விநாயக புராணம்
4. விநாயகமான்ம்யஸாரம்
இருபத்தாறாவது- கிருதவீரியனுபாசித்தது
தமமிலின்பருண்மதலைவேண்டிகிர்தவீரியன்றவமுஞற்றிடுகையிலவன்
றந்தைபிரமர்ச்சார்ந்தறிந்தெழுதிகனவினிற்றந்தபுத்தகநியமமாய்
விமரிசித்தியன்மாசிமதியபரபக்கஞ்சதுர்த்திமேவியபெனமனாள்
வெண்ணிலவுதித்பின்னிபமுகத்தெந்தையைமெய்யன்பின்மஞ்சனாதி
சுமனசமொடறுகினாலர்ச்சனைநைவேத்தியந்தூபதீபாதிமுற்றிச்
சோமபூசனையாற்றியந்தணர்க்குண்டிமுதல்சொற்றானமும்வழங்கி
யமைதியினனுட்டிக்குநாளைங்கரேசனருளாற்கார்த்தவீரியற்பெற்
றாருக்கமுற்றண்ணலாரருளினுக்கணியனாயன்பின்வாழ்ந்தனன்மகிழ்ந்தே
இதன் சரித்திர சங்கிரகம்
சையாத்திரிசாரலிற்கருகாக விளங்குமோர்பட்டணத்தரசனான கிருதவீரயன் புத்திரப்பேறு வேண்டி வனத்திற்றவஞ் செய்கையில் பிதிர்தேவனாயிருக்குமவன் தந்தை நாரதராலறிந்தவது செய்தியைக் குறித்து பிரமனிடஞ் சென்று வணங்கி வினவினதன்மேல் அக்கிருதவீரியன் பூர்வ ஜென்மத்தில் அரசவம்சத்தில் சாமனெனவு தித்துக் கணேசனெனுமோர் புத்திரனோடு வாழ்க்கையில் நிகரற்ற துன்பமும் வறுமையும் நேர்ந்து ஒரு நாளவன் பசிக் கொடுமையால் வழிதடுத்துப் பன்னிரண்டு பிராமணர்களைக் கொன்று அவர்கள் பொருள்களைக்கவர்ந்து கொண்டு வீட்டிற்குப் போயன்று சங்கடசதுர்த்தி தினமாகையால் முன்னாட்டொடங்கியன்னமில்லாமலிறந் திருக்கக்கண்ட தன்பிள்ளை விநாயக லோகத்திற் சேர அவ்விசேஷ தினத்தில் மூன்று தரங் கணேசா கணேசாவென வவன் பெயரைக் கூவியழைத்த மகிமையினால் உடனேயிறந்த அந்த சாமன் உனக்குப் புத்ரனாயுதித்து அரசுரிமையையிப் போதடைந்தனன் ஆதலால் அப்பிரமஹத்தியழியுமாறு மாசி மாத அபரபக்ஷத்திற் செவ்வாய்க்கிழமை கூடின சதுர்த்தியில் அவ்விரதத்தைத் தொடங்கி கணேச மூர்த்தியின் பாதபத்மங்களை மனதிலிருத்தியேகாக்ஷர ஷடாக்ஷர மந்திரத்தோடு திருநாம மந்திரத்தையுந்தியானித்து அன்ன பானாதிகளை நீத்து சந்திரொதயமானவுடன் விநாயக மூர்த்தியையெழுந்தருளச் செய்து பூஜனை முடித்த பின் சந்திரனுக்கும் அர்ச்சனையை நடாத்திவேதியர்கட்கு அறுசுவையுண்டியளித்து அன்றிராமுழுதும் நித்திரை தவிர்த்து அக்கடவுட்சரித்திரங்களைக் கேட்டு வந்து இவ்வகையோர் வருடவரையில் சதுர்த்தி தோறும் பூஜித்தால் புத்திரப்பேறுண்டாகுமென்று அவ்விரதத்தின் சகலமகத்துவமும் பிரமனாற்கூறக் கேட்டபடியேயோர் புத்தகமாகவெழுதி தனது புத்திரன் கனவிற் சென்று அதை வாசிக்கும் விதிகளைத் தெரிவித்து அவன் கையில் அப்புத்தகத்தைக் கொடுத்துச் சென்ற பின்னர் அவனவ் விதமே அவ்விரததினம் வரக்கண்டு ஆரம்பித்து தன் குலகுருவாகிய அத்திரிமுனிவர் முன்னிலையில் கும்பமுடன் கணேசமூர்த்தமுதலாக விதிப்படியமைப்பித்து ஆராதித்து புத்திரபேறடையப் பெற்றனன்.
***********************************************************************