திருவிசைப்பா
களந்தை ஆதித்தேச்சரம்
களப்பால் - கோயில் களப்பால்
தஞ்சை மாவட்டத்திலுள்ள திருவிசைப்பாத் தலம். மக்கள் வழக்கில் களப்பால் என்றும் கோயில் களப்பால் என்றும் வழங்குகிறது. ஊர் - களப்பால் - கோயில் - ஆதித்தேச்சரம்.
களப்பாளர் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் வாழ்ந்த ஊராதலின் இப்பெயர் பெற்றது. இது மருவி களந்தை என்றாயிற்று. இக்கோயில் விசயாலய சோழனின் மகன் ஆதித்தசோழன் (A.H. 850 -890) கட்டுவித்தது. எனவே ஆதித்தேச்சரம் என்று பெயர் பெற்றது. முள்ளியாற்றின் கரையில் அமைந்த தலம். இங்கு அழகிய நாதசுவாமி கோயில், கயிலாயநாதர் கோயில், ஆனைகாத்த பெருமாள் கோயில் என மூன்று கோயில்கள் உள்ளன. இவற்றுள் அழகியநாதசுவாமி திருக்கோயிலே திருவிசைப்பா பாடல் பெற்றதாகும்.
(அழகியநாதசுவாமி கோயிலில் உள்ள பாண்டிய மன்னன் குலசேகரனின் கல்வெட்டு இத்தலத்து இறைவனை 'களப்பால் உடையார்' ஆதித்தேச்சரமுடையார்
என்று குறிப்பிடுகிறது. களப்பால் என்பது களந்தை என்று மருவிவரும். ஆதலின் இதுவே திருவிசைப்பா பாடல் பெற்றதாகும். இக்கோயிற் பதிகத்தில் அழகர் என்ற சொல்லால் இறைவனைக் குறிப்பது இதற்குரிய சான்றாகிறது.)
கூற்றுவ நாயனார் அவதரித்த பதி. "கூற்றுவன் - களப்பாளன், களப்பால் என்னும் சிவதல (திருவிசைப்பா) நகரத்தை உண்டு பண்ணித் தலைநகராகக் கொண்டு ஆண்ட சிற்றரசர். சிறந்த சிவபக்தியும் வீரமும் உடையவர். மூவேந்தர்களை வென்று சபாநாயகப் பெருமான் திருவடியை முடியாகச் சூடிக்கொண்டவர். அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவர். இவர் பெயர் களந்தயாண்டான், களந்தையாளி, களந்தயுடையான், களப்பாளி என்று வழங்குகிறது.
"ஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோன், அடியேன்" - திருத்தொண்டத் தொகை. இவருடைய மரபுளோர்க்கு களப்பாளன், களக்குடையான், களாக்கான் முதலிய பெயர்கள் வழங்குகின்றன. நாடுகளைப் பல கூற்றங்களாகப் பிரித்த காரணத்தால் கூற்றுவன் என்ற சிறப்புப் பெயர் வந்தது."
- ஆதாரம், சூரியகுலக் கள்ளர் சரித்திரம் திருக்களர் சுவாமிநாத உபாத்தியாயர் எழுதியது - 1926ல் வெளியீடு.
1) திருத்துறைப் பூண்டி - மன்னார்குடிச்சாலையில் 3 A.I. சென்று மடப்புரம் தாண்டினால் இடப்பால் களப்பால் என்று கைகாட்டி உள்ளது. அச்சாலையில் சென்று இத்தலத்தையடையலாம், ஒரு வழிச்சாலை. (அல்லது)
2) இதே திருத்துறைப்பூண்டி - மன்னார்குடிச்சாலையில் மேலும் சென்று 'திருப்பத்தூர் பாவம்' என்னுமிடத்தையடைந்து இடப்பால் திரும்பிச் செல்லும் சாலையில் சென்று மீனம நல்லூர், காடுவாக்குடி, திருக்களர் முதலிய ஊர்களைத் தாண்டி கோயில் களப்பாலை அடையலாம். தார்ச்சாலையாக இருந்தாலும் இடையிடையே மண்சாலையும் கலக்கிறது. விழிப்புடன், விசாரித்துச் செல்ல வேண்டும்.
இறைவன் - ஆதித்தேச்சரர், அழகிய நாதசுவாமி.
இறைவி - பிரபாநாயகி, பண்ணேர் மொழியாள்.
சிறிய கோயில். பிராகாரத்தில் நவக்கிரக சந்நதி உள்ளது. கருவைறக்கு முன்புள்ள மண்டபத்தில் நின்றால் நேரே மூலவர் தரிசனம். வலப்பால் அம்பாள் தரிசனம். கூற்றுவ நாயனாரின் மூலத்திருவுருவம் உள்ளது.
அம்பாள் நின்ற திருக்கோலம். வெள்ளிக்கவச அலங்கார மனத்திற்கு மட்டிலா மகிழ்வைத் தருகிறது.
மூலவர் ஆதித்தேச்சரை வெள்ளி நாகாபரண கவசத்தில் தரிசிக்கும் போது மெய்ம்மறந்து போகிறோம். பின்னால் அழகான பிரபை.
இங்குள்ள நடராஜர் மூர்த்தம் திருவாரூரில் பாதுகாப்புக்காக வைக்கப்பட்டுள்ளதாம். சிவாசாரியார் வீடு கோயிலுக்குப் பக்கத்தில் உள்ளது.
இத்தலத்திற்குப் பக்கத்தில் திருக்களர், கோட்டூர் (திருமுறைத் தலங்கள்) ,
கீழ்கோட்டூர் மணியம்பலம் (திருவிசைப்பாதலம்) முதலிய தலங்கள் உள்ளன.
"நீலமே கண்டம் பவளமே திருவாய்
நித்திலம் நிரைத் திலங்கினவே
போலுமே முறுவல் நிறைய ஆனந்தம்
பொழியுமே திருமுகம் ஒருவர்
கோலமே அச்சோ அழகிதே என்று
குழைவரே கண்டவர் உண்ட (து)
ஆலமே ஆகில் அவரிடங் களந்தை
அணிதிகழ் ஆதித் தேச்சரமே."
"குமுதமே திருவாய் குவளையே களமும்
குழையதே இருசெவி ஒருபால்
விமலமே கலையும் உடையரே சடைமேல்
மிளிருமே பொறிவரி நாகம்
கமலமே வதனம் கமலம நயனம்
கனகமே திருவடி நிலைநீர்
அமலமே ஆகில் அவரிடங் களந்தை
அணிதிகழ் ஆதித்தேச்சரமே."
அஞ்சல் முகவரி -
அருள்மிகு. அழகிய நாதசுவாமி திருக்கோயில்
கோயில் களப்பால்
நடுவக் களப்பால் அஞ்சல் - 614 710.
(வழி) திருத்துறைப்பூண்டி - மன்னார்குடி வட்டம்
திருவாரூர் மாவட்டம்.