ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், காஞ்சிபுரம்
தமிழ் இணைய தளம்


ஸ்ரீ காமகோடி ப்ரதீபம்
மலர் -21 இதழ் -9,10 ரௌத்ர வருஷம் ஐப்பசி- கார்த்திகை1
அக்டோபர்- நவம்பர் - 1980


ஸ்ரீ வேங்கடேச ராமாயணம்
ர. வேங்கடரத்தினம்

புராணங்கள் என்று பாரதம் போற்றும் பழ நூல்களுள் ஸ்ரீ ப்ரஹ்மாண்ட புராணம் என்பது ஒன்று. அதன் பெருமைகளுள் ஒன்று எனலாம் அதன் நடுவே வரும் ஸ்ரீவேங்கடேச ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரத்தை. ஏழுமலையானுக்கு அங்கே ஸந்நிதியில் நடைபெறும் நித்ய ஆராதனைகளுள் இந்த ஸஹஸ்ர நாம அர்ச்சனை மிக விசேஷம் ஆனது. மொத்தம் 183 சுலோகங்களில் அடங்கும் அந்தத் தோத்திரத்தில் திருமாலின் தசாவதாரமும் பேசப்பெறுகிறது. ஆங்கு வரும் ராம கதையையே நாம் இங்கு ஸ்ரீவேங்கடேச ராமாயணம் எனக் கூறலானோம்.

रविवंशसमुद्भूतॊ राघवॊ भरताग्रज:
कौसल्यातनयॊ रामॊ विश्वामित्रप्रियङ्कर:

ரவி வம்ஸ ஸமுத்பூதோ தாகவோ : பரதாக்ரஜ : |

கௌஸல்யா தனயோ ராமோ விச்வாமித்ர ப்ரியங்கர : || 41 ||

சூர்ய குலத்துச் செம்மல் அவன்; ரகு வழி வந்தவன். ஆதலின் ராகவன் என்பதும் அவன் பெயராம். பரதனுக்கு மூத்தவன், கோசலை மைந்தன் ராமன். விசுவாமித்திர முனிவர் வேண்டியதை அருளியவன்.

இந்த விவரங்கள் வருவது மேற்கண்ட 41-ஆம் சுலோகத்தில் ஆகும்.

ताटकारि: सुबाहुघ्नॊ बलातिबलमन्त्रवान्
अहल्याशापविच्छॆदी प्रविष्टजनकालय:

தாடகாரி: ஸூவாஹூக்னோ பலாதிபல மந்த்ரவான் |

அஹல்யா ஸாபவிச்சேதீ ப்ரவிஷ்ட ஜனகாலய : || 42 ||

ராமன் தாடகையின் எதிர்; சுபாஹூவை ஒழித்தவன். பலா அதிபலா என்ற உயரிய மந்திரங்களைக் கைக் கொண்டவன். விசுவாமித்ர முனிவர் உபதேசித்த இவ்விரு மந்திரங்களைக் கொண்டுதான், ராமன் விசுவாமித்திரரின் வேள்வியை அழிக்க வந்த அரக்கரை அழித்தான். பின்னர் முனிவர் பின்னோடு சென்று, கல்லாகிக் காத்து நின்ற அகலிகையை உயிர்ப்பித்து எழச்செய்து, ராமன் அந்த அம்மையாரது சாபம் நீங்குமாறு அருளினான். உடன் ஜனக மன்னனின் மாளிகையில் பிரவேசித்தாயிற்று.

स्वयंवरसभासंस्थ ईशचापप्रभञ्जन:
जानकी परिणॆता च जनकाधीशसंस्तुत:

ஸ்வயம்வர ஸபாஸம்ஸ்த ஈஸசாப ப்ரபஞ்ஜன : |

ஜானகீ பரிணோதா ச ஜனகாதீஸ ஸம்ஸ்துத : || 43 ||

சுயம்வரம் நடக்கிறது. அம்மண்டபத்தில் ராமன் சென்று அமர்கிறான். சில தனுசை முறிக்கிறான். ஜனகன் பெண்ணைக் கடிமணம் புரிந்துகொள்கிறான். மாமன்னன் ஜனகன் மகா ஞானியும் ஆவான். அவன் ராமனைப் புகழ்கிறான். ஆம், ராமனை இன்னார் என அந்த ஞானி கண்டு கொள்கிறான் !

இந்த இனிய அவதாரக் கதை தொடங்குவதற்கு முன் வந்து சென்ற பரசுராமன் இங்கே குறுக்கிடுகிறான்.

जमदग्नितनूजातयॊद्धा अयॊध्याधिपाग्रणी:
पितृवाक्यप्रतीपाल स्त्यक्तराज्य: सलक्ष्मण:

ஜமதக்னித தனூஜா தயோத்தா யோத்யாதிபாக்ரணீ : |

பித்ருவாக்ய ப்ரதீபாலஸ் த்யக்தராஜ்ய : ஸலக்ஷ்மண : || 44 ||

பரசுராமன் வம்புக்கு இழுக்க, வந்த வம்பை விடாது ராமன் சமாளிக்கிறான். அயோத்தியை ஆண்ட அரசர் தம்முள் முதலான ராமன், தந்தை சொல்லுக்குக் கட்டுப்பட்டு, அரசைத் துறந்து இலக்குவனோடு வெளியேறுகிறான். ஆம், தந்தை தசரதன் தந்திருந்த வாக்கை நடத்திக் காட்டுதற்காகத் தனயன் காடு சென்றான்.

அடுத்தது வனவாசம் :

ससीतश्चित्रकूटस्थॊ भरताहितराज्यक:
काकदर्पप्रहर्ता च दण्डकारण्यवासक:

ஸஸீதஸ் சித்ரகூடஸ்தோ பரதாஹிதராஜ்யக : |

காகதர்ப்ப ப்ரஹர்த்தா ச தண்டகாரண்ய வாஸக : || 45 ||

சீதாப்பிராட்டியோடு வனம் புகுந்த ராமன் பரதனிடம் அரசை ஒப்படைத்து விட்டான். காகாசுரனின் கொட்டத்தை அடக்கினான். இப்படியாக தண்டகாரண்ய வாசம் தொடர்ந்தது.

पंचवट्‍यां विहारी च स्वधर्म परिपॊषक:
विराधहा अगस्त्यमुख्यमुनि सम्मानित:

பஞ்சவட்யாம் விஹாரீ ச ஸ்வதர்ம பரிபோஷக : |

விரானஹா கஸ்த்ய முக்ய முனி ஸம்மானித : || 46 ||

பஞ்சவடியில் தங்கிய ராமன் தன் கடமைகளினின்று வழுவாது ஒழுகி வந்தான். விராதன் என்னும் கொடியோனைக் கொன்று போட்டு, க்ஷத்ரிய தர்மத்தைப் பேணி, அகத்யர் முனிவரால் போற்றிப் புகழப்பட்டான்.

ईन्द्रचापधर: खड्‍गधरश्चाक्षयसायक:
खरान्तकॊ दूषणारि स्त्रिशिरस्करिपुर्वृष:

இந்த்ர சாபதர: கட்கதரஸ் சாக்ஷயஸாயக : |
கராந்தகோ தூஷணாரிஸ் த்ரிஸிரஸ்கரிபுர்வ்ருஸ்ஷ : || 47 ||

இந்த்ரனுடைய வில்லேந்திய வீரன்; உடைவாள் தரித்து நிற்பவன். குறைவிலா அம்பு அவனது. கரனைத் தீர்த்துக் கட்டியவன். தூஷணன் என்பான் அவனைப் பகைத்துக் கொண்டான். திரிசிரஸ் என்னும் எதிரிக்கு ஏறு போன்றவன். (இந்த சுலோகம் முழுதும் க்ஷத்திரிய வீரம் பேசுகிறது.)

तत: शूर्पणखानासाच्छॆत्ता वल्कलधारक:
जटावान् पर्णशालास्थॊ मारीचबलमर्दक:

தத: ஸூர்ப்பணகாநாஸாச்சேத்தா வல்கல தாரக : |

ஜடாவான் பர்ணஸாலாஸ்தோ மாரீசபல மர்தக : || 48 ||

பின்னர், சூர்பணகையின் மூக்கைக் கொய்தான். மரவுரி தரித்து ஜடாதாரியாக விளங்கும் ராமன் பர்ணசாலையில் தங்கியுள்ள காலை, மாரீசன் குறுக்கிடுகிறான். துரத்திக்கொண்டு போய், அம்மாய மானின் வலிமையை ஒடுக்குகிறான்.

இங்கெல்லாமோ, இதற்குப் பின்னரோ சீதாதேவி காணாமல் போவது குறிப்பிடப்படவில்லை. அடுத்து, ஜடாயுவுடன் அண்ணல் பேசுவது வருகிறது:

पक्षिराट् कृतसंवादॊ रवितॆजा महाबल:
शबर्यानीतफलभुक् हनूमत्परितॊषित:

பக்ஷிராட் க்ருதஸம்வாதோ ரவிதேஜா மஹாபல : |

ஸபர்யானீத பல புக் ஹனூமத் பரிதோஷித : || 49 ||

கதிரவனின் குலத்து மாவீரன். வலிமையில் அக்கதிரவனுக்கே ஒப்பானவன். ஜடாயுவினோடு பேசியபின் நடையைத் தொடர்கிறான். வழியில் சபரி தரும் கனிகளைப் புசிக்கிறான். அடுத்து அனுமான் வருவான். அவன் உள்ளத்தை ஆட்கொள்கிறான்.

सुग्रीवाभयदॊ दैत्यकाय क्षॆपणभासुर:

सप्तताल समुच्छॆत्ता वालिहृत् कपिसंवृत:

ஸூகிரீவாபயதோ தைத்யகாய க்ஷேபணபாஸுர : |

ஸப்ததாலஸமுச்சேத்தா வாலிஹ்ருத் கபி ஸம்வ்ருத : || 50 ||

சுக்ரீவ மன்னனுக்கு அபயம் தந்தருள்கிறான். அரக்கன் உடலை எட்டி வீசி, எழில் கொண்டு திகழும் அவன் ஏழு மரங்களையும் துளைத்துக் காட்டுகிறான். வாலியை வதம் செய்து, குரங்கினத்தின் புடைசூழக் காட்சி தருகிறான்.

वायुसूनुकृतासॆव: त्यक्तपम्प: कुशासन:
उदन्वत्तीरग: शूरॊ विभीषणवरप्रद:

வாயுஸூனு க்ருதாஸேவ: த்யக்த பம்ப்ப : குஸாஸன : |

உதன்வத்தீரக : ஸூரோ விபீஷண வரப்ரத : || 51 ||

வாயுகுமாரனின் பணிவிடையை ஏற்கிறான். பம்பா சரஸைவிட்டுக் கிளம்பும் ராமன் தர்ப்ப சயனம் செய்துவிட்டுக் கடலை கடக்கிறான். எதிர்க்கரையைச் சென்றடையும் சூரன், வீபீடணனுக்கு வரம் அருளிக் காக்கிறான்.

सॆतुकृत् दैत्यहा प्राप्तलङ्कॊ अलङ्कारवान् स्वयम्
अतिकरशिरछॆत्ता कुम्भकर्ण विभॆदन:

ஸேதுக்ருத் தைத்யஹா ப்ராப்தலங்கோ லங்காரவான் ஸ்வயம் |

அதிகாய ஸரச்சேத்தா கும்பகர்ண விபேதன : || 52 ||

பாலம் அமைத்து இலங்கை போய்ச் சேரும் ராமன் அரக்கரைக் கொல்கிறான். அழகு ஏதும் செய்துக்கொள்ளாமலேயே அழகாக விளங்குபவன் ராமன். அதிகாயன் என்பானின் தலையைக் கொய்து வீசுகிறான். கும்பகர்ணனைப் பிளந்து வீழ்த்துகிறான். இங்கே சேத்தா छॆत्ता என்ற சொல் இந்தப் பன்னிரண்டே சுலோகங்களில் மூன்றாம் முறை வருகிறது! சூர்ப்பணகை மூக்கைச் சீவியவன், ஏழு மரங்களைத் துளைத்துப் பின்னர் அதிகாயன் தலையை வீழ்த்தி வீசுகிறான். முதலில் பிறர் மனை நோக்காப் பேராண்மையில் குறுக்கிடும் முயற்சிக்கு ஒரு வீழ்ச்சி, அடுத்தது, தன் வலிமையை எதிரிக்கு உணர்த்தும் ஒர் எச்சரிக்கை. இறுதியில் கண்டது, தர்மத்தோடு மோதினால் தலைகள் உருளும் என்பதை மெய்ப்பிப்பது!

दशकण्ठ शिरॊध्वंसी जाम्बवत्प्रमुखवृत:

जानकीश सुराध्यक्ष: साकॆतॆश: पुरातन:

தஸகண்ட்ட ஸீரோத்வம்ஸீ ஜாம்பவத் ப்ரமுகாவ்ருத : |

ஜானகீச ஸீராத்யக்ஷ : ஸாகேதேஸ : புராதன : || 53 ||

பத்துத் தலை ராவணனை அழித்தாயிற்று. ஜாம்பவான் முதலானோர் புடை சூழ ஜானகிமணாளன் பழையபடி, அயோத்தியேகுகிறான்.

வெகு சாமர்த்தியமாக அவதார உத்தேசம் நிறைவு ஆனதை ஒட்டி, இங்கு ராமனை தேவர்க்கதிபன் என்று வர்ணித்தாகிறது. இன்னோர் அழகு யாதெனில், இதுவரை சீதா தேவியைப் பற்றிப் பேசாமல் இருந்த தோத்திரம் திவ்ய தம்பதியை நொடிப்போதில் சேர்த்து வைக்கிறது. அன்னை காணாது போனாள் என்றோ, அரக்கன் அபகரித்துச் சென்றான் என்றோ, நம் மனத்திற்கு ஒவ்வாத அவலப் பேச்சு ஏதுமே இல்லை.

ससीत: என்று (ஸஸீத:) கடைசியாக 45-ஆம் சுலோகத்தில் நாம் தரிசனம் செய்யும் அன்னை, இடையில் இதுவரை மாயமாய்ப் போய், ஏழு சுலோகங்களுக்கு அப்பால் जानकीश: ஜானகீச: என்ற இடத்தில் நம் கண் எதிரே திருக்காட்சி தருகிறாள்.

ராமனையும் தேவியையும் ஒன்று சேர்த்தபின் உடனே அவர்களை வைகுந்தச் சூழலில் கொண்டு சென்று நிறுத்துவது அடுத்த சுலோகம்:

पुण्यश्लॊकॊ वॆदवॆद्य: स्वामितीर्थनिवासक:

लक्ष्मीसर: कॆकिलॊलॊ लक्ष्मीशॊ लॊकरक्षक:

புண்ய ச்லோகோ வேதவேத்யோ ஸ்வாமி தீர்த்த நிவாஸக: |

லக்ஷ்மீஸர: கேகிலோலோ லக்ஷ்மீஶோ லோகரக்ஷக: || 54 ||

தொடர்வது தேவகி மைந்தனாய்ப் பிறப்பு! எனவே, இந்த ஈரடிகள் ராமாயணத்தை நிறைவு தருவனவாம். புண்ய சுலோகங்கள், வேதங்களினால் மட்டுமே அறியத்தக்கவன். திருமலையில் ஸ்வாமி புஷ்கரணியில் உறைபவன். இலக்குமி என்னும் தடாகத்தில் ஆடிமகிழும் அவன், இலக்குமி காந்தன். உலகினையே காத்தருளுபவன் என்று அமைகிறது. படிப்போர்க்கு நல்வினை கூட்டிதரும் இந்த ராமாயண சுலோகங்கள் அப்புராதன, புண்ணிய புருஷனின் புகழ் பாடும் புண்ணிய சுலோகங்கள் தாம் அல்லவா?

இங்கே பதினான்கே சுலோகங்களில் நமக்கு ராமகாதை முழுக்கக் கிடைக்கிறது. குலப் பெருமை, குடிப்பெருமை, ரவிவம்சம், ராகவன் என்ற சொற்களில் நமக்குத் தெளிவாகின்றன. பரதன், கோசலை, விசுவாமித்திரர், ஜனக மன்னன், அகத்தியர், பரசுராமன், சீதாப்பிராட்டி, இலக்குவன், சுக்கிரீவன், சபரி, அனுமன் இப்படி ஜாம்பவான் உட்பட எவர் பெயரும் விடுபடவில்லை (குகனைக் காணவில்லை என்பது உண்மைதான்). மோதி மோட்சம் பெற்றவருள் தாடகை, சுபாஹூ, காகாசுரன், விராதன், கரன், தூஷணன், திரிசிரஸ், வாலி, மாரீசன், அதிகாயன், ராவணன் யாரையும் மறக்கவில்லை. உபபாத்திரங்கள் என்று கொள்ளத்தக்க அகலிகை, ஜடாயு, சூர்ப்பணகை வருகின்றனர். வரலாற்றில் அழியா இடம் பெற்ற இடங்கள் ஆகிய சித்திரகூடம், தண்டகாரண்யம், பஞ்சவடி, பம்பா சரஸ், லங்கை, சேது, அயோத்திமாநகர் எல்லாம் தத்தம் இடத்தில் உள்ளன.

ராமாயணம் எனில், இன்னும் நமக்கு வேறென்ன வேண்டும்? கதையம்சம் விடுபெறாமல் தொடர்ச்சியாகவும், நடந்த வரிசையிலும் இங்கே 14 சுலோகங்களில் கூறப்பெறுகிறது. இதே ஸஹஸ்ர நாமத் தோத்திரத்தில் ராமனைப் பேசும் பிற நாமங்கள் தனித்தனியே வந்து செல்கின்றன. உதாரணங்கள்: अनसूयानन्दनॊ त्रिनॆत्रानन्द: அநசுயா நந்தனோ த்ரிநேத்ரானந்த: (சு: 109) आञ्जनॆयकरार्चित: ஆஞ்சநேய க்ரார்ச்சித: (சு.158) इक्ष्वाकुकुलनन्दन: இக்ஷ்வாகு குலநந்தன: (சு.151) भरद्वाजप्रतिष्टावान् பரத்வாஜப்ரதிஷ்டாவான் (152). இப்படி ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாமத்திலும் விட்டுவிட்டு ராம நாமங்கள் வரும்.

ஒரு சேர அழகாகக் கதையில், நிகழ்ச்சிகள் வரும் வரிசையை மீறாது, மாற்றாது ராமாயணத்தை எடுத்தியம்பும் சுலோகங்கள் பதிநான்கு ஆகும். அவற்றில் நாமாவளிக்கும் நமக்கு 76 திவ்வியத் திருநாமங்கள் கிடைக்கின்றன. ராமாயணத்தில் ரத்தினச் சுருக்கமாயும் இவை உள்ளன. ப்ரம்மாண்ட புராணத்தின் நடுவே சதிஷ்ட நாரத ஸம்வாதத்தில் ஸ்ரீவேங்கடேச ஸஹஸ்ரநாமப் பிரசங்கத்தில் வந்து செல்லும் இந்தப் பதிநான்கு சுலோகங்களையும் நாம் ஸ்ரீவேங்கடேச ராமாயணம் என்று கொண்டாடி நித்திய பாராயணத்தில் சேர்த்துச் சொல்லி மன நிறைவு பெறலாம்!

~~~~~

Home Page