மொழியைக் கடந்த பெரும் புகழான் இறைவன் எல்லாவற்றையும் கடந்தவர் கடவுள். சிவநேகச் செல்வராகிய சேர்ந்தனார் தமது திருமுறையில் ‘பல்லாண்டென்ற பதம் கடந்தானுக்குப் பல்லாண்டு பாடுதுமே’ என்கிறார். இறைவனது கருணையை, அருள்பெருக்கை, அடியார்களது நல்வாழ்வின் பொருட்டுச் செய்த செயல்களை எல்லாம் பண்ணிப் பண்ணிப் பல முறை சொன்னாலும் கேட்டாலும் நமது இதயம் நிரம்புவதில்லை. மேன்மேலும் புகழைப் பேச வேண்டும், பாட வேண்டும், கேட்க வேண்டும் என்ற ஆவலைப் பொங்கி எழும்படி செய்வது அவனது பெரும்புகழ்.
இறைவனின் திருவிளையாடல்களில், அடியார் பொருட்டுச் செய்த அற்புதங்கள் பல. சோதித்து அருள் கொடுத்ததையும், ஒரு சோதனையுமின்றித் தானே வந்து தடுத்து ஆட்கொண்டதையும் பற்பல சரிதங்களில் காண்கிறோம். மூலப் பழமறைக்கு முன்னேயும், காலிகட்குப் பின்னேயும் காணலாம்’ என்றார் ஒரு கவி. மூலப் பழமறை என்று நாம் போற்றும் வேதங்கள் இறைவனைத் தேடிப் பின்னே ஓடுகின்றனவாம். அவற்றுக்கு எட்டாதவனாக, முன்னே முன்னே சென்றுகொண்டே இருக்கிறானாம் இறைவன். ஆனால் அவன் கன்று காலிகளுக்குப் பின்னே செல்கிறான். ‘அடியவர்க்கு எளியவன், அவர்கள் பின்னே ஓடுகிறவன், அவ்வளவு சுலபன்’ என்று பேசுகிறார் கவி.
இப்படி எளியவனாக வந்து அருள் பொழிவதை எண்ணி மனம் நெகிழ்ந்தனர் மெய்யடியார். இந்த மனநிலையில், ஒரு நாமம், ஓர் உருவம் இல்லாத முதல்வனை ஆயிர நாமங்கள் சொல்லி ஏத்தித் தொழ வேண்டும் என்ற ஆவல் எழுவதில் ஆச்சரியம் என்ன? இப்படி ஒரு நாமம் ஓர் உருவம் இல்லாத முதல்வனை ‘ஆயிர நாமங்கள் சொல்லித் தெள்ளேணம் கொட்டோமோ?’ என்று பாடிப் பரவசமாகிறார் மணிவாசகப் பெருமான். ஆயிரம் பெயர்களால் நாம் மட்டும் புகழவில்லை; விண்ணவரும் ஏத்துகிறார்களாம். ‘பேராயிரம் பரவிவானோர் ஏத்தும் பெம்மானை’ என்று பேசுகிறார் அப்பர்பெருமான்.
ஞானமே வடிவான கடவுளை, ஞானமூர்த்தியான இறைவனை மின்னும் சுடர்மலை, பவளக் குன்று, நீல நன்னெடுங் குன்றம் என்றும், மரகத மலையே என்றும் பேசுகிறார்கள். இறைவனது ஒப்புயர்வற்ற செளந்தரியம் பவழம், நீலம், சுடரொளி, மரகதம் என்று பல்வேறு வண்ணங்களாகக் காட்சிதருகிறது. ‘கருமாணிக்க மலைமேல் மணித்தடந் தாமரைக் காடுகள் போல்’ என்கிறார் நம்மாழ்வார். இதே கருத்தைக் கம்பரும், ‘மரகத சைலம் தாமரைக் காடு பூத்து’ என்றும், ‘மண்டல உதயம் செய்த மரகதக் கிரி அன்னானை’ என்றும் பேசுகிறார்.
~~~~~~~ |