ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், காஞ்சிபுரம்
தமிழ் இணைய தளம்


ஸ்ரீ காமகோடி ப்ரதீபம்
மலர் -22 இதழ் -5,6 ரௌத்ர வருஷம் ஆனி ஆடி
ஜுன்-ஜுலை - 1981


தாயிற்சிறந்த தயாபரன்


"பால் நினைந்தூட்டுந் தாயினுஞ் சாலப்பரிந்து நீ பாவியே

னுடைய ஊனினையுருக்கி, உள்ளொளி பெருக்கி உவப்பிலா

ஆனந்தமாய தேனினைச் சொரிந்து புறம் புறந்திரிந்த

செல்வமே சிவபெருமானே யானுனைத் தொடர்ந்து

சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந்தருளுவதினியே."

 

-மாணிக்கவாசகர்

 

’அழுத பிள்ளை பால்குடிக்கும்’ என்பார்கள். குழந்தை அழுதாலன்றி அதற்குப் பசியில்லை என்று கருதுபவள் ஈன்ற அன்னை. குழந்தை அழுகுரலைக் கேட்டதும் தம் தொழிலினை விட்டு ஓடிவந்து பால் ஊட்டுவாள். ஹே ஈசா! நீ அத்தாயினும் சிறந்த தயாபரன். நான் என் குறை இது என உணர்ந்து அழத்தெரியாதவன். என் குறையை நன்குணர்ந்து சமயமறிந்து பால் ஊட்டுகிறாய். உலக அன்னை சிலசமயம் குறைவாகவும், சிலசமயம் அதிகமாகவும் பால் ஊட்டி விடுவாள். அதனால் உடல் நோயுரும். ஆனால் நீயோ வேண்டியபோது வேண்டிய அளவுக்கு ஞானப்பாலை ஊட்டுகிறாய். ஆகவே நீ பால் நினைந்தூட்டும் தாயினும் சாலச் சிறந்தவன்.

தவங்கிடந்து பத்து மாதம் சுமந்து பெற்ற தாய் தன் மகன் சிறு குழந்தையாக இருக்குங்கால் அதை சீராட்டி, பாராட்டி வளர்ப்பாள். அக்குழந்தை பெரியவனாகி தீமை பல புரிந்து பெரியோரால் இகழப் பெருவானேயானால் தன் அன்பை மறந்து ’ஐயோ இப்பாவி மகனைப் பெற்றேனே’ என்று மனம் புழுங்குவாள். வெறுப்பாள். ஆனால் ஈசா! எல்லையில்லா உன் அருட்பெருங் கருணையை மறந்து, விலங்கு போல் இந்திரிய சுகமே பெரிதென மதித்து நாயினும் கடையாய்க் கிடந்த பாவியேனுக்கு நீ தாயிற்சிறந்த தயாபரனாக விளங்குகிறாய். ஈன்ற தாய் குழந்தையின் உடலை வளர்க்க பால் ஊட்டுகிறாள். உடல் இளைத்தால், கவலைக் கொள்கிறாள். ஊண் பெருக, உயிர் ஒளி சுருங்குகிறது. உயிர் ஒளி சுருங்கினால் பாபத்திற்குத்தான் ஆளாகவேண்டும். ஆனால் நீ பரிவுடன் நினைந்து ஊட்டியபால் ஞானப்பால். அது ஊணினை வளர்க்காது. ஆக ஊண் சுருங்க உள்ளொளி பெருகும். ஈன்ற தாயின் பாலை உண்ட குழந்தை சந்தோஷமாக விளையாடுகிறது. பால் ஜீரணமானவுடன், மறுபடியும் அழுகிறது. குழந்தையின் வயிறு மந்தமாக இருந்தால் தாயின்பால் தேவைபடுவதில்லை. மேலும் குழந்தையின் வாய் பட்டாலன்றி தாய்க்கு பால் சொரிவதில்லை. தாயின் பால் குழந்தைக்கு நீடித்த இன்பமளிப்பதில்லை. அதிகப்படுமாயின் கேட்டினை விளைவிக்கும். தாயின் தயவை எதிர்பார்த்து இருக்க வேண்டியிருக்கிறது. ஆனால் ஈசா, உனது ஞானப்பால் நீடித்த ஆனந்தத்தைத் தருவது. பருக பருகத் தெவிட்டாதது. பிறரை எதிர்பாராமல் தனது இயற்கையான அருளால் "உவப்பிலா ஆனந்தமாய் தேனினைச் (ஞானப்பாலை) சொரிபவனல்லவா?"

ஈன்ற தாய் தான் எங்கு சென்றாலும் தன் குழந்தையையும் எடுத்துச் செல்வாள். மிக அவசரமான கார்யங்களில் குழந்தையை விட்டுச் செல்வதும் உண்டு. ஆனால் ஹே ஈசா! நீ இத்தாயைப் போலல்ல. நான் எங்கு சென்றாலும், எங்கு திரிந்தாலும் அங்கங்கெல்லாம் என்னை விட்டு விலகாது, எனக்குத் தோன்றாத் துணையாய் நின்று, உணவூட்டிக் காப்பாற்றினாய். நான் உலகிலே நிலையற்ற உண்டி, உடை, பொருள், மனை ஆகிய செல்வத்தை நாடித் திரிந்த சமயம், நீ எனக்கு ஞானப்பாலை ஊட்டினாய். அதன் பயனாய் உனது இயல்பை நான் கண்டுகொண்டேன். இனி நீயே எனக்கு என்றுமழியாப் பெருஞ்செல்வம்.

 

நீ ஆரம்பத்தில் என்னைத் தொடர்ந்தாய். நான் சென்ற இடமெல்லாம் நீயும் திரிந்தாய். எனது சிந்தையைத் தெளிவித்தாய், என்னை சிவமாக்கிவிட்டாய். ஆனால் இப்பொழுதோ நிலைமை மாறிவிட்டது. நான் உன்னைத் தொடரும் நாள் வந்துவிட்டது. முதலில் உன்னைக் கண்டபோது நான் உன்னைப் பிடிக்கத் தவறிவிட்டேன். இதனால் பெரிதும் துன்புற்றேன். நீயாக வந்து என்னை ஆட்கொண்ட பொழுதும், நான் உன் வலையில் விழாமல் தப்பித்துக் கொண்டேன். ஆனால் உன்னை விடமாட்டேன். உன்னைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்.

 

தானே வந்து எனது உள்ளம் புகுந்து எனக்கு அருள் செய்த நீ, இப்பொழுது எழுந்தருளப் போகிறாய்? பக்தி வலையிற் படுவோனாகிய நீ, நான் உன்னை சிக்கெனப் பிடித்தபின் எங்கெழுந்தருளக்கூடும்? நினைப்பவரது நெஞ்சையே கோயிலாகக் கொண்டவன் நீ. உன்னைப் பிடிப்பதிலுள்ள அருமையை நன்கறிந்தவன் நான். உன்னை இனி எழுந்தருள விடுவேனா? உனக்குரிய என் மனத்தே அமர்ந்தருளுக!

மேலும்...

Home Page