"ஐந்தெழுத்து மந்திரம்"
"நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க"
மாணிக்கவாசகப் பெருமான் திருப்பெருந்துறையில் அருளிச் செய்த சிவபுராணத்தில் இந்த மந்திரம் முதலாவது அடியாக வருகின்றது. பாடுவோர் உள்ளத்தைத் தூய்மைப்படுத்தும் மந்திரம், கேட்போர் மனதை உருகச் செய்யும் மந்திரம். இந்த மந்திரத்தை மனத்திற்குள் தியானிக்கலாம். பிறர் காதிள் கேளாதபடி மெல்ல மெல்ல உச்சரித்துச் சொல்லலாம். வெளிப்படையாகவும் சொல்லலாம். இறைவனுடைய திருநாமம் ஓதினாலே நன்னெறியைத் தரும் சிறப்புடையதாகும். மந்திரம் இறைவனுடைய சொரூபமாகும். எனவே, மந்திரச் சொற்கள் அருட்தன்மை பெற்றவை. இறைவனை அடைவதற்கு இறைவனால் அருளிச் செய்யப்பட்ட சொற்களே மந்திரங்களாகும். அவற்றை இறைவனுடைய அடியார்கள், இறையுணர்வாளர்கள் ஆகியோர்கள் வாயிலாகப் பெறுகின்றோம். இவர்கள் நிறை மொழி மாந்தர் எனப்படுவார்கள். அவர்களுடைய ஆணையில் கிளர்ந்தவை மந்திரங்கள். மந்திரங்களைத் தொல்காப்பியர் மறைமொழி என்பார். மந்திரங்கள் இம்மைக்கும் மறுமைக்கும் நாம் விரும்பும் பயனைக் கொடுக்க வல்லவை என்பது மட்டுமன்று. சிந்தையிலே இறைவனுடைய நாமமாகிய மந்திரத்தை நிலையாக நிறுத்தி வைக்கப் பழகிக் கொண்டோமானால் இறப்பு, பிறப்பு நிலைகளிலிருந்து விடுபட்டு, இறைவனடியைப் பற்றி என்றும் மாறாத இன்பத்தில் திளைத்து நிற்கலாம் என்பது அருள் அனுபவம்.
நமச்சிவாய என்னும் திருவைந்தெழுத்து வேதங்களுக்கு இருதயம் போன்றது. ருக், யஜூர், சாம வேதங்களில் நடுவாக நிற்பது யஜூர் வேதமாகும். யஜூர் வேதத்தில் நடுவாக இருப்பது நான்காம் சம்ஹிதையாகும். இதற்கு நடுநாயகமாக நிற்பது ஸ்ரீருத்திரம் ஆகும். இதன் நடுவில் வருவது நமச்சிவாய என்னும் திருவைந்தெழுத்தாகும். திருவைந்தெழுத்தை வேதங்களின் சாரம் என்றும் பெரியோர்கள் கூறுகின்றனர். இந்த மந்திரத்தை இடையறாது உச்சரிப்பவர்கள் சிவமாம் தன்மையைப் பெறுகின்றனர் என்று ஸ்ரீருத்திரத்திலிருந்தே உணரலாம். உடலுக்கும், உயிருக்கும் ஆழ்ந்த தூய்மையையும், வற்றாத இன்பத்தையும் இம்மந்திரம் கொடுத்தருளும்.
திருஞானசம்பந்தர் பெருமானுக்கு உபநயனப் பருவம் வருகின்றது. வேத விதிகளின்படி சடங்குகள் சிறப்பாக நடைபெறுகின்றன. அந்தணர்கள் வேதம் ஓதினர். மந்திர உபதேசம் செய்தனர். தமக்கு மந்திரம் உணர்ந்த வேத அந்தணர்களுக்கே, அவர்களுடைய ஐயங்களைத் தீர்த்து வேதமந்திரங்களின் உட்பொருளை எடுத்துச் சொல்லி, மனம் தெளியும் வகையில், எல்லா மந்திரங்களும் தோன்றுவதற்கு முதற்காரணமாய் இருப்பது சிவபெருமானுடைய திருவைத்தெழுத்தேயாகும் என்று திருஞானசம்பந்தப் பெருமான் கூறி ஸ்ரீ பஞ்சாக்ர திருப்பதிகம் என்கிற ஒப்பற்ற திருப்பதிகத்தை அருளிச் செய்ததாகச் சேக்கிழார் பெருமான் கூறுகின்றார்.
"மந்திரங் களான வெலாம் அருளிச் செய்து மற்றவற்றின்
வைதிக நூற் சடங்கின் வந்த
சிந்தை மயக் குறும்ஐயம் தெளிய எல்லாம்
செழுமறையோர்க் கருளியவர் தெளியும் ஆற்றலால்
முந்தை முதல் மந்திரங்கள் எல்லாம் தோன்றும் முதலாகும்
முதல்வனார் எழுத்தஞ் சென்பார்
அந்தியினுள் மந்திரம் அஞ் செழுத்து மேயன்று
அஞ்செழுத்தின் திருப்பதிகம் அருளிச் செய்தார்"
(பெரியபுராணம் - 2164)
நான்மறைகளின் முடிவான மந்திரமாக திருவைந்தெழுத்து நிற்கின்றது என்றும் தேவர்களுடைய சிந்தனையில் நின்று அவர்களை ஆளுகின்றது என்றும், தூய்மை மனம் பொருந்திய அந்தணர்கள் என்றும் ஓதுவது ஐந்தெழுத்தே என்றும் திருஞானசம்பந்தப் பெருமான் கூறுகின்றார்.
"மந்திரம் நான்மறை யாகி, வானவர்
சிந்தையுள் நின்று அவர் தம்மை ஆள்வன
செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு
அந்தியுள் மந்திரம் அஞ்செ ழுத்தும்மே"
திருஞானசம்பந்தப் பெருமானுக்குத் திருப்பெருமணநல்லூரில் திருமண நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. "எம்பெருமானே!இந்த இல்வாழ்க்கை வந்து சூழ்ந்து விட்டதே!மணப்பெண்ணுடன் சிவனடி சேருவேன்" என்கின்ற ஆசை பொங்கி அங்குள்ள திருக்கோவிலை அடைந்து இறைவன் மீது மனம் உருகப்பாடிய பொழுது, சிவபெருமான் அவர்களுக்கு அருள் செய்து தனது சோதியில் வந்து கலந்து கொள்ள அருளினான். அந்த நிலையில் உண்மையான நெறி சிவநெறியாகும் என்றும், அந்த நெறியே ஐந்தெழுத்தாகும் என்றும், அந்த ஐந்தெழுத்தே நான்கு வேதங்களின் மெய்ப்பொருளாகும் என்றும், பொருள்படும் வகையில் நமச்சிவாயத் திருப்பதிகத்தை அவ்விடத்திலேயே அருளிச் செய்து, இறைவனுடைய சோதியில் உறவினருடன், சுற்றத்தாருடனும் புகுந்தார். இறைவனுடைய திருமந்திரமான நமச்சிவாய என்கிற மந்திரத்தைப் பெரும் ஆவலுடன், உள்ளம் உருகியும் ஒதுவார்கள் இறைவனடி சேருவார்கள் என்கிற கருத்துடன் ஞானசம்பந்தப் பெருமான் இந்தப் பதிகத்தைப் பாடுகின்றார்.
"காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி
ஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது
வேத நான்கினும் மெய்ப்பொருள் ஆவது
நாதன் நாமம் நமச்சி வாயவே"
திருவைந்தெழுத்து ஐந்து வகைப்பட்டது எனப்பெரியோர்கள் வைத்துள்ளனர். அவை முறையே ஸ்தூல ஐந்தெழுத்து, சூக்கும ஐந்தெழுத்து, காரண ஐந்தெழுத்து, மகாகாரண ஐந்தெழுத்து, மகாமனு ஐந்தெழுத்து எனப்படுவன. நமச்சிவாய என்பது தூல ஐந்தெழுத்து, சிவாயநம என்பது சூக்கும ஐந்தெழுதது, சிவாயசிவ என்பது காரண ஐந்தெழுத்து, சிவ என்பது மகாகாரண ஐந்தெழுத்து. C என்பது மகாமனுவுமாகும்.
பொதுவாக நமச்சிவாய என்கிற மந்திரத்திற்கு "சிவனுக்கு நமஸ்காரம்" என்று சொல்லுக்குப் பொருளாகக் கூறலாம். ஆனால், இம்மந்திரத்தில் பல அரிய பொருள்கள் பொதிந்து கிடக்கின்றன. ஒவ்வொரு எழுத்திற்குள் ஆழ்ந்த தத்துவங்கள் உண்டு. இவற்றை மிக நுட்பமாக ஆகமங்களும், சித்தாந்தங்களும் எடுத்துக் கூறுகின்றன. அவற்றின் சாரத்தை திருமந்திரம் நமக்கு விரிவாகத் தந்துள்ளது. திருமூலர்பெருமானின் விளக்கங்களில் சிலவற்றைப் பார்ப்போம்.
உயிர்களுடைய நன்மைக்காக இறைவன் இடையுறாது திருக்கூத்தினை நிகழ்த்தி வருகின்றான். இந்தத் தாண்டவம், அற்புதத் தாண்டவம், ஆனந்தத் தாண்டவம், அனவரதத் தாண்டவம். பிரளயத் தாண்டவம், சங்காரத் தாண்டவம் என்று ஐவகைப்படும். இந்தத் தாண்டவங்கள் அனைத்தும் திருவைந்தெழுத்தை அடிப்படையாகக் கொண்டவையாகும். இறைவனுடைய அருட்சக்தி படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்கிற ஐந்து தொழில்களுக்கு மூலகாரணமாக இருக்கின்றது. இந்த அருட்சக்தியின் அடையாளமே பிரணவமாக நிற்கின்றது. ஓம் எனும் எழுத்தே பிரணவமாகும். இந்த ஒப்பற்ற பிரணவமாகிய எழுத்தே இறைவனுடைய தாண்டவமும் ஆகும் என்பார் திருமூலர். அத்தாண்டவம் அனுக்கிரகத்தையே முதல் தொழிலாகக் கொண்டு இயங்குகின்றது. அதுவே சிவத்தினுடைய நிலையுமாகும். அந்தக் கூத்து நடைபெறும் இடம் பொன்னம்பலமாகும் என்பார் திருமூலர்.
"தாண்டவ மான தனியெழுத் தோரெழுத்
தாண்டவ மான தனுக்கிர கத்தொழில்
தாண்டவக் கூத்துத் தனிநின்ற தற்பரந்
தாண்டவக் கூத்துத் தமனியந் தானே" (திருமந்திரம் - 888)
ஓம் என்கின்ற பிரணவமும், திருவைந்தெழுத்தும் ஒரே பொருளை விளக்கும். அடுத்துத் திருவைந்தெழுத்தே இறைவனுடைய திருவடிவம் என்று திருமூலர் கூறுகின்றார். ஆனந்தமயமாகிய இறைவனுடைய திருக்கூத்தை ஐந்தெழுத்து நிலையிலிருந்தே காணலாம். ஆ,ஊ, இம் என்கின்ற எழுத்துக்களின் சேர்க்கை பிரணவ ஒலியாகும். இம்மூன்று எழுத்துக்களையும் நமச்சிவாய என்கிற ஐந்து எழுத்துக்களுடன் சேர்த்தால் எட்டெழுத்தாகும். இவையே இறைவனுடைய திருவடிகள் என்று திருமூலர் விளக்குகின்றார். இப்பரம்பொருளே ஐந்தெழுத்திலுள்ள யகரமாகிய ஆன்மாவில் விளங்கும் என்றும் அவையே ஐம்பத்தோரு எழுத்துக்களாகவும் நிற்கும் என்றும் கூறுகின்றார். பண்டைக் காலத்தில் தமிழ் எழுத்துக்கள் ஐம்பத்தொன்றாக வழங்கி வந்திருக்கலாம் என்று இதனால் நினைக்கத் தோன்றுகிறது. மேலும், திருமூலர் இறைவனுடைய திருவடிகள் ஏழாயிரம் என்கின்றார். இறைவனுடைய அருட்சக்திக்கான ஏழு வகை ஆற்றல்களை இது குறிக்கலாம் என்றும் தோன்றுகின்றது. ஆகமொத்தம் இறைவனே ஒரெழுத்தாகவும், ஐந்தெழுத்தாகவும், ஐம்பத்தோரு எழுத்தாகவும், பலவிதமான ஆற்றல்களாகவும், இயங்குகின்றான் என்று எடுத்துக்கொள்ளலாம்.
"இணையார் திருவடி எட்டெழுத் தாகும்
இணையார் கழலிணை யீரைஞ்ச தாகும்
இணையார் கழலிணை ஐம்பத்தொன் றாகும்
இணையார் கழலிணை ஏழாயிரமே" (திருமந்திரம் - 898)
வேதங்களும், ஆகமங்களும் இந்த ஐம்பத்தோரு எழுத்தில் அடங்கும். இவற்றைப் பற்றி மேலும் ஆழ்ந்து சிந்தித்தால் அவ்வனைத்தும் திருவைந்தெழுத்தில் அடங்கும் என்கிறார் திருமூலர். இவ்வைந்தெழுத்தே தூல ஐந்தெழுத்து எனப்படும். இதனையே மாணிக்கவாசகர் "நமச்சிவாய வாழ்க" என்று அருளிச் செய்தார். "நாதன் நாமம் நமச்சிவாயவே" என்றார் திருஞானசம்பந்தர். "நற்றுணையாவது நமச்சிவாயவே" என்றார் திருநாவுக்கரசர். "நந்திநாமம் நமச்சிவாயவே" என்றார் திருஞானசம்பந்தர். திருவைந்தெழுத்தாவது உலகிலும், உயிரிலும், உடலிலும் பரவி நிற்கும். உள்ளத்தோடு தோய்ந்திருப்பது ஐந்தெழுத்தாகும். உடலிலுள்ள ஆதாரங்களில் நிலைத்து நிற்பது ஐந்தெழுத்தாகும். இவற்றை நாம் முழுமையாக உணர்ந்துகொள்ள வேண்டுமென்றால் மந்திரங்களை உணர்ந்த பெரியார்களிடமிருந்து கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.
"ஐம்ப தெழுத்து அனைத்து வேதங்களும்
ஐம்ப தெழுத்து அனைத்து ஆகமங்களும்
ஐம்ப தெழுத்தின் அடைவை யறிந்தபின்
ஐம்ப தெழுத்தே அஞ்செழுத் தாமே" (திருமந்திரம் - 2698)
நாம் எழுப்பும் ஒலி பேச்சின் வடிவாக வெளிவருகின்றது. சாதாரணமாக அது தொண்டையிலிருந்து கிளம்புகின்றது என்று நினைக்கின்றோம். உடல்கூறு வல்லுநர்கள் அவ்வாறே நமக்குத் தெரிவிக்கின்றனர். நம்முடைய முன்னோர்கள் இவ்வாறு கருதவில்லை. நமது காதுகளுக்குப் புலனாகாத ஒலி நமது உடலிலேயே பரவி நிற்கின்றது என்று கூறினார்கள். மூலாதாரம் முதல் வயிறு வரை இந்த ஒலி சூக்கும நிலையில் நிற்கின்றது. வயிறு முதல் நெஞ்சு வரை சற்று கேட்கக்கூடிய வகையில், ஆனால் உள்ளத்தோடு கலந்ததாய், நிற்கின்றது. நெஞ்சு முதல் கழுத்து வரை இருக்கின்ற இடத்தில் எழுத்துடன் கலக்க ஆரம்பிக்கின்றது. பின்னர் கழுத்துக்கு மேல் அது பேச்சொலியாக எழும்புகின்றது. இவ்வாறேதான் நமது வாயினால் உச்சரிக்கப்படும் ஐந்தெழுத்தும் உடலின் அடிப்பாகத்திலிருந்து கிளம்புகின்றது. செவிப்புலனுக்கு அப்பாற்பட்ட ஒலியாக நம் உடலிலேயே பிறந்து, பின்னர் முடிவாக நமச்சிவாய என்கின்ற ஒலியுடன் வாயிலிருந்து எழும்பும், இதிலிருந்து, இறையுணர்வின் அடிப்படையிலேயே இறைவனுடைய திருநாமம்
நம்முள் தோன்றி பேச்சொலியாக எழும்பும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஓசை, ஒலி ஆகியவற்றின் நுட்பமான நிலைகளைப் பற்றி அனுபவம் பெற்ற சாதகர்களிடமிருந்து கேட்டு, அறிந்து, பயிற்சி செய்து, பலன்களைப் பெற்றுக்கொள்ளுதல் வேண்டும்.
"வாயடு கண்டம் இதயம் மருவு உந்தி
ஆய இலிங்கம் அவற்றின்மேல் அவ்வாய்த்
தூயதோர் துண்டம் இருமத்தகம் செல்லல்
ஆயது ஈறாம் ஐந்தோடு ஆம் எழுத்து அஞ்சுமே" (திருமந்திரம் - 2701)
இந்த நுட்பமான ஐந்தெழுத்து ஒலியானது நம்முடைய சுவாசத்திலேயே சேர்ந்து நிற்கின்றது என்பதையும் உணர்ந்துகொள்ள வேண்டும் என்பார் திருமூலர். நமது உடலில் வலது, நடு, இடது பக்கங்களில் மூன்று நாடிகள் உள்ளன. சாதாரணமாகச் சுவாசமானது வலத, இடது, நாடிகளில் உட்சென்று வெளிவருவதே திருவைந்தெழுத்தின் நிலையுமாகும். இதை உணர்ந்து நமது சுவாசப் பயிற்சியையே திருவைந்தெழுத்தை ஓதும் மார்க்கமாகச் செய்ய வேண்டும் என்கிறார் திருமூலர்.
"ஞாயிறு திங்கள் நவின்றெழு காலத்தில்
ஆயுறு மந்திர அறிகிலர்
சேயுறு கண்ணி திருவெழுத் தஞ்சையும்
வாயுற வோதி வழுத்தலு மாமே" (திருமந்திரம் - 2703)
சிவாயநம என்பது சூக்கும ஐந்தெழுத்தாகும். அதில் C என்பது சிவன், வ என்பது சக்தி ய என்பது உயிர், ந என்பது மலம், ம என்பது மாயை ஆகும். சூக்கும திருவைந்தெழுத்து இறைவனுடைய அருட்சக்தியாகும் என்பார் திருமூலர். ஐந்தெழுத்தை ஓதுவதால் துன்பத்தைக் கொடுக்கும் ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதாயி ஆகிய ஐந்து மலங்களும் நீங்கும். நம்முடைய வினைகள் ஒழியும். நமது இறப்புக்கும், பிறப்புக்கும் காரணமாக இருந்துவரும் பாசம் உயிரைப் பற்றாது. பாசம் நீங்கியபொழுது உயிரானது சிவத்தின் தன்மையையும் பெறுகின்றது.
ஆகவே, இந்த மந்திரத்தை முறைப்படி ஓத வேண்டும். தூல ஐந்தெழுத்தை ஓதி ஓதிப்பக்குவம் பெற்றதன் அடிப்படையில் சூக்கும ஐந்தெழுத்தை ஓதும் தகுதியைப் பெறலாம் எனச் சைவ நூல்கள் கூறுகின்றன. நமச்சிவாய என்னும் நாமத்தை நாள்தோறும் எண்ணி எண்ணித் தீக்கை பெறுபவர்கள் அடுத்த கட்டமாக சூக்கும ஐந்தெழுத்தை ஓதும் பெருமையைப் பெறுகின்றார்கள் என்றும் சைவ நூல்கள் கூறுகின்றன. இதையே மாணிக்கவாசகப் பெரமான்
"நானேயோ தவம் செய்தேன் சிவாயநம எனப்பெற்றேன்
தேனாய்இன் அமுதமுமாய்த் தித்திக்கும் சிவபெருமான்
தானேவந்து எனதுள்ளம் புகுந்துஅடியேற்கு அருள்செய்தான்
ஊனாரும் உயிர் வாழ்க்கை ஒறுத்தன்றே வெறுத்திடவே"
என்று பாடுகின்றார்.
சிவாயநம என்னும் சூக்கும ஐந்தெழுத்து சக்தியின் அடையாளம் என்கின்ற நிலையில் ஐம்மலங்களைத் தன்னுள் கொண்டிருந்தாலும், ஓதுவார்களுடைய பக்குவத்திற்கு ஏற்ப பலன்களைத் தரும். பாசத்தை அழிக்க, பிறப்புக்கு முடிவுகட்ட இது ஒரு முக்கிய பாதையாகும் என்று திருமூலர் கூறுகின்றார்.
"சிவன்சக்தி சீவன்செறுமல மாயை
அவஞ்சேர்த்த பாச மலம் ஐந்தகலச்
சிவன்சத்தி தன்னுடன் சீவனார் சேர
அவம்சேர்த்த பாசம் அணுககி லாவே" (திருமந்திரம் - 2710)
"சிவனரு ளாய சிவன்திரு நாமஞ்
சிவனரு ளான்மாத் திரோத மலமாயை
சிவன்முத லாகச் சிறந்து நிரோதம்
பவம தகன்று பரசிவ னாமே" (திருமந்திரம் - 2711)
சிவாயநம என்னும் திருவைந்தெழுத்தை எவ்வாறு ஓத வேண்டும்? நம என்ற எழுத்துக்களை நாவினுள் கழுத்துப் பிரதேசத்தில் நிறுத்தி வைக்கவேண்டும் என்கின்றார் திருமூலர். நம என்னும் எழுத்துக்கள் மலத்தைக் குறிக்கின்றன. சிவ என்னும் எழுத்தைச் சிந்தையுள் நிறுத்தி வைக்க வேண்டும். சிவ என்னும் எழுத்துக்கள் சிவத்தையும், சக்தியையும் குறிக்கும். ஆகவே, இந்த எழுத்து நிலையாகச் சிந்தையில் வைக்கப்பட வேண்டும். அதாவது, நம்முடைய நான்கு அந்தக்கரணங்களில் சிந்தையானது உயிருக்கு உயிராக நிற்கும் இறைவனுடைய திருவடிகளை அடையும் தகுதியைப் பெற்றது. அந்தச் சிந்தையில் வெவ்வேறு எண்ணங்களை அடைத்து, நிரப்பி வைக்காமல் சிவ என்னும் நாமத்தையே பரவச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் தானாகவே சிந்தையானது சிவனிடத்தில் ஒடுங்கும். நமது வினைக்கடன்கள் தீரும். இறைவனுடைய திருவருள் கிடைக்கும். அதனால் இறை உண்மையைப் பற்றித் தெளிவு தோன்றும். மனத்திலே அறிவு ஒளி சுடர்விட்டுப் பிரகாசிக்கும். இறப்பு, பிறப்பு என்கின்ற சூழலை விட்டு அகலலாம்.
"நமவென்று நாமத்தை நாவில் ஒடுக்கிச்
சிவவென்று நாமத்தைச் சிந்தையு ளேற்றப்
பவமது தீரும் பரிசும தற்றால்
அவமதி தீரும் அறும்பிறப் பன்றோ" (திருமந்திரம் - 2717)
சிவாயநம என்று எப்பொழுதும் எண்ணிக்கொண்டு மனதை ஒருமைப்படுத்தி, வெளிப்புறப்பொருட்கள் மீது மனத்தைச் செலுத்தாது சாதகம் செய்தால் எத்தனை தீங்குகளும் வராதபடி, இடையூறுகள் ஒன்றும் ஏற்படாதவாறு, இறைவனுடைய திருவடிப்பேற்றினை அடையலாம். பேரின்பப் பெருவாழ்வு பெறலாம். மலத்தால் ஆகிய துன்பம் நீங்கும். கரணங்கள் இறைவனையே நாடிச் செல்லும். அச்சம்
நீங்கும் உள்ளத்தில் நிலைபெற்ற ஆனந்த உணர்வு தங்கும். இத்தகைய அனுபவத்தைச் சிவாயநம என்றும், சிவாயசிவசிவ என்றும் ஓதிப் பெறலாம் என்பார் திருமூலர்.
"சிவாய நமவெனச் சித்தம் ஒருக்கி
அவாயம் அறவே யடிமைய தாக்கிச்
சிவாய சிவசிவ வென்றென்றே சிந்தை
அவாயங் கெடநிற்க ஆனந்த மாமே" (திருமந்திரம் - 2718)
வேதங்களும், ஆகமங்களும் பரம்பொருளை விளக்குகின்றன. அவற்றை ஓதி உணர்வதன் மூலமாக இறைவனை உணரமுடியும் உண்மைதான். ஆனால், வேதங்களும், ஆகமங்களும் முடிவான பொருளல்ல. முடிவான பொருள் பரம்பொருளே ஆகும். அந்தப் பரம்பொருளான சிவத்தைக் குறிப்பது ஒரே எழுத்து. அதுவே சிகாரம் ஆகும். நமச்சிவாய என்று முதலில் ஓதிப் பின்னர்ச் சிவாயநம என்று செபித்து பின்னர்ச் சிவாயசிவ என்று சிந்தையுள்ளே வைத்து, பின்னர்ச்சிவசிவ என நினைத்து, ஓதி கடைசியாகப் பரம்பொருளைக் குறிக்கும் ஒரே எழுத்தான சிகாரத்தை மனதிலே நிறுத்தி வைப்பது பரம்பொருளோடு ஒன்றி, உடனாய் இருக்கும் நிலையைத் தரும். ஆகவே, சந்தேகத்தை நீக்கி விடுங்கள். அவ்வெழுத்தின் உண்மையை உணர்ந்துகொள்ளக் குருவினை அணுகி, குருவின் திருவருள் பெற்று முயற்சியை மேற்கொண்டு, சாதனையைப் புரியுங்கள். பரந்த பிறவிக்கடலில், இறப்பு, பிறப்பு என்று மாறி மாறி நிலை பெற்று மூழ்கித் தவிக்கின்றோம். நம்முடைய குறிக்கோள் அக்கடலினுடைய கரையைச் சேர வேண்டும். அதற்கான ஒரு தோனி வேண்டும். அத்தோணி வலுவானதாக அமைந்திருக்க வேண்டும். திருவைந்தெழுத்தின் உண்மையை உணர்ந்து அதை ஒதுவதே பிறவிக்கடலைக் கடக்கும் அருமையான தோணியாகும் என்கின்றார் திருமூலர். "அஞ்செழுத்தின் புணை பிடித்துக் கிடக்கின்றேனை" என்பார் மாணிக்கவாசகர்.
"அங்கமும் ஆகம வேதம தோதினும்
எங்கள் பிரானெழுத் தொன்றில் இருப்பது
சங்கைகெட் டவ்வெழுத் தொன்றையுஞ் சாதித்தால்
அங்கரை சேர்ந்த அருங்கல மாமே" (திருமந்திரம் - 2720)
அருமையான ஐந்தெழுத்து மந்திரத்தைப் "பொன்னான மந்திரம்" என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். இதைத்தொடர ஓதிப்பயின்றால் இறப்பும், பிறப்பும் கூடாது. இறைவனுடைய திருநடனத்தைக் காணலாம். சிவமாம் தன்மை பெற்ற பெருவாழ்வு கிடைக்கும். உடலும், உயிரும் அருள்மயமானதாகும். உயிரானது உடலை விட்டுப் பிரியும்பொழுது ஐந்தெழுத்து மந்திரம் பாதுகாவலாக நிற்கும். "அரணம் கைகூட்டுவது அஞ்செழுத்தாமே" என்பது திருமந்திரம். ஆனால், இந்தப் பலன்களை நாம் பெறுவதில்லை. அதற்குக் காரணம், முற்பிறவியில் நாம் செய்த
தீவினையே ஆகும். தீவினைகளை நாம் ஆடுக்கிக் கொண்டே போகும்பொழுது, ஐந்தெழுத்தின் அருமை நமக்குப் புலப்படுவதில்லை. ஆனால், இறைவனுடைய அருள் நமக்குக் கிட்டும்பொழுது வாய் தானாகவே சிவசிவ எனத்தோத்திரம் செய்யும். அவ்வாறு செய்யும்பொழுது நின்ற தீவினைகள் கெட்டு ஒழியும். ஒளி பெற்ற உடல் கிடைக்கும். ஓதுவோர் சிவமாம் தன்மை பெறுவர். சிவயோகம், சிவபோகம் என்கின்ற பெரும் பேறுகள் கிட்டும்.
"சிவசிவ என்கிலர் தீவினை யாளர்
சிவசிவ என்றிடத் தீவினை மாளும்
சிவசிவ என்றிடத் தேவரு மாவர்
சிவசிவ என்னச் சிவகதி தானே" (திருமந்திரம் - 2716)
திருநாவுக்கரசரின் பெருமையைப் பல்லவ மன்னன் அறிந்து கொள்ளவில்லை. அவருக்குப் பல துன்பங்களை விளைவிக்கின்றன. அவரைக் கல்லில் கட்டி கடலில் பாய்ச்ச ஆணையிடுகின்றான். அது எவ்வாறாயினும் ஆகுக என்று இறையுணர்வு மிக்கவராக திருநாவுக்கரசர் திருவைந்தெழுத்தை மனதில் வைத்து "சொற்றுணை வேதியன்" என்னும் நமச்சிவாயத் திருப்பதிகத்தைப் பாடி அருளுகின்றார்.
"சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே" (நமச்சிவாயத் திருப்பதிகம் - 1)
கல் கடலில் மிதந்தது. கட்டிய பாசக்கயிறுகள் அறுபட்டன. நாவுக்கரசர் பெருமான் கல்லாகிய தெப்பத்தின் மீது விளங்கினார். கல்லே தெப்பமாயிற்று. எல்லாவற்றையும் அருளவல்லது திருவைந்தெழுத்து. அந்தத் திருவைந்தெழுத்தின் ஆதரவினால் நாவுக்கரசருக்குக் கல்லும் துணையாயிற்று என்றால் அதில் ஒன்றும் விந்தை இல்லையே என்கின்றார் சேக்கிழார் பெருமான்.
"இருவினைப் பாசமும் மலக்கல் ஆர்த்தலின்
வருபவக் கடலின்வீழ் மாக்கள் ஏறிட
அருளும் மெய் அஞ்செழுத்து அரசை இக்கடல்
ஒருகல் மேல் ஏற்றிட உரைக்க வேண்டுமோ!" (பெரிய புராணம் - 1394)