ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், காஞ்சிபுரம்
தமிழ் இணைய தளம்


ஸ்ரீ காமகோடி ப்ரதீபம்
மலர்: 10    கீலக வருஷம் மாசி மாதம் 12-2-1969   இதழ் :1


ஸத்ய ப்ரதிஜ்ஞை

பாரத நாட்டில் தொன்றுதொட்டு ‘ஸத்ய ப்ரதிஜ்ஞை‘ என்பதை ஓர் சிறந்த தர்மமாகத் தீர்மானித்துப் போற்றி வந்துள்ளார்கள். வேதங்களிலும், இதிஹாஸபுராணங்களிலும், நம்முடைய மதக்கிரந்தங்களிலும் ஸத்ய ப்ரதிஜ்ஞை செய்தவர்கள் மிக உருக்கமாகவும் அழகாகவும் போற்றிக் கொண்டாடப் பெற்றுள்ளனர்.
‘ஸத்யம்’ என்ற சொல் கடவுளையே குறிக்கும். மூன்று காலங்களிலும் உண்மையாக நிற்கும் பொருளை ஸத்யம் என்று நம் நூல்களில் வழங்கியிருக்கிறார்கள். மூன்று உலகங்களும் ஸத்தியத்துக்குக் கட்டுப்பட்டு நிற்கின்றன. நாள்தோறும் சூரியன் தவறாமல் உதிப்பதும் அஸ்தமிப்பதும் ஸத்யத்துக்கு உட்பட்டுத்தான். ஸத்யத்தைத் தாங்கித் தான் சமுத்திரம் நிற்கிறது. பிரம்மாண்டத்தில் கோளங்கள் ஒழுங்காகச் சுற்றி வந்துகொண்டிருப்பதும் சத்தியமாகிற சட்டத்துக்கு உட்பட்டுத் தான். ஒரு கோளத்துக்கும் மற்றொரு கோளத்துக்கும் உள்ள இடைவெளி குறையாமல் அவை அவை சுற்றி வரும் ஒழுங்கிலேயே இயங்கி வருகின்றன என்பதை விஞ்ஞான சாஸ்திரமும் தெரிவிக்கிறது. வசந்தம் முதலான ருதுக்களும் அந்த அந்தக் காலங்களில் தவறாமல் மாறிவருவதையும் பார்க்கிறோம்.
பீஷாஸ்மாத் வாத: பவதே || பீஷோதேதி ஸீர்ய : || பீஷாஸ்மா தக்நிஸ் சேந்த்ரஸ்ச | ம்ருத்யுர் தாவதி பஞ்சம இதி |
‘கடவுளுக்குப் பயந்தே காற்று வீசுகிறது: சூரியன் உதிக்கிறான்: சந்திரன் அக்கினி முதலியவர்களும் அவ்விதமே‘ என்று தைத்திரீய உபநிஷத்து, ஸத்யமாகிற கடவுளின் பெருமையைப் போற்றுகிறது இந்த ஸத்ய ப்ரதிஜ்ஞையுடன் உள்ள பஞ்சபூதங்கள், கோளங்கள் முதலியவற்றின் நடவடிக்கைகளைக் குறிப்பிட ரிதம் என்ற சொல் வேதத்தில் வழங்குகிறது. ஸத்யம் என்ற சொல், ஒருவனின் நடவடிக்கை சம்பந்தப்பட்டதைக் குறிக்கும். ரிதம் என்பது, உலக அமைப்பிலேயே உள்ள உண்மையைக் குறிக்கிறது. இப்படி இரண்டு சொற்களும் வேதத்தில் வழங்குவதைப் பார்க்கிறோம்.
பூமி முதலான கோளங்களும் வாயு முதலான பூதங்களும் எப்படி ஸத்யத்தை அவலம்பித்துச் செவ்வனே நடக்கின்றனவோ அதுபோலவே ஜீவராசிகளும் சத்தியத்தைக் கடைப்பிடித்துத் தங்களுடைய நடவடிக்கைகளைக் காக்க  வேண்டும் என்றும், இதுவே சிறந்த தர்மம் என்றும் பாரதப் பண்பாடு உபதேசிக்கிறது. பல பெரியோர்கள் தங்கள் வாழ்க்கையில் இந்தத் தர்மத்தை அநுஷ்டித்துக் காட்டியதை இதிஹாஸ புராணங்கள் தெரிவிக்கின்றன. இவ்விதப் பெரியோர்களில் தலைசிறந்தவர் மகாபாரதம் வாயிலாகப் பிரசித்தமாக அறியப்பெற்ற பீஷ்மர் ஆவர். ஸத்யப் பிரதிஜ்ஞை செய்து தம் வாழ்க்கையில் அதை நன்கு அநுஷ்டித்துக் காட்டியதனாலேயே தேவர்கள் இவரைப் பீஷ்மர் என்று பெயரிட்டுக் கூப்பிட்டனர். உலகமும் அவர்களைப் பின்பற்றி இவரைப் பீஷ்மர் என்றே அழைக்கலாயிற்று.
பீஷ்மரின் தந்தையான சந்தனு மன்னன் ஸத்யவதி என்ற தாசகன்னிகையினிடம் காதல் கொண்டு அவளை மணக்க விரும்பினான். இந்த விருப்பத்துக்குத் தடையாக, தாசனின் கருத்து ஏற்பட்டது. அதாவது, “ஸத்யவதியின் சந்ததிதான் சந்தனுவுக்குப் பிறகு ராஜ்யத்தை அடைய வேண்டும்” என்று ஸத்யவதியின் தந்தை கூறலானான். மேலும், தேவவ்ரதன் அதாவது பீஷ்மர் ராஜ்யத்திலிருந்து விலகிக் கொள்வதுடன், அவர் சந்ததி அற்றவராகவும் ஆகவேண்டும் என்ற தன் அவாவைத் தெரிவிதான். இந்த விருப்பம் நிறைவேறினாலன்றித் தன் பெண்ணைச் சந்தனுவுக்கு மணம் செய்விக்க முடியாது என்று கூறிவிட்டான்.
பிதாவினிடம் பெரிதும் பக்தி கொண்டிருந்த தேவவ்ரதர் (பீஷ்மர்), தாசன் கோரியது போலவே செய்து, பிதாவின் ஆசையை நிறைவேற்றுவதற்காக, மிகவும் பயங்கரமானதும், மற்றவர்களால் இயலாததுமான ஸத்ய ப்ரதிஜ்ஞையைச் செய்தார். ராஜ்யத்தை விட்டதுமல்லாமல், “வாழ்நாள் முழுவதும் பிரம்மசரியத்தை அநுஷ்டித்து ஊர்த்வரேதஸ்கனாகவே இருப்பேன். இது ஸத்யம்” என்று பிரதிக்கினை செய்தார்.
இதம் வசநமாதத்ஸ்வ ஸத்யேந மம ஜல்பத: |
ஸ்ருண்வதாம் பூமிபாலாநாம் யத் ப்ரவீமி பிது: க்ருதே ||
ராஜ்யம் தாவத் பூர்வமேவ மயா த்யக்தம் நராதிபா: |
அபத்யஹேதோரபி ச கரிஷ்யேத்ய விநிஸ்சயம் ||
தேவவ்ரதர் இந்த ப்ரதிஜ்ஞையைச் செய்தவுடனே தேவர்கள் பூமாரி பொழிந்தனர். ‘இவர் பயங்கரமானவர் (பீஷ்மர்)’ என்றனர் தேவர்கள்.
இந்த ப்ரதிஜ்ஞையைப் பரீக்ஷிப்பது போல இவருடைய வாழ்க்கையில் மற்றொரு சம்பவம் ஏற்பட்டது. சத்தியவதியின் குமாரனான விசித்திரவீர்யன் க்ஷயரோகத்தினால் சிறுவயதிலேயே இறந்துவிட்டான். ராஜ்யத்தைப் பரிபாலிக்க அரசன் வேண்டுமே‘ என்று கவலை கொண்ட சத்தியவதி, பீஷ்மர் பிரம்மசரியப் பிரதிக்னையைச் செய்திருந்தாலும், ஆபத் தர்மத்தைக் கொண்டு அந்தப் பிரதிக்கினையைத் தளர்த்திச் சந்ததியை உண்டுபண்ண வேண்டும் என்று பீஷ்மரை வேண்டினாள். அப்போது பீஷ்மர், “நான் ஒரு தடவை செய்த ஸத்ய ப்ரதிஜ்ஞையை எக்காலத்திலும் எக்காரணம் பற்றியும் கைவிடமாட்டேன்” என்று தீர்மானமாகத் தெரிவிக்கிறார்.
பரித்யஜேயம் த்ரைலோக்யம் ராஜ்யம் தேவேஷுவா புந: |
யத்வாப்ய திகமேதாப்யாம் நது ஸத்யம் கதஞ்சந ||
“உலகில் சந்திர சூரியர்களும் ஜலம், வாயு முதலியவையும் தம்  இயற்கையான ஸ்பாவங்களை விட்டாலும் விடலாம். ஆனால் நான் ஒரு போதும் பிரதிக்கினையிலிருந்து நமுவமாட்டேன்” என்று பீஷ்மர் மறுபடி கூறுகிறார்.
த்யஜேச்ச ப்ருதிவீ கந்தம், ஆபஸ்ச ரஸமாத்மந: |
ஜ்யோதிஸ் ததா த்யஜேத் ரூபம், வாயு: ஸ்பர்ஷகுணம் த்யஜேத் ||
ப்ரபாம் ஸமுத்ஸ்ருஜேதர்க்க:, தூமகேதுஸ் த்தோஷ்மதாம் |
த்யஜேத் ஸப்தம் ததாகாஷ:, ஸோம: சீ தாம் த்யஜேத்|
ந த்வஹம் ஸத்யமுத்ஸ்ரஷ்டும் வ்யவஸேயம் கதஞ்ச ந ||
மனித வாழ்க்கையில் கொள்ளும் ஸத்ய தர்மத்தையும், உலகம் முழுவதும் உள்ள ரிதம் என்ற உண்மையையும் பீஷ்மர் இங்கே ஒன்று படுத்திப் பேசுகிறார்.

‘உலகத்தை ஆளும் ரிதம், மனித வாழ்க்கையில் ஸத்ய ப்ரதிஜ்ஞையாகப் பிரகாசிக்கிறது’ என்ற உண்மையை, ஹநுமான் ஸீதையை இலங்கையில் தரிசித்துவிட்டு, திரும்ப ராமனைத் தரிசித்தபோது கூறுகிறார். இலங்கையில் இருப்பினும் ஸீதையின் கற்பு மிகவும் பரிசுத்தமானது என்ற பாதிவ்ரத்ய ஸத்யத்தையும் உலகில் வியாபித்துள்ள ரிதத்தினுடைய உண்மையையும் ஹநுமான் ஒன்றுபடுத்தித் தெரிவிப்பதாகக் கம்பர் கூறுகிறார்.

Home Page