ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
நம்மாழ்வார் திருவடிகளே சரணம்
அழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்வியப் பிரபந்தம் ஸம்பூர்ணம்
ஸ்ரீ
ஸ்ரீ மதே ராமாநுஜாய நம
இராமானுச நூற்றந்தாதித் தனியன்கள்
வேதப்பிரான்பட்டர் அருளிச்செய்தவை
நேரிசை வெண்பா
அமுதனார் திருவடிகள் பழவினைகள் நீக்கும்
முன்னை வினையகல மூங்கிற் குடியமுதன்,
பொன்னங் கழற்கமலப் போதிரண்டும், என்னுடைய
சென்னிக் கணியாகச் சேர்த்தினேன், தென்புலத்தார்க்
கென்னுக் கடவுடையேன் யான்?
கட்டளைக் கலித்துறை
நெஞ்சே இரமானுச நூற்றந்தாதியை ஒத இசைக
நயந்தரு பேரின்ப மெல்லாம் பழுதென்று நண்ணினர்பால்,
சயந்தரு கீர்த்தி இராமா னுசமுனி தாளிணைமேல்,
உயர்ந்த குணத்துத் திருவரங் கத்தமுது, ஓங்கும்அன்பால்
இயம்பும், கலித்துறை அந்தாதி ஓத இசைநெஞ்சமே!
(சோமாசியாண்டான் அருளியதென்பர்)
இராமானுச உன் திருநாமங்கள் என் நாவில் தங்கும்படி அருள்
சொல்லின் தொகைகெண் டுனதடிப் போதுக்குத் தொண்டுசெய்யும்,
நல்லன்பர் ஏத்துமுன் நாமமெல் லாமென்றன் நாவினுள்ளே,
அல்லும் பகலும் அமரும் படிநல்கு அறுசமயம்
வெல்லும் பரம, இராமா னுச!இதென் விண்ணப்பமே.
(வேதப்பிரான்பட்டர் அருளியதென்பர்)
அமுதன் அந்தாதி பாடித் தந்தான் இனி நமக்குக் குறையில்லை
இனியென் குறைநமக் கெம்பெரு மானார் திருநாமத்தார்,
முனிதந்த நூற்றெட்டுச் சாவித் திரியென்னும் நுண்பொருளை,
கனிதந்த செஞ்சொல் கலித்துறை யந்தாதி பாடித்தந்தான்,
புனிதன் திருவரங் கத்தமு தாகிய புண்ணியனே.