ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், காஞ்சிபுரம்
தமிழ் இணைய தளம்


ஸ்ரீ காமகோடி ப்ரதீபம்
மலர் -22 இதழ் -5,6 ரௌத்ர வருஷம் ஆனி ஆடி
ஜுன்-ஜுலை - 1981


ஸ்ரீ காமாக்ஷி சந்நதியில் கல்யாணம்

கொப்பூர் (குல்பர்க்கா சமீபம்)

 

கொள்ளிடம் ஆற்றின் தென் கரையில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் சென்னையில் ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அவருக்கு மனைவியும், இரண்டு குமாரர்களும் உண்டு. இவர் சென்னையில் இருந்த சமயத்தில் மனைவி காலமாகி விட்டார். அதன் பிறகு அந்த அம்மாள் அணிந்து இருந்த நகைகளை ஸ்ரீ காஞ்சி காமாக்ஷி அம்மனுக்கு அர்ப்பணித்து விட்டார்கள். ஏதோ சிறு மனஸ்தாபத்தால் பிள்ளைகளும் அவரும் பிரிந்து வாழும் நிலை ஏற்பட்டு விட்டது.

 

ஆதலால் சமையலுக்கு ஒரு அம்மாவை அமர்த்திக் கொண்டு தனியாக இருந்தார். அவருக்கு கம்பெனியில் ஒரு காரும் டிரைவரும் கொடுத்து இருந்தார்கள். இவர் மனைவி நகைகளை ஸ்ரீ காமாக்ஷி அம்மனுக்கு சமர்ப்பணம் செய்யும்போது எனக்கும் இவருக்கும் சிநேகம் ஏற்பட்டது. என்னை ஒரு நாள் கூப்பிட்டு, ஸ்ரீ பெரியவாளை தர்சனம் செய்ய அழைத்துப் போகும்படி சொன்னார். ஆனால் அவர் நண்பர் ஒருவரை அழைத்துக் கொண்டு ஸ்ரீ பெரியவாள் தர்சனத்திற்கு போனார். தர்சனம் செய்த பிறகு அவர் ஸ்ரீ பெரியவாளிடம் தான் ரூ.50,000/- பணம் வைத்து இருப்பதாகவும், அதைக் கொண்டு ஒரு கோவில் கட்டி, கும்பாபிஷேகம் செய்ய உத்தரவு அளிக்க வேண்டுமென்றும் பிரார்தித்தார்.

          ஸ்ரீ பெரியவாள் மௌனமாக இருந்து விட்டார்கள். இந்த விஷயங்களை திரும்பி வந்து என்னிடம் சொன்னார். நான் அவரிடம் இந்தப் பணத்தில் எப்படி கோவில் கட்டி, கும்பாபிஷேகம் செய்து, பூஜைக்கு வேண்டிய நிரந்தர நிதி ஏற்படுத்த முடியும் என்று கேட்டேன். அதற்கு அவர் நீ சொல்வது மிகவும் சரியாக இருக்கிறது. ஆதலால் தான் ஸ்ரீ பெரியவாள் மௌனமாக இருந்து விட்டார்கள் போலும் என்று சொன்னார்.

பிறகு அவர் படுத்த படுக்கையாகி விட்டார். என்னை கூப்பிட்டு ஸ்ரீ பெரியவாளைப் போய் தர்சனம் செய்து, இந்தப் பணத்தை எப்படி உபயோகப்படுத்த வேண்டும் என்று உத்தரவு செய்கிறார்களோ அப்படியே செய்யக் காத்துக் கொண்டு இருப்பதாகத் தெரிவிக்கும்படிச் சொன்னார்.

           நானும் உடன் ஸதாரா சென்று ஸ்ரீ பெரியவாளை தர்சனம் செய்து அவர் சொன்னதை விக்ஞாபித்து உத்தரவு கேட்டேன். அப்போதும் ஸ்ரீ பெரியவாள் மௌனமாகவே இருந்து விட்டார்கள். நான் திரும்பி வந்து ஸ்ரீ பெரியவாள் மௌனம் என்று சொல்லிவிட்டேன். அதன் பிறகு அவருக்கு பலஹீனம் அதிகமாகி விட்டது. மறுபடியும் என்னைக் கூப்பிட்டு உடம்பு ஸ்திதி மிகவும் மோசமாகி விட்டது. ஆதலால் ஸ்ரீ பெரியவாள் உத்தரவை எப்படியும் வாங்கி வரும்படி சொன்னார். அதன்படி நான் ஸ்ரீ பெரியவாளிடம் சென்று விக்ஞாபித்தேன். உடன் ஸ்ரீ பெரியவாள் அவர் மனைவி காலமான பிறகு பிள்ளைகளை கேழ்க்காமல் நகைகளை ஸ்ரீ காமாக்ஷிக்குக் கொடுத்தது தவறு; மேலும் அவர் பிள்ளைகள் வந்து என்னைக் கேட்டால், அதன் பிறகு ஏதாவது உத்தரவு செய்கிறேன் என்று சொன்னார்கள்.

            அதன்படி நான் சென்னை சென்று ஸ்ரீ பெரியவாள் ஆக்ஞையை சொன்னேன். அவர், உடனே தன் மூத்த பிள்ளைக்கு போன் செய்து ஸ்ரீ பெரியவாள் ஆக்ஞையை சொன்னார். மனஸ்தாபங்கள் எல்லாம் மறைந்து, பிள்ளையும் வந்து தகப்பனாரைப் பார்த்து, அவரை தன் வீட்டுக்கு அழைத்துப் போனார். அங்கு அவர் ஒரு மாத காலம் இருந்து, மாட்டுப்பெண் கொடுத்த ஆகாரத்தைச் சாப்பிட்டு, மன நிறைவுடன் காலமானார்.


அவர் காலமாகும் முன்பு ஒரு நாள் "இதுவரை ஸ்ரீ பெரியவாள் என்த உத்தரவும் செய்யாததால், சில தர்மங்களை எழுதிவைத்து இருக்கிறேன். ஸ்ரீ பெரியவாள் உத்தரவு செய்துவிட்டால், அதையே செய்ய வேண்டும்" என்று எழுதிக் காண்பித்தார்.


அவர் கார்யங்கள் முடிந்து, அவர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களோடு, நானும் ஸ்ரீ பெரியவாளிடம் வந்து எல்லா விபரத்தையும் சொன்னோம். ஸ்ரீ பெரியவாள் அவர் பிள்ளைகளிடம் அந்தப் பணத்தை மூலதனமாக வைத்து, அதில் இருந்து கிடைக்கும் வட்டியில் இருந்து, ஏழைகளுக்கு ரூ.2000/- செலவில் (ஒரு தம்பதிக்கு) பிள்ளை வீட்டார் சம்மதத்தோடு காஞ்சி ஸ்ரீ பங்காரு காமாக்ஷி அம்மன் சந்நதியில் கல்யாணம் செய்து வைக்கும்படியும், கன்னிகாதானம் யாராவது இந்த திட்டப்படி செய்தால் நாலு நாள் ஔபாசனம் செய்து வைத்து அனுப்பும்படியும், மற்றவர்களுக்கு கீழ்கண்ட லிஸ்டுபடி கல்யாணம் செய்து வைத்து, அன்று மாலையே கட்டுச்சாதக் கூடையுடன் பிரவேச ஹோமத்திற்கு அவரவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கும்படியும், இது மாதிரி செய்தால் ஏழைகளுக்கு உபகாரமாக இருக்கும் என்று சொன்னார்கள்.

உடன் அவர் பிள்ளை அப்பா வைத்த மூலதனத்துடன் மேலும் ரூ.50,000/- சேர்த்து ஒரு லட்சம் ரூபாய் நிதி ஏற்படுத்துவதாயும், மேலும் பந்துக்களிடமும் மற்ற உபகாரம் செய்யும் மனப்பான்மை உடையவர்களிடமும் சொல்லி மூலதனத்தை மேலும் அதிகரிக்க அனுக்ரஹம் செய்ய ஸ்ரீ பெரியவாளிடம் விக்ஞாபித்து, வந்தனம் செய்துகொண்டு, ஸ்ரீ பெரியவாளின் பூர்ண அனுக்ரஹத்தோடு சென்னை திரும்பினார்கள்.

"ஸ்ரீ காமாக்ஷி சித்தமல்லி வாத்யமான் விவாஹ டிரஸ்டு" என்ற பெயருடன், ஒரு லக்ஷம் மூலதனத்தில் ஆரம்பித்து, அந்த டிரஸ்டு நகலை சென்ற 11-4-82 அன்று ஸ்ரீ பெரியவாள் முன்னிலையில் சமர்ப்பித்து அவர்கள் உத்தரவு பெற்று கொள்ளப்பட்டது.

 

            கல்யாணத்திற்கு லிஸ்டு (ஒரு தம்பதிக்கு ஆகும் உத்தேச செலவினம்)

(1) திருமாங்கல்யம் 4 கிராம் அளவில்; (2) நிச்சயதார்த்த வேஷ்டி, அங்கவஸ்திரம்; (3) நிச்சயதார்த்தப்புடவை; (4) முஹூர்த்தப் புடவை, முஹூர்த்த வேஷ்டி, அங்கவஸ்திரம்; (5) குத்துவிளக்கு 1 (6) செம்பு 2; (7) பஞ்சபாத்ர உத்தரணி ஒரு செட்; (8) தாம்பாளம் 1; (9) குத்தடுக்கு 1; (10) காசியாத்ரை சாமான்கள்; (11) வைதீகச் செலவு, சாப்பாட்டு செலவு எல்லாம் சேர்ந்து ரூ.2000/- அளவில் ஒரு தம்பதிக்கு என்ற முறையில் இந்தத்திட்டம் சமர்பிக்கப்பட்டது. ஜானவாசம் இல்லாமல் நிச்சயதார்த்தம்; வரதக்ஷிணை கிடையாது, நிச்சயதார்த்த, முஹூர்த்தப் புடவைகள், நூல் புடவைகளாக இருக்கும், ஸ்ரீ காஞ்சி காமாக்ஷி அம்மன் சந்நிதியில் கல்யாணம் என்ற சிறப்பு அம்சங்களோடு இந்த விவாஹ திட்டம் நடைபெற உத்தரவாகியிருக்கிறது.

 

            மேல் கண்ட விவரங்கள் ஸ்ரீ பெரியவாள் கைங்கர்யத்தில் நெடுநாள் ஈடுபட்ட அன்பர் ஒருவர் அளித்தவை.

மேலும்...

Home Page