ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், காஞ்சிபுரம்
தமிழ் இணைய தளம்


ஸ்ரீ காமகோடி ப்ரதீபம்
மலர் -10 இதழ் -1 கீலக வருஷம் மாசி மாதம்
12-2-1969


நூறு ஹெல்த் இன்ஸ்பெக்டர்கள்

‘மேம்பட்ட பக்தியுடையவனுக்குச் சாஸ்திரம் இல்லை, முறையும் இல்லை’ என்று நம்பிள்ளை தம்முடைய அற்புத நூலாகிய ‘ஈடு’ என்கிற திருவாய்மொழி வியாக்கியானத்தில் எடுத்துக் காட்டியிருக்கிறார். இது இக்காலத்து யுவர்களுக்கு மிக்க ஆறுதல் தரும்.
ஆனால், இதைக் கொண்டு நாம் எல்லா ஆசாரத்தையும் விட்டுவிடலாம் என்று எண்ணிவிடலாகாது. இந்தக் காலத்துச் சூழ்நிலையில் நம்முடைய புராதன ஆசாரங்களைப் பூர்ணமாகவும் சரியாகவும் அவலம்பிப்பது கஷ்டம். முடியாத காரியம் என்றே சொல்லலாம். ஆனபோதிலும் மக்கள், முக்கியமாக வாலிபர்கள், பரம்பரை ஆசாரங்களை முற்றும் விட்டுவிடாமல் ஓரளவாவது அநுசரித்து, உள்ளத் தூய்மையும் தேகசுத்தமும் காத்து வருவது நல்லதாகும். மிகவும் சுலபமாகச் செய்யக் கூடியதை மட்டும் சொல்லுகிறேன்.
காலையில் படுக்கையை விட்டு எழுந்திருப்பதற்கு முன் பகவானைக் கொஞ்சம் தியானித்துவிட்டு எழுந்தால் நல்லது. பகவானைத் தியானிப்பதற்கு நிற்க வேண்டும், உட்கார வேண்டும் என்பதில்லை. எந்த நிலையிலும் தியானிக்கலாம். படுத்துக் கிடந்தும் தியானிக்கலாம். “என் உள்ளத்தைக் காத்தருள்வாய். நீ கோயிலிருக்கத் தகுந்த இடமாக என் உள்ளத்தைச் சுத்தமாக வைப்பேனாக” என்று மனத்துக்குள் சொல்லி எழுந்திருக்க வேண்டும். பகவானைத் தகப்பன் சொரூபமாகவும், யஜமானன் சொரூபமாகவும், தாய் சொரூபமாகவும் எப்படியாயினும் தியானிக்கலாம். தாயாகப் பாவிப்பதே சிறந்த முறை என்று எனக்குத் தோன்றுகிறது. அந்த அந்தச் சமயத்தில் தோன்றியபடி செய்யலாம்.
எழுந்தபின், பல் தேய்த்து, வாய் கொப்பளித்து, கண்கள், மூக்கு, காது முதலிய அங்கங்களை நன்றாகச் சுத்தம் செய்துகொள்ள வேண்டும். இதைச் செய்யும்பொழுது மெளனமாக ‘அச்யுத’ ‘அனந்த’ ‘கோவிந்த’ என்று மனத்தில் ஜபம் செய்துகொண்டே சுத்தி செய்துகொள்ள வேண்டும். முழுமுதற் பொருளாகிய கடவுளே அச்யுதன். எங்கும் பரவி நிற்கும் பொருளானபடியால், அனந்தன். அவனே நம்மைக் காக்கும் அப்பன் ஆனபடியால், கோவிந்தன்.
உணவு உட்கொள்வதற்கு முன், எப்போதும் கையை நன்றாகக் கழுவிக் கொண்டு அலம்பிக்க வேண்டும். ‘கோவிந்த’ என்று மனத்தில் சொல்லிவிட்டு, “இந்த உணவை எனக்குத் தந்தாய். என் உடலுக்கு இது சக்தி தர வேண்டும்” என்று வேண்டிக்கொண்டு சாப்பிட ஆரம்பிக்க வேண்டும். தண்ணீர் அல்லது காபி, மோர், பால் எதையேனும் பானம் செய்யும்போதும், இதுவே முறை. இவ்வாறு மனத்தைப் பக்குவப்படுத்தி உணவை உட்கொண்டால் மிகுந்த பயன் தரும். இதற்கு ஒரு நிமிஷம் போதும். யாருக்கும் இதனால் தொந்தரவு இல்லை. இதைச் செய்யும்போது வெளிவேஷம் வேண்டாம். விளம்பரப்படுத்துவதில் பக்தியின் சக்தி குறைந்து போகிறது.
குளிக்கும்பொது, தண்ணீரைக் கடவுள் சொரூபமாக அறிந்து குளிக்க வேண்டும். ஜலம் என்பது மிகச் சிறந்த பொருள். மகா சக்தி கொண்ட மூலப்பொருள். மின்னலிலும் இடியிலும் அதைப் பார்க்கலாம். ஜலத்தில் பகவான் இருக்கிறான். பரம்பொருளுக்கு ஜலம் மிகப் பிரியமான கோயில். அந்தச் சிறந்த பொருளில் நாம் குளிக்கிறோம். நம்முடைய அதிர்ஷ்டமே அதிர்ஷ்டம்!
“தண்ணீரே, நீ ஆகாயத்தினினு மகிழ்ந்து கீழே இறங்குகிறாய். ஆற்றில் குதித்து ஓடுகிறாய். மகிழ்ச்சியே உருவம் கொண்ட பொருள் நீ. உன் அபார சக்தியில் எனக்கும் கொஞ்சம் தருவாய். என் அகக்கண்ணைப் பெருக்குவாயாக. அறிவைத் தருவாயாக. உனக்குள் அடங்கி நிற்கிறது அமிருதம். எல்லா ருசியும் நீயே தருகிறாய். என் உடலைக் காத்து வருவாயாக. குழந்தை பேரில் தாய் செலுத்தும் அன்பு, உன்னிடம் நான் பெற்று வருகிறேன். அம்மா நீரே, நீ எந்த அழுக்கையும் சுத்தம் செய்துவிடுகிறாய். அதுவே உன் விளையாட்டு. என் உள்ளத்தையும் நீ அப்படியே சுத்தம் செய்துவிட வேண்டும். உன்னைப் போல் நிர்மலமாக நானும் ஆக வேண்டும். இந்த எண்ணத்தை என் உள்ளத்தில் உண்டாக்குவாயாக” என்று பிரார்த்தனை செய்து கொண்டே உடம்பை நன்றாகத் தேய்த்து ஸ்நானம் செய்ய வேண்டும்.
ஒருவர் எச்சில் மற்றொருவர் உணவில் எந்த விதத்திலும் சேரலாகாது. சமையல் வேலை செய்யும்போதும், பரிமாறும்போதும் கைகளை நன்றாகக் கழுவி வேலை செய்ய வேண்டும். பாரத தேசத்தில் உடை, உணவு விஷயங்களில் நிருமாணிக்கப்பட்ட எச்சில் தீட்டு முறைகள் எல்லா வைத்திய சாஸ்திரத்தைக் காட்டிலும் முக்கியமானவை. இவற்றைக் கைவிடுவது மடமை; நாகரிகத்துக்கு விரோதம். உணவைப் போலவே குடிக்கும் ஜலமும். அதில் எச்சில் சேரலாகாது. வாயில் வைத்து உறிஞ்சாமல் எடுத்துக் குடிப்பது நம்முடைய முன்னோர்கள் காத்து வந்த முக்கியமான பண்பாடு. அதை இந்தக் காலத்தில் பெரிதும் மறந்துவிட்டோம். ஆயினும் ஒருவர் வாயில் வைத்துக் குடித்த பாத்திரத்தைச் சுத்தம் செய்யாமல் மற்றொருவர் உபயோகிப்பது தவறு. எவ்வளவு அவசரமாயினும் இந்த ஆசாரத்தைக் காக்க வேண்டும்.
வாயில் விரல் வைத்தால் சுத்தம் செய்யாமல் மற்ற எதையும் அந்தக் கையால் தீண்டலாகாது.
ஒருவர் கை துடைத்த துணியை மற்றவர் உபயோகிக்கலாகாது.  அவரவர் தத்தம் கைத்துண்டு வைத்துக்கொண்டு தினசரி தோய்த்து உலர்த்தி வைத்துக்கொள்ள வேண்டும். வெளியிலிருந்து வீட்டுக்குள் நுழையும்போது கால்களை நன்றாகக் கழுவி ஈரத்தைத் துடைத்துக் கொண்டே செல்ல வேண்டும். வீடெல்லாம் ஈரம் செய்வது நல்ல பண்பாடல்ல. அழுக்குப்பட்ட ஜலம் எச்சிலைப் போலாகும்.
சாப்பிடும் இடம் தனியாகவும், மற்றக் காரியங்கள் செய்யும் இடம் சாத்தியமான வரையில் வேறாகவும் வைத்துக்கொள்ள வேண்டும். இது சாத்தியமில்லாவிட்டால், மிகக் கவனமாக வீட்டின் தூய்மையைப் பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டில் ஈக்கள் வராமலிருப்பதே சுத்தமாக இருப்பதற்கு அடையாளம்.
தட்டில் சாப்பிட்டால் அவரவர் தம் தட்டை நன்றாகக் கழுவித் துடைத்து வைத்துக்கொள்ள வேண்டும். எச்சில் இலைகளை ஈ மொய்க்க விடாமல் சீக்கிரம் எடுத்து இங்குமங்கும் போடாமல் சரியானபடி குப்பைக் கென்று வைக்கப்பட்ட தொட்டி அல்லது பாத்திரத்தில் போட்டுவிட வேண்டும்.
சாப்பிடுவதற்கு முன்னும், சாப்பிட பின்னும் உடனே வாயை நன்றாக  கொப்பளிக்க வேண்டும். இது முக்கியமான ஆசாரம்; பாரத தேசத்தைச் சேர்ந்த சிறந்த ஆசாரம். இந்தப் பண்பாட்டை நாம் விட்டுவிடலாகாது. கொப்பளிக்கும்போதும் நான் சொல்வேன் கேட்பீர்களானால்: ‘அச்யுத அனந்த கோவிந்த’ என்று சொல்லிக் கொப்பளிக்க வேண்டும். ‘நான் உண்ட உணவை எனக்கு ஆண்டவன் தந்தானே’ என்று நன்றி செலுத்தி வாய் கொப்பளிக்க வேண்டும்.
நம்முடைய கை அலம்பும் ஆசாரமும், வாய் கொப்பளிக்கும் ஆசாரமும், எச்சில் சேராமல் உண்ணும் ஆசாரமும், தினமும் குளிக்கும் ஆசாரமும் நூறு ஹெல்த் இன்ஸ்பெக்டர்களின் வேலைக்குச் சமம். கைகளை அலம்பி, வாய் கொப்பளிக்கும்போது, மெதுவாக ஜலத்தை உமிழ வேண்டும். இங்குமங்கும் சிதறும்படி உமிழலாகாது. உமிழ வேண்டிய இடத்திலேதான் உமிழ வேண்டும். மூக்கைச் சிந்தும்போதும் இதைக் கவனிக்க வேண்டும். இதை முக்கியப் பண்பாடாகக் கவனிக்க வேண்டும்.
உடுத்திருக்கும் துணியில் மூக்கைச் சிந்துவதோ, அலம்பிய கையைத் துடைப்பதோ கூடாது. அதற்காகத் தனித் துண்டை வைத்துக் கொள்ள வேண்டும். நல்ல வைதிகர்களின் நடவடிக்கைகளைக் கவனித்து வந்தால் நான் எழுதியிருப்பதைப் படித்தறிவதைக் காட்டிலும் எல்லாம் நன்றாகத் தெரிந்துகொள்ளலாம்.
இரவில் படுத்துக் தூங்கும்போது ஆண்டவனைத் தியானித்துத் தூங்க வேண்டும். இதற்கு ஒரு நிமிஷமே போதும். “இன்று நான் செய்த குற்றங்கள் இன்றோடு தீர்ந்து போக வேண்டும். அவை மறுபடி என்னைச் சேராதிருக்கச் செய்வாய்” என்று ஆண்டவனுக்குச் சொல்லிவிட்டுத் தூங்க வேண்டும். பகவான் உன் பக்கத்திலேயே இருக்கிறான்; எங்கேயோ தூரத்தில் அல்ல.
பக்தி பூர்ணமாக இருப்பின் ஆசாரக் குறைவு பாதிக்காது என்பது உண்மை. ஆனால் உண்மையான பக்தி இருக்கிறதா அல்லது வெறும் ஆசையா, அகம்பாவமா என்பதை அவரவர் தத்தம் உள்ளத்தை அவ்வப்போது சோதித்துப் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆண்டவனை மோசம் செய்ய முடியாது.

~~~~~~~

Home Page