ஜகத்குரு ஸ்ரீ காஞ்சி பரமசார்யார்கள் அருள் வாக்கு
தஞ்சாவூர் ராஜ்யத்தில் ஏறக்குறைய நானூறு வருஷங்களுக்கு முன் நாயகர் வமிசத்தில் ரகுநாதன் என்னும் ஓர் அரசன் ஆண்டு வந்தான். அவன் காலத்தில் ஏற்பட்ட பழைய காவியம் ஒன்றை நான் பார்க்க நேர்ந்தது. அதை எழுதியவர் பெரிய சிவபக்தர். அவர் சொல்லியுள்ள ஈச்வரத ஸ்தோத்திரத்தில் சுலோகம் இரண்டை சொல்லுகிறேன்.
"நமக்கு தர்மம் கிடைக்க வேண்டுமானால், பண்ணிய கர்மாக்கள் பூர்ணமாக வேண்டுமானால், பகவானுடைய கிருபை அவசியம் தேவை என்பதை "அக்ஞாத ப்ரபவைர்வ சோபி" என்று ஆரம்பிக்கும் "யக்ஞநராயண தீக்ஷிதரால்" செய்யப்பட்ட ஸாயித்யரத்னாகரத்தில் உள்ள சுலோகம் கூறுகிறது. எங்கிருந்து உண்டாயிற்றென்று தெரியாத தன்மையுடைய வேதங்கள் தர்மத்தை தெரிவிக்கக் காரணமாக இருக்கின்றன. அவை அநேகவிதமான யஜ்ஞங்களைப் பண்ணு என்று ஆஜ்ஞை செய்கின்றன. அந்த யஜ்ஞகர்மாக்களுக்கு அதிபதி நீதான். யஜ்ஞேசுவரன் நீ. உன்னை ஆராதிக்காமல் எந்தக்கர்மாவின் பலனையும் ஒருவன் அடைய முடியாது என்று இதில் சொல்லப்பட்டிருக்கிறது.
ஆவோ ராஜான மத்வரஸ்ய ருத்ரம் ஹோதாரம் |
என்று வேதம் சொல்லுகிறது. எப்படிப்பட்ட கெட்டிக்காரனாக இருந்தாலும் பரமேச்வர ஆராதனமில்லாமல் அவனுக்கு எந்தக் காரியமும் பூர்த்தியாகாது. இதற்குத் தக்ஷனே சாக்ஷி. இந்த ச்லோகத்துக்கு முந்தின ஸ்லோகம் :
ஆதெள பாணிரநிநாதமதாக்ஷ, ஸமாம்னாயோபதேசேன ய:
சப்தானாமனுசாஸனான்ய கலய: சாஸ்த்ரேணேஸூதார்த்மனா |
பாஷ்யம் தஸ்ய ச பாதஹம்ஸகர வை: ப்ரெளடாசயம் தம் குரும்
சப்தார்த்த ப்ரதிபத்தி ஹேதுமநிசம் சந்த்ராவதம்ஸம் பஜே ||
[ஸாஹித்யரத்னாகரகாவியம்: XI-124XI]
’அக்ஷர ஸமாம்னாயம்’ என்பது வியாகரணத்திற்குப் பெயர். அக்ஷரங்களுக்கு வேதம் என்பது பெயர். ஈச்வரனுடைய மூச்சுக் காற்று வேதம். அவருடைய கைக்காற்று அக்ஷர வேதம். அதாவது மாஹேச்வர ஸூத்ரம், "பாணினிநாதத:" என்பதற்க்குப் பாணி (கை)களால் சப்தம் பண்ணினாய் என்றும், பாணினிக்குச் சப்தம் ஏற்பட்டது என்றும் இரண்டு அர்த்தங்கள் உண்டாகின்றன. அதாவது கையிலிருந்து உண்டான சப்தத்தை வைத்துக்கொண்டு பாணினி வியாகரணம் பண்ணினார் என்னும் கருத்து இதில் குறிக்கப்படுகிறது.
’நீ கையாட்டியதால் ஸூத்திரங்கள் ஏற்பட்டன. காலையாட்டியதால் பாஷ்யத்தை உண்டுபண்ணினாய்’ என்று ச்லோகம் சொல்லுகிறது. வியாகரண பாஷ்யத்தைச் செய்த பதஞ்ஜலி ஆதிசேஷாவதாரம், அந்த ஆதிசேஷன் பரமேச்வரன் காலில் பாதஸரமாக இருக்கிறார். இதை நினைத்துத்தான் காலாட்டிப் பாஷ்யத்தை உண்டுபண்ணினார் என்று கவி சொன்னார். சப்தமும் அர்த்தமும் உன்னால் ஏற்பட்டது என்று அவர் முடிக்கிறார். |