திண்ணன் வீடு

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

திருவாய்மொழி

இரண்டாம் பத்து

திண்ணன் வீடு

ஆழ்வார்க்கு உண்டான ஆற்றாமை தீரும்படி பகவான் எதிரில் வந்து முகம் காட்டி நின்றான். அவனுடைய குணங்களை அநுபவிக்கத் தொடங்கிய ஆழ்வார், நிலைகுலையப் பண்ணும் ஸெளலப்ய குணத்தை விட்டு, பரத்துவ குணத்தை அநுபவிக்கிறார். அவ்வாறே அநுபவிக்கும் பொழுது திருமாலின் பரத்துவத்தை அவதாரத்திலே எடுத்துக் காட்டுகிறார்.

கலி விருத்தம்

கண்ணன் கண்களே கண்கள்

2796. திண்ணன் வீடு முதல்மு ழுதுமாய்,

எண்ணின் மீதியன் எம்பெரு மாயன்,

மண்ணும் விண்ணுமெல் லாமுட னுண்ட,நங்

கண்ணன் கண்ணல்ல தில்லையோர் கண்ணே.

கோபால கோளரியே அருள்வார்

2797. ஏபா வம்!பர மே!ஏ ழுலகும்,

ஈபா வஞ்செய் தருளா லளிப்பாரார்,

மாபா வம்விட அரற்குப் பிச்சைபெய்,

கோபால கோளரி யேறன் அன்றியே?

திருவிக்கிரமனே. உயர்ந்த தெய்வம்

2798. ஏறனைப் பூவனைப் பூமகள் தன்னை,

வேறின்றி விண்தொழத் தன்னுள் வைத்து,

மேல்தன்னை மீதிட நிமிர்ந்துமண் கொண்ட,

மால்தனில் மிக்குமோர் தேவும் உளதே?

எம்பெருமானுக்கே பூவும் பூசனையும் தரும்

2799. தேவு மெய்பொரு ளும்ப டைக்க,

பூவில் நான்முக னைப்ப டைத்த,

தேவ னெம்பெரு மானுக் கல்லால்,

பூவும் பூச னையும் தகுமே?

கண்ணனை உண்மையாக அறிவார் இலர்

2800. தகும்சீர்த் தன்தனி முதலி னுள்ளே,

மிகும்தே வும்எப் பொருளும் படைக்க,

தகும்கோ லத்தா மரைக்கண்ண னெம்மான்,

மிகும்சோ திமேல றிவார் யவரே?

ஞானச் சுடரே பாற்கடற் பள்ளியான்

2801. யவரும் யாவையு மெல்லாப் பொருளம்,

கவர்வின்றித் தன்னு ளடுங்க நின்ற,

பவர்கொள் ஞானவேள் ளச்சுடர் மூர்த்தி,

அவரெம் ஆழியம் பள்ளி யாரே.

மாயன் மனக்கருத்தை அறிவார் யார்?

2802. பள்ளி யாலிலை யேழுல கும்கொள்ளும்,

வள்ளல் வல்வ யிற்றுப் பெருமான்,

உள்ளு ளாரறி வார்அ வன்றன்,

கள்ள மாய மனக்க ருத்தே?

மாயப்பிரான் செயலை வேறு யாரால் செய்ய முடியும்?

2803. கருத்தில் தேவு மெல்லாப் பொருளும்,

வருத்தித்த மாயப் பிராணையன்றி, ஆரே

திருத்தித் திண்ணிலை மூவுலகும், தம்முள்

இருத்திக் காக்கு மியல்வி னாரே?

எல்லா உலகங்களையும் படைத்தவன் கண்ணன்

2804. காக்கு மியல்வினன் கண்ண பெருமான்,

சேர்க்கை செய்துதன் னுந்தி யுள்ளே,

வாய்த்த திசைமுக னிந்திரன் வானவர்,

ஆக்கி னான்தெய் வவுல குகளே.

தேவர்கள் யாவரும் கருட வாகனனைப் பணிவர்

2805. 'கள்வா!எம்மையு மேழுல கும்,நின்

னுள்ளே தோற்றிய இறைவா!' என்று,

வெள்ளேறன் நான்முக னிந்திரன் வானவர்,

ஆக்கி னான்தெய் வவுல குகளே.

இவற்றைப் படித்தோர்க்கு ஊனமே ஏற்படாது

2806. ஏத்த வேழுல குங்கொண்ட கோலக்

கூத்த னை,குரு கூர்ச்சட, கோபன்சொல்,

வாய்த்த வாயிரத் துள்ளிவை பத்துடன்,

ஏத்த வல்லவர்க் கில்லையோ ரூனமே.

நேரிசை வெண்பா

இவற்றைப் படியுங்கள்:ஊனமின்றி வாழலாம்

திண்ணிதா மாறன் றிருமால் பரத்துவத்தை,

நண்ணியவ தாரத்தே நன்குரைத்த, - வண்ணமறிந்

தற்றார்கள் யாவர் அவரடிக்கே ஆங்கவர்பால்,

உற்றாரை மேலிடா தூன்.

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is வாயுந்திரை
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  ஊனில்வாழ்
Next