ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், காஞ்சிபுரம்
தமிழ் இணைய தளம்


ஸ்ரீ காமகோடி ப்ரதீபம்
மலர் -21 ரௌத்ர வருஷம்: ஆவணி-புரட்டாசி ஆகஸ்டு-செப்டம்பர் 1980 இதழ் 7,8


ஈசுவர உபாசனை
(ஆர். முத்துக்ருஷ்ண சாஸ்திரிகள்)

’ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என்பது அவ்வை வாக்கு.  ஆலயம் என்றால் தேவாலயம்.  தேவன் என்றால் மகாதேவன் அல்லது மகாவிஷ்ணு.  தேவன் குடியிருக்கும் இடம் தேவாலயம்.  தேவாலயத்திற்குத் தினம் சென்று மகாதேவனைத் தரிசித்து வரவேண்டும்.  சக்தி இருக்கும் வரை முடிந்தவரை தினமும் தரிசித்து வா.  முடியாவிட்டால் வீட்டிலிருந்தபடியே கோபுர தரிசனம் செய்.  அப்போது உன்னை அறியாமலே கோவிலில் உள்ள மகாதேவன் உன் இதயத்தில் குடி கொண்டுவிடுவான்.  சந்தேகமா?  அப்போது கண்ணை மூடிக்கொண்டு பார்.  இதயத்தில் மகாதேவன் உனக்குத் தரிசனம் அளிப்பான்.

     அப்படி அந்த மகாதேவனைத் தரிசனம் செய்வதால் என்ன கிடைக்கும்?  அவன் யார்?

            அவனுக்கு ஈசுவரன் என்று வேறொரு பெயரும் உண்டு.

           ஈசுவர: ஸர்வ பூதானாம் ஹ்ருதயே அர்ஜுன திஷ்டதி |
ப்ராமயன் ஸர்வபூதானி யந்த்ராரூடானி மாயயா ||
[பகவத்கீதை 18-61]

     "ஹே, அர்ஜுன! உயிருள்ள ஜீவராசிகள் அத்தனை பேர்களுடைய இதயத்திலும் உட்கார்ந்து கொண்டிருக்கிறானே ஒருத்தன், அவன்தான் ஈசுவரன், நாரயணன்.  அவன் என்ன செய்கிறான்?  அவரவர்களுடைய பாபம்-புண்ணியம் இரண்டுக்கும் ஏற்றாற்போல அவர்களுடைய புத்தியைத் தூண்டிவிட்டு அதன்படி வேலை செய்யவைக்கிறான்.  அவர்களையெல்லாம் ஆட்டிப் படைக்கிறான்" என்று பகவானே சொல்கிறார்.

     அந்த ஈசுவரனை உபாஸனை செய்வதால் என்ன பலன்?
யார், எந்த வேலையைச் செய்தாலும் அந்த வேலைக்குத் தகுந்தாற்போலக் கூலி உண்டு.  நல்லது செய்தால் நல்ல பலன்.  கெடுதல் செய்யக்கூட வேண்டாம்; பிறருக்குக் கெடுதல் நினைத்தாலே போதும்.  கெடுதல் வந்து சேர்ந்துவிடும்.  ’கெடுவான் கேடு நினைப்பான்’ என்றுதானே சொல்லியிருக்கிறது.  அதனால் யாருக்கும் கெடுதல் செய்யக் கூடாது.  கெடுதல் செய்தால் நமக்குக் கஷ்டம் வரும்.  கஷ்டம் வராமலிருக்க கெடுதல் செய்யக் கூடாது; நினைக்கக் கூடக் கூடாது.

            நல்லது செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.  நல்லது நினைத்தால் மட்டும் போதாது; செய்ய வேண்டும்.  அப்போதுதான் நல்லது கிடைக்கும்.  நல்லது என்ன கிடைக்கும்?  யாருக்கும் கஷ்டம் இல்லாமல் சந்தோஷத்தைத் தருவது எல்லாம் நல்லது.  அதெல்லாம் கிடைக்கும்.  அப்படி எங்கே சொல்லியிருக்கிறது?

     ஈசுவர உபாஸனை செய்தால் ’”உர்வாருகம்’” என்ற வெள்ளரிப் பழம் போன்ற பலன் கிடைக்கும் என்கிறது வேதம்.  அது எப்படிப்பட்டது?  மற்ற எல்லாப் பழங்களும் பழுத்தால் காம்பிலிருந்து விடுபட்டுக் கீழேவிழும்.  பதிதம்; அதாவது கீழே விழக்கூடியது.  வெள்ளரிப்பழம் ஒன்றுதான் அபதிதம், ’கீழே விழாதது.  பழம் இருந்த இடத்திலேயே இருக்கும்;  காம்பு பழத்தைவிட்டு விலகிப்போகும்.  மற்றப் பழங்கள் காம்பை விட்டுவிட்டுக் கீழே விழும்; பதிதம் ஆனவை; வெள்ளரிபழம் மட்டும் அபதிதம், பதிதம் ஆகாதது. பழத்தை விட்டுவிட்டு அதன் காம்புதான் விலகிச்செல்லும்.

            அதுபோல ஈசுவர உபாஸனை செய்தால் பதிதன் ஆகமாட்டான்; சறுக்கிவிழ மாட்டான்.  பாப காரியம் செய்வது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டே போய் பாபமே இல்லாமல் போய்விடும்.  பாபம் குறையக் குறைய துக்கமும் குறையும்.  பாபமே இல்லாவிட்டால் துக்கமே இருக்காது.  ஆனந்தம் அப்போது நிரம்பிவழியும்.  ஜீவதசையிலேயே இந்த முக்தி நிலையை அடைய முடியும்.  அதுதான் ஜீவன் முக்தி நிலை.

     ’வேதத்தில் “உர்வாருக” பழம் ஒன்று தான் சொல்லியிருக்கிறது.  வேறு எந்தப் பழமும் சொல்லவில்லை’ என்கிறார்கள் காஞ்சி பரமாசார்யர்கள்.

ஆதாரம்: பெரியவர்கள் அருளுரை
உதவி: தில்லைநாதன்

~~~~~~~

Home Page