ஆசார்யரின் ஆசார்ய பக்தி
ர.வேங்கடரத்தினம்
ஆதிசங்கர பகவத்பாதர்கள் ஆசார்யருள் முதல் இடம் வகிக்கும் நம் ஆதி ஆசான் ஆவார். நம் பழம் பேர் இலக்கிய மூன்றினுக்கும்- உபநிஷத், பகவத் கீதை, ப்ரஹ்ம சூத்ரம் எனும் ப்ரஸ்த்தான த்ரயத்திற்கு விளக்கங்கள் அருளிய பாஷ்யகாரர் அவர். தத்வ விளக்கம் செய்வதற்காகவே அவதரித்த அம்மஹான், தாம் ஏதோ சாதாரண மனிதர் என்னுமாப்போலே, குரு ஒருவரை நாடிச் சென்று, அவரிடம் யாவும் பயின்று, பின்னர் உலகினுக்கு உபதேசம் செய்யத் தலைப்பட்டார் என சங்கர விஜயங்கள் விரித்துரைக்கும். இது ஏதோ உலகிற்கு வழி காட்டுதற்காக, மேலுக்காகச் செய்த ஒரு சம்பிரதாயம் எனத் தப்பித் தவறி எவரும் நினைத்து விடலாகாது. ஆதி சங்கரர் எவ்வளவு உள்ளன்போடு, உணர்ச்சி பூர்வகமாகத் தம் ஆசானைக் கொண்டாடுகிறார் என்பதை நாம் இங்கே காணலாம்.
ஸர்வ வேதாந்த ஸித்தாந்த ஸார ஸங்க்ரஹம்’ என்பது பகவத்பாதர்களின் விரிவான ப்ரகரண க்ரந்தங்களுள் ஒன்று. அதன் எடுப்பு ஆசான் வணக்கத்தில் அமைந்தது.
அகண்டானந்த ஸம்போதோ வந்தநாத்யஸ்ய ஜாயதேII
கோவிந்தம் தமஹம் வந்தே சிதானந்த தநும் குரும் II
இங்கு ஆசார்யர் தம் குருவுக்கு அஞ்சலி செலுத்துகிறார். ஆம், அவருடைய ஆசானின் திருநாமம் கோவிந்த பாதர் என்பதாம். எனவே சங்கரர் வாய் இனிக்க அந்தத் திவ்ய திருப் பெயரைக் கூறிக் கூறி வந்தனம் செய்வார். இந்த ச்லோகத்தில் குரு தம் குருவின் பெருமையைப் பகர்கிறார். எவரை வணங்கினால், குறைவிலாப் பேரானந்தம் கிட்டுமோ, அவர் தாம் ஆசார்யர்; அகண்ட, ஆனந்த, ஸம்போத: என்ற சொற்றொடர் குறைவிலா, ஆனந்த, நிறை ஞான வடிவம் என்று ஆசிரியப் பெருந்தகையைப் போற்றுகிறது. அவர் ’சித் ஆனந்த தனு’ என்பதில் மேலும் விளக்கம் பெறுகிறார். அத்தகைய கோவிந்தரை வணங்கித் தம் நூலைத் தொடங்குகிறார்.
விவேக சூடாமணி க்ரந்தமும் இவ்வாறே கோவிந்த வந்தனத்துடன் விரிகிறது. முதல் ச்லோகம் வருமாறு:
ஸர்வ வேதாந்த ஸித்தாந்த கோசரம் தமகோசரம் I
கோவிந்தம் பரமானந்தம் ஸத்குரும் ப்ரணதோ ஸ்ம்யஹம் II
‘பரம ஆனந்த வடிவம் ஆகிய ஸத்குரு கோவிந்தரை நான் வணங்குகிறேன்’' என்பது இரண்டாம் அடி. முதல் அடியோ ஆசிரியரை இறைவன் என்றே பேசுகிறது. அனைத்து வேதாந்த ஸித்தாந்தங்களிலும் உறைபவர் கடவுள். அவற்றின் மூலமே அவரை அடைதலாகும். அத்தகைய, அடைதற்கொண்ணாத ஆசானை வணங்குகிறார், இங்கே மெய்ச்சீடர் ஆகிய சங்கரர்.
நல்லாசான் ஒருவரை அணுகிப் பயிலவேண்டும். அப்போது தான் வீடுபேறு கிட்டும் என்பது சங்கரர் அடுத்தாற்போல் வழங்கும் யோசனையாகும். விவேக சூடாமணி நூலில் இது எட்டாவது ச்லோகம். மேலோர் சான்றோர் ஆகிய ஆசிரியரைச் சென்றடைந்து, பாடம் கேட்க வேண்டும் என்பது இந்த ச்லோகம்.
அதோ விமுக்த்யை ப்ரயதேத வித்வான்
ஸன்யஸ்த பரஹ்யார்த்த ஸுகஸ்ப்ருஹ:ஸன் IIII
ஸன்தம் மஹான்தம் ஸமுபேத்ய தேஸிகம்
தேனோபதிஷ்டார்த்தம் ஸமாஹிதாத்மா II
மிக உயரிய ஆசானை அடைந்து, அவர் விளக்கித் தரும் விஷயத்தினுள் ஆத்மார்த்தமாக ஒன்றி நின்று, முக்தி பெற முயலுதல் வேண்டும். வித்வான் இவ்வாறு செய்வான். வெளியுலக இன்பங்களில் விழைதலைத் தவிர்த்து, ஆசிரியர் கூறும் கருத்தில் உள்ளத்தைச் செலுத்தி, வீடுபேற்றினுக்கு உழைத்தாக வேண்டும். இங்கு, ஆசிரியரைத் தேசிகம் என்ற சொல் குறிப்பிடுகிறது. அவரை ஸன்தம், மஹான்தம் என்ற இரு விழுமிய அடைமொழிகள் ஏத்திப் பேசுகின்றன.
நல்லாசிரியர் எவரும் சீடனை நட்டாற்றில் விட்டு விட மாட்டார்கள். சரண் புகுந்த சிஷ்யனை உவந்தேற்று அன்போடு அவனை நோக்கி, அபயம் கூறி ஆட்கொள்வர் அவ்வாசிரியர். இவ்வாறு கூறுவதும் விவேக சூடாமணி ச்லோகம் தான்.
ததா வதன்தம் ஸரணாகதம் ஸ்வம்
ஸம்ஸார தாவானல தாப தப்தம் II
நிரீக்ஷ்ய காருண்ய ஸார்த்ர த்ருஷ்ட்யா
தத்யாதபீதிம் ஸஹஸா மஹாத்மா II
இது 43ம் ச்லோகம். பார்க்கப் போனால், இது வரையில் சீடனின் கடமையை எடுத்து இயம்பிய ஜகத்குரு இங்கு ஆசார்யரின் பணியைப் பகர்கிறார் எனலாம். முந்திய அடிகளில் சீடன் ஆசான் அடி பணிந்து, உலகியல் கடலில் சிக்குண்டு தவிக்கும் தனக்குப் புகலிடம் கோருவான். இவ்வாறு கூறிச் சரண் புகுந்த சீடனை உடனே கருணையினால் நனைந்த பார்வையோடு நோக்கி அபயம் தந்தருள்வார் அம்மஹாத்மா. வீணில் தவிக்கவிட்டு பார்த்துக் கொண்டிருக்கக் கூடியவர்கள் அல்லர் மகா புருஷர்கள். எனவே அவர்கள் ஒரு போதும் கைவிட மாட்டார்கள்.
சீடனுக்கு தான் வேண்டும் ஈடுபாடு, நாட்டம் என்றும் சொல்லலாம். நாடி நிற்பது நாட்டம். இதை சிரத்தை என்று கூறுவர்.
’ஆமாம், சிரத்தை என்றால் என்ன என்று கேட்கிறீர்களா?’. இதற்கு பகவத்பாதர்கள் ஒரே அடியில் விளக்கம் தரும் இடம் ஒன்று உண்டு. அபரோக்ஷானுபூதி நூலின் எட்டாம் ச்லோகத்தின் ஒரு பாதியைப் பார்த்தால் போதும்.
நிகமா சார்யவாக்யேஷ பக்தி: ஸ்ரத்தேதி விஸ்ருதா I
மறைமொழிகளிலும் ஆசிரியர் வாக்கிலும் நம்பிக்கை கொண்டிருத்தலே சிரத்தை எனப்படும். நிகமம் என்பது வேத, உபநிஷத்துகளைக் குறிப்பிடும். வேத வாக்காக, ஆசார்ய ஆக்ஞையையும் சிரமேற்கொண்டு ஒழுகவேண்டும். பக்திவேண்டும். குருவின் இடத்தில் இதற்குப் பெயர் தான் சிரத்தை. வேதம், வேதாந்தம் போதிக்கும் ஆசார்யரிடம் பக்தி வேண்டும் என்றும் பொருள் கொள்ளலாம். வெறும் உலகியல் பாடங்களைப் புகட்டும் ஆசிரியர்கள்பால் கவனம் செலுத்தினால் போதும். அறிவுக்கெல்லாம் அப்பாற்பட்ட ஆத்ம வித்தையைப் போதிக்கும் ஆசிரியரிடமோ பக்தியே இருந்தாக வேண்டும்.
பஜகோவிந்தம் எனும் மோஹமுத்கர நூலின் இறுதி உபதேசமே இந்த குருசரண பக்தி தான் எனலாம். இதயத்துள் இறைவனைத் தரிசிப்பதற்கான உபாயம் இந்த குருபக்தியே என ஆதிசங்கரர் முடிக்கும் ச்லோகம் வருமாறு:
குருசரணாம்புஜ நிர்பர பக்த:
ஸம்ஸாராதசிராத் பவ முக்த: I
ஸேந்த்ரிய மானஸ நியமாதேவம்
த்ரக்ஷயஸி நிஜ ஹ்ருதயஸ்தம் தேவம் II
நல்லாசிரியனின் திருவடித் தாமரைகளை நம்பி, ஒழுகி வா; விரைவில் உலகியல் தளைகளினின்று விடுபெறுவாய். இவ்வண்ணம் இந்திரியங்கள், மனம் எல்லாம் அடக்கி, உன் இதயத்தில் ஏற்கெனவேயே உள்ள பரம்பொருளைக் கண்டு கொள்வாயாக!- என்று பஜகோவிந்தம் கூறி, நிறைவு பெறுகிறது.
இதயத்தில் என்றுமே கோயில் கொண்டுள்ள ஈசனை நாம் காண்பதற்கு வழி செய்பவர் ஆசார்யர் ஆவார். அவரிடம் பக்தி செலுத்தி, முற்றும் நம்பிக்கை வைத்து, வீடு பேறு எட்டலாம். குருவைக் கும்பிட்டு வணங்கும் அழகிய ச்லோகம் ஒன்று விவேக சூடாமணியில் வருகிறது. (ச்லோக எண்ணிக்கை 487):
நமோ நமஸ்தே குரவே மஹாத்மனே
விமுக்தஸங்காய ஸதுத்தமாய I
நித்யாத்வயானந்த ரஸஸ்வரூபிணே
பூம்னே ஸதாபாரதயாம்புதாம்னே II
இங்கு நித்தம் கரையிலா கருணைக் கடலாக உள்ள ஆசானுக்கு அஞ்சலி செலுத்தியாகிறது. என்றும், ஈடு இணையிலாப் பேரானந்தச் சுவை வடிவினராக உள்ள ஆசிரியருக்கு வணக்கம்; பற்றொழித்த பரம், உத்தம ஆசார்ய மஹாபுருஷருக்கு வந்தனம்.
இந்த ச்லோகத்தையே நாமும் சொல்லி, நம் ஆதி ஆசார்யருக்கும் அவர்கள் பரம்பரை பீடத்தில் அலங்கரிக்கும் காஞ்சி ஜகத்குரு ஆசார்யருக்கும் வந்தனம் செலுத்துவோம்! |