ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், காஞ்சிபுரம்
தமிழ் இணைய தளம்


ஸ்ரீ காமகோடி ப்ரதீபம்
மலர் -10 இதழ் -4 ஸெளம்ய வருஷம் வைகாசி மாதம்
14-5-1969


அறுசமய ஸம்மேளனமும் ஒற்றுமையும்

நாளது ஜூன் மாதம் 1-ஆம் தேதியன்று சைவம், வைஷ்ணவம், காணபத்யம், சாக்தம், கெளமாரம், ஸெளரம் என்ற அறுசமயங்களைப் பற்றிய மகா நாடு ஒன்றைச் சென்னையில் நடத்தப் பெரியோர்கள் தீர்மானித்திருக்கிறார்கள். மேலே குறிப்பிட்ட ஒவ்வொரு சமயத்தையும் நன்கு அறிந்த பெரியோர்கள், அந்த அந்தச் சமயத்தின் தத்துவங்களைப் பற்றி எடுத்துரைக்கவும் தீர்மானம் ஆகியுள்ளது.
ஸம்மேளத்தின் நோக்கம், இந்த ஆறு சமயங்களுடைய ஒற்றுமையை விவரிப்பதே ஆகும். ஒவ்வொரு சமயத்திலும் உள்ள வழிபாட்டு முறைகளையும் தத்துவங்களையும் விளக்குவதுதான் முக்கிய நோக்கமே அல்லாது, எது சரி, எது தப்பிதம் என்ற விசாரங்களுக்கு இதில் இடமில்லை. இவ்விதமாக இந்தச் சமயங்களின் தத்துவங்களை அறிந்துகொள்வதன் மூலம் எல்லாவற்றிலும் பொதுவாகக் காணும் பக்தியின் முக்கியத்துவத்தைக் கண்டு, அதன் வாயிலாக ஒற்றுமையைக் காண்பதுதான் இதன் நோக்கம் என்று நாம் கொள்ளலாம். ஆகவே பிற சமயங்களையும் நன்கு புரிந்துகொள்வது ஒற்றுமையைக் காணவே உதவுகிறது.
தெய்வம் உலகை உண்டுபண்ணிக் காத்துத் தன்னிடத்தில் அடக்கிக்கொள்கிறது. ஒவ்வொரு சமயத்தைச் சார்ந்த தெய்வத்துக்கும் இவ்விதச் சக்தி உண்டு என்ற கருத்து அடிப்படையானது. அந்த அந்தச் சமயத்தைச் சார்ந்தவர்கள், அந்தந்த தெய்வத்தின் பாரம்பர்யத்தைத் கூறும்போது, இந்த மூவிதச் சக்தி அந்தத் தெய்வத்திற்குத்தான் உண்டு என்றும் கூறுவார்கள். இந்த நிலையில் மற்றச் சமயத்தைச் சார்ந்தவர்கள் இந்தக் கருத்தை ஆக்ஷேபிப்பது போன்ற செய்கைகளுக்கு அவசியமில்லை.

எல்லாச் சமயத்தைச் சார்ந்தவர்களும் ஒன்றுசேர்ந்து நம் தேசத்தில் ஆஸ்திக்யத்தை வளர்க்க வேண்டிய பெரும் பொறுப்பைக் கொண்டுள்ளோம். அக்காலத்தில் தென் தேசத்தில் சைவ சமயக் குரவர்களான நாயன்மார்களும், வைணவ சமய ஆதாரபூதர்களான ஆழ்வாராதிகளும் இதே நிலையில் ஈடுபட்டுத்தான் பெளத்த சமண மதங்களுக்கு எதிப்புக் கொடுத்து, சநாதன தர்மத்தை வளர்த்தனர்.
சமயங்களுக்குள் சமரச மனப்பான்மையை மற்றும் ஒரு பிரமாணத்தின் வாயிலாகவும் காண்கிறோம். அதாவது ஒரு சமயத்தைச் சார்ந்தவர்கள் அந்தச் சமய தெய்வத்தை வழிபடும்போது, பிற சமய தெய்வத்தை வழிபடுபவர்கள் நற்கதியை அடைய மாட்டார்கள் என்று கூறுவதில்லை. மாற்றுச் சமயத் தெய்வத்தை வழிபடுகிறவர்களுக்கும் தன் சமயத் தெய்வமே அந்தத் தெய்வமாக இருந்து அருளுவதாகவே கருதுகின்றனர். இந்த மனப்பான்மையை ஒட்டித்தான் சைவசமயாசாரியரான அப்பர் சுவாமிகள், “அறுசமயத்தவரவரைத் தேற்றும் தகையினர்” என்று இன்னம்பர் ஆலயப் பரம சிவனைப் பார்த்துப் பதிகம் பாடினார். மேலும், “பலவாய வேடங்கள் தானேயாகிப் பணிவார்க்கு அங்கங்கே பற்றானானை” என்றும் கூறுகிறார்.
அவரவர் தம்தம் புத்திக்குத் தக்கவாறு அவரவர் தெய்வங்களை வழிபடுகின்றனர் என்று வைணவப் பெரியாரான நம்மாழ்வாரும் திருவாய்மலர்ந்துள்ளார்.
அவரவர் தமதம தறிவறி வகைவகை
அவரவர் இறையவர் எனவடி அடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதிவழி அடையநின் றனரே.
என்று கீதாசாரியன் சொன்ன கருத்தையே நம்மாழ்வார் மேலே கண்ட திருவாய்மொழியில் கூறியுள்ளார்.
தற்காலத்தில் கிறிஸ்து மதத்தினரின் பெருமுயற்சியினால், இந்த ஆறு சமயத்தைச் சார்ந்த மக்களிலும் பலர் கிறிஸ்துவர்களாக மத மாற்றம் செய்யப்படுகின்றனர். இந்த மதமாற்றப் பணியில் மட்டும் அறுசமய வேறுபாடு இடம் பெறுவதில்லை. ஆகையினால் இந்த மத மாற்றத்தை எதிர்த்து இந்து மக்களைக் காத்துக் கிறிஸ்துவர்களின் முயற்சி பயனற்றதாகச் செய்வது மக்களுக்கும் சமயத் தலைவர்களுக்கும் முக்கியக் கடமையாகும். எல்லாச் சமயத் தலைவர்களும் மற்ற வேலைகளைச் சற்று ஒதுக்கியுங்கூட இதைக் கவனிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.
நாடு சுதந்திரம் அடைந்தபிறகு கிறிஸ்தவர்களின் மதமாற்ற வேலை பன்மடங்காக அதிகரித்துவிட்டது என்பதை, டில்லிச் சட்ட மன்றத்தில் கேட்கப்படும் கேள்விகளிலிருந்தும் அளிக்கப்படும் பதில்களிலிருந்தும் நன்கு அறிய முடிகிறது. ஆகவே நமக்குள் உள்ள சில்லறைப் பேதங்களை அறவே மறந்து, ஆழ்வாராதிகளும் நாயன் மார்களும் செய்த பெரும் பணியை இப்போது மக்கள் மேற்கொள்ளத்தருணம் வந்துள்ளது.
மேலே குறிப்பிட்ட பெரும் நோக்கைச் செயற்படுத்தவே, இந்தக் கூட்டம் நடத்த ஏற்பாடு ஆகியுள்ளதே அல்லாமல், ஸ்ரீ சங்கர பகவத்பாதர் ஷண்மத ஸ்தாபனத்தைச் செய்தார் என்று பேசி நிலைநாட்ட வேண்டும் என்பது நோக்கமல்ல என்றே எண்ணுகிறோம். அக்காலத்தில் இவ்விதச் சமரச முயற்சியில் ஸ்ரீ சங்கர பகவத்பாதர் ஈடுபட்டார் என்பதே அவருடைய பெயர் இந்த ஸம்மேளனத்தில் சம்பந்தப்படக் காரணம். ஸ்ரீ பகவத்பாதரின் அவதாரத்துக்கு முன்பு, ஸநாதன தர்மம் மிகவும் க்ஷீண தசையில் இருந்தது என்றும், அவர் மறுபடியும் அதை நல்ல நிலையை அடையச் செய்தார் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். ஆகவே இந்த ஸம்மேளனத்தின் பயனாக ஸநாதன தர்மத்துக்காக எல்லாரும் ஒன்றுபட்டு ஈடுபாடு கொள்ள வேண்டும் என்று கோருகிறோம்.

~~~~~~~

Home Page