோக்கியது. சுயம்புத் திருமேனி மூலலிங்கம் - சற்று உயரமாக உள்ளது. பெயருக்கேற்பத் திருமேனி முழுவதிலும் கண்கள் போன்று பள்ளம் பள்ளமாக உள்ளன. மனநிறைவான தரிசனம். இந்திரனின் சாபம் இங்கு நீங்கியதாக ஐதீகம். ஆதலின் திருமணமாகாதோர் இங்கு வந்து சுவாமிக்கு மாலை சார்த்தி வழிபடுதலும், அவ்வாறு வழிபட்டோர் திருமணமான பின்னரும் வந்து மாலை சார்த்துதலும் இங்கு மரபாக இருந்து வருகின்றது.
மூலவர் மண்டபத்தில் சந்திரசேகரர் திருமேனி உள்ளது. அடுத்து அம்பலவாணர் தரிசனம். பிரதோஷ நாயகர், அஸ்திரதேவர், சண்டசுவரர், சுப்பிரமணியர், வள்ளி, தெய்வயானை, சோமாஸ்கந்தர் விநாயகர் முதலிய உற்சவ மூர்த்தங்கள் உள்ளன.
கோஷ்ட மூர்த்தங்களாக நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, இலிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை உளர். சண்டேசுவரர் சந்நிதி உள்ளது. கோயிலின் எதிரில் உள்ள தீர்த்தக் கரையில் விநாயகர், முருகன் சந்நிதிகள் உள்ளன.
கார்த்திகை ஞாயிறு நாள்களில் சுவாமி புறப்பாடு இங்கு விசேஷமாக நடைபெறுகிறது. இங்குள்ள துர்க்கை சந்நிதி விசேஷமானது - பிரத்யட்ச தெய்வமாகப் போற்றப்படுகிறது. சுவாமிக்குத் தீபாராதனை செய்து அடுத்து அம்பாளுக்கும் தீபாராதனை செய்து அதற்குப்பிறகே திருநீறு குங்குமம் வழங்கும் மரபு இக்கோயிலில் இருந்து வருகின்றது. நாடொறும் ஐந்து கால பூஜைகள்.
'விண்ணவருக்காய் வேலையுணஞ்சம் விருப்பாக
உண்ணவனைத் தேவர்க்கமுதீந் தெவ்வுல கிற்கும்
கண்ணவனைத் கண்ணார்திகழ் கோயிற் கனிதன்னை
நண்ணவல்லோர்கட்கு இல்லை நமன்பால் நடலையே." (சம்பந்தர்)
பூமருவு பொய்கைகளும் புனல்மருவு நதிகளுந்தண் பொதும்பர் சேர்ந்து
காமருவு மருதமுந்சூழ் திருக்கண்ணார் கோயிலிட்கட் கடவுட்கோவும்
பூமருவி மூவடிமண் கேட்டவரும் கவுணியரும் போற்றவாய்ந்த
தேமருவி கொன்றையந்தார் திகழ்கண்ணாயிரர் பதங்கள் சிந்தை செய்வாம்.
உலகமுதல்வி யன்பருள்ளத் துறைமுதல்வி யிறைவருட
நிலவுமுதல்வி மாண்டவியர் நேர்ந்து நிறைந்த பீடத்தே
அலகில் வளஞ்சேர் திருக்கண்ணார் கோயிலமர்ந்த அருள்முதல்வி
இலகி முருகுவளர் கோதை இணையில்முதல்வி பதம்பணிவாம்.
-கள்ளிருக்கும்
காவின் மருவுங் கனமுந்திசை மணக்குங்
கோவின் மருவு கண்ணார் கோயிலாய். (அருட்பா)
அஞ்சல் முகவரி -
அருள்மிகு. கண்ணாயிரமுடையார் திருக்கோயில்
குறுமாணக்குடி
கொண்டத்தூர் - அஞ்சல்
தரங்கம்பாடி - வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம் 609 117.