வைஷ்ணவம் ஸ்ரீ வெங்கடேஸ்வரர் (திருப்பதி - ஆந்திரப்ரதேசம்) சித்தூர் மாவட்டத்தில் ரேணிகுண்டா ரயில் நிலையத்திலிருந்து

வைஷ்ணவம்
ஸ்ரீ வெங்கடேஸ்வரர் (திருப்பதி - ஆந்திரப்ரதேசம்)

சித்தூர் மாவட்டத்தில் ரேணிகுண்டா ரயில் நிலையத்திலிருந்து சிறிய ரயில் பாதை மூலம் தொடர்பு ஏற்படுத்தப்பட்ட சென்னை மும்பாய் ரயில் மார்க்கத்தில் திருப்பதி உள்ளது. இதனை சாலை வழியாகவும் ஆகாய விமானம் மூலமாகவும் எல்லா பகுதிகளிலும் இருந்து சென்று அடையலாம். ஸ்வயம் வ்யக்த க்ஷேத்திரங்களில் திருப்பதியும் ஒன்று. (இறை அருள் தானாகவே பூமிக்கு வந்து தங்கிய தலத்திற்கு ஸ்வயம் வ்யக்த க்ஷேத்ரம் என்பார்கள்.) இங்கு பக்தர்கள் வழிபாடு செய்ய அவர்களின் பிரார்த்தனையின் பயனை உணருவார்கள்.

7 குன்றுகளினைக் கடந்து உச்சியில் இந்த கோயில் உள்ளது. வைஷ்ணவர்களின் 108 திவ்ய தேசங்களில் ஒன்று. இந்தியாவிலேயே மிகவும் பணக்காரக் கோயில் இது. இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் அதிக அளவிலே மக்கள் வந்து வழிபடும் கோயில். இங்கு கோயில் கொண்டிருக்கும் இறைவனுக்கு தென் இந்தியாவில் வெங்கடேஸ்வரர், வெங்கடாசலபதி, ஸ்ரீநிவாஸன் என்றெல்லாம் பெயர் உண்டு. வட இந்தியாவில் பாலாஜி என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். ஏழையிலும் ஏழையும், பணக்காரனும் தன்னுடைய காணிக்கையை இங்குள்ள உண்டியில் செலுத்துகின்றனர்.

தியாகத்தின் அடையாளமாக இங்கு அங்கப் பிரதக்ஷிணம் செய்கின்றனர். இது ஒரு சிறப்பு வழிபாடு. இரண்டு கைகளையும் கூப்பிக்கொண்டு உடலின் எல்லாப் பகுதிகளும் பூமியில் பட, படுத்து கோயிலின் உட்பிரகாரத்தில் இடமிருந்து வலமாக உருண்டுகொண்டே கர்ப்பகிரகத்தை சுற்றி வருவதற்கே அங்கப் பிரதக்ஷிணம் என்று சொல்லப்படுகிறது. இதற்கு உடலால் தன்னை முழுமையாக இறைவனிடம் ஒப்புக் கொடுக்கப்பட்டுவிட்டது என்று பொருள். ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு நாள் முழுவதும் பக்தர்கட்கு இந்த கோயிலில் தரிசனம் கிட்டுகிறது.

2000 ஆண்டுகளுக்கும் மேலாக தென் இந்தியாவில் உள்ள பல்லவர்கள், பாண்டியர்கள் போன்ற அரசர்களும் விஜயநகரத்தை ஆட்சி செய்தவர்களும், நாயக்கர்கள், ரெட்டிகள் மற்றும் பல ஆட்சியாளர்கள் இந்த கோயிலை மிகவும் பக்தி சிரத்தையுடன் பராமரித்து வந்துள்ளனர். விஜயநகரத்து அரசனான கிருஷ்ண தேவராயர் இந்த கோயிலின் மிகவும் முக்கிய பக்தர்களில் ஒருவர். விலைமதிக்க முடியாத நகைகள், சொத்துக்கள், நிலங்கள் ஆகியவற்றை இவர் இந்த கோயிலுக்கு காணிக்கையாக அளித்துள்ளார். இந்த கோயிலில் இவருடைய மனைவியுடன் கூடிய உலோக உருவச்சிலை இப்போதும் கோயிலில் இருப்பதைக் காணலாம். 6லிருந்து 9ம் நூற்றாண்டு வரையில் வாழ்ந்த வைஷ்ணவ ஆழ்வார்கள் வெங்கடேஸ்வரர் மீது பக்தி மிகுந்த பாசுரங்களை இயற்றியுள்ளனர். இவரின் மீது பல ஆயிரப் பாடல்களை புனைந்து அன்னமாச்சாரியார் பக்தி சிரத்தையுடன் பாடியுள்ளார். இவருடைய பாடல்கள் செப்புத் தகட்டில் வடிக்கப்பட்டு பாதுகாத்து வரப்படுகிறது. தியாகராஜ ஸ்வாமிகளும் இந்த ஸ்வாமியின் மீது கீர்த்தனை பாடியுள்ளார். திருப்புகழ் பாடிய அருணகிரிநாதரும் வெங்கடேஸ்வரர் மீது பாடியுள்ளார்.