முனியே

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

திருவாய்மொழி

பத்தாம் பத்து

முனியே

எம்பெருமான் வந்து தோன்றி ஆழ்வாரின் ப்ரக்ருதி ஸம்பந்தத்தை நீக்கி அடியார்களின் கூட்டத்தில் கொண்டு சேர்த்தான். தாம் செய்யவேண்டியதைச் செய்துமுடித்தவராய் அவா அற்றுப் பெருவீடு பெற்றபடியை ஆழ்வார் இத்திருவாய் மொழியில் கூறுகிறார்.

திருமாலை தாம் அடைந்த பான்மையை

ஆழ்வார் உரைத்தருளுதல்

கலி நிலைத்துறை

திருமாலே!நின்னைச் சிக்கெனப் பிடித்தேன்

3766. முனியே!நான்முக னே!முக்கண்

ணப்பா.என் பொல்லாக்

கனிவாய்த் தாமரைக் கடகரு

மாணிக்கமே!என்கள்வா,

தனியேன் ஆருயிரே!என்தலை

மிசையாய் தவந்திட்டு,

இனிநான் போகலொட் டேன்ஒன்றும்

மாயம்செய் யேலென்னையே.

திருமாலே மாயம் செய்யாதே ஆணையிட்டேன்

3767. மாயம்செய் யேலென்னை உன்திரு

மார்வத்து மாலைநங்கை,

வாசம்செய் பூங்குழ லாள்திரு

வாணைநின் னாணைகண்டாய்,

நேசம்செய் துன்னோடென் னையுயிர்

வேறின்றி ஒன்றாகவே,

கூசம்செய் யாதுகாண் டாயென்னைக்

கூவிக்கொள் ளாய்வந்தந்தோ!

திருமாலே நீயன்றி எனக்கு வேறு பற்றுக்கோடு இல்லை

3768. கூவிக்கொள் ளாய்வந்தந் தோ!என்பொல்

லாக்கரு மாணிக்கமே,

ஆவிக்கோர் பற்றுக்கொம்பு நின்னலால்

அறிகின்றி லேன்யான்,

மேவித் தொழும்பிர மன்சிவ

னிந்திர னாதிக்கெல்லாம்,

நாவிக் கமல முதற்கிழங்

கே!உம்பர் அந்ததுவே.

திருமாலே என்னைக் கைவிடாதே

3769. உம்ப ரந்தண் பாழேயோ!

அதனுள்மிசை நீயேயோ,

அம்பர நற்சோதி!அதனுள்

பிரமன் அரன்நீ.

உம்பரும் யாதவரும் படைத்த

முனிவன் அவன்நீ,

எம்பரம் சாதிக்க லுற்றென்னைப்

போரவிட் டிட்டாயே.

எனக்கு வேறு கதியே இல்லை தெவிட்டாத அமுது c

3770. போரவிட் டிட்டென்னை நீபுறம்

போக்கலுற்றால். பின்னையான்

ஆரைக்கொண் டெத்தையந்தோ!

எனதென்பதென் யானென்பதென்,

தீர இரும்புண்ட நீரது

போலவென் ஆருயிரை

ஆரப் பருக,எனக் காரா

வமுதா னாயே.

என் அன்பே!என்னை முழுவதும் விழுங்கிவிடு

3771. எனக்கா ராவமு தாய்என

தாவியை இன்னுயிரை,

மனக்கா ராமைமன்னி யுண்டிட்டா

யினியுண் டொழியாய்,

புணக்கா யாநிறத்த புண்டரீ

கக்கட் செங்கனிவாய்,

உனக்கேற்கும் கோல மலர்ப்பாவைக்

கன்பா!என் அன்பேயோ!

வராகனே இனி உன்னை நான் விடுவேனோ?

3772. கோல மலப்பாவைக் கன்பா

கியவென் அன்பேயோ,

நீல வரையிரண்டு பிறைகவ்வி

நிமிர்ந்த தொப்ப,

கோல வராகமொன் றாய்நிலங்

கோட்டிடைக் கொண்டஎந்தாய்,

நீலக் கடல்கடைந் தாயுன்னைப்

பெற்றினிப் போக்குவனோ?

முதல் தனி வித்தே!உன்னை அடைந்தேன் இனி விடேன்

3773. பெற்றினிப் போக்குவ னோவுன்னை

என்தனிப் பேருயிரை,

உற்ற இருவினையாய் உயிராய்ப்

பயனாய் அவையாய்,

முற்றவிம் மூவுலகும் பெருந்

தூறாய்த் தூற்றில்புக்கு,

முற்றக் கரந்தொளித் தாய்!என்

முதல்தனி வித்தேயோ!

முடிவில்லாதவனே!உன்னை நான் எப்பொழுது கூடுவேன்?

3774. முதல்தனி வித்தையோ முழுமூ

வுலாகாதிக் கெல்லாம்,

முதல்தனி யுன்னையுன்னை எனைநாள்

வந்து கூடுவன்நான்,

முதல்தனி அங்குமிங்கும் முழுமுற்

றுறுவாழ் பாழாய்,

முதல்தனி சூழ்ந்தகன் றாழ்ந்துயர்ந்த

முடிவி லீயோ!

ஞான இன்பமே என் ஆசை ஒழியுமாறு என்னைச் சூழ்ந்தாயே

3775. சூழ்ந்தகன் றாழ்ந்துயர்ந்த முடிவில்

பெருமபர் ழேயோ,

சூழ்ந்தத னில்பெரிய பரநன்

மலர்ச்சோ தீயோ,

சூழ்ந்தத னில்பெரிய சுடர்ஞான

வின்ப மேயோ,

சூழ்ந்தத னில்பெரிய என்னவா

அறச்சூழ்ந் தாயே!

இவற்றைப் படித்தோர் உயர் பிறப்பாளர்

3776. அவாவறச் சூழ்அரியை அயனை

அரனை அலற்றி,

அவாவற்று வீடுபெற்ற குருகூர்ச்

சடகோபன் சொன்ன,

அவாவிலந் தாதிகளால் இவையா

யிரமும், முடிந்த

அவாவிலந் தாதியிப் பத்தறிந்

தார்பிறந் தார்உயர்ந்தே.

நேரிசை வெண்பா

பக்தி செலுத்தியே திருமாலைக் கலந்துயர்ந்தான் மாறன்

முனிமாறன் முன்புரைசெய் முற்றின்பம் நீங்கித்,

தனியாகி நின்று தளர்ந்து. - நனியாம்

பரமபத்தி யால்நைந்து பங்கயத்தாள் கோனை,

ஒருமையுற்றுச் சேர்ந்தான் உயர்ந்து.

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is சூழ்விசும்பு
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  இராமானுச நூற்றந்தாதித் தனியன்கள்
Next