ஸ்ரீ கிருஷ்ணர் (உடுப்பி, கர்னாடகா)
தென்இந்தியாவில் இரண்டு கிருஷ்ணர் கோயில்கள் புனித பயணம் மேற்கொள்ளும் பக்தர்களை தன் வயம் ஈர்க்கின்றன. இவை இரண்டும் பரசுராம க்ஷேத்ரம் என்று பெயர் பெற்ற மேற்குக் கடற்கரை ஒரத்திலே உள்ளன. ஒன்று கர்னாடகத்தல் உள்ள உடுப்பி. மற்றொன்று கேரளத்தில் உள்ள குருவாயூர்.
உடுப்பிக்கு ஒரு சரித்திரப் பின்னனி உண்டு. இது இந்தியாவின் ஆன்மிகம், கலாசாரம் ஆகிய இரண்டையும் இணைக்கிறது. பக்தியை பிரதானமாக கொண்ட த்வைத தத்துவத்தை உருவாக்கிய மத்வாசார்யாரின் த்வைத தத்துவ மையமாக தற்காலத்தில் விளங்குகிறது. மத்வர் 1238 கி.ப.யில் உடுப்பிக்கு அருகில் பிறந்தார். ஸ்ரீ கிருஷ்ணனின் தரிசனம் பெற்றார். மால்பே கடற்கரையில் தியானத்தில் ஆழ்ந்திருந்த இவர் கடலில் மூழ்கும் நிலையில் இருந்த கப்பலைக் கண்டு அதனை பத்திரமாக கரை சேர்த்தார். கப்பல் முதலாளி மத்வருக்கு எதைக் கேட்டாலும் அளிப்பதாகச் சொல்ல, இந்த கப்பல் துவாரகையிலிருந்து தனது பயணத்தை துவக்கி அங்கிருந்து கொணர்ந்த மூன்று மூட்டை கோபி சந்தனம் மட்டும் தேவை எனக் கேட்டார். இந்த மூன்று மூட்டைகளும் கப்பலில் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருந்தது. முதல் மூட்டையில் பலராம விக்ரகம் இருந்தது. இரண்டாவது மூட்டையில் துவாரகை கிருஷ்ண விக்ரகம் இருந்தது. ஸ்ரீ மத்வாச்சாரியார் 'துவாதச ஸ்தோத்ரம்'என ஸ்ரீ கிருஷ்ணன் மீது பன்னிரெண்டு ஸ்லோகங்கள் இயற்றினார். பக்தி மார்க்கத்தை விளக்குவதாக அமைந்தது இந்த ஸ்லோகங்கள். A.H. 13ம் நூற்றாணடில் இந்த மூர்த்தியை உடுப்பியில் ஸ்ரீ மத்வாசார்யார் கிழக்கு நோக்கி பிரதிஷ்டை செய்தார். 400 ஆண்டுகளுக்குப் பிறகு, கோயிலினுள் அனுமதிக்கப்படாத காரணத்தால் கனகதாஸர் என்ற கர்னாடகத்தைச் சேர்ந்த இடையர் குல மேதை ஸ்ரீ கிருஷ்ணனை தனக்கு மேற்கு துவார ஜன்னல் மூலமாக தரிசனம் அளிக்க வேண்டிக்கொண்டார். தூய்மையான பக்தியினால் கவரப்பட்ட பகவான் கிழக்கு நோக்கி இருந்தவர் மேற்கு நோக்கி திரும்பி அவருக்கு தரிசனம் அளித்தார். அன்றிலிருந்து இன்றும் மேற்கு நோக்கியே நிற்கின்றார்.
ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலைச் சுற்றி மத்வாசாரியார் எட்டு மடங்களை ஸ்தாபனம் செய்தார். அவைகளில் பக்தி மார்க்கத்தை பரப்பவும், ஸ்ரீ கிருஷ்ணரை பூஜை செய்யவும் என எட்டு துறவிகளை நியமனம் செய்தார். ஒவ்வொரு துறவியும் அந்தந்த மடத்திற்கு தலைமை தாங்கி ஒவ்வொருவரும் ஸ்ரீ கிருஷ்ணரை ஒன்றரை மாதத்திற்கு பூஜை செய்வது என்ற திட்டம் வகுத்துக் கொண்டு பூஜை செய்து வந்தனர். இங்கனம் தங்களுக்குள் பகிர்ந்து கொண்ட முறைக்கு "பர்யாயம்" எனப்ப பெயர். ஸ்ரீ வாதிராஜ ஸ்வாமிகளின் காலத்திற்கு பிறகு இந்த பர்யாய காலம் ஒவ்வொரு மடத்திற்கும் இரண்டு ஆண்டுகள் என நீட்டப்பட்டு இன்று வரையில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தங்கத்தேர் உட்பட தேர்திருவிழாவும், லக்ஷதீப விழாவும், பக்தர்களுக்கு நம்பிக்கையையும் பக்தி மார்க்கத்தின் சிறப்பையும் உணர்த்துவதற்கு பெரிதும் உதவுகின்றன.