உயர்வு

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

திருவாய்மொழி

திருவாய்மொழியை அருளியவர் நம்மாழ்வார். இவருக்குச் சடகோபன் என்பது திருநாமம். இவர் திருக்குருகூர் என்னும் ஆழ்வார் திருநகரியில் அவதரித்தவர். இவர் அவதரித்தது வைகாசி விசாகம். இவர் அருளிய பிரபந்தங்களுள் இது சரமப் பிரபந்தமாகும். திருவாய்மொழி த்வயமந்திரத்தின் பொருளைத் தெளிவாக உணர்த்துகிறது என்றும், அர்த்த பஞ்சகத்தை விளக்கிச் சொல்கிறது என்றும் கூறுவார்கள். நம்மாழ்வாரைப் பிரபன்னஜன கூடஸ்தரென்றும், 'அவயவி' என்றும் சொல்கிறார்கள். மற்ற திவ்வியப் பிரபந்தங்களைப்போல் திருவாய்மொழியை வீதிகளில் சொல்லுவதில்லை, ஒரிடத்தில் அமர்ந்தே ஸேவிப்பது வழக்கம்.

முதற்பத்து

உயர்வு

' பகவான் கல்யாண குணங்களை உடையவன் உடலில் உயிர் இருப்பதுபோல், எல்லாப் பொருள்களிலும் இருப்பவன் என்று அவனுடைய பரத்துவத்தைக்கூறி,

அவனது சுடரடி தொழுதொழு என்று தம் நெஞ்சுக்கு உபதேசிக்கிறார் ஆழ்வார்.

கலி விருத்தம்

அமரர்கள் அதிபதியைத் தொழு

2675. உயர்வற வுயர்நல முடையவன் யவனவன்,

மயர்வற மதிநலம் அருளினன் யவனவன்,

அயர்வறும் அமரர்கள் அதிபதி யவனவன்,

துயரறு சுடரடி தொழுதெழென் மனனே.

பகவானே என் உயிர்

2676. மனனக மலமற மலர்மிசை யெழுதரும்,

மனனுணர் வளவிலன் பொறியுணர் வவையிலன்,

இனனுணர் முழுநலம் எதிர்நிகழ் கழிவினும்,

இனனில னெனனயிர் மிகுநரை யிலனே.

பகவானே நலனுடையவன்

2677. இலனது வுடையனி தெனநினை வரியவன்,

நிலனிடை விசும்பிடை, உருவினன் அருவினன்,

புலனொடு புலனலன் ஒழிவிலன் பரந்த,அந்

நலனுடை யருவனை நணுகினம் நாமே.

எல்லாமாய் நிற்பவன் பகவானே

2678. நாமவ னிவனுவன் அவளிவ ளவளெவள்,

தாமவ ரிவருவர் அதுவிது வுதுவெது,

வீமவை யிவையுவை யவைநலந் தீங்கவை,

ஆமவை யர்யவை யாய்நின்ற அவரே.

அந்தர்யாமி இருப்பவன் பகவான்

2679. அவரவர் தமதம தறிவறி வகைவகை,

அவரவ ரிறையவ ரெனவடி யடையவர்கள்,

அவரவ ரிறையவர் குறைவில ரிறையவர்,

அவரவர் விதிவழி யடையநின் றனரே.

வேத ப்ரமாணங்களால்தான் பகவானை உணரலாம்

2680. நின்றன ரிருந்தனர் கிடந்தனர் திரிந்தனர்,

நின்றில ரிருந்திலர் கிடந்திலர் திரிந்திலர்,

என்றுமொ ரியல்வினர் எனநினை வரியவர்,

என்றுமொ ரியல்வொடு நின்றவெந் திடரே.

எங்கும் நிறைந்த பகவான்.

2681. திடவிசும் பெரிவளி நீர்நில மிவைமிவை,

படர்பொருள் முழுவது மாயவை யவைதொறும்,

உடல்மிசை யுயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன்,

சுடர்மிகு சுருதியு ளிவையுண்ட சுரனே.

மும்மூர்த்திகளின் செயல்களைச் செய்பவன் இவனே

2682. சுரரறி வருநிலை விண்முதல் முழுவதும்,

வரன்முத லாயவை முழுதுண்ட பரபரன்,

புரமொரு மூன்றெரித் தமரர்க்கு மறிவியந்து,

அரனய னெனவுல கழித்தமைத் துளனே.

எல்லாக் காலங்களிலும் எங்கும் இருப்பவன் இவன்

2683. உளனெனி லுளனவ னுருவமிவ் வுருவுகள்,

உளனல னெனிலவன் அருவமிவ் வருவுகள்,

உளனென விலனென விவைகுண முடைமையில்,

உளனிரு தகைமைய டொழிவிலன் பரந்தே.

ஒவ்வொரு பொருளிலும் மறைந்திருப்பவன் இவன்

2684. பரந்ததண் பரவையுள் நீர்தொறும் பரந்துளன்,

பரந்தஅண் டமிதென நிலவிசும் பொழிவற,

கரந்திசி லிடந்தொறும் இடந்திகழ் பொருடொறும்

கரந்தெங்கும் பரந்துள னிவையுண்ட கரனே.

இப்பத்துப் பாடல்களும் மோட்சம் அளிக்கும்

2685. கரவிசும் பெரிவளி நீர்நில மிவைமிசை,

வரனவில் திறல்வலி யளிபொறை யாய்நின்ற,

பரனடி மேல்குரு கூர்ச்சட கோபன்சொல்,

நிரனிறை யாயிரத் திவைப்த்தும் வீடே.

நேரிசை வெண்பா

இப்பகுதி, மக்களின் மயக்கத்தைப் போக்கும்

உயர்வே பரன்படியை யுள்ளதெல்லாந் தான்கண்டு,

உயர்வேத நேர்கொண் டுரைத்து, - மயர்வேதும்

வாராமல் மானிடரை வாழ்விக்கும் மாறன்சொல்,

வேராக வேவிளையும் வீடு.

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is திருவாய்மொழித் தனியன்கள்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  வீடுமின்
Next