ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், காஞ்சிபுரம்
தமிழ் இணைய தளம்


ஸ்ரீ காமகோடி ப்ரதீபம்
மலர் -10 இதழ் -1 கீலக வருஷம் மாசி மாதம்
12-2-1969


புண்ணியவதிகள்

இராமேச்வரம் பாரத நாட்டிலுள்ள புண்ணிய க்ஷேத்திரங்களுள் மிகச் சிறந்ததான ஒன்று. இராவண ஸம்ஹாரம் செய்தபின், ஸ்ரீ ராமர் சீதாபிராட்டி, அநுமான் முதலியவரோடும் பிறர் பலரோடும் புஷ்பக விமானத்தில் ஏறிவரும் வழியில் சமுத்திரக் கரையோரமானதும், தாம் கட்டிய சேதுவுக்கு அருகிலுள்ளதுமான இந்தப் புண்ணியத் தலத்தில் தங்கிச் சிவபிரானை லிங்கவடியில் ஸ்தாபித்துத் தமக்கு இராவண யுத்தத்தில் சேர்ந்த தோஷங்களைப் பரிகரித்துக் கொண்டார். அவர் பூஜித்த ஸ்தலமான அவ்விடம் இராமேசுவரம் என்றும் இராமநாதீசுவரம் என்றும் பெயர் பெறலாயிற்று. இந்தியாவின் பல பாகங்களிலிருந்தும் மக்கள் தினந்தோறும் இங்கு வந்துகொண்டிருக்கிறார்கள். இந்த க்ஷேத்திரத்தில் நம் ஜகத்குரு காமகோடி பீடாதிபதிகளான ஆசார்யர் அவர்கள், அக்னி தீர்த்தக் கரையில், ஸ்ரீ சங்கர மண்டபமொன்றைக் கட்டுவித்து, அதனில் ஸ்ரீ ஆதிசங்கர மூர்த்தியையும், அவர்களின் சிஷ்யர்களையும் பிரதிஷ்டிப்பித்து, ஸ்ரீ ஆஞ்சனேயர் விநாயகர் ஸரஸ்வதி முதலியோர்களையும் அமைத்து, பன்னிரண்டு மகாலிங்கங்கள், முப்பது மகான்கள், பதினெட்டுப் புண்ணியவதிகள் இவர்களின் உருவங்களையும் செதுக்குவித்து அவர்களின் தரிசனத்தால் இங்கு வரும் யாவரும் பக்திப் பெருக்கமும் புண்ணியமும் பெற அருளியுள்ளார்கள். மேலே குறிக்கப்பெற்ற பதினெட்டுப் புண்ணியவதிகளின் சரித்திரங்களை ஒன்றன்பின் ஒன்றாகச் சுருக்கமாக அமைக்க விரும்பி, முதலில் ஒளவையாரின் சரித்திரத்திலிருந்து ஆரம்பிப்போம்.
1.ஒளவையார்
ஒளவையார் பெயரை அறியாத தமிழர் எவரும் இருக்க முடியாது. பழமொழிகளில் பெரும்பாலனவற்றை ‘ஒளவை வாக்கு’ என்றே யாவரும் கூறுவார்கள். ‘ஒளவை வாக்கு தெய்வ வாக்கு’ என்பதும் ஒரு பழமொழி. சங்க நூல்களில் ஒளவை பாடிய பாடல்கள் பல உண்டு. ஸ்ரீ சுந்தரமூர்த்தி நாயனார் கயிலாசத்துக்கு எழுந்ததை அறிந்து, விநாயகரின் உதவியினால் இவரும் கயிலாசம் சென்றார் என்ற வரலாறும் உண்டு. பிற்காலச் சோழர் காலத்திலேயும் ஓர் ஒளவையார் இருந்ததாகக் கேள்விப்படுகிறேன். ஒரே ஒளவையார் தெய்வத் தன்மை பெற்ற ஒரு நெல்லிக் கனியை உண்டதனால் நீண்ட காலம் இருந்தார் என்றும் சொல்லுவர்.
அவருடைய காலம் பிறப்பு வளர்ப்பு முதலியவைபற்றித் திட்டமாக நம்மால் ஒன்றும் சொல்ல முடியாவிட்டாலும், இவரைவிட அறிவிற் சிறந்தவர் தமிழ்நாட்டில் வேறு எந்தப் பெண்மணியும் இருந்ததில்லை என்பதை எவரும் ஒப்புக் கொள்வர். இவர் அரசர்களோடும் வறுமை மிகுந்த எளியரோடும் சரிசமமாகப் பழகி அனைவருக்கும் உதவி செய்திருக்கிறார் என்பது திண்ணம். இவர் பாடியுள்ள தனிப்பாடல்கள் ஆயிரத்துக்கும் அதிகமானவை. அவற்றில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வரலாற்றைக் கூறுவது; அவை எல்லாம் மிகச் சுவையுள்ளவை. அவர் வரலாற்றில் மிகச் சில சம்பவங்களையும், அவர் இயற்றிய நூல்களையும் பற்றிச் சிறிது காண்போம்.

ஒளவையும் அதியமானும்
அதியமான் தமிழ்நாட்டில் புகழ் பெற்ற வள்ளல்களுள் ஒருவன். அவன் ஒரு சிற்றரசன்; சங்க காலத்தவன். அவன் ஒளவையாரிடம் பெருமதிப்புக் கொண்டு அவரைத் தம் ஸமஸ்தானப் புலவராகவும் நண்பராகவும் கொண்டிருந்தான். அவனுக்கு ஓர் அருமையான நெல்லிக் கனி கிடைத்தது. ஒரு பழம் கிடைப்பதற்குப் பன்னிரண்டு வருஷங்கள் காத்திருக்க வேண்டுமாம். அதை உண்டவர் நீண்ட நாள் வாழ்வர் என்ற வரலாறும் நாட்டில் பரவியிருந்தது. அப்படிப்பட்ட பழம் ஒன்றை ஒருவர் அரசனிடம் கொண்டு வந்து கொடுத்தார். அதை அவன் தான் உண்ணாமல் அருகில் இருந்த ஒளவைக்குக் கொடுத்துப் பெரும்புகழ் கொண்டான். அந்த அருமையை ஒளவை அவனை நோக்கி, “நஞ்சு உண்டும் சாகாத நீலகண்டனைப் போல் என்றும் வாழ்வாய்” என்று வாழ்த்தினார்.
காஞ்சீபுரத்தில் இருந்த தொண்டைமான் அதியமானுக்கு ஒரு பகைவன். அவன் மிகுந்த படைப்பலம் படைத்தவன். அதியமான் அவனோடு சமாதானத்துடன் வாழ விரும்பி ஒளவையாரைத் தூது அனுப்பினான். தொண்டைமான் ஒளவையாரை மரியாதையுடன் வரவேற்றாலும், தன் பெருமையை அவருக்குக் காட்டி அதியமானைப் பயமுறுத்த எண்ணி, ஆயுதங்கள் பலவாறாக அடுக்கி வைத்திருந்த தன் களரியைக் காட்டினான். அவற்றைக் கண்ட ஒளவையார் அவன் கருவத்தை அடக்க எண்ணி, “ஜயா! உங்கள் ஆயுதங்கள் அழகாக எண்ணெய் பூசப்பட்டு, உறைகளில் வைக்கப்பட்டு, மெருகு குலையாமல் இருக்கின்றன. அவற்றை நீர் கையாளாமல் பூக்களால் பூசித்து வருகிறீர்கள் போலும். என் அரசனுடைய படைகளோ பகைவர்களைப் போரில் குத்தி இரத்தம் தோய்ந்தும், முறிந்தும் பழுது பார்ப்பதற்காகக் கொல்லன் உலைக்கூடத்தில் கிடக்கின்றன” என்றார். இதைக் கேட்ட மன்னன் வெட்கத்தால் தலைகுனிந்தான்.
அக்காலத்தில் புல்வேளூர் என்ற ஊரில் பூதன் என்ற கொடையாளி ஒருவன் இருந்தான். அவன் ஒளவையாரிடம் மிகுந்த பக்தி கொண்டவன். அவனுடைய வயலுக்குக் கிணற்றுநீர் தானே பெருகிப் பாயும்படி இவர் பாடி அவ்வாறே செய்தார். அவன் கொடைப் பெருமையைக் குறித்து இவர், “வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வட்டும். முரமுரவென் றேபுளித்த மோரும்-பரிவுடனே, புல்வேளூர்ப் பூதன் புகழ்புரிந் திட்ட சோறு, எல்லா உலகும் பெறும்” என்று பாடினார். காரி என்ற ஒருவன் தம்மிடம் காட்டிய அன்பிற்காக இவர் அவன் வயலில் களையெடுத்தார். சேர மன்னனிடம் சென்று காரிக்குக் கொடுப்பதற்காக ஓர் ஆடு யாசிக்க, அவன் ஒளவையாரின் பெருமையை உணர்ந்து பொன்னால் செய்த ஒர் ஆட்டை அளித்தான். அதைக் கண்ட புலவர், “சேரா! உன்னால் பொன்னாடு” என்று வாழ்த்தினார். அதுமுதல் அந்த நாட்டின் வளமை பெருகிற்று. இவ்வாறு ஒளவையாரைப் பற்றிய வரலாறுகள் மிகப் பல.
இவர் இயற்றிய நூல்கள்:- ஆத்திசூடி, கொன்றை (வேந்தன்) வேய்ந்தோன்., மூதுரை, நல்வழி, அசதிக்கோவை, (ஒளவை) குறள், விநாயகர் அகவல், நான்மணிக்கோவை, அருந்தமிழ் மாலை, தரிசனப்பத்து, பந்தனந்தாதி, நான்மணி மாலை முதலியன. முதல் நான்கு நூல்களும் இளைஞர்களுக்காகவே எழுதப்பட்ட நீதி நூல்கள். நல்லொழுக்க வாழ்வுக்கு அவை வேர்களாகும். அசதி என்ற இடையன் இவர்க்குக்கஞ்சி இட, அவன்மீது இவர் பாடிய கோவை சிறந்த பிரபந்தமாகும்.
சுந்தரமூர்த்தி சுவாமிகள் கயிலாயத்துக்குச் செல்வதை அறிந்த இவர் தாமும் செல்ல விரும்பினார். அப்பொழுது இவர் விநாயக பூஜை செய்துகொண்டிருந்தார். இவர் விரைவைக் கடவுள் நோக்கி, “நிதானமாகப் பூஜை செய்க” என்று அருள, இவர் ‘சீதக்களபம்’ என்று தொடங்கும் விநாயகர் அகவல் என்ற நூலைப் பாடித் துதித்தார். (இந்த நூல் ஸ்ரீ ஜகத்குரு ஆணையால் உரையுடன் வெளியிடப்பெற்றுள்ளது.) வழிபாட்டின் முடிவில் விநாயகர் தம் துதிக்கையால் அம்மையைத் தூக்கிச் சுந்தர்ருக்கு முன்னால் கயிலையில் சேர்ப்பித்தார். இந்த வரலாற்றைக் குறிக்கும் உருவமே இராமேசுவர ஸ்ரீ சங்கர மடத்தில் சிலாரூபத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
குறள் என்னும் நூல் திருவள்ளுவர் இயற்றிய நூலையே குறிக்கும். ஆனால் ஒளவையார் அருளிய குறள் வீட்டு நெறி, திருவருள், தன்பால் என்னும் மூன்று பிரிவுகளையுடையதாயும், 310 குறள்களையுடையதாயும், பல இடங்களில் திருமந்திரம் இரகசியார்த்தங்களைக் கொண்டதாயும் அமைந்துள்ளது. இதன் போக்கு வேதாந்தத்தைப் பின்பற்றியதாகும். பிற நூல்களைப் பற்றி அதிகம் தெரியவில்லை.
தஞ்சை ஜில்லா திருத்தருப்பூண்டி தாலுகாவில், இடும்பாவனம் என்ற ஊருக்கு அருகில், துளசியார்பட்டி என்ற கிராமத்தில், வளவனாற்றின் கீழ் கரையில் ஒளவையாருக்கு ஒரு கோவில் இருக்கிறது. விக்கிரம் விருத்தாப்பியக் கோலத்துடன் காண்கிறது. இதற்குச் சில மானியங்களும் உண்டு. இந்தக் கோயிலுக்கு அருகில் கொல்லன் மேடு என்று ஓர் இடம் இருக்கிறது. ஒரு சமயம் கடல் பெருகி வெள்ளம் பாய்ந்தபோது, “கொல்லன் திடலொழியக் கொள்ளாய் பெருங்கடலே” என்று ஒளவையார் பாடி அவ்வீட்டைக் காப்பாற்றினார் என்ற ஒரு கதை அங்குச் சொல்லப்பெறுகிறது.
இந்தப் பெருமாட்டியின் வரலாறு இங்கு மற்றும் சொல்லவிலை. புலமையிலும் தெய்வத்தன்மையிலும் அருளிலும் முதலிடம் பெற்ற அம்மையாரின் திருவுருவத்தை, இராமேச்சுவரத்தில் கட்டுவித்த சங்கர மண்டபத்தில் புண்ணிய வதிகளின் வரிசையில் முதலிடம் கொடுத்தப் பிரதிஷ்டை செய்த மகான் ஸ்ரீ ஜகத்குரு அவர்களின் ஆழ்ந்த அறிவையும் அருளையும் தீர்க்கதரிசனத்தையும் போற்றுவதையன்றி நாம் சொல்லக் கூடியது ஒன்றுமில்லை.
ஒளவையாரின் பெருமையைத் தமிழ்ச் சான்றோர்கள் ஆராய்ந்து, அவரால் தமிழும் தமிழ்நாடும் பெற்ற பெருமைகளை உலகுக்கு அறிவிப்பார்களாக.

~~~~~~~

Home Page