யாக்ஞவல்கிய மஹரிஷி
எஸ்.க்ருஷ்ணஸ்வா
(பவன்ஸ் ஜர்னலில் பிரசுரமானதின் தமிழாக்கம்)
மிதிலாபுரியில் குறித்த தினத்தில் பிரம்மஞானிகளின் சபை ஒன்று நடை பெறும் என்றும், அவர்களுள் தலை சிறந்த பிரம்மஞானிக்கு ஆயிரம் பசுக்களும் பொற்காசுகளும் வழங்கப்பெறும் என்றும் ஜனகர் பிரகடனம் செய்தார். தலை சிறந்த பிரம்மஞானி ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவரைத் தமக்குக் குருவாகக் கொள்ள வேண்டும் என்பதே ஜனகரின் நோக்கம்.
குறித்த தினத்தில் பெரிய ஸதஸில் கூடியிருந்தவைகளைப் பார்த்து ஜனகர், "இங்கே தலைசிறந்த பிரம்மஞனி எவரோ அவர் ஆயிரம் பசுக்களையும் பொற்காசுகளோடு எடுத்துச் செல்லலாம்" என்று தெரிவித்தார்.
ஆனால் ஒருவர்கூடத் தம்மைத் தலைசிறந்த பிரம்மஞானி என்று சொல்லிக் கொண்டு முன் வராததால் யாக்ஞவல்கியர் எழுந்தார். தம் சிஷ்யர்களை அழைத்து ஆயிரம் பசுக்களைப் பொற்காசுகளோடு தம் ஆசிரமத்துக்கு ஒட்டிக் கொண்டு போகச் சொன்னார்.
அப்போது ராஜாவின் மெய்க்காவலாளர் ஒருவர் குறுக்கிக்ட்டு, அவரைத்தடுத்தார். "எப்படித் தாங்கள் தலைசிறந்த பிரம்மஞானி என்று நினைத்துக் கொள்ளலாம்? ஆயிரம் பசுக்களையும் எதேச்சையாக எப்படி ஓட்டிச் செல்லலாம்" என்று கேட்டார்.
யாக்ஞவல்கியர் சொன்னார்: "எந்த ஒரு பிரம்மஞானியும் தன்னைப் பிரம்மஞானி என்று சொல்லிக்கொள்ள மாட்டார். நான் பிரம்மஞானியோ இல்லையோ, எனக்கு பசுக்கள் தேவை; அதனால் ஓட்டிச் செல்லுகிறேன்."
அதைக் கேட்ட மற்றச் சபையோரெல்லாம் திரண்டார்கள். நெருடான கேள்விகளை எழுப்பி யாக்ஞவல்கியரின் ஞானத்தை சோதித்தார்கள். அத்தனைக்கும் அவர் தக்க பதில் அளித்தார்.
கார்க்கி போன்ற மஹரிஷிகளெல்லாம் யாக்ஞவல்கியரைத் தலைசிறந்த பிரம்மஞானி என்று ஒப்புக் கொண்டார்கள். ஆனால் ஆணவம் மிக்க ஸாகல்யர் அதை ஒப்புக்கொள்ளாமல் யக்ஞவல்கியரோடு வீண் வாதங்கள் செய்தார். ஆத்திரமடைந்த யாக்ஞவல்கியர் ஸாகல்யரைச் சில கேள்விகள் கேட்பதாகச் சொன்னார். ஸாகல்யர் அவற்றுக்கு பதில் சொல்லத் தவறினால் அவரது தலை வெடித்து விடும் என்று அறை கூவினார். சற்று நேரத்துக்குள்ளே யாக்ஞவல்கியரின் கேள்விகளுக்குப் பதிலளிக்க இயலாத ஸாகல்யரின் தலை வெடித்துவிட்டது. தம்முடைய தவ மஹிமையால் ஸாகல்யரை மீண்டும் உயிர்ப்பித்தார் யாக்ஞவல்கியர்.
ஜனக மஹாராஜாவும் இதர விற்பன்னர்களும் யாக்ஞவல்கியரை பிரம்மரிஷி சக்கரவர்த்தி என்று விருதளித்துக் கௌரவித்தார்கள். பிறகு அந்த மஹாசபை கலைந்தது.
யாக்ஞவல்கியரின் பிரம்மஞானத்தைக் குறித்து ஜனகர் பெரிதும் வியர்ந்தார். ஆனால் அந்த ரிஷிபுங்கவரின் முன்கோபம், பசுக்களின் பேரிலும் பொன்னிலும் அவருக்கிருந்த பேராசை ஆகியவை காரணமாக அவருடைய உண்மையான யோக்கியதையை ஜனகரால் எடைபோட முடியவில்லை. தவிர யாக்ஞவல்கியர் தம்முடையய ஸ்ம்ருதியில் அஹிம்சை, பொய்யாமை, பொருளாசை, இன்மை, தூய்மை, புலனடக்கம், ஈகை, தயை, எளிமை, தன்னடக்கம், பொறுமை இவையெல்லாம் மேலான வாழ்க்கைக்கு மிக அவசியம் என்று எழுதியிருக்கிறார்.
தொடர்ந்து, பகவான் ஸ்ரீகிருஷ்ணரைப் போலவே யாக்ஞவல்கியரும் இரு தரப்பட்ட மனப்பாங்கு உள்ளவர் என்பதை ஜனகர் உணர்ந்து கொண்டார். இருவருமே தீவிரமாய் பிரம்மத்தில் லயிக்கிற ஞானிகள்தாம். இருந்தாலும் மனிதகுல நலனுக்காக அவர்கள் லௌகிகமாகவும் செயல்படக் கூடியவர்கள். யாக்ஞவல்கியரிடம் காணப்பெறும் சிறு குண தோஷங்களும் இந்த உலக வாழ்க்கையின் சில அம்சங்களே என ஜனகர் முடிவு செய்தார்.
யாக்ஞவல்கியரைத் தம் இருப்பிடத்திற்கு அழைக்க வேண்டும் என்று ஜனகர் விரும்பினார். ஆனால் யாக்ஞவல்கியரே ஒரு நாள் ஜனகரை நாடி வந்தார். பெரிதும் தமக்கு வேதாந்தம் கற்பிப்பதற்காக அவருக்கு ஆயிரம் பசுக்களைத் தட்சிணையாகத் தந்தார் ஜனகர். அப்போது, பாடம் போதிப்பதற்கு முன் தாம் எந்த ஒரு பரிசும் பெறலாகாது என்று யாக்ஞவல்கியர் அதை மறுத்துவிட்டார்.
மிகுந்த ஆர்வத்தோடு யாக்ஞவல்கியர் பாடத்தைத் தொடங்கினார். "ஓ! ராஜனே! ரதங்களிலும் படகுகளிலும் பயணம் செய்கிறவர்கள் இருக்கிறார்கள். ஆனால் உபநிஷத்துக்களை வாகனமாகக் கொண்டு நீ உன் அணு விஞ்ஞானமாகிற நெடும் பயணத்தை மேற்கொள்ளப் போகிறாய். இந்த உலக வாழ்வை நீத்த பிறகு நீ எங்கே புறப்பட்டுப் போகிறாய் என்பது உனக்குத் தெரியுமா?"
"தெரியாது, மகரிஷி" என்று பதில் சொன்னார் ஜனகர்.
யாக்ஞவல்கியர் அவருக்கு விளக்கமாக எடுத்துரைத்தார்: "நீ ஓர் ஆத்மிக ஞானியாக வாழ்ந்திருந்தால் இந்த உலகை நீத்த பிறகு பரம்பொருளை அடைகிறாய். ஆனால் அந்தப் பரம்பொருள் எப்படிப்பட்டது என்று யாராலும் தெளிவுபடுதல் முடியாது. அது இது என்று, அது அன்று, என்றுதான் அதைப் பற்றிக் கூறமுடியும். மனத்தால் அறிய ஒண்ணாதது அது. இத்தகையதென்று வரையறுக்க முடியாதது அது. அது பந்தமற்றது; கட்டுப்படாதது. அதனோடு சேராமல் வேறாக இருக்கும்வரை நீ ஆசைப்படுகிறாய்; வெறுப்புக்கொள்கிறாய்; அஞ்சுகிறாய்; அல்லது துணிவுபெறுகிறாய்! ஆனால் அந்தப் பரமாத்மாவோடு நீ ஐக்கியமான பிறகு உனக்கு ஆசையில்லை, பயமில்லை, துன்பமில்லை, பசி-தாகமில்லை, அவநம்பிக்கையில்லை."
ஜனக மஹாராஜா இந்த உபதேசத்தை ஆழ்ந்து நிலைத்த மகிழ்ச்சியோடு செவிமடுத்தார். தம்மையும் தம் ராஜ்யத்தையும் குரு தட்சிணையாக யாக்ஞவல்கியருக்கு அர்ப்பணித்தார்.
யாக்ஞவல்கியர் அதிர்ந்து சொன்னார்: "நான் விவரித்த பரமாத்ம நிலைக்கும் ஒரு ராஜாவுடைய நிலைக்கும் இடையே எவ்வளவு தூரம்! எனக்கு உன் ராஜ்யமும் வேண்டாம், செல்வங்களும் வேண்டாம். என் குடும்ப சம்ரக்ஷணைக்குத் தேவையான பசுக்களை மட்டும் நீ தந்தால் போதும்!"
அவர் மேலும் சொன்னார்: "இந்தப் பிரபஞ்சமே பரமாத்மாவின் விளையாடல்தான். ஆனால் அந்தப் பரமாத்மாவை யாரும் பார்த்தவரில்லை. இந்தப் பிரபஞ்சம் உண்மை போலத் தோற்றமளிக்கிறது. ஆனால் ஆத்ம ஞானம் அடைந்த பிறகு ஒருவன் சமாதியில் ஆழ்ந்து விடுகிறான். அந்த நிலையில் ஆசாபாசங்கள் எழுவதில்லை. அவனுக்கு பெற்றோர் இல்லை’ சுற்றம் இல்லை. சொர்க்கமில்லை; நரகமில்லை. இந்த உலகம், பழி, பாவம், தவம் எதுவுமே இல்லை. மிஞ்சியிருப்பதெல்லாம் ஆனந்தம்தான். அந்தப் பரமானந்தத்தின் ஒரு சிறு கூறுதான் மனிதகுலத்தின் ஆன்ந்தமாக அமைகிறது. ஆனால் த்யானம் பயின்று ஞானம் அடையாத யாரும் தன் கர்ம பந்தங்களிலிருந்து விடுபட முடியாது. அவன் இலைக்கு இலை ஊருகிற புழுவாகவும் பிறவி எடுத்தாக வேண்டும். அவனவன் வினைகளுக்கு ஏற்ப ஒருவன் பிதுர் லோகத்தையும், கந்தர்வ லோகத்தையும், பிரம்ம லோகத்தையும் அடைகிறான். ஆத்ம ஞானத்தை அடைந்தவன் மரணத்துக்குப் பின் பரமாத்மா அல்லது பிரம்மத்தோடு ஐக்யமாகிறான்". இவ்வாறு யாக்ஞவல்கியர் போதித்தார்.
ஜனகர் அளிக்க முன்வந்த ராஜ்ய பதவியை மறுத்த யாக்ஞவல்கியர், தம் சிஷ்யர் பூரணமான ஆத்மஞானியாகி விட்டார், என்று தெரிந்து கொண்டார். தம் செல்வங்களைத் காத்யாயினி, மைத்திரேயி ஆகிய இரு பத்னிகளுக்கும் பங்கிட்டுத் தந்து துறவறம் மேற்கொண்டார்.
காத்யாயினி அவள் பங்கை அமைதியாகப் பெற்றுக்கொண்டாள். ஆனால் மைத்ரேயி பொன்னையும், பொருளையும் விட ஆத்ம ஞானத்தையும், மோக்ஷத்தையுமே அடைய விரும்பினாள். எனவே தன் பங்குச் செல்வங்களைத் துறந்து கணவர் காலடியிலே சிஷ்யையாக அமர்ந்தாள். பல ஞானிகளை உருவாக்கிய பரமஞானி யாக்ஞவல்கியர். உண்மையான பிரம்மரிஷி சக்கரவர்த்தி என்பது அவருக்கே தகும். |