"ஆதியோடு அந்தம் இலாத பராபரம்" எல்லாம் வல்ல இறைவனைப் பற்றிய அறிவைப் பேரறிவு என்று சொல்கிறோம் மற்றதெல்லாம் சிற்றறிவாகும் இறைவன் மெய்ஞ்ஞானத்திற்கு இருப்பிடம் "மெய்ஞ்

"ஆதியோடு அந்தம் இலாத பராபரம்"

எல்லாம் வல்ல இறைவனைப் பற்றிய அறிவைப் பேரறிவு என்று சொல்கிறோம். மற்றதெல்லாம் சிற்றறிவாகும். இறைவன் மெய்ஞ்ஞானத்திற்கு இருப்பிடம். "மெய்ஞ்ஞானமாகி, மிளிர்கின்ற அகல்விக்கும் நல் அறிவே" என்றும் கூறுவார். இறைவன் உண்மை ஞானமாகப் பரிகாசிக்கின்ற சத்தியமான சுடர். அந்த ஞானமே எங்கும் பரவியும் ஊடுருவியும் நிற்கின்றது. அந்த அறிவே நம்முடைய உள்ளத்தின் அறியாமையைப் போக்குகின்றது. அறியாமை நீங்கி உயிர் இறைவன் அருளால் மெய்ஞ்ஞானத்தைப் பெற்றதாகிறது. மெய்ஞ்ஞானம் பெற்ற சான்றோர்களின் தன்மை வேறு, சிற்றறிவின் இயக்கத்திலே ஈடுபட்டுள்ள உயிர்களாகிய நம்முடைய தன்மையும் வேறு. நாம் விஞ்ஞானத்தில் கிடக்கின்றோம். விஞ்ஞானமாவது கருவி கரணங்களைப் பயன்படுத்திப் பிரபஞ்சத்தினைப் பற்றிய அறிவினைப் பெறுவதாகும். பல கோடி அண்டங்கள் எவ்வாறு தோன்றுகின்றன, வளர்கின்றன, மறைகின்றன என்பது பற்றிய ஆராயச்சியை நமது கருவி கரணங்கள் பலவிதமான இயந்திரங்களைப் பயன்படுத்தி, செய்து நமக்கு அறிவினை சேர்த்து வருகின்றன. இந்த அறிவு விஞ்ஞான அறிவாகும்.

விஞ்ஞான அறிவினைப் பயன்படுத்தி இன்று மனிதன் புரிந்துள்ள சாதனைகள் பிரமிக்கத்தக்கவை. ஆயினும், விஞ்ஞான அறிவு மெய்ஞ்ஞான அறிவிலிருந்து வேறுபட்டது. மெய்ஞான அறிவு இறைவனுடைய பேரறிவையும், பேராற்றலையும் பற்றியது. விஞ்ஞான அறிவு கருவி, கரணங்களோடு தொடர்புடைய காரணத்தால் அவற்றின் எல்லைக்குள்ளேயேதான் இயங்கவல்லது. மெய்ஞான அறிவு கருவி, கரணங்களின் அறிவுக்கு அப்பாற்பட்டது. மெய்ஞான அறிவு மனித உள்ளத்தில் ஒரு முழுமையான, அமைதியான, ஐயத்திற்கு இடமில்லாத உணர்வினை உண்டாக்கிப் பேரின்பத்தைத் தருகிறது. கருவி, கரணங்கள் ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் இயங்குவதால் அவை அளிக்கும் அறிவு முழுமையாகாது.

முழுமையான அனுபவத்தைப் பெற்ற மெய்ஞ்ஞானிகள் எதிலும், எங்கும், எப்போதும் முழுமையைப் பார்க்கின்றனர். அவர்களே அந்த முழுமைத் தன்மையையுயம் பெறுகின்றனர். சிவத்தைப் பராபரமாக அனுபவித்த திருமூலர் போன்ற சிவசித்தர்கள், அறியாமை நீங்கப்பெற்ற காரணத்தினால், அங்கு, இங்கு என்னாது எங்குமாய் இறை உணர்வில் மூழ்கி நிற்பர். அந்த நிலையில் அவர்களுடைய செய்லகளெல்லாம் சிவன் செயலாகின்றன. அவர்கள் கால உணர்வைக் கடந்தவர்களாகிறார்கள். காலத்திற்கு அப்பாற்பட்ட மெய்ஞானத்தைப் பெற்றமையால் உண்மையைக் காலத்தின் பாகுபாட்டால் மறைக்கப்படாமல், முழுமையாக, நிறைவோடு அனுபவிக்கின்றனர். சிவனுடைய அறிவில், ஆற்றலில் செயலற்று நிற்கின்றனர்.

"இருந்தார் சிவமாகி எங்குந் தாமாகி

இருந்தார் சிவன்செயல் யாவையும் நோக்கி

இருந்தார் முக்காலத் தியல்பைக் குறித்தங்

கிருந்தார் இழவுவந் தெய்திய சோம்டபே." (திருமந்திரம் - 126)

இன்று விஞ்ஞானம் பிரபஞ்சத்தை நோக்குகின்றது. பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பிரபஞ்சம் அணுவிற்கும் நுட்பமான நிலையில் இருந்து உருவாகி, காலப்போக்கில் வெப்பம் குறைந்து பல அண்டங்களாக வடிவெடுத்திருக்க வேண்டுமென்று விஞ்ஞானத்தின் ஆய்வுகளால் அனுமானிக்க இடமுண்டு. சூரியன், சந்திரன் மற்றும் பலகோடி அண்டங்கள், கோளங்கள் போன்றவையெல்லாம் ஏறக்குறைய ஒரே மாதிரியான மூலப்பொருள்களின் அணுக்களிலிருந்தே உற்பத்தியாகின்றன எனவும், அந்த அணுக்களே இன்று பூவிலகில் உயிர்பெற்று வாழும் பல்வேறு உயிரினங்களின் உடல்களிலும் காணப்படுகின்றன என்பதையும் நாம் அறிவோம். இந்த அறிவினை விஞ்ஞானத்தின் மகத்தான சாதனை என்று நாம் ஏற்றக்கொள்ளவேண்டும். ஆனால், இந்த அறிவு நிறைவுபெற்ற அறிவு என்று சொல்ல இயலவில்லையே!

நம்மைப் போன்ற உயிர்கள் பிறப்பதைப் பார்க்கின்றாம். இறப்பைத் பார்க்கின்றோம். இருப்பைத் பார்க்கின்றோம். அதுபோலவே விஞ்ஞான ஆராய்ச்சிகள் வானவெளியில் பல கோடி அண்டங்கள் பிறந்து, இருந்து, மறைந்து வருவதை நமக்கு நிரூபிக்கின்றன. இதற்கான காரண, காரியங்களை விஞ்ஞான பௌதிக, இரசாயன முறையில் ஆய்வு செய்கின்றதே தவிர ஆய்வின் அடிப்படையை, அளவையை மாற்றத் தயாராக இல்லை. மாற்றுவதும் அதன் நோக்கமில்லை.

விஞ்ஞானம் பருப்பொருட்களை நோக்கி, அவற்றைப் பாகுபடுத்தி, அவற்றின் உட்பிரிவுகளை ஆராயச்சி செய்வதன் மூலமாகப் பொருட்களின் தன்மையை அறிய முற்படுகிறது. அவ்வாறு செய்யும் பொழுதும் பொருட்களைப் பொருட்களாகவே பார்க்க விரும்புகிறது. பொருட்களுக்கு அப்பாற்பட்ட தன்மையை, இப்பொழுதுள்ள விஞ்ஞானத்திற்குத் தகுந்தவாறு ஆய்வு செய்ய அளவுகோல்களோ சாதனங்களோ இல்லாத காரணத்தினால் விஞ்ஞானம் மேலும் ஆய்வு செய்ய முற்படுவதில்லை. ஆகவேதான் மெய்ஞானத்திற்கும், விஞ்ஞானத்திறகும் உள்ள இடைவெளி மிகப்பெரியது. விஞ்ஞான சாதனங்கள் மூலமாக இறைவனை அடைய இயலாது. விஞ்ஞானத்திற்கு அந்த நோக்கமும் இல்லை. இறை அனுபவத்தைப் பெற மெய்ஞ்ஞானிகள் பின்தொடரும் வழிகளும் இல்லை.

சிவயோகியர்கள் முற்றும் உணர்ந்த நிலையில் சிவபரம்பொருளோடு ஒன்றி இருந்து, அவனறிவு தனதறிவாகப் பெற்ற அனுபவத்தில், பிரபஞ்சத்தின் படைப்பு, சங்காரம் போன்றவற்றின் அறிவை உள்ளுணர்வாகப் பெறுகிறார்கள். இந்த அறிவு தூலத்திலிருந்து சூக்குமத்திற்குப் பரவுகின்றது. காணாத ஒன்றிலிருந்து காணப்படும் பலவற்றை இந்த அறிவு தன்னுள் அடக்கிக் கெள்கிறது. காரணமின்றிக் காரியமில்லை என்கிற அனுபவம் இந்த அறிவுக்கு அடிப்படையாகிறது. பிரபஞ்சத் தோற்ற ஒடுக்கங்களுக்கு இறைவனே முதல்வனாவான் என்பதே அந்தப் பேரறிவாகும். "எல்லாம் வருவிப்பான் ஒருவன் வேண்டும்" என்பது சிவஞான சித்தியார். "முத்தானே, மூவாத முதலானே" என்பது திருவாசகம்.

படைத்தல், காத்தல், மறைத்தல், ஒடுக்குதல் போன்ற பணிகள் ஓயாமல் நடந்து கொண்டே இருக்கின்றன. இவையெல்லாம் ஈசனின்றி நடைபெறாது. மெய்ஞானிகள் இவற்றை இறைவனின் விளையாட்டாகக் காண்கின்றார்கள். "காத்தும், படைத்தும், கரந்தும் விளையாடி" என்று திருவாசகம் பேசுகிறது. "அய்யா c ஆட்கொண்டருளும் விளையாட்டில் உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்" என்பதும் திருவாசக வாக்காகும். இது என்ன விளையாட்டு ஈசனுக்கு இந்த விளையாடல் தேவையானதா என்று நினைக்கலாம். சற்று யோசித்தால் உண்மை விளங்கும். ஆக்கமும், ஒடுக்கமும் இறைவனுக்கு கடினமானவை அல்ல. அவற்றை விளையாட்டாகச் செய்கிறான் என்றால் அத்துனை எளிதாகச் செய்கின்றான் என்பதே பொருள். இந்த விளையாட்டு நாடகம் இறைவனின் ஞான நாடகமாகும். "விண்ணின்று இழிந்து வினைக்கீடாய் மெய்கண்டு" உயிர்கள் அனைத்தும் தம் பேரருளாலும், பெரும் கருணையாலும்  ¢உய்வடைய வேண்டும் என்பதே இந்த சிறு விளையாட்டின் நோக்கமாகும். இந்த விளையாட்டினால் பிரபஞ்சத்தையும், ஆகாயத்தையும், பூமியையும் உண்டாக்கி, காப்பாற்றி உயிர்களை அவைகளோடு இணைத்து, உயிர்களுக்கு வேண்டிய அனுபவத்தை அருளித் தந்து காலப்போக்கில் அவை சித்தமலம் நீக்கிச் சிவமாம் தன்மையைப் பெறச்செய்வது இந்த விளையாட்டின் நோக்கமாகும். இந்த விளையாட்டை மேற்கொள்வது சிவபரம் பொருளாகும். இதைச் செய்து பரம்பொருளின் அருட்கூறாகிய சத்கதியாகும். இந்த விளையாடல் உயிர்கட்கு எண்ணிலாப் பயன்களை விளைவிக்கும். துன்பம் விளைவிப்பதற்காக என்று கருதக்கூடாது. உயிர்கள் முடிவான உண்மையாகிய வீட்டுப் பேற்றினை அடையச் செய்வதே பரம்பொருளினுடைய திருவுளமாகும். இதுவே இறைவனுடைய படைப்பின் முடிவான முடிவாகும்.

"ஒருவன் ஒருத்தி விளையாடல் உற்றார்

இருவர் விளையாட்டும் எல்லாம் விளைக்கும்

பருவங்கள் தோறும் பயன்பல வான

திருவொன்றிற் செய்கை செகமுற்று மாமே" (திருமந்திரம் - 393)

"சொன்னஇத் தொழில்கள் என்ன காரணம் தோற்ற என்னில்,

முன்னவன், விளையாட்டு என்று மொழிதலும் ஆம், உயிர்க்கு

மன்னிய புத்திய முத்தி வழங்கவும், அருளான் முன்னே

துன்னிய மலங்கள் எல்லாம் துடைப்பதும், சொல்ல லாமே" (சிவஞான சித்தியார் - 56)

"உலகம் யாவையும் தாமுள வாக்கலும்

நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா

அலகிலா விளையாட்டுடையான்"

என வரும் கம்பர் வாக்கும் ஈண்டு நினைவு கூறலாம்.

இறைவனுடைய விளையாட்டுத் தொடங்கும் வரை முழுமுதற் பொருளாகிய கடவுள் ஒன்றேயாய் யாதொரு செயலையும் மேற்கொள்ளாது இயல்பான நிலையில் நிற்கும். அப்போது பரம்பொருள் ஒன்றைத் தொடங்குவது அல்லது முடிப்பது என்கிற பணியில் ஈடுபடாத காரணத்தால் அந்த நிலையை ஆதியும் அந்தமும் இல்லாத நிலை என்று மெய்ஞானிகள் கூறுவர். "ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியை" என்று இந்த நிலையை மணிவாகசப் பெருமான் குறிப்பிடுவார். "ஆக்கம் அளவு இறுதீ இல்லாய்" என்றும் திருவாசகம் கூறுகிறது. ஆதியும் அந்தமும் இல்லாத கடவுள் பொருள் ஒன்றே சங்கார காலத்தில் பிரபஞ்சங்கள் முழுவதையும் தத்தம் காரணங்களில் ஒடுக்கி, அந்தக் காரணங்களை மாயையிலே ஓடுக்கி, மாயையைச் சக்தியிலே ஒடுக்கி, சக்தியைத் தன்னுள்ளே மறைத்து, தத்துவங்களுக்கு இருப்பிடமாக அமைந்து மீண்டும் உயிர்கள் ஒடுங்கிய நிலையிலிருந்து வெளிப்பட்டுத் தத்தம் வினைகளைப் போக்குவதற்கான தனு, கரண, புவன போகங்களை உருவாக்கத் திருவுளம் கொள்கிறான்.

இந்த நிலை அழகிய தாமரை மலர் ஒன்று இரவிலே குவிந்து நிற்கின்ற ஒன்றைப் போலாகும். சர்வ சங்கார காலத்தில் பிரபஞ்சம் முழுவதும் குவிந்து கிடக்கின்றது. அதைச் செய்வது இறைவனே. குவிந்த தாமரை மலர் பகற்பொழுதில் விரிகின்றது. தாமரை விரியும்பொழுது அதன் இதழ்கள் விரிகின்றன. மலர் முழுவதிலும் அதன் மணம் விரிகின்றது. தாமரையின் இயல்பான நிறமும் குணங்களும் வெளிப்படுகின்றன. தாமரை மலரைப் போல இறைவன் திருவுளம் கொண்ட போது பிரபஞ்சங்களும் விரியத் தொடங்குகின்றன. இறைவனை நோக்கி "விரிந்தனை குவிந்தனை" என்று ஞானசம்பந்தப் பெருமான் பாடுகின்றார். சங்கார காலத்தில் இறைவன் எல்லா உயிர்களையும் தன்னுள் ஒடுக்கிக் கொள்கின்றான். பின்னர் உயிர்களுக்குச் சிறிது ஆற்றல் அளித்துப் பிரபஞ்ச இயக்கத்தில் அவற்றை இணைத்து விடுகின்றான். இதனை ஞானசம்பந்தப்பெருமான் "விழுங்குயிர் உமிழ்ந்தனை" என்பார். சிவபெருமான் உலகம் முழுதும் உடையாக, பிரபஞ்ச இயக்கத்திற்குக் காரணமானவன். பல்வேறு தலைவர்கள் தத்தம் நிலையில் நின்று தொழில் செய்வதற்கான அதிகாரத்தையும், ஆற்றலையும் அளித்தவன் அவனே. இதனைத் திருமூலர்

"உண்டுல கேழும் உமிழ்ந்தான் உடனாகி

அண்டத் தமரர் தலைவனாம் ஆதியும்

கண்டச் சதுமுகக் காரணன் தன்னொடும்

பண்டிவ் வுலகம் படைக்கும் பொருளே" (திருமந்திரம் - 386)

என்று கூறுகிறார்.

ஒடுக்க நிலையில் உயிர்கள் செயல்படாது தங்குகின்றன. அவற்றிற்கு இன்ப துன்பங்கள் கிடையாது. இயல்பாய் உள்ள ஆணவ மலம் அவற்றுடன் தொடர்ந்து நிற்கின்றது. ஆணவ மலத்தினால் ஏற்படும் அறியாமை நீங்கினால்தான் உயிர்கள் நிலையான இன்பத்தைப் பெறமுடியும். இது நடக்க வேண்டுமென்றால் மீண்டும் உயிர்கள் வினைக்கடலின் பங்கினைப் பெற்று மாயை, கன்மங்கள் அடிப்படையில் தத்தம் தொழில்களைத் தொடங்க வேண்டும். ஆணவ மலம் குறைந்து உயிர்கள்

உயர்ந்து வரவேண்டுமெனில் பிரபஞ்ச இயக்கம் இறைவனிடைய திருவருளால் நடைபெற வேண்டும். இறைவன் மீண்டும் படைப்புத் தொழில் ஈடுபட வேண்டும். எல்லாவற்றையும் தன்னக்ததே கொண்ட வியாபித்துள்ள அந்தமும் ஆதியும் ஆகிய பராபரன் எனும் பரம் பொருள்தானே பூமியின் கீழ் கிடக்கும் கிழங்கு போல முதல் காரணமாகி நின்று மாயையும் அதனுடைய காரியங்களையும் தோற்றுவித்து, ஐந்தொழில்கள் நடப்பதற்குப் பொறுப்பாகவும் நிற்கின்றான். இவையெல்லாம் கிழங்கிலிருந்து தோன்றும் முனை போலப் பரம்பொருளின் திருவுளமாகிய படைப்பு நெறியின் தோற்றமாக வெளிப்படுகிறது.

"அந்தமும் ஆதியு மாகிப் பராபரன்

வந்த வியாபி யெனலாய வந்நெறி

கந்தம தாகிய காரண காரியந்

தந்தைங் கருமமுந் தான்செய்யும் வீயமே". (திருமந்திரம் - 1927)

பராபரம் இயற்கை நிலையில் ஞானத் தலைவனாக நிற்கின்றது. பராபரத்துடன் பொருந்தியிருக்கும் பராபரையாகிய சத்தியின் இயற்கை நிலையும் ஞானமேயாகும். இதனை "போதமதாகப் புணரும் பராபரை" என்று திருமூலர் விளக்குகின்றார். சிவஞானசித்தி "சத்தியின் வடிவே தென்னில் தடையிலா ஞானமாகும்" என்றது. இவ்வாறு இயற்கை நிலையில் உள்ள பராபரம் உயிர்களை உய்விக்க வேண்டும் என்கிற எண்ணத்தால் பிரபஞ்சத்தை உண்டாக்க நினைக்கும். பராபரத்துடன் இயல்பாகக் கூடியிருக்கும் பராபரையும் இந்த விருப்பமாத்திரத்தில் பிரபஞ்சத்தைத் துவக்கும் ஞானமாகவும், ஆற்றலாகவும் தோன்றி நிற்கும். இந்த நிலையில் இறைவன் அளவிலா ஞானத்தையும் ஆற்றலையும் தன்னிடம் கொண்டுள்ளான். பிரபஞ்சத்தைத் தோற்றுவிக்க இவற்றுள் ஒரு சிறிய பகுதியே போதும். பராபரம் இதைச் செய்ய அடுத்த கட்டமாக ஆதி சிவனாக நின்று செயல்படும் காலத்தில் அவனுடைய ஆற்றல் ஆதி சக்தி மூலமாக வெளிப்படுகின்றது. இந்த நிலையிலும் ஆதி சக்தி ஞானமாத்திரமாய் நிற்பாள். இதனைத் திருமூலர் "சோதி அதனில் பரம் தோன்றத் தோன்றுமாம் தீதில் பரை" என்பார்.

"ஆதியோ டந்தம் இலாத பராபரம்

போதம தாகப் புணரும் பராபரை;

சோதி யதனில் பரந்தோன்றத் தோன்றுமாம்

தீதில் பரை, அதன் பால்திகழ் நாதமே". (திருமந்திரம் - 378)

சிவமும் சக்தியும் இன்னமும் ஞானி நிலையிலேயே இருக்கும். விருப்ப நிலை மேலோங்க படைப்பிற்குத் தேவையான இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி என்கிற மூன்று சக்திகளும் சிவசக்தியிடத்திலிருந்து தத்தம் தொழில்களைப் புரிய ஆரம்பிக்கும். அதன் விளைவாக நாதமும் விந்தும் தோன்றுகின்றன. நாதனாக நிற்கும் சிவம் எழுத்தோசையை சிறப்பாகத் தோற்றுவிக்கக் காரணமாவான் நாதமும் விந்தும் இச்சா, ஞான, கிரியா சக்திகள் மூலமாகச்

சிவமாகவும் சக்தியாகவும் தோன்றி நிற்பர். ஞானமும் ஆற்றலும், படைப்புத் தொழிலில், சேர்ந்தே செல்லுகின்றன. ஒன்று இன்றி மற்றது இல்லை. பிரபஞ்சம் செயல்படுவதற்காகச் சிவம் என்றும், சக்தி என்றும் வேறு வேறாகச் சொல்லப்பட்டாலும் உண்மையில் அவை இரண்டும் ஒன்றியே நிற்கும், தவித்து நிற்பதில்லை. இதையே திருமூலர்,

"இல்லது சத்தி இடந்தனில் உண்டாகிக்

கல்லொளி போலக் கலந்துள் ளிருந்திடும்" (திருமந்திரம் - 380)

என்பார்.

இவ்வாறு கற்பனைக்கு எட்டாது நின்று பரபாரத்துடன் தொடர்ந்து நின்ற நிலையில் ஞானமயமான சக்தி நாதமாய்ப் பின்னர் விந்துவாய்த் தோன்றியும், பின்னர் அச்சிவத்தோடு கூடிச் சதாசிவம் என்கிற நிலையிலும் நிற்பாள். சதாசிவத்திடமிருந்து மகேசுரர், உத்திரர், மால், அயன் என்பவர்கள் முறையாகத் தோன்றுவர். இந்த ஐவர்கள் முறையே நிலம், நீர், b, காற்று, வானம் ஆகிய பூதங்களுக்குத் தலைவராவார். சதாசிவம் ஆகிய ஐவர்களுக்கும் உயிர் சக்திகள் உண்டு. அவை முறையே மனோன்மணி, மகேசுரி, உமை, திருமகள், வாணி எனப்படுவர். இவையெல்லாம் சிவம் தானே மேற்கொள்ளும் பல நிலைகளாகும்.

"தூரத்திற் சோதி தொடர்ந்தொரு சத்தியாய்

ஆர்வத்து நாதம் அணைந்தொரு விந்துவாய்ப்

பாரச் சதாசிவம் பார்முதல் ஐந்துக்கும்

சார்வத்துச் சத்திஓர் சாத்து மானாமே". (திருமந்திரம் - 381)

இந்தப் பிரபஞ்சத்தைப் படைப்பவர்கள் ஒருவனாகிய சிவனும் ஒருத்தியாகிய சக்தியுமாவர். அவர்களுள் சதாவிசவன், மகேசுரன், உருத்திரன், மால், அயன் ஆகிய புத்திரர்கள் ஐவர். அவர்களைப் கொண்டே சிவன் படைப்பு முதலிய தொழில்களைச் செய்விப்பன். அத்தகைய தொழில்களைப் புரியும் ஐவருமே மிகுந்த புண்ணியம் பெற்றவர்கள்.

"புவனம் படைப்பான் ஒருவன், ஒருத்தி

புவனும் படைப்பார்க்குப் புத்திரர் ஐவர்

புவனம் படைப்பானும் பூமிசை யானாய்ப்

புவனம் படைப்பான்அப் புண்ணியன் தானே" (திருமந்திரம் - 383)

இதுவரை நாம் கண்டது ஆதியும் அந்தமும் இல்லாத இறைவன் தனது ஞானத்தாலும் ஆற்றலாலும் பல நிலைகளில் நின்று படைப்பு முதலிய தொழில்கள் நடைபெறுவதற்கு ஏற்ப கிரியா, ஞான, இச்சா சக்திகளை உண்டுபண்ணி, அவற்றின் சேர்க்கைகளை வெவ்வேறாகச் செய்து வெகுநுட்பமான தத்துவ நிலையிலிருந்து படிப்படியாக ஐந்து பூதங்களைத் தோற்றுவித்து, அந்தப் பூதங்களுக்கு காரணமாக

தன் மாத்திரைகளைத் தோற்றுவித்தும், பின்னர் உலகம், உயிர் ஆகியவற்றைப் படைத்து உயிர்களுக்கு வினைபோகத் தொழிலுக்கான எல்லாவிதமான கருவி, கரணங்களையும் அருளித் தருகின்றான். இந்தச் செயலெல்லாம் அருவ நிலையிலும், அருவுருவ நிலையிலும், உருவ நிலையிலும் நடைபெறுகின்றன.

உலகப் படைப்புத் தொடங்குகின்றது. அண்டங்களின் சிருஷ்டியும் தொடங்குகின்றது. இதற்கெல்லாம் காரணகர்த்தா ஒருவனே. எல்லா உலகங்களையும் படைத்து, காத்து, அழிப்பவனும், அறிவுப் பொருள்கள், அறிவில்லாப் பொருள்கள் அனைத்திலும் நீக்கமற நிறைந்திருப்பவனும் முழுமுதற்க் கடவுளாகிய ஒருவனே என்று விளங்கும்.

"ஒருவனு மேஉல கேழும் பைடத்தான்

ஒருவனு மேஉல கேழும் அளித்தான்

ஒருவனு மேஉல கேழும் துடைத்தான்

ஒருவனு மேஉல கோடுயிர் தானே". (திருமந்திரம் - 401)

படைப்புத் தொழில் தத்துவங்கள் விரிதல் மூலமாக நடைபெறுகிறது. பலகோடி அண்டங்களும், பலகோடிப் பிண்டங்களும் பரசிவம் உருவாக்கிய தத்துவக் கூட்டங்களின் சேர்க்கையே ஆகும். தத்துவங்களோடு உயிர்கள் பொருந்தி, வினைப்பயன்களை நுகர்ந்து, அறிவையும், அறியாமையையும், பெருக்கி, ஆணவ மல இருளில் வெகுகாலம் மூழ்கியிரந்து பின்னர் அருள்பெற்று, ஒளி பெற்று விடுதலை பெற வேண்டும் என்பதே இறைவனின் திருவுளமாகும். அந்தப் பரஞ்சுடர் தத்துவங்கள் நீங்கிய நிலையில் அன்புடைய அடியார்கள் உள்ளத்தில் ஒளிவீசி நிற்கின்றது. அதை அனுபவித்த அனைவரும் உய்வு பெற்றவர்கள்.

"விண்ஆகி, நிலன்ஆகி, விசும்பும்ஆகி,

வேலைசூழ் ஞாலத்தார் விரும்புகின்ற

எண்ஆகி, எழுத்துஆகி, இயல்பும்ஆகி,

ஏழ்உலகும் தொழுது ஏத்திக் காண நின்ற

கண்ஆகி, மணிஆகி, காட்சி ஆகி,

காதலித்து அங்கு அடியார்கள் பரவ நின்ற

பண்ஆகி, இன்அமுதுஆம் பாசூர் மேய

பரஞ்சுடரைக் கண்டு அடியேன் உய்ந்தஆறே!"

- (திருநாவுக்கரசர் தேவாரம்)

மெய்ஞ்ஞானம் இறைவனின் படைப்பில் ஓர் நோக்கத்தைக் காண்கின்றது. விஞ்ஞான அறிவு ஒரு பொருளைப் பற்றிய அறிவினை வளர்த்துக் கொண்டே போக வேண்டும் என்கிற அடிப்படையில் இயங்குகின்றது. மெய்ஞ்ஞானத்தின் அறிவு ஓர் முடிவான முடிவாகும். விஞ்ஞானத்தின் அறிவு வளர்ந்து கொண்டு போவதைப் பார்க்கின்றோம். ஆனால் அதனுடைய எல்லையை அறுதியிட்டுக் கூறு இயலவில்லை. விஞ்ஞானம் ஒரு திசையிலிருந்து மையத்திற்கு வர

முயலுகிறது. மெய்ஞ்ஞானம் எல்லாத் திசைகளையும் தன்னுள் கொண்டு மையத்தின் மையமாக விளங்கும் இறைவனை எல்லாவற்றுக்கும் மூல காரணம் என்றுரைத்து அந்த மையத்தின் நுட்பத்தை, எளிமையை, மேன்மையை உணர்ந்து கொள்ளுவதால் கிடைக்கும் அனுபவம் விஞ்ஞான அறிவிற்கும் மேலானது என்று விளங்குகின்றது. விஞ்ஞான அறிவே ஒருவித அறரியமை என்று மெய்ஞ்ஞானிகள் கூறுவர். அந்த அறிவிற்கும் அறியாமைக்கும் அப்பாற்பட்ட அறிவு ஒன்று உள்ளது. அந்த அறிவே நாம் அடைய வேண்டிய அறிவு என்பது அவர்களுடைய கோட்பாடு. இதனை "அறிவு அறியாமை அழகியவாறு" என்பார் திருமூலர்.

படைப்புக்கு ஆதாரம் இறைவனுடைய பேரறிவும் பேராற்றலும் ஆகும் என்று மெய்ஞ்ஞானம் தெளிவாக்குகின்றது. இன்று விஞ்ஞான உலகில் பல சாதனைகள் புரிந்துள்ள பண்பட்ட விஞ்ஞானிகள் பலர் படைப்பின் நுட்பத்தை ஆராயும்பொழுது அது சுட்டிக்காட்டும் சொல்லொணா ஆற்றலைக் கண்டு ஆழ்ந்த வியப்படைகின்றார்கள். அணுவிலும் சிறிய பகுதிகள் பௌதிக, இரசாயன அடிப்படையில் இயங்குவதைக் காணும் இந்த விஞ்ஞானிகள், அவையெல்லாம் ஓர் அறிவின் தூண்டும் சக்தியால் தாங்களே அறிவு பெற்று இயங்குவது போலுள்ள நிலையைப் பார்க்கின்றார்கள். அடுத்த கட்டமாக அவர்களும் நாம் எல்லோரும் உணர வேண்டியது இவற்றுக்கெல்லாம் மூலகாரணம் அந்தப் பேரறிவு என்பதுதான். அதுவே மெய்ஞ்ஞானம். மெய்ஞ்ஞானம் நம்முடைய குறிக்கோளாக அமைய வேண்டும்.