வீடுமின்

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

திருவாய்மொழி

முதற்பத்து

வீடுமின்

'உடல் நிலையானது அன்று என்றறிந்து, மனம், வாக்கு, செயல்களை பகவானுக்கே இட்டு, அகங்காரம் பற்று முதலியவற்றை நீக்கி, உயர்வற உயர் நலமுடைய ஸ்ரீமந்நாராயணனின் திருவடிகளை ஆச்ரயிங்கள்' ¢என்று ஆழ்வார் ஈண்டு உபதேசிக்கிறார்.

வஞ்சித்துறை

பகவானைத் தவிர மற்ற எல்லாவற்றையும் விட்டுவிடுங்கள்

2686. வீடுமின் முற்றவும், - வீடுசெய்து, உம்முயிர்

வீடுடை யானிடை, - வீடு செய்ம்மினே.

ஆக்கைகள் நிலையில் பகவானை நினை

2687. மின்னின் நிலையில், - மன்னுயி ராக்கைகள்,

என்னு மிடத்து,இறை - உன்னுமின் நீரே.

இறையைச் சேர்மின்

2688. நீர்நும தென்றிவை, - வேர்முதல் மாய்த்து, இறை

சேர்மின் உயிர்க்கு, அத - னேர்நிறை யில்லே.

எம்பெருமானைப் பற்று

2689. இல்லது முள்ளதும், - அல்ல தவனுரு,

எல்லையி லந்நலம், - புல்குபற் றற்றே.

பற்று நீங்கினால் ஆத்மா மோக்ஷம் பெறும்

2690. அற்றது பற்றெனில், - உற்றது வீடுயிர்,

செற்றது மன்னுறில், - அற்றிறை பற்றே.

பகவான் எல்லாப் பொருள்களாகவும் இருக்கிறான்.

2691. பற்றில னீசனும், - முற்றவும் நின்றனன்,

பற்றிலை யாய்,அவன் - முற்றி லடங்கே.

எல்லா ஐசுவர்யங்களும் அவளே

2692. அடங்கெழில் சம்பத்து,- அடங்கக்கண்டு, ஈசன்

அடங்கெழி லஃதன்று, - அடங்குக வுள்ளே.

மனோவாக்குக் காயங்களைப் பகவானிடம் செலுத்து

2693. உள்ளமு ரைசெயல், - உள்ளவிம் மூன்றையும்,

உள்ளிக் கெடுத்து,இறை - யுள்ளிலொ டுங்கே.

உடல் நீங்கும் நாளை எதிர்பார்த்திரு

2694. ஒடுங்க அவன்கண், - ஒடுங்கலு மெல்லாம்,

விடும்பின்னு மாக்கை, - விடும்பொழு தெண்ணே

நாரணன் கழல் சேர்

2695. எண்பெருக் கந்நலத்து, - ஒண்பொரு ளீறில,

வண்புகழ் நாரணன், - திண்கழல் சேரே

இப்பத்துப் பாடல்களும் நன்மை தரும்

2696. சேர்த்தடத், தென்குரு - கூர்ச்சட. கோபன்சொல்,

சீர்த்தொடை யாயிரத்து, - ஒர்த்தவிப் பத்தே.

நேரிசை வெண்பா

இப்பத்தும் நாரணன் அருளைத் தரும்

வீடுசெய்து மற்றெவையும் மிக்கபுகழ் நாரணன்றாள்,

நாடுநலத் தாலடைய நன்குரைக்கும், - நீடுபுகழ்

வண்குருகூர் மாறனிந்த மாநிலத்தோர் தாம்வாழப்,

பண்புடனே பாடியருள் பத்து.

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is உயர்வு
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  பத்துடை
Next