ஸ்ரீ ஜகந்நாதர் (பூரி, ஒரிஸ்ஸா)
ஒரிஸ்ஸாவில் உள்ள பூரி க்ஷேத்திரத்தில் ஸ்ரீ ஜகந்நாதரின் கோயில் கடற்கரையில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் பழமை ரிக்வேதத்தில் இதைப் பற்றிய குறிப்பு வருவதிலிருந்து அறியப்படுகிறது. கட்டுமானத்தில் இந்த கோயில் அமைப்பு வழக்கமாக உள்ளவற்றிற்கு மாறுபாடானது ஆனால் மிகவும் அழகானது. 214 அடி உயரத்தில் 36 அடி சுற்றளவு கொண்ட சக்கரம் இந்த கோயிலில் உச்சியில் வைக்கப்பட்டுள்ளது.
எங்கும் இல்லாத சிறப்பு இந்த கோயிலுக்கு என்னவெனில் இங்கு வணங்கப்டும் முக்கியமான தெய்வம் ஜகந்நாதர், அவர் சகோதரர் பலராமர். அவர் சகோதரி சுபத்ரா தேவி என்பதேயாகும். காலையில் சுப்ரபாதத்ததுடன் நித்திய பூஜை இந்த கோயிலில் துவங்குகிறது. அவர்கட்கு ஆலவட்டம் (கண்ணாடி) காட்டி, புனித நீரால் நீராட்டி, 56 வகையான நைவேத்யங்களை தினத்தில் 7 முறை அளித்து பூஜை தொடர்ந்து நடக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் விக்ரகங்கள் படகில் எடுத்துச் செல்லப்படுகின்றன. 107 குடங்கள் புனித நீரால் அபிஷேகம் செய்யப்படுகின்றன. மிகவும் கவனமாக தேர்ந்தெடுக்கப் பட்ட உணவு படைக்கப்படுகிறது. ஜகந்நாதரின் ரதயாத்திரை உலகம் முழுவதும் பிரசித்தமான ஒன்று 60 அடி உயரமும் 16 சக்ரங்களின் கொண்டது இந்த ரதம், இந்த ரதோத்ஸவம் கண்டுகளிக்க லக்ஷே£பலக்ஷ மக்கள் பூரியில் திரள்கின்றனர்.
வேறு எங்கும் காண முடியாத வகையில் இங்குள்ள விக்ரகங்களுக்கு பெரிய கண்கள், அகன்றவாய், கைகளையும் கால்களையும் தாங்க மரத்தால் ஆன தாங்குகோல் உள்ளன. ஒரு சமயம் இந்திரத்யும்னன் என்ற அரசன் விஸ்வாவசு என்ற பக்தனிடம் இருந்த ஜகந்நாதரை எடுத்துச் செல்ல முயன்ற போது அந்த விக்ரகம் மறைந்துவிட, கடலில் மிதந்து வரும் கட்டையினைத் கொண்டு விக்ரகங்கள் அமைத்துக் கொள்ள அரசன் அறிவுறுத்தப்பட்டான் என்பது வரலாறு . ஒரு வயதான முதியவர் 21 நாட்கள் தான் வேலை செய்யும் போது கதவைத் திறக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் விக்ரகங்களை செய்துதர முன்வந்தார். ஆனால் பொறுமையற்ற அரசன் 15 தினங்கள் முடிந்த போதே கதவுகளை திறந்து விட, அறையில் எந்த வித சப்தமும் இன்றி இருந்தது. பாதி செதுக்கப்பட்ட நிலையிலேயே விக்ரகங்கள் இருந்தன.
இந்த விக்ரகங்கள் 20 அடி உயர பீடத்தில் வைக்கப்பட்டுள்ளன. தெய்வீகமானதும் அழகானதும் ஆனது இந்தக் கோயில்.