ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
திருவாய்மொழி
இரண்டாம் பத்து
வாயுந்திரை
உலகிலுள்ள எல்லா உயிரினங்களும் தம்மைப் போலவே பகவானை விட்டுப் பரிந்து வருந்துகின்றன என்று நினைத்தார் நம்மாழ்வார், நாரை, அன்றில், கடல், காற்று, சந்திரன் ஆகியவற்றைக் கண்டார், அவற்றிற்கு உண்டான சில தன்மைகளை இயற்கையாக எண்ணாமல், அவை பகவானைவிட்டுப் பிரிந்ததால் வருந்துகின்றன என்று நினைத்து, அவற்றிற்காக இரங்குகிறார்.
தரவு கொச்சகக் கலிப்பா
நாராய்!திருமாலினிடம் நெஞ்சைப் பறி கொடுத்தாயா?
2785. வாயுந் திரையுகளும் கானல் மடநாராய்,
ஆயும் அமருலகும் துஞ்சிலும்நீ துஞ்சாயால்,
நோயும் பயலைமையும் மீதூர எம்மேபோல்,
நீயும் திருமாலால் நெஞ்சம்கோட் பட்டாளே?
அன்றிலே நீயும் திருத்துழாய் மாலைக்கு ஏங்குகிறாயா?
2780. கோட்பட்ட சிந்தையயாய்க் கூர்வாய அன்றிலே,
சேட்பட்ட யாமங்கள் சேரா திரங்குதியால்,
ஆட்பட்ட எம்மேபோல் நீயும் அரவணையான்,
தாட்பட்ட தண்டுழாய்த் தாமம்கா முற்றாயே?
கடலே!யாமுற்ற துன்பம் நீயும் உற்றாயோ?
2782. காமுற்ற கையறவோ டெல்லே இராப்பகல்
நீமுற்றக் கண்டுயிலாய் நெஞ்சுருகி யேங்குதியால்,
தீமுற்றத் தென்னிலங்கை யூட்டினான் தாள்நயந்த,
யாமுற்ற துற்றாயோ? வாழி கனைகடலே!
வாடையே!நீயும் என்னைப்போல் உறங்குவதில்லையே!
2788. கடலும் மலையும் விசும்பும் துழாய்எம்போல்,
சுடர்கொ ளிராப்பகல் துஞ்சாயால் தண்வாடாய்,
அடல்கொள் படையாழி அம்மானைக் காண்பான் c,
உடலம்நோ யுற்றாயோ வூழிதோ றூழியே?
மேகமே!நீயும் மதுசூதனனிடம் பாசம் வைத்தாயா?
2789. ஊழிதோ றூழி யுலகுக்கு நீர்கொண்டு,
தோழியரும் யாமும்போல் நீராய நெகிழ்கின்ற,
வாழிய வானமே!நீயும் மதுசூதன்,
பாழிமையிற் பட்டவன்கட் பாசத்தால் நைவாயே?
சந்திரனே!ஆழியானை நம்பி ஒளி இழந்தாயோ!
2790. நைவாய எம்மேபோல் நாண்மதியே!நீயிந்நாள்,
மைவான் இருளகற்றாய் மாழாந்து பெருமானார்,
ஐவாய் அரவணைமே லாழிப் பெருமானார்,
மெய்வாச கம்கேட்டுன் மெய்ந்நீர்மை தோற்றாயே?
இருளே!எங்களை மேலும் துன்புறுத்துகிறாயே!
2791. தோற்றோம் மடநெஞ்சம் எம்பெருமான் நாரணற்கு,எம்
ஆற்றாமை சொல்லி அழுவோமை நீநடுவே,
வேற்றோர் வகையில் கொடிதா யெனையூழி,
மாற்றாண்மை நிற்றியோ? வாழி கனையிருளே
உப்பங்கழியே!நீயும் எம்பெருமான் செயலில் அகப்பட்டாயோ?
2792. இருளின் திணிவண்ணம் மாநீர்க் கழியே!போய்,
மருளுற் றிராப்பகல் துஞ்சிலும்நீ துஞ்சாயால்,
உருளும் சகடம் உதைத்த பெருமானார்,
அருளின் பெருநசையால் ஆழாந்து நொந்தாயே?
நந்தாவிளக்கே!நீயும் எம்போல் வெதும்புகிறாயோ?
2793. நொந்தாராக் காதல்நோய் மெல்லாவி யுள்ளலர்த்த,
நந்தா விளக்கமே!நீயும் அளியத்தாய்,
செந்தா மரைத்தடங்கண் செங்கனிவா யெம்பெருமான்
அந்தாமத் தண்டுழாய் ஆசையால் வேவாயே?
கண்ணா!இனி என்னை விட வேண்டா
2794. வேவாரா வேட்கைநோய் மெல்லாவி யுள்ளுலர்த்த,
ஓவாதி ராப்பகல் உன்பாலே வீழ்த்தொழிந்தாய்,
மாவாய் பிளந்து மருதிடைபோய் மண்ணளந்த,
மூவா முதல்வா!இனியெம்மைச் சோரேலே.
இவற்றைப் படிப்போர் வைகுந்தம் எய்துவர்
2795. சோராத எப்பொருட்கும் ஆதியாம் சோதிக்கே,
ஆராத காதல் குருகூர்ச் சடகோபன்,
ஓரா யிரம்சொன்ன அவற்று ளிவைபத்தும்,
சோரார் விடார்கண்டீர் வைகுந்தம் திண்ணெனவே.
நேரிசை வெண்பா
மாறன் அருள் கிட்டும்
வாயுந் திருமால் மறையநிற்க, ஆற்றாமை
போய்விஞ்சி மிக்க புலம்புதலாய், - ஆய
அறியாத வற்றோ டணைந்தழுத மாறன்,
செறிவாரை நோக்குந் திணிந்து.