வைஷ்ணவம் இறைவனின் இமாலய உறைவிடங்கள், கோயில்கள் பத்ரிநாத் - இறந்த நம் முன்னோர்கள் தங

வைஷ்ணவம்

இறைவனின் இமாலய உறைவிடங்கள், கோயில்கள்

பத்ரிநாத் - இறந்த நம் முன்னோர்கள் தங்கள் வம்சத்தில் வந்த எவராவது விசால பத்ரிக்கு வந்து பிரம்ம கபால தீர்த்தத்தில் பிண்டம் இட்டு நீர்க்கடன் செய்து தங்களுக்கு மோட்சம் அளிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் பிரார்தித்துக் கொண்டு இருக்கின்றனர் என நமது மத நூல்கள் சொல்கின்றன.

சடங்குகளும், நம்பிக்கையும் ஒரு புறம் இருக்க, இயற்கை காட்சியுடன் கூடிய இமாலய அழகு, அதனுடைய ஆரோக்யமான சூழ்நிலை, நிச்சயமாக வாழ்வில் ஒரு முறையாவது பத்ரிநாத் சென்றுவர மனதைத் தூண்டும். அங்கனம் மேற்கொண்ட பயணம் நல்ல சுவையான அனுபவம் மட்டும் அன்றி ஒவ்வொருவரையும் மனத்தால் உடலால், ஆன்மிகத்தால் மிகவும் உயர்த்தும்.

இப்புனித கோயில் அலகநந்தா நதிக்கரையில் நர நாராயண என்னும் இரண்டு மலைகள் இருபுறம் இருக்கும் பள்ளத் தாக்கில் அமைந்துள்ளது. இந்த மலைச் சிகரத்திற்கு நீலகண்ட சிகரம் எனப்பெயர். இது எப்போதும் பனியினால் மூடப்பட்டு இமாலயத்தின் ராணி என அழைக்கப் படுகிறது. இந்த சிகரம் கீழே உள்ள கோயிலை எட்டிப் பார்பப்து போல் அமைந்திருப்பது இமயமலையின் பெருமையையும் அழகினையும் அதிகப்படுத்துகிறது.

மே மாதத்தில் 10300 அடி உயரத்தில் உள்ள விசால பத்ரி க்ஷேத்ரம் பக்தர்கள் நிரம்பி வழிய மிகவும் சுறுசுறுப்பாகி விடுகிறது. நவம்பர் மாதத்தில் இங்குள்ள யாவரும் இறைவனுடன் பனிகாலத்திற்காக கோயில் மூடப்பட்டுவிடும் போது, ஜோதிர்மடத்திற்கு குடிபெயர்ந்து சென்று விடுகின்றனர்.

ஆதிசங்கரரால் முதலில் எழுப்பப்பட்ட ஸ்ரீ பத்ரிநாராயணன் கோயில் பல மலைச் சரிவுகள் காரணமாக பலதடவை அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. தற்சமயம் உள்ள கோயில் 45 அடி உயரத்தில் உச்சியில் பளபளக்கும் கலசத்துடன் விளங்குகிறது.

கர்ப்பக் கிரஹத்தில் நாராயணர் பத்மாயனத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சி அளிக்கிறார். இந்த சாலக்ராமம் கறுப்பு. ஆனால் திறமை வாய்ந்த நாவல் பூசாரி இந்த விக்ரகத்தை விஸ்வரூப தரிசனம் தருவது போன்று மிகவும் சிறப்பாக அலங்கரிக்கின்றார். இந்த விக்ரகத்தின் இடப்பாகத்தில் நர, நாராயணர்களும் வலப்பாகத்தில் கணேசர், குபேரர், கருடர் ஆகிய விக்ரகங்களும் உள்ளன. இந்த விக்ரகங்களுக்கு முன்னால் நாரத உத்தவ விக்ரகங்களும் உள்ளன.

பத்ரி கோயில் விஷ்ணுவிற்கு என உள்ள கோயில். இது இமயத்தின் ஒரு கண்ணாகவும் சிவனுக்கு என உள்ள கேதாரநாத் கோயில் மறுகண்ணாகவும் விளங்குகிறது என்று சொல்ல வேண்டும். ராவலகன் என அழைக்கப்படும் கேரள தேசத்து நம்பூத்ரிகளால் இந்த கோயிலின் புனிதத்தன்மை மதச்சடங்குகள் யாவும் வேத முறைப்படி மிகவும் கட்டுப்பாடாக பல்லாண்டுகளாக நடத்தி வரப்படுகிறது.