ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
திருவாய்மொழி
இரண்டாம் பத்து
ஊனில்வாழ்
ஆதாம் பகவானைப் பிரிந்த ஆற்றாமை தீர, பகவான் வந்து கலந்ததாலுண்டான இன்பத்தை அனுபவிக்க இவ்வுலகில் யாரேனும் உளரோ என்று
நம்மாழ்வார் சிந்தித்தார், உண்டியே உடையே என்று உகந்து ஓடும் இவ்வுலகில் ஒருவலும் இல்லை என்பதை அறிந்தார், நித்ய சூரிகளின் கூட்டத்தில் புகுந்து பகவானை இடைவிடாமல் அனுபவிக்கும் காலம் என்றைய தினம் வாய்க்குமோ என்று தம் குறைகளை இத்திருவாய்மொழியில் கூறுகிறார்.
கலி விருத்தம்
பகவான் சேர்க்கை மிகவும் சுவைக்கும்
2807. ஊனில்வாழ் உயிரே
நல்லைபோ உன்னைப்பெற்று,
வானுளார் பெருமான்
மதுசூத னென்னமான்,
தானும்யா னுமெல்லாம்
தன்னுள்ளே கலந்தொழிந்தோம்,
தேனும்பா லும்நெய்யும்
கன்னலும் அமுதுமொத்தே.
அறியாதன அறிவித்தவன் மாயன்
2808. ஒத்தார்மிக் காரை
இலையாய மாமாய,
ஒத்தாயெப் பொருட்கு
முயிராய்,என் னைப்பெற்ற
அத்தாயாய்த் தந்தையா
யறியாதன அறிவித்த,
அத்தா, c செய்தன
அடியே னறியேனே.
தொண்டு செய்யத் தூண்டியவன் வாமனன்
2809. அறியாக் காலத்துள்ளே
யடிமைக்க ணன்புசெய்வித்து,
அறியா மாமாயத்
தடியேனை வைத்தாயால்,
அறியா மைக்குறளாய்
நிலம்மாவலி மூவடியென்று,
அறியாமை வஞ்சித்தா
யெனதாவி யுள்கலந்தே.
என் ஆத்மாவுக்கும் c ஆத்மா
2810. எனதாவியுள் கலந்தபெரு
நல்லுதவிக் கைம்மாறு,
எனதா விதந்தொழிந்தே
னினிமீள்வ தென்பதுண்டே,
எனதாவி யாவியும்நீ
பொழிலேழு முண்டவெந்தாய்,
எனதாவி யார்? யானார்?
தந்தநீகொண் டாக்கினையே.
வராகனே!நின் பாதத்தை நான் சேர்ந்தேன்
2811. இனியார் ஞானங்களா
லெடுக்க லெழாதவெந்தாய்,
கனிவார் வீட்டின்பமே
யென்கடற் படாவமுதே,
தனியேன் வாழ்முதலே!
பொழிலேழு மேனமொன்றாய்,
நுனியார் கோட்டில்வைத்தாய்
உன்பாதம் சேர்ந்தேனே.
இராமபிரானே!நின்னையே அடைந்தேன்
2812. சேர்ந்தார் தீவினைகட்
கருநஞ்சைத் திண்மதியை,
தீர்ந்தார் தம்மனத்துப்
பிரியா தவருயிரை,
சேர்ந்தே போகலகொடாச்
சுடரை அரக்கியைமூக்
கீர்ந்தா யை,அடியேன்
அடைந்தேன் முதல்முன்னமே.
கண்ணா!என்னை நினைவில் வை
2813. முன்நல் யாழ்பயில்நூல்
நரம்பின் முதிர்சுவையே,
பன்ன லார்பயிலும்
பரனே!பவித்திரனே,
கன்ன லே!அமுதே!
கார்முகிலே!என்கண்ணா,
நின்னலா லிலேன்கா
ணென்னைநீ குறிக்கொள்ளே.
பிறவித்துயர் கடிந்து நின்னை எய்தினேன்
2814. குறிக்கொள் ஞானங்களா
லெனையூழி செய்தவமும்,
கிறிக்கொண் டிப்பிறப்பே
சிலநாளி லெய்தினன்யான்,
உறிக்கொண்ட வெண்ணெய்பா
லொளித்துண்ணு மம்மான்பின்,
நெறிக்கொண்ட நெஞ்சனாய்ப்
பிறவித் துயர்கடிந்தே.
பவித்திரனைப் பாடிக் களித்தேன்
2815. கடிவார் தண்ணந்துழாய்க்
கண்ணன்விண் ணவர்பெருமான்,
படிவா னமிறந்த
பரமன் பவித்திரன்சீர்,
செடியார் நோய்கள்கெடப்
படிந்து குடைந்தாடி,
அடியேன் வாய்மடுத்துப்
பருகிக் களித்தேனே.
அடியார் கூட்டத்தை எப்பொழுது கூடுவேன்?
2816. களிப்பும் கவர்வுமற்றுப்
பிறப்புப்பிணி மூப்பிறப்பற்று,
ஓளிக்கொண்ட சோதியுமாய்
உடன்கூடுவ தென்றுகொலோ,
துளிக்கின்ற வானிந்நிலம்
சுடராழி சங்கேந்தி,
அளிக்கின்ற மாயப்பிரான்
அடியார்கள் குழாங்களையே?
அடியாருடன் கூடி நின்றாடுமின்
2817. குழாங்கொள் பேரரக்கன்
குலம்வீய முனிந்தவனை,
குழாங்கொள் தென்குருகூர்ச்
சடகோபன் தெரிந்துரைத்த,
குழாங்கொள் ஆயிரத்துள்
இவைபத்து முடன்பாடி,
குழாங்களா யடியீருடன்
கூடிநின் றாடுமினே.
நேரிசை வெண்பா
மனமே!மாறன் அடியாருடன் ஆடு
ஊன மறவேவந் துள்கலந்த மாலினிமை
யானது, அனுபவித்தற் காந்துணையா, - வானில்
அடியார் குழாங்கூட ஆசையுற்ற மாறன்,
அடியா ருடன்நெஞ்சே!ஆடு.