ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், காஞ்சிபுரம்
தமிழ் இணைய தளம்


ஸ்ரீ காமகோடி ப்ரதீபம்
மலர் -10 இதழ் -3 ஸெளம்ய வருஷம் சித்திரை மாதம் -1
13-4-1969


பகவத்பாதாப்யுதயம்

ஸ்ரீ சங்கர பகவத்பாதரின் ஜீவிய சரித்திரத்தையும், அவருடைய விஜயயாத்திரை, எழுதிய கிரந்தங்கள்  முதலிய விவரங்களையும் பற்றிய ‘பகவத்பாதாப்யுதயம்’ என்ற இந்தச் சிறந்த நூலை, பிரஸித்த கவியும் பண்டிதருமாக விளங்கிய மஹாமஹோபாத்யாய லக்ஷ்மணஸூரி அவர்கள் இயற்றினார். இது 1927 ஆம் ஆண்டில் ஸ்ரீரங்கம் வாணீ விலாஸ அச்சகத்தில் அச்சிடப் பெற்றது. திவான்பகதூர் கே.எஸ். ராமஸ்வாமி சாஸ்திரியார் இதற்கு முகவுரை எழுதியுள்ளார். “மனித உலகத்திலேயே சிறந்தவர் ஸ்ரீ சங்கர பகவத்பாதர். அதற்கேற்ப இக்காலத்தில் கவிகளில் சிறந்தவர் ஸ்ரீ லக்ஷ்மணஸூரி அவர்கள். இவர் இந்தக் காவியத்தை எழுதியது மிகவும் பொருத்தமானது” என்று இந்த நூலின் முகவுரையில் ஸ்ரீ ராமஸ்வாமிசாஸ்திரிகள் எழுதியுள்ளார்.
ஸ்ரீ லக்ஷ்ணஸூரி அவர்கள் பல உயர்ந்த காவியங்களை எழுதிப் பெயர் பெற்ற கவியாகத் தென்தேசத்தில் விளங்கினார். இவருடைய சிறந்த இலக்கிய ஸேவையை மெச்சி அக்காலத்திய அரசாங்கம் மிக உன்னதமான ‘மஹாமஹோபாத்யாயர்’ என்ற பிருதத்தை இவருக்கு வழங்கியது. எளிய நடையில் அழகான ஸம்ஸ்கிருதச் சொற்களைக் கொண்டு இந்தக் காவியத்தை ஸ்ரீ லக்ஷ்மணஸூரி இயற்றியிருக்கிறார். இந்தக் காவியம் ஸ்ரீ சங்கர பகவத்பாதரின் ஜீவிய வரலாற்றைக் குறிப்பதாகும். இதில் உள்ள விசேஷம் யாதெனில், கவி தமது அபிப்பிராயமாகவே காவியத்தை எழுதாமல், மிகப் பழமையான சங்கர விஜயங்களை எல்லாம் பார்த்து ஆராய்ந்து, தாம் சொல்லும் விஷயங்களுக்கு அந்தப் பழைய நூல்களின் ஆதாரங்களையும் காண்பித்திருக்கிறார்.
உதாஹரணமாக, சில இடங்களில் பிராசீன சங்கர விஜயத்தை எடுத்துக் காட்டியிருப்பதைப் பார்ப்போம்.

  1. பக்கம் 51. நான்காவது ஸர்கத்தில், ‘மநீஷா பஞ்சக’ த்தைப் பகவத்பாதர் இயற்ற நேர்ந்த ஸந்தர்ப்பத்தைக் கூறும் இடத்தில், அவருக்கும் அந்த்யஜ ரூபத்தில் வந்தவனுக்கும் ஏற்பட்ட ஸம்பாஷணையை, ஆனந்தகிரீய சங்கர விஜயத்தில் உள்ள ச்லோகங்களைக் கொண்டே காண்பித்திருக்கிறார்.
  2. பக்கம் 61. ஜந்தாவது ஸர்கத்தில், வியாஸருக்கும் பகவத்பாதருக்கும் ஏற்பட்டுள்ள ஸம்வாதம் என்று குறிப்பிடும் இடத்தில், ஆனந்தகிரீய சங்கர விஜயத்தில் உள்ள ச்லோகத்தையே குறிப்பிட்டு எழுதியிருக்கிறார்.
  3. பக்கம் 64.இதே ஸர்கம், 61 ஆம் ச்லோகத்தில், என்று ஆனந்தகிரீய சங்கர விஜயத்தில் உள்ள பதங்களையே கொண்டு வழங்கியிருக்கிறார்.
  4. பக்கம் 76. ஆறாவது ஸர்கம், பன்னிரண்டாவது ச்லோகத்தில், என்று ஆனந்தகிரீய சங்கர விஜயத்தில் உள்ள சொற்களையே குறிப்பிட்டிருக்கிறார்.
  5. பக்கம் 84. ஆறாவது ஸர்கத்தின் முடிவில், ‘ஸர்வஜ்ஞ பீடாரோஹணம் செய்ய மனம் கொண்டவராக ஆசார்யர் புறப்பட்டார் என்று எழுதும்போது, சித்விலாஸீய சங்கர விஜயத்தில் ஸர்வஜ்ஞபீடாரோஹணம் பற்றிச் சொல்லியிருப்பதைக் குறிப்பிடுகிறார். “காஞ்சியில் ஸ்ரீ காமாக்ஷி ஸந்நிதியில் ஸ்ரீ சக்ரப் பிரதிஷ்டை செய்தபிறகு, ஸர்வஜ்ஞ பீடாரோஹணம் செய்ய எண்ணியவராய், அங்கிருந்த வித்வான்களை ஜயித்தார். அப்பொழுது ‘ஸர்வஜ்ஞ பீடாரோஹணம் செய்வது உசிதம்‘ என்று அசரீரி வாக்குக் கேட்டது. அதன் பிறகு தாம்ரபர்ணி தீரத்திலிருந்து வந்த வித்வான்களை ஜயித்து அவர்களாலும் போற்றப்பெற்றவாய், காஞ்சியில் ஸர்வஜ்ஞபீடம் எறினார்.
  6. பக்கம் 104-105. எட்டாவது ஸர்கத்தில், 80 ஆம் ச்லோகம் முதல் 89 ஆம் ச்லோகம் வரையில் உள்ள கதாபாகமாவது- ஸ்ரீ பகவத்பாதர் ஏழுமோக்ஷபுரிகளுள் ஒன்றான காஞ்சிக்கு வந்து, கம்பா ஸரஸ்ஸில் ஸ்நானம் செய்து ஸ்ரீ காமாக்ஷி. ஏகாம்ரநாதர், வரதராஜர் இவர்களை வழிபட்டு, அப்பொழுது அங்கிருந்த மன்னனைக் கொண்டு சிவன், சக்தி, விஷ்ணூ மூவருக்கும் ஆலயங்களைக் கட்டுவித்துப் பூஜை உத்ஸவாதி முறைகளை ஏற்படுத்தி,  ஜனங்களூக்குப் பக்தியை வளரச்செய்து, ஸ்ரீ காமாக்ஷி தேவியின் எதிரில் ஸ்ரீ சக்ரப் பிரதிஷ்டையைச் செய்து ப்ரஹ்மவித்யாபிவிருத்திக்காக அங்கே மடத்தையும் ஸ்தாபித்தார் என்று கவி கூறியுள்ளார். மேலும், பகவத்பாதர் மத்யார்ஜூன க்ஷேத்திரத்துக்குச் சென்று ஸ்ரீ மஹாலிங்க  மூர்த்தியைத் தரிசித்து. ‘ச்ருதி தாத்பர்யம் அத்வைதம் தான்’ என்பதை ஸ்ரீ மஹாலிங்க மூர்த்தியினிடமிருந்து அங்கீகரிக்கப்பெற்றார் என்பதையும் ஸ்ரீ லக்ஷ்மணஸூரி அவர்கள் இந்தக் காவியத்தின் எட்டாம் ஸர்கத்தில் கூறியிருக்கிறார்.

இந்தக் காவியத்தின் கர்த்தாவான மஹாமஹோபாத்யாய லக்ஷ்மணஸூரி அவர்கள், சிருங்கேரி பீடத்தில் ஆசார்யராக விளங்கிய ஸ்ரீ ந்ருஸிம்ஹ பாரதீ ஸ்வாமிகளின் ப்ரிய சிஷ்யர் ஆவர். இவர் பல கிரந்தங்களைப் பார்த்து ஆராய்ந்து, ‘இவற்றுள் ஆனந்தகிரீய சங்கர விஜயம் முக்கியப் பிரமாணக் கிரந்தம்’ என்பதைத் தீர்மானித்தே, இந்தக் காவியத்தில் பல இடங்களில் அதிலிருந்து மேற்கோகளைக் காட்டியுள்ளார்.
மேலும், ஸ்ரீ காஞ்சியில் ஆசார்ய பகவத்பாதர் ஸ்ரீ சக்ரப் பிரதிஷ்டையும் ஸ்ரீமட ஸ்தாபனமும் செய்ததையும் ஸந்தேஹத்துக்கு இடமின்றித் தெரிவித்துள்ளார். ஸ்ரீசங்கர பகவத்பாதரின் சரித்திரத்தை ஆராய்கிறவர்கள் ஸ்ரீ லக்ஷ்மணஸூரி அவர்கள் இயற்றிய இந்தக் காவியத்தை முக்கியமாகக் கவனிக்க வேண்டும். ஸ்ரீ லக்ஷ்மணஸூரி அவர்களுடைய புத்திரர்தாம் மாஜிசுப்ரீம் கோர்ட்டு நீதிபதியான ஸ்ரீ மான் T.L. வேங்கடராம ஜயர் அவர்கள்.

~~~~~~~

Home Page