"குண்டினபுரத்துக் கோட்டை வாசல், தமயந்தியின் ஸ்வயம்வரத்தில் கலந்து கொள்ள அரசகுமாரர்களின் கூட்டம் வாசலை அடைத்துக் கொண்டு நகரமுடியாமல் தவிக்கிறது. கோட்டையின் உச்சியில் பறக்கும் கொடி அசைவது அவைகளைக் காட்டி முந்தும்படி அழைப்பது போல் இருந்தது" என்பது ஸ்ரீஹர்ஷகவியின் கற்பனை. ஆனால் எழுபத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீகாமகோடி பீடத்தின் பொருப்பேற்று ஜகதாசார்யனாகி கையில் ஏந்திய தர்மத்வஜம் மக்களை நல்வழியில் முன்னேறும்படி அழைத்துக் கொண்டே இருக்கிறது. இது இன்று நாம் காணும் உண்மை.
பூமிக்கு ’அஸ்த்திரா’ என்று ஒரு பெயர். அதற்கிணங்க பாரதம், பண்பட்ட முடியரசு, வெளிநாட்டவரின் ஆட்சி, ஜனநாயகக் குடியரசு என்றெல்லாம் மாறுபாடான காலகட்டத்தைச் சந்திக்கும் நேரத்தில் ஆன்மீகமான பாதையில் முன்னேற முயல்வது தான் மக்கள் ’”மா"க்களாக ஆகாமலிருக்க உதவும் என்பதை அநுபவபூர்வகமாக உணர முடிகிறது. அந்த ஆன்மீகபாதையில் இறங்கி தானும் முழுமையைப் பெற்று மக்களையும் முழுமை பெறச் செய்ய அயராது எழுபத்திஐந்து ஆண்டுகளாக தொண்டாற்றி வெற்றிகாண்பவர், கண்கண்ட தெய்வமாகவும் மக்களால் வாயாரப் புகழப்படும் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் அணையாவிளக்கு, அத்வைதத்தின் விளக்கமாக "பெரியவாள்", ’பரமாசார்யாள்", "மகாஸ்வாமிகள்", என்றெல்லாம் பெருமையாக பக்தர்கள் புகழும் நம் ஜகதாசார்யர் ஸ்ரீசந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதீ ஸ்வாமிகள்.
தன்னுடைய இந்திரியங்களையெல்லாம் அடக்கி ஒடுக்கி எண்சாண் உடல் காத்தினால் நிறைந்து சஞ்சரிக்கிறது என்ற நிலையில் பாரதத்தின் மூலை முடுக்குகளையெல்லாம் தன் பாதயாத்திரையினால் புனிதமாக்கி, ’லோகாஸ் ஸமஸ்தாஸ் ஸுகினோபவந்து" என்ற ஓரே கோட்பாட்டிற் கிணங்க, மக்களுக்காக ஜபம், மக்களுக்காக தவம், "அரசனையும் துரும்பாக மதிப்பார் துறவி" என்ற சொல்லிற்கு இலக்கணமாகி, விறுப்பு வெறுப்பின்றி, சுகதுக்கமின்றி, கோபதாபமின்றி எல்லா உயிரனங்களும் ஒரு பரமாத்மாவின் திரிபு என்னும் பெரும் நோக்குடன் எல்லோர் நன்மைக்காகவும் நம் மகா ஸ்வாமிகள் செயல்பட்டு வருகிறார்கள்.
அரசின் ஆஸ்தானத்தில் அமரவேண்டிய பண்டிதர்கள், தெய்விகக் கலையைப் போற்றும் பணியில் ஈடுபட்ட சிற்பிகள், பாரதப் பண்பாட்டைப் பரப்பும் பாகவதோத்தமர்கள், கிராமியக்கலைகளக் கற்றுணர்ந்து அதையே தொழிலாகவும் கொண்டவர்கள்,. வேதம், சாஸ்திரம். புராணம், இவைகளைப் பயின்று வாழ்பவர்கள், புரோஹிதர்கள், வாக்கேயகாரர்கள் அகியோர் காலவசத்தினால் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் பெருமை மங்கிக் கொண்டு வருவதை உணர ஆரம்பித்து விட்டனர். தங்கள் குலகல்வி பயனற்ற நிலையை எய்துவதை எண்ணி தன் சந்ததியினரை இதில் ஈடுபடுத்த மனமில்லாத நிலைக்கு தங்களை ஆளாக்கிக் கொண்ட தருணத்தில், இந்த துயரத்திலிருந்து கலைஞர்களை மீட்கவும், அந்தந்த கலைகள் மங்காது தொடரவும், பல திட்டங்களை நம் மகாஸ்வாமிகள் தீட்டி அவைகளை செயல் முறையில் ஆக்கினார்கள்.
பல ஊர்களில் வேதபாடசாலைகள், சாஸ்திர பாடசாலைகள், அடிக்கடி பண்டிதர்களின் ஸதஸ்களைக் கூட்டுவது, அதில் இளம் வித்வான்களுக்கு பரீக்ஷைகளை ஏற்படுத்தி ரொக்க ஸம்பாவனைகள், வேத தர்ம பரிபாலன ஸபையின் மூலம் தர்ம பிரசாரம், வேத பாஷ்ய பரீக்ஷைகள், பாஷ்யம் பயிலும் காலத்திலேயே பண உதவி, படிப்பு முடிந்து பரீக்ஷையில் தேறியவர்களுக்கு பல ஆயிரம் ரூபாய் ஸம்பாவனை, ’வியாஸ பாரத சில்ப கலா ஸதஸ்’ என்ற நிறுவனத்தைத் துவக்கி கலைஞர்களையெல்லாம் ஊக்குவித்தல், ’திருப்பாவை-திருவெம்பாவை ஆரங்க மகாநாடு’ வாயிலாக சமய ஒற்றுமையையும், பக்தியைப் பரப்புதல், ’பிடி அரிசி’ திட்டத்தின் வாயிலாக ஏழைகளின் பசிப்பிணி அகற்றல், நோய் வாய்பட்டு ஆஸ்பத்திரிகளில் படுத்துள்ளோருக்கு ப்ரஸாதம் வழங்குதல், தர்மோபநயனங்களை நடத்திவைத்தல், ஏழைகளின் விவாஹங்களுக்கு நிதி உதவி இவ்வாறெல்லாம் அவர்கள் இந்த எழுபத்தி ஐந்து ஆண்டுகளில் மக்களின் நலனுக்காக எண்ணற்ற ஸேவைகளைச் செய்து வருகிறார்கள்.
அத்வைத ஸபாவின் பொன் விழாவின்போது 108 வித்வான்களுக்கு தங்கமோதிரம் வழங்கினார்கள். லக்ஷணத்துடன் நியமமாக வேத அத்யயனம் செய்த வித்வான்களுக்கும், சாஸ்திரபண்டிதர்கள் பலருக்கும் தங்கதோடா வழங்கியுள்ளார்கள்.
கடந்த 24-2-82 அன்று காஞ்சியில் ஸ்ரீகாமாக்ஷி அம்மன் ஸந்நிதியில் நடந்த விசேஷ ஸதஸ்ஸில் மகாஸ்வாமிகள் பீடாரோஹணம் எழுபத்தி ஐந்து ஆண்டுகள் பூர்த்தியானதைக் கொண்டாடும் வகையில் காஞ்சி ஸ்ரீசங்கர பக்தஜன ஸபையினர் ௭௫ வித்வான்களுக்கு தலைக்கு ஒரு பவுன் வீதம் ஸம்பாவனை செய்தனர். அம்மகானின் அருளாசி ஒன்றுதான் இவ்வித கைங்கரியங்களுக்கு துணையாக உள்ளது என்று ஸ்ரீசங்கர பக்தஜன ஸபையினர் கூறி தங்களுக்கு கிடைத்த பாக்யத்தை எண்ணிப் பெருமிதப்படுகின்றனர்.
இம்மகான் வாழும் நாளில் வாழப்பிறந்த நாம் பாக்யமடைந்தவர்கள் என்பதில் ஸந்தேகமில்லை. ஜகத்குரு ஸ்ரீமகாஸ்வாமிகளின் அருளாசி பல ஆண்டுகளுக்கு நமக்கு கிடைக்க ஸ்ரீகாமாக்ஷிதேவி அருளப் பிரார்த்திப்போமாக.
|