ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், காஞ்சிபுரம்
தமிழ் இணைய தளம்


ஸ்ரீ காமகோடி ப்ரதீபம்
மலர் -21 இதழ் -9,10 ரௌத்ர வருஷம் ஐப்பசி- கார்த்திகை1
அக்டோபர்- நவம்பர் - 1980


சகல தெய்வங்களையும் கண்ட ஸ்ரீசத்குரு தியாகராஜ ஸ்வாமிகள்

இன்னிசையால் எம்பெருமானைப் பாடிய பல மகான்களைப் படைத்தது நம் பாராதநாடு. அவர்கள் புகழ் உடம்பு எய்தினாலும் அவர்கள் பாடிய கீர்த்தனங்கள் இன்றும் பிரகாசிக்கின்றன. அவர்களுள் ஸ்ரீ வால்மீகியின் அம்சமாக ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள் அவதரித்தார் என்று கூறுவர் சான்றோர்.

ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள் ஸ்ரீ ராமனை ப்ரத்யக்ஷமாகத் தரிசனம் செய்து ஸ்ரீராமபிரானின் கல்யாண குணங்களிலும் வடிவழகிலும் ஈடுபட்டுப் பல ஆயிரக்கணக்கான கீர்த்தனங்கள் பாடி அருளினார். அவர் எவ்வளவு கீர்த்தனங்கள் பாடினார் என்பது நமக்குத் தெரியாது. ஆனால் நமக்கு இன்று கிடைப்பது அவருடைய கீர்த்தனங்கள் எழுநூறுதான். ஸ்ரீ ஸ்வாமிகள் தம் தாய்மொழியான "சுந்தரத்" தெலுங்கு மொழியில் சொற்சுவை, பொருட் சுவை, நிறைந்த பல கீர்த்தனங்களை அமைத்துள்ளார். ஸ்ரீ ஸ்வாமிகளுக்கு இஷ்ட தெய்வம் ஸ்ரீ ராமசந்திர மூர்த்தியென்றாலும் மற்றயெல்லாத் தெய்வங்களின் மீதும் அருளொழுக பல கீர்த்தனங்களை இசைத்துள்ளார்.

முழு முதற்கடவுளாகிய ஸ்ரீ விக்னேச்வரப் பெருமானை நினைத்து பல கீர்த்தனங்கள் பாடியுள்ளார். அவைகளுள் "பங்காள" ராகத்தில் அமைந்த "கிரிராஜ ஸுதாவும்", "சௌராஷ்டிர" ராகத்தில் இயற்றப்பட்ட " ஸ்ரீ கணபதி நீயும்" பற்றியும் இங்கு பார்ப்போம். " ஸ்ரீ பார்வதியின் மைந்தனே! கருணை உள்ளவனே! தேவேந்திரன் முதலியோர் பூஜிக்கும் திருப்பாதனே! யானைமுகனே! என்னைக் காப்பாற்று. கணநாதா! மேலான தெய்வமே! எல்லா நலனும் தருபவனே! பாம்பை வளை போல் அணிந்தவனே! தடைகளை நீக்குபவனே! சிவனுக்கு அன்பு செய்யும் திருமகனே! எனக்கு அருள் புரிவாயாக" என்பதே இக்கீர்த்தனையின் முக்ய அம்சமாகும்.

இத்தகைய சிறப்பு மிகுந்த ஸ்ரீ கணேசப் பெருமானை மேலும் “சௌராஷ்ட்ரா" இராகத்தில் அமைந்துள்ள " ஸ்ரீ கணபதி நீயும்" என்ற கீர்த்தனையில் ஸ்ரீ ஸ்வாமிகள் மிகவும் அழகாகச் சிறப்பித்துள்ளார். "பலாபழம், தேங்காய், நாவற் பழம் முதலியவற்றைக் கொண்டு அடியவர்கள் நிவேதனம் செய்யவும் அதன் பிறகு அவைகளை உண்டு காலில் சதங்கைளைக் கட்டி தரையில் அழுத்தி நர்த்தனம் செய்யும் ஸ்ரீ விநாயகனை எப்பொழுதும் ஹரியின் திருவடிதனை இதய கமலத்தில் இருத்தி வணங்கும் ஸ்ரீ தியாகராஜனாகிய நான் வணங்குகிறேன்" என்றும் விளக்குகிறார்.

உலகத்தில் ஆக்கல் தொழிலை பிரம்மனும் காத்தல் தொழிலைத் திருமாலும், அழித்தல் தொழிலை சிவனும் செய்கிறார்கள் என்பது ஆன்றோர் வாக்கு. அக்கூற்று மெய்பிக்க ஸ்ரீ மஹாதேவனாக ஸ்ரீ சிவபெருமானைப் பற்றி ஸ்ரீ ஸ்வாமிகள் பல கீர்த்தனங்கள் செய்துள்ளார். அவைகளுள் :அடாணா" இராகத்தில் அமைந்த "இலவோ ப்ரணதார்த்திகருட" கீர்த்தனையும், "பந்துவராளி" இராகத்தில் இயற்றப்பட்ட "சிவ சிவயென ராதா" என்ற கீர்த்தனையும் அடிக்கடி இசைவாளர்களால் பாடப்பட்டு வருகின்றன.

"பஞ்சநதீசனே! இரவும் பகலும் வெகுகாலமாய் உன்னையே நினைந்துருகி, அடைக்கலம் விழுந்த என்னிடம் தயை காட்டாத உனக்குச் ’சங்கரன்’ என்றும் "ப்ரணதார்த்திஹரன்" என்றும் யாரப்பா பெயர் கொடுத்தார்கள்" என்று ஸ்ரீ ஸ்வாமிகள் திருவையாற்றில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ பஞ்சநதீச்வரரை நினைந்து உள்ளம் உருகிப் பாடியுள்ளார்.

"உலகத்தின் மாயையான ஆசையை ஒழிக்க வேண்டும். எப்பொருள்களிலும் பற்றுதல் வைத்தல் கூடாது. நல்லோர்களையே தெய்வமாக மதித்து எப்பொழுதும் சிவ நாம பஜனை செய்ய வேண்டும்" என்ற அறிய கருத்தை "சிவ சிவயென ராதா" என்ற கீர்த்தனையின் மூலம் நமக்குத் தெளிவு படுத்தியுள்ளார். அடுத்து உலக நாயகியான "பராசக்தி" யை நினைத்து ஸ்ரீ ஸ்வாமிகள் பல கீர்த்தனங்களை இசைத்துள்ளார். "மத்யமாவதி" இராகத்தில் அமைந்த " ஸ்ரீ வினாயகுனி" என்ற கீர்த்தனையும், "சுத்தசாவேரி" இராகத்தில் அமைந்த "தாரிணி தெலுஸுகொன்ட்டி" என்ற கீர்த்தனையும் உள்ளத்தை உருக்கக் கூடியவைகளாகும்.

"பராசக்தி, காமட்சி, பிரம்மனின் வேண்டுகோளால் அவதரித்த நீ தீயோருக்கே அருள் செய்து கவனித்துக் கொண்டிருந்தால், நல்லோர்கள் உனக்காக காத்திருந்து துவண்டு வருந்துகிறார்கள். உன் அருளாலேயே எனக்கு வாக்குவன்மை கிட்டியது. உன் பிள்ளை போல் என்னை நீ நினைத்து காப்பாற்ற வேண்டும்" என்று ஸ்ரீ ஸ்வாமிகள் ஆதி பராசக்தியை " ஸ்ரீ வினாயகுனி" என்ற கீர்த்தனை மூலம் வேண்டிக்கொள்கிறார்.

மேலும் ஸ்ரீ ஸ்வாமிகள் "சுத்தசாவேரி" க்ருதியில் "அலங்காரமும் மிக்க உன்னை பிரம்மன், இந்திரன், தும்புரு, நாரதர்கள், சேவித்து அழியாத ஆனந்தம் அடைகிறார்கள். முன்வினைகளைத் தீர்த்து உன் பெரும் கருணையால் முனிவர்கள் வீடு பெற்றார்கள். வெள்ளிக்கிழமையன்று கண்ணைக்கவரும் சிறந்த அலங்காரத்துடன் உன் தரிசனம் கிடைத்ததன் காரணம் அறிந்தேன். வாழ்க்கை முழுவதும் உன்னைத் தியானம் செய்வதுதான் முக்திக்கு வழி என்றும் பெரியோர்கள் சொல்லத் தெரிந்துக் கொண்டேன்" என்று உளமார ஸ்ரீ ஸ்வாமிகள் ஸ்ரீ அம்பிகையை வேண்டிக்கொள்கிறார். இக் கீர்த்தனையை ஸ்ரீ ஸ்வாமிகள் வெளியே போய்விட்டு வீடு திரும்பும் போது, தம் மனைவி திரிபுரஸுந்தரியுடன் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டு பாடியதாக ஒரு கதை வழங்குகிறது.

கருணைபொழியும் ஸ்ரீ கந்த பெருமானான ஸ்ரீ சண்முகக் கடவுளைப் பற்றியும் பல கீர்த்தனங்கள் பாடியுள்ளார். அவைகளுள் "தோடி" இராகத்தில் அமைந்த "நீ வண்டி தைவமுனு" என்ற கீர்த்தனை மிகவும் சிறப்புடையதாகும். "ஆறுமுகனே! பிரம்மாவிடம் குற்றம் கண்டபோது சிருஷ்டிக்கு வேற்றானை வைத்தவனே! யாராலும் வெல்ல முடியாத சூரபத்மனை வென்ற அழகனே! அன்பர்க்கு எளியவனே! உன்னைப் போன்ற தெய்வத்தை நான் எங்கும் கண்டதில்லை" என்பதே இக்கீர்த்தனையின் முக்ய கருத்தாகும். மேலும் "ஸூப்ரதீபம்" என்ற இராகத்தில் அமைந்த "வாசிவாஹன" என்ற கீர்த்தனையில் "அழகிய சிறந்த மயில்வாஹனா! அசுரர்கள் என்னும் புல்லைத் தீயால் அழித்த வீரா! வீரத்திலும், அந்தஸ்திலும், குலத்திலும், சிறந்த நீ எங்களுக்கு நன்மை செய்ய வேண்டும்" என்று ஸ்ரீ ஸ்வாமிகள் சிறப்பித்துள்ளார்.

ஸ்ரீ நாரதர் போன்ற தேவாதி தேவர்களையும் தம் கீர்த்தனை மூலம் பக்தி செலுத்தும்படி பாடி அருளியுள்ளார். அவைகளுள் "தர்பார்" இராகத்தில் அமைந்த "நாரத குருஸ்வாமி" என்ற கீர்த்தனை ஸ்ரீ நாரதரின் பெருமையைப் பற்றிப் புகழ்ந்து பாடப்பட்டதாகும். "முனிவர்கள் பக்தர்கள் எல்லோருக்கும் வழி காட்டிய தெய்வம் ஸ்ரீ நாரத ஸ்வாமியே! என்னையும் நீ காப்பாற்ற வேண்டுமென்று" இக்கீர்த்தனை மூலம் பிரார்த்திக்கிறார். தாம் வாழ்ந்த திருவையாற்றின் புண்யஸ்தலத்தின் பெருமையை "முகாரி" ராகத்தில் அமைந்த "முறிபெமு கலிகை" என்ற கீர்த்தனையிலும் வெளிப்படுத்தியுள்ளார். ஸ்ரீ ராமாயண காவியத்தில் சிறப்புக்கான ஸ்ரீ ராமனைத் தவிர முக்ய பாத்திரங்களின் பெருமையைத் தனது கீர்த்தனை மூலம் தெளிவுபடுத்தியுள்ளார். மேலும் ஸ்ரீ ஸ்வாமிகள் திருமாலின் வாகனமான ஸ்ரீகருடாழ்வாரின் சிறப்பையும் தனது உணர்ச்சி மிகுந்த கீர்த்தனை மூலம் உருவகப்படுத்தியுள்ளார். ஸ்ரீ ஸ்வாமிகள் தாம் ஆக்கிய கீர்த்தனங்களில் நவக்கிரஹங்களின் வலிமையைப் பற்றி "ரேவகுப்தி" என்ற ராகத்தில் அமைந்த "க்ரஹபலமே" என்ற கீர்த்தனை மூலம் நாம் அறியலாம். கடைசியாக ஸ்ரீவாமிகள் ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமிகள் சிறப்புப் பற்றியும் "வஸந்த வராலி" ராகத்தில் அமைந்த "பாஹி ராம தூத" என்ற கீர்த்தனையும், "சுருட்டி" ராகத்தில் அமைந்த "கீதார்த்தமு" என்ற கீர்த்தனையும் மிகவும் சிறப்புடையதாகும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறுபவரும், சிறந்த ராம பக்தரும் ஆனவரே; கம்பீர தோற்றமும், வரம் கொடுக்கும் அருளும் உள்ள ஆஞ்சனேயரே! என்னை எப்பொழுதும் காப்பாற்ற வேண்டும்" என்று ஸ்ரீ ஸ்வாமிகள் "பாஹி ராம தூத" என்ற கீர்த்தனை மூலம் விளக்குகிறார்.

இவ்வாறாக ஸ்ரீ ஸ்வாமிகள் பக்தர்கள் பூஜிக்கும் எல்லாத் தெய்வங்களின் வலிமையைப் பற்றியும், பெருமையைப் பற்றியும் தனது க்ருதிகள் மூலம் எடுத்துக் கூறியுள்ளார். எனவே சகல தெய்வங்களையும் கண்ட ஸ்ரீ ஸ்வாமிகள் பெருமையை அவருடைய ஆராதனை விழா நடக்கும் சமயத்தில் நாம் நினைவில் கொள்வோமாக!!

~~~~~~~

Home Page