ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேச வைபவம்
வடநாட்டுத் திருப்பதிகள்
திருச்சிங்கவேள்குன்றம் (அஹோபிலம்)
சென்னை - பம்பாய் ரயில்பாதையிலுள்ள கடப்பா ஸ்டேஷனில் இறங்கி, அங்கிருந்து பஸ்ஸில் (பஸ் ஸ்டாண்டு 1 1/2 மைல் உள்ளது) . 54 மைல் தூரம் சென்று அர்லகட்டா என்ற ஊரில் இறங்கி அங்கிருந்து வேறு பஸ்ஸில் 1 மணி நேரத்தில் அஹோபிலம் போய்ச் சேரலாம். இவ்வூரில் திருப்பதி தேவஸ்தானத்தாரால் நடத்தப்படும் விடுதி ஒன்றும், இரண்டு சாப்பாட்டுக் கடைகளும், தபாலாபீஸ் முதலியவைகளும் உண்டு. இங் அஹோபில நரஸிம்ஹன், வராஹ நரஸிம்ஹன். மாலோல நரஸிம்ஹன், வராஹ நரஸிம்ஹன், மாலோல நரஸிம்ஹன், யோகாநந்த நரஸிம்ஹன், பாவந நரஸிம்ஹன், காரஞ்ச நரஸிம்ஹன், சக்ர வட நரஸிம்ஹன், பார்கவ நரஸிம்ஹன், ஜ்வாலா நரஸிம்ஹன் என்ற 9 நரஸிம்ஹர்களின் கோவில்கள் இருப்பதால் இதற்கு நவந்ருஸிம்ஹ க்ஷேத்ரம் என்று வேறு பெயரும் உண்டு. மலைமீது ப்ருஹ்லாத நரஸிம்ஹர், வாராஹ நரஸிம்ஹர் ஸந்நிதிகள் உண்டு.
ப்ரஹ்லாத வரதன் ஸந்நிதி - (கீழே அஹோபிலம்) இதைக் கீழ் அஹோபிலம் என்றும் சொல்வார்கள். அஹோபில மடத்தின் தலைமை ஸ்தலமே இந்தக் கோவில்தான்.
மூலவர் - ப்ரஹ்லாதவரதன், லக்ஷ்மீ நருஸிம்ஹன், வீற்றிருந்த திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.
உத்ஸவர் - மாலோல நரஸிம்ஹர் தவிர, மற்ற 8 நரஸிம்ஹர்களின் உத்ஸவ மூர்த்திகளும் இங்கே உள்ளனர். மாலோல உத்ஸவர் அஹோபில மடத்து அழகிய சிங்கரின் திருவாராதனத்தில் உள்ளது.
தாயார் - அம்ருதவல்லி, செஞ்சுலக்ஷ்மீ.
தீர்த்தம் - இந்த்ர, ந்ருஸ்ம்ஹ, பாபநாச, கஜ, பார்க்கவ தீர்த்தங்கள்.
விமானம் - குகை விமானம்.
ப்ரத்யக்ஷம் - அஹோபில மடத்து முதல் அழகிய சிங்கருக்கு யோகி ரூபத்தில் ப்ரத்யக்ஷம்.
அஹோபில நரஸிம்ஹர் - (மேல் அஹோபிலம்) கீழ் அஹோபிலத்திலிருந்து 6 மைல் தூரம் தார்சாலை வழியாக மலையேறி மேல் அஹோபிலத்தை அடையலாம். சில ஸமயங்களில் பஸ் போவதும் உண்டு. இது ஒரு குடை வரைக் கோயில்.
மூலவர் - அஹோபில நரஸிம்ஹர்.
தாயார் - லக்ஷ்மீ.
தீர்த்தம் - பவநாசினி.
விமானம் - குகை விமானம்.
ப்ரத்யக்ஷம் - ப்ருஹ்லாதாழ்வார்.
விசேஷங்கள் - ஸீதையை தேடிவரும் ராமன் தம்பி லக்ஷ்மீந்ருஸிம்ஹனை 5 ச்லோகங்களால் துதித்ததால் ஸீதை கிடைத்துவிடுவதாக ஐதீஹம். அஹோபில மடத்தில் மூலவர் லக்ஷ்மீ ந்ருஸிம்ஹராகவும் உத்ஸவர் சக்ரவர்த்தி திருமகனாகவும் ஸேவை ஸாதிக்கிறார்கள். இந்த மூர்த்தி ஸ்வயம்பு மூர்த்தியாம். நரஸிமஹன் வேடுவனாகவந்து செஞ்சுலக்ஷ்மித் தாயாரை மணந்ததாக புராண வரலாறு. மாமனார் வேடுவர் குலமான படியால் இன்றும் மாசி மாதம் நடக்கும் ப்ருஹ்மோத்ஸவத்தின்போது, மறவர்கள், கூற்றும், ஆர்ப்பாட்டங்களும் சீர்வரிசைகளும் நடைபெறுகின்றன. மலை கருடாத்ரி, கருடாசலம், காருடசைலம் என்றழைக்கப்படுகிறது. பவநாசினி என்ற நீர்வீழ்ச்சியின் கரை வழியாக மலைமேல் ஏறிச்சென்று வராஹநரஸிம்மனை ஸேவித்துவிட்டு, இன்னும் மேலே சென்று (மேல் அஹோபிலத்திலிருந்து மொத்தம் 1 12 மைல்) செங்குத்தான மலைமேல் ஒரு சிறிய ஸந்நிதியில் உள்ள மாலோல நரஸிம்ஹனை ஸேவிக்கலாம். இங்கிருந்து சுமார் 2 மைல் தூரத்தில் ஸ்ரீ நரஸிம்ஹன் வெளிப்பட்டதாகக் கூறப்படும் தூண் உள்ளது. இவ்விடத்திற்கு தகுந்த துணையுடன் தான் செல்ல வேண்டும்.
ஜ்வாலா நரஸிம்ஹன் - இவரை ஸேவிக்கச் செல்லும் வழி மிகவும் கடினம். மற்ற நரஸிம்ஹர்களை ஸேவிக்கவும் தகுந்த வழித்துணையுடன் தான் செல்லவேண்டும்.
குறிப்பு - இது காட்டு மிருகங்கள் நடமாட்டமுள்ள பிரதேசமாகையால் ஸேவைகளை எல்லாம் பிற்பகலுக்குள் முடித்துக் கொள்ளவேண்டும்.
இந்த ஸ்தலத்தில்தான் அஹோபில மடத்து முதலாவது அழகிய சிங்கர்,
அஹோபில மலையில் எழுந்தருளியிருக்கும் ந்ருஸிம்ஹனை, ஸேவிக்கும் தருணம், பெருமாள் சந்யாசி ரூபத்தில் வந்து, கடாக்ஷித்து பின்னர் அவருக்கு ப்ரேஷ மந்திரத்தை தானே உபதேசித்தருளி, அவரை துறவரத்தில் சேர்த்து அங்கு எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ ராமாநுஜ ஸந்நிதியிலிருந்து காஷாய வஸ்த்ரங்களையும் த்ருண்டத்தையும் அநுக்ரஹித்து, ஸ்ரீ சடகோப ஜீயர் என்ற நாமமிட்டு ஒரு வைஷ்ணவ ஸ்தாபனத்தை நிறுவுமாறு நியமித்தருளியதாக புராண வரலாறு. பதினேழு வயதுகளே நிரம்பிய சடகோப ஜீயர் எந்த உத்ஸவ மூர்த்தியைத்தான் ஸ்வீகரிப்பது என்று தெரியாமல் திகைக்க, பெருமாளை தியானம் செய்ய, ஸ்ரீ பெரிய பிராட்டியாருடன் விளங்கும் ஓர் உத்ஸவ மூர்த்தியான மாலோல நரஸிம்ஹன் அவர்கையில் வரப்பெற்று அன்று முதல் அஹோபில மடத்து ஜீயர்கள், பரம்பரை பரம்பரையாக அந்த மூர்த்தியை அவர்கள் ஸஞ்சரிக்குமிடமெல்லாம் எழுந்தருளப்பண்ணிக்கொண்டு ஆராதித்து வருகிறார்கள்.
அஹோபில மடத்து ஜீயர்களில் ஒருவரான 6வது பட்டம் அழகிய சிங்கர் ஸ்ரீஷஷ்டபராங்குச யதீந்த்ர மஹாதேசிகன் மேல் அஹோபிலத்திலுள்ள அஹோபில ந்ருஸிம்ஹர் ஸந்நிதியில் குகையில் ப்ரவேசித்து த்யானத்திலிருப்பதாக ஐதீஹம். மேல் அஹோபிலம் ஸந்நிதியின் நடுவில் இந்தக் குகையை சிமெண்ட் போட்டு மூடி இருப்பதை இன்றைக்கும் அங்கே காணலாம். அங்கே சிரஞ்சீவியாக இருக்கிறார் என்று பெரியவர்கள் சொல்லுகின்றனர். நரஸிம்ஹர்களையும் ஸேவிக்க இரண்டு நாட்களாவது இங்கே தங்க வேண்டும்.
ஒரு ஸமயம் கருடன் கடும்தவம் செய்துபகவானிடம் "முன்பு செய்த ந்ருஸிம் ஹாவதாரத்தை இப்பொழுது மீண்டும் விபவத்தில் காண வேண்டும்" என்று வரம் கேட்டு அவருக்காக காடுகள் நிறைந்த ஸ்ரீ அஹோபில மலையில் ஸ்ரீ ந்ருஸிம்ஹனாக அவதரித்து, ஹிரண்ய ஸம்ஹாரம் செய்தும், ப்ரஹ்லாதனை காத்தும் காட்டி அர்ச்சா ரூபமாக ஒன்பது வித திருக்கோலங்களில் கோயில் கொண்டு விட்டதாகவும், கருடன் இருந்து தவம் செய்தமையால், இந்த மலைக்கு கருடாத்ரி, கருடாசலம், காருடசைலம் என்று பெயர் வழங்கியதாக புராண வரலாறு. பகவான் ஸ்ரீ வைகுண்டத்தையும் மறந்து இங்கேயே எழுந்தருளிவிட்டபடியால் மஹாலக்ஷ்மியும் வேடர் (செஞ்சு) குலத்தில் பிறந்த பகவானை மணந்ததாக ஸ்தல வரலாறு. இங்குள்ள அஹோபிலமடம் பெரியதாக கட்டப்பட்டுள்ளபடியால் எவ்வளவு யாத்ரீகர்கள் வேண்டுமானாலும் வசதியாக தங்கலாம். கீழ் அஹோபிலமடம் ராஜகோபுரத்துக்கு எதிரில் 80 அடிகளுக்கு மேலான உயரத்தில் ஒரே கல்லாலான தூண் இருக்கிறது. பூமிக்குக் கீழேயும் 30 அடி ஆழத்திற்கு புதைந்துள்ளது. இதை ஜய ஸ்தம்பம் என்று கூறுகிறார்கள். ஆதிசங்கர பகவத்பாதாளை இந்த மலையில் ஒரு கபாலிகள் கொலை செய்ய முயலும்போது ஸ்ரீந்ருஸிம்ஹர் காப்பாற்றியதாக ஸ்தல வரலாறு.
குறிப்பு - இது காட்டு மிருகங்கள் ஸஞ்சரிக்கும் பிரதேசமாகையால் ஸேவைகளைப் பிற்பகலுக்குள் முடித்துக்கொள்ள வேண்டும்.
மங்களாசாஸனம் -
திருமங்கையாழ்வார் - 1008-1017 - 10 பாசுரங்கள்