ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், காஞ்சிபுரம்
தமிழ் இணைய தளம்


ஸ்ரீ காமகோடி ப்ரதீபம்
மலர் -21 ரௌத்ர வருஷம்: ஆவணி-புரட்டாசி ஆகஸ்டு-செப்டம்பர் 1980 இதழ் 7,8


ஸ்யமந்தகமணி சரிதம்
(அல்லது)
அபவாத பரிஹாரம்
(ஆர். முத்துக்ருஷ்ண சாஸ்திரிகள்)

     ஸ்ரீ நந்திகேச்வரர், ஸனத் குமாரரைப்பார்த்து "புரிஷசிரேஷ்டரே! மஹா கணபதி விரதத்தை அனுஷ்டிக்கிறவர்கள் எல்லாவித கஷ்டங்களிலிருந்தும் உடனேயே விடுபடுகிறார்கள்.  அபவாத தோஷங்களும் விலகும்.  இந்த விரதம் மஹாகணபதிக்கு ரொம்பவும் இஷ்டமானது.  மூன்று லோகங்களிலும் புகழ்ப்பெற்றது.  ஸகல கஷ்டங்களையும் போக்கி பரமஸௌக்யத்தை உண்டுபண்ணக்கூடிய இந்த விரதத்தை விட மேலான விரதம் கிடையாது.  ஸகல உலகங்களுக்கும் அதிபதியும் ஸ்ரீ வஸுதேவ குமாரரும், கீர்த்திவாய்ந்தவருமான ஸ்ரீ கிருஷ்ணபகவான், தனக்கேற்பட்ட வீண் அபவாதத்தைப் போக்கிக்கொள்ள விரும்பி, நாரத மஹரிஷியினால் பிறகு கட்டளையிடப்பட்டு மஹாகணபதி விரதத்தை அனுஷ்டித்தார்" என்று கூறினார்.

            ஸநத்குமாரர், "ஸமஸ்த குணங்களும், அஷ்ட ஐச்வர்யங்களும் நிரம்பியவர்; ஆக்கவும், அழிக்கவும் வல்லமை பொருந்தியவர் அல்லவா ஸ்ரீவாஸுதேவர்!  உலகெங்கும் வியாபிப்பவரும், ஸகல பராக்கிரமங்களும் பொருந்திய அவருக்குக் களங்கம் எப்படி ஏற்பட்டது?  இதைக்கேட்கும் பொழுதே ஆச்சர்யமாயிருக்கிறதே! இந்தச் சரித்திரத்தைத் தாங்கள் எனக்குச் சொல்லவேனும்" என்று கேட்டார்.

     நந்திகேச்வரர்:- பூமிபாரம் நிவிருத்தியாக வேண்டியதற்காகவும், துஷ்ட நிக்ரஹ சிஷ்ய பரிபாலனத்திற்காகவும் ஸாக்ஷாத் விஷ்ணு பகவானும் ஆதிசேஷ பகவானும், வஸுதேவருக்கு ஸ்ரீ ராமகிருஷ்ணர்கள் என்ற பெயருடன் இருகுழந்தைகளாக அவதாரம் செய்தார்கள்.  இருவரும் பால்ய லீலைகளைக் செய்து கொண்டு வளர்ந்தனர்.  ஐராஸந்தன் முதலிய அஸுரர்களின் உபத்ரவம் தாங்காமல், லோகத்தில் உள்ள பிரஜைகள் நடுங்கினர். பிரஜைகளைக் காப்பாற்ற வேண்டுமென்று கருணைக்கொண்டு ஸ்ரீ கிருஷ்ணபகவான், தேவலோகத்திலிருந்து விச்வகர்மா என்ற தச்சனை அழைத்து ’துவாரகை’ என்ற நகரத்தை ஸ்வர்ணமயமாய் நிர்மாணம் செய்வித்தார்.  அந்நகரத்தில் பதினாயிரம் ஸ்திரீகளுக்கு அழகான மாளிகைகளையும் ஏற்பாடு செய்தார்.  அவைகளின் நடுவில், தேவலோகத்திலிருந்து கொண்டுவரப்பட்ட ஒரு உயர்ந்த பாரிஜாத விருக்ஷத்தையும் உபயோகமுள்ளதாக ஸ்தாபனம் செய்தார்.  இடையர்களுக்கு கோண வடிவங்களுள்ள ஏராளமான வீடுகளை நிர்மாணம் செய்வித்தார்.  துவாரகையில் வஸிக்கின்ற ஜனங்கள் அனைவரும், எவ்விதமான பயகிலேசமும் இல்லாமல் சுகமாக வாழும் படிக்கும் செய்தார்.  மூன்று லோகங்களிலும் உள்ள அபூர்வமான பொருள்கள் எல்லாம் அங்கு காணப்பட்டன.

            ஸத்ராஜிதன், பிரஸேனன் என்ற இருவரும் உக்ரன் என்பவருக்குக் குமாரர்கள்.  அதிக பலம் வாய்ந்தவர்களாய் புகழ் பெற்றிருந்தனர்.  இருவர்களில் ஸத்ராஜிதன், ஸமுத்திரக்கரையை அடைந்து ஸூர்யபகவானுக்கு எதிர்முகமாக நின்று கொண்டு, அவரையே உற்றுநோக்கியவனாய் தவம் புரிந்தான்.  மஹா புத்திமான், மனதை ஒருங்கே ஸூர்ய பகவானிடம் செலுத்தி, ஆஹாரமும் சாப்பிடாமல் பல நாட்கள் கடுமையாய் தியானத்தில் ஆழ்ந்தான்.  ஸூர்ய பகவானும் இவனுடைய தவத்தினால் சந்தோஷம் அடைந்து எதிரில் தோன்றினார்.  தன் முன்னிலையில் தேவரான தினகரன் நிற்பதைக் கண்டு ஸத்ராஜிதன் ஸ்தோத்ரம் செய்தான்.

            "தேஜோராசே நமஸ்தேஸ்து நமஸ்தே ஸர்வதோமுக !
விச்வவியாபிந் நமஸ்தேஸ்து ஹரிதச்வ நமோஸ்து தே !
கிருஹராஜ நமஸ்தேஸ்து நமஸ்தே சந்திர ரோசிஷே !
வேதத்ரய நமஸ்தேஸ்து ஸர்வதேவ நமோஸ்துதே !!
பிரஸீத பாஹி தேவேச ஸுதிருஷ்டயா மாம் திவாகர !"

     "தேஜஸ்ஸுகளுக்கெல்லாம் இருப்பிடமான உங்களை நான் நமஸ்காரம் செய்கிறேன்.  தேவாதி தேவரே!  மூன்று தெய்வங்களும் நீரே!  கருணை கூர்ந்து என்னைக் காத்தருள்வாய்" என்று ஸ்தோத்திரம் செய்தான்.  ஸூர்யபகவானும் ஸந்தோஷமடைந்து, "வேண்டியதை நிச்சியம் உனக்குக் கொடுக்கிறேன், உனக்குப் பிடித்தமான வரனைக்கேட்கலாம்" என்று தெரிவித்தார்.

     ஸத்ராஜிதன், "பாஸ்கர! திருப்தியானால் ஸ்யமந்தக மணியை எனக்குக் கொடுக்கவேணும்" என்று பிரார்த்தித்துக் கேட்டான். இதைக்கேட்ட ஸூர்யபகவான், உடனேயே தன்னுடைய கழுத்தில் போட்டுக் கொண்டிருந்த அந்த மணியைக் கழற்றிக் கொடுத்து, "இதை நீ வைத்துக் கொள்.  இந்த உயர்ந்த மணியானது தினந்தோறும் உனக்கு எட்டு பாரம் நிறையுள்ள தங்கம் கொடுக்கும்.  இந்த உத்தமமான மணியை நீ எப்பொழுதும் பரிசுத்தமாக இருந்து கொண்டு தரித்துக் கொள்ள வேண்டும்.  பரிசுத்தமில்லாதவன் இந்த மணியைப் போட்டுக் கொண்டால் அதேக்ஷணம் கொல்லப்படுவான்.  அதனால் ஜாக்ரதையாகக் காப்பாற்றி வைத்துக்கொள்" என்று சொல்லி அந்தர்தியானமானார்.

            தேஜோமயமாய் பிரகாசிக்கின்ற அந்த மணியை, ஸர்தாஜிதன் தன் கழுத்தில் போட்டுக் கொண்டான்.  அதிசீக்கிரமாகவே, ஸ்ரீ கிருஷ்ணர் வஸிக்கும் துவாரகாபுரியை அடைந்தான்.  ஸத்ராஜிதன் வருவதைக்கண்ட ஜனங்கள் மணியின் மஹிமையினால் கண் கூசுவதால், உற்றுநோக்க முடியாதவர்களாய், ஸத்ராஜிதன் என்று புரிந்துக் கொள்ள முடியவில்லை.  பிரகாசத்தைக் கண்டு எல்லோரும், "கிருஷ்ண பகவானை பார்க்க ஸூர்ய பகவான் வந்து கொண்டிருக்கிறார்.  ஸந்தேகத்திற்கு இடமேயில்லை" என்று தங்களுக்குள் தீர்மானம் செய்து கொண்டனர்.  கொஞ்சங் கொஞ்சமாக ஸத்ராஜிதன் ஸமீபத்தில் வந்ததும், "ஸஹஸ்ரகிரணங்களையுடைய ஸூர்யபகவான் வரவில்லை; பிரகாசம் பொருந்திய மணியைக் கழுத்தில் போட்டுக் கொண்டு ஸத்ராஜிதன் அல்லவா வருகிறான்" என்று எல்லோரும் தீர்மானம் செய்து கொண்டனர்.

     ஸ்ரீ கிருஷ்ண பகவானும் அவனுடைய கழுத்தில் இருக்கும் மஹாரத்னமான ஸயமந்தகமணியைப் பார்த்து ஆசை கொண்டார்; எனினும் உடனே அபஹரித்துக் கொள்ளவில்லை.  ஸ்ரீ கிருஷ்ணபகவானுடைய முகக்குறிப்பை அறிந்து கொண்ட ஸத்ராஜிதனும் பயமடைந்தான்.  எவ்விதத்திலும் என்றாவது ஒருநாள் தன்னிடமிருந்து இவர் மணியைக் கேட்டு வாங்கிக் கொண்டு விடுவார் என்றுக் கருதிப் பயந்தான்.  எனவே தன்னுடைய தம்பி பிரஸேனனிடம் கொடுத்து, "நீ எப்பொழுதும் மிகவும் பரிசுத்தமுள்ளவனாகவே இருந்து கொண்டு இதை தரித்துக் கொள்" என்றான்.

            ஒருநாள் பிரஸேனன், மணியைக் கழுத்தில் போட்டுக் கொண்டு, வேட்டையாடுவதற்காக ஸ்ரீ கிருஷ்ணருடன் காட்டிற்குப் பலர் செல்ல, தானும் சென்றான்.  இவன் குதிரைமேல் ஸவாரி செய்து கொண்டு போனான்.  நடுவழியில் இவனுக்குக் கொஞ்சம் பரிசுத்தம் குறைந்தது, அக்கணமே ஒரு ஸிம்ஹம் ஓடிவந்தது.  இவனை அடித்துக் கொன்றுவிட்டு, மணியைக் கவ்வி எடுத்துச் சென்றது.  சிறிது தூரத்திற்குள்ளேயே ஸ்ரீ ராமபக்தரான கிழக்கரடி ஜாம்பவான் ஸிம்ஹத்தைக் கொன்று மணியை எடுத்துக் கொண்டு, தனது குஹைக்குள் சென்றார். மேலும் தன் குழந்தை குமாரனுக்கு தொட்டிலில் மணியைக்கட்டி வைத்தார்.  ஸிம்ஹத்தால் பிரஸேனன் கொல்லபட்டதும், பிறகு ஸிம்ஹம் கொல்லப்பட்டதும், ஸ்ரீ கிருஷ்ணருக்கு தெரியும்.  மணி போன விஷயம் தெரியாது.  வேட்டை முடிந்ததும் தன்னுடைய பரிவாரங்களுடன் நகரத்திற்குத் திரும்பினார்.

            காட்டிற்குப்போன பிரஸேனன் திரும்பி வராததைக் கண்ட ஸத்ராஜிதன் முதலிய அவனது சுற்றாத்தார்கள், காட்டில் கிருஷ்ணன் பிரஸேனனைக் கொன்றுவிட்டான்.  மணிக்கு பேராசைக் கொண்டு பாவி கிருஷ்ணன் உற்றார் உறவினனையே கொன்றுவிட்டானே, என்று அவதூறு சொல்ல ஆரம்பித்தனர்.  இவ்விதம் நாளடைவில் பலரும் சொல்லிக் கொள்ள ஆரம்பித்தனர்.  கிருஷ்ணனும் தனக்கேற்பட்ட வீண் பழிச் சொல்லைக் கேள்வியுற்று மனம் நொந்து கொண்டார்.  தன் பேரில் குற்றமில்லையென்று ருசுப்படுத்த எண்ணி, பிரஸேனனைச் சேர்ந்தவர்களையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு, ஸிம்ஹம் அடித்துக்கொன்ற இடத்திற்குப் போய்ச் சேர்ந்தார்.  அங்கிருந்து, ஜாம்பவான் ஸிம்ஹத்தை அடித்துக் கொன்று விட்டு ஓடிய மார்க்கமாகவே ஒரு குஹையின் வாயில் வரையில் எல்லோரும் சென்றார்கள்.  குஹைக்குள் இருள் சூழ்ந்திருந்தது.  எல்லோரும் வெளியே நின்றுவிட்டனர்.  ஸ்ரீ கிருஷ்ண பகவான் மாத்திரம் தன்னுடைய தேஜஸ்ஸினால், இருட்டிலும் குஹைக்குள் நூறுயோஜன தூரம் சென்றார்.  எதிரில் ஒரு மாளிகையைக் கண்டார்.  நடு அரண்மனைக்குள்ள ஒரு ஊஞ்சலில் குமாரனொருவன் படுத்துக் கொண்டிருப்பதையும் ஸ்ரீ பகவான் பார்த்தார்.  பக்கத்தில் அழகிய மாது ஒருவள் - அவள்தான் ஜாம்பவானுடைய குமாரி ஜாம்பவதீ, ஊஞ்சலை ஆட்டிக் கொண்டிருப்பதையும் பார்த்தார்.  புன்சிரிப்புடன், அழகிய தோற்றத்துடன் காணப்படும் அப்பெண்மணியைக் கண்டு மிகவும் ஆச்சர்யம் அடைந்தார்.  அப்பெண்மணி, ஊஞ்சலை ஆட்டிக்கொண்டே திரும்பத் திரும்ப இந்தப் பாட்டைப் பாடிக் கொண்டிருந்தாள்.

                        ஸிஹ்ம : பிரஸேனம் அவதீத்
ஸஹ்ம : ஜாம்வதாஹத: |
ஸுகுமாரக மா ரோதீ :
தவஹி ஏஷ : ஸ்யமந்தக : ||

     ஸிம்ஹம் பிரஸேனனைக் கொன்றது.  ஜாம்பவானால் ஸிம்ஹம் கொல்லப்பட்டது.  அப்பா குழந்தாய்!  அழாதே! இதோ இருக்கிறதே! இந்த ஸ்யமந்தகமணி!  உன்னுடையதுதான் என்று சொல்லிக் கொண்டு, பாடிக்கொண்டிருக்கும்பொழுது பக்கத்தில் ஸ்ரீ கிருஷ்ணபகவான் நிற்பதைக் கண்டாள்.  செந்தாமரைக் கண்ணனைக் கண்டு, பார்த்தால் மயங்காமல் இருக்க முடியுமா!  அவருக்கு வசமானாள்.  ஜாம்பவதீ குழந்தைதானே!  இவருடைய பராக்கிரமத்தை எப்படி அறிவாள்!  அப்பாவுக்கு பயந்து விஷயமறிந்து இவரிடம் மெதுவாக, "இங்கிருந்து போய் விடுங்கள்.  அப்பா தூங்கிக் கொண்டிருக்கும்பொழுது மணியை எடுத்துக்கொண்டு போய்விடுங்கள்" என்று கூறி ஜாடையும் காட்டினாள்.  ஜாம்பவதீ பயத்தினால் தனக்கு அறிவிப்பத்தைக் கேட்டு ஸ்ரீ கிருஷ்ணபகவான் கலகலவென்று சிறித்தார்.  உடனே சங்கத்தை எடுத்து ஒலித்தார்.  சங்கநாதத்தை கேட்ட ஜாம்பவான் பரபரப்புடன் எழுந்து எதிரில் கிருஷ்ணபகவானைக்கண்டு கோபமடைந்து, மஹாவேகத்துடன் சண்டையிட ஆரம்பித்தார்.   இருவருக்கும் பிரமாதமான முஷ்டியுத்தம் நடந்தது.

     குகைக்கு வெளியில் வந்திருந்த துவாரகா வாஸிகள் அனைவரும் ஏழுநாட்கள் வரையில் காத்திருந்து பார்த்தனர்.  "இனி கிருஷ்ணன் உயிருடன் திரும்பி வரமாட்டான்" என்று நிச்சியம் செய்துக்கொண்டு நகரத்திற்கு திரும்பி சென்றனர்.  கிருஷ்ணனுக்கு உத்திரகிரியைகளையும் செய்துவிட்டனர் என்று சொல்லவும் வேண்டுமோ!

     குகைக்குள் 21 நாட்கள் கடுமையான முஷ்டி யுத்தம் நடந்தது.  ஜாம்பவான் தனக்கு நிகராக, இவ்வளவு நாட்கள் எதிரில் நின்று சளைக்காமல் போர் புரிந்தவரை இதுவரையில் கண்டதில்லை.  ஸ்ரீ கிருஷ்ணபகவானுடைய மஹிமையை அறிந்து ஸந்தோஷம் அடைந்து, ஸ்ரீ பகவானைப் பார்த்து, :யாரும் என்னை ஜயிக்க முடியாது.  ஏ! தேவ சிரேஷ்டரே! இப்பொழுது உம்மால் நான் ஜயிக்கப்பட்டேன்.  தாங்கள் லோக ரக்ஷகர் என்பதை அறிந்து கொண்டேன்" என்று புகழ்ந்தார்.  மேலும் ஸ்ரீ கிருஷ்ணர் வந்த விஷயத்தை அறிந்துகொண்டு ஸ்யமந்தகமணியையும் கொடுத்து, தன்னுடைய குமாரியான ஜாம்பவதியின் கையையும் பிடித்து ஸ்ரீ பகவானிடம் அர்ப்பணம் செய்து, "தாங்கள் இவளையும் பார்யாளாகக் கிரஹித்துக் கொள்ள வேண்டும்" என்று பிரார்த்தித்தார்.  ஸ்ரீ பகவானும், மணியையும், ஜாம்பவதியையும் கிரஹித்துக்கொண்டு துவாரகை வந்து சேர்ந்தார்.

            நகரவாஸிகளை அழைத்து ஸபையில் எல்லோருடைய முன்னிலையில், காட்டில் நடந்த ஸகல விருத்தாங்களையும் கூறி, ஸத்ராஜிதனிடம் எல்லோருடைய பார்வையிலேயே மணியையும் கொடுத்துவிட்டார்.  இவ்விதம் செய்து ஸ்ரீ கிருஷ்ணபகவான் தனக்கேற்பட்ட வீண் அபவாதத்தைப் போக்கிக்கொண்டு பரிசுத்தத்தை அடைந்தார்.  ஸத்ராஜிதனும் மிகுந்த பயமடைந்திருந்தவன் இப்பொழுது ஸந்தோஷம் அடைந்தான்.  மஹா புத்திமான், ஸர்வகுணங்களும் பொருந்திய தன்னுடைய பெண் ஸத்யபாமாவையும் ஸ்ரீ கிருஷ்ணபகவானுக்குக் கன்யாதானம் செய்து கொடுத்தான்.

     ஸ்ரீ பகவானுக்கு, பிரஸேனன் இறந்ததால் ஏற்பட்ட அபவாதம் தீர்ந்தது.  ஜாம்பவதியையும், ஸத்யபாமாவையும் மணந்து கொண்டார்.

*********

Home Page